பிற்கால கல்வெட்டுக்களில் திருக்குறள்
பிற்கால கல்வெட்டுக்களில் திருக்குறள் முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் வரலாற்றுத்துறை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி - தஞ்சாவூர். முன்னுரை பண்டையத் தமிழர்தம் வரலாறு, பழக்கவழக்கம், பண்பாட்டுக் கூறுகள், வர்த்தக தொடர்பியல், வாழ்வியல் நெறிமுறைகள், சமயநிலை, நீர்மேலாண்மை போன்ற வற்றை அறியவுதவும் மூலங்கலுள் தொல்லியல் சான்றுகள், நாணயங்கள், கட்ட டக்கலை, இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் பயன்பாட்டைப் போலவே கல் வெட்டுச் சான்றுகளும் இப்பயன்பாட்டில் பெரிதும் இடம்பெற்றுள்ளன. கல்வெட்டுக்களில் கற்பனைக்கோ, புனைந்துரைக்கோ, கட்டுக்கதைகளுக்கோ சிறிதும் இட மில்லை. மாறாக, உள்ளதை உள்ளவாறு உணர்த்துகின்ற உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. அத்தகைய பெருமை மிகு கல்வெட்டுகளை அதன் பொருண்மைக்கு தகுந்தாற்போல் இலக்கியக் கல்வெட்டுக்கள், வரலாற்றுக் கல்வெட்டுக்கள், சமயத் தொடர்புடைய கல்வெட்டுக்கள், கொடை கூறும் கல்வெட்டுக்கள் என வகைப்படுத்துகின்றனர் ஆய்வாளர்கள். மேலும் கடந்தகால நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் அழிவற்ற சான்றாக விளங்கும் இக்கல்வெட்டுகளில் உலகப் பொதுமறையாம் திருக்குறளும் இடம்பெற...