திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் கோயில்
திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் கோயில் வரலாறு
முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் வரலாற்றுத்துறை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
கோயில் அமைவிடம்
கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம்
இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் திருச்சோபுரம் என்ற
வரலாற்று சிறப்பு மிக்க ஊர் அமைந்துள்ளது. இவ்வூரின் நடு நாயகமாக மங்களபுரீஸ்வரர்
திருக்கோயில் அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்பு
கி.பி. 1070 முதல் 1120 வரை கங்கை கொண்ட
சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின்
பட்டத்தரசிகளுள் ஒருவராகிய தியாகவல்லி அம்மையாரால் திருப்பணி செய்யப்பட்ட பெருமைக்குரியது
இக்கோயில். சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஏரளாமான நிலதானங்களை மங்களபுரீஸ்வரர்
கோயிலுக்கு வழங்கியுள்ளதை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களின் வாயிலாக
அறியமுடிகிறது. மேலும் இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.
இறைவன் – இறைவி
மூலவர் – மங்களபுரீஸ்வரர் என்ற
சோபுரநாதர் . இம் மூலவர் சுயம்புவாக காட்சியளிக்கிறார்
இறைவி – வேல்நெடுங்கண்ணி மேலும் தியாகவல்லியம்மை மற்றும் சத்யாயதாட்சி என்ற
வேறுபெயர்களும் இங்குள்ள அம்மனுக்கு உண்டு.
தலவிருட்சம் – கொன்றை
பாடல்பெற்ற தலம்
கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருச்சோபுரம்
பெருமானை...
‘’ சோலை மிக்க தன்வயல் சூழ்சோபுரமே...’’ என்ற தேவாரப் பாடல் வரியின் மூலம்
இவ்வூரின் சிறப்பையும்...
‘’
நாற்றம்மிக்க கொன்றைதுன்று செஞ்சடை மென்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணம் என்னை கொலாம்
ஊற்றமிக்க காலன் தன்னையொல்க உதைத்தருளியத்
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய் சோபுர மேயவனே. ‘’ என்ற பாடல் மூலம்
சோபுரநாதனின் பெருமையையும் அறியமுடிகிறது.
தலபுராணம்
கயிலாயத்தில் சிவன் – பார்வதி திருமணம் நடந்த போது அனைவரும் கயிலாயம்
நோக்கி சென்றதால் பூமி சமநிலை மாறிவிடுமோ என்ற அச்சம் தேவர்களுக்கு ஏற்பட்டது. இதை
சமாளிக்கவே அகத்தியரை தென்னகம் அனுப்பினர்.
அவ்வாறு தென்திசை வந்த அகத்தியர் தாம் வரும் வழியெங்கும் சிவலிங்கங்களை
பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வாறு வங்கக்கடல் வழியாக சென்றபோது
அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிவனிடம் தன் வலி தீர்க்க முறையிட விரும்பி
கடற்கரையில் இருந்த மணலைக் கொண்டு சிவலிங்கம் அமைக்க முயன்றார். ஆனால் எவ்வளவு
முயன்றும் லிங்கத்தை சரியாக அமைக்க முடியவில்லை.
சிவபிரான் தம்மை சோதிப்பதை உணர்ந்த அகத்திய முனிவர் அருகிலிருந்த மூலிகை
செடிகளை கொண்டு பிழியப்பட்ட சாரை தண்ணீராகக் கொண்டு லிங்கத்தை உருவாக்கினார்.
பிறகு அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார் உடனே வயிற்றுவலி நீங்கி உடல்
புத்துணர்வை பெற்றார். அப்படி அகத்தியரால் உருவாக்கப்பட்ட அந்த சிவலிங்கம் இருந்த
இடத்தில் பிறகு கோயில் அமைக்கப்பட்டது. முற்றிலும்
மணலைக் கொண்டு அகத்தியர் தமது கைகளால் பிடித்தது உருவாக்கப்படதால் இந்த
சிவலிங்கத்தில் அவரின் கைத்தடம் இன்றும் உள்ளது என்பது மற்றுமொரு சிறப்பு.
அகத்தியர் அமைத்த லிங்கத்திலேயே அம்பாளும் ஐக்கியமாகி விட்டதாகவும் அதன்
காரணமாக சிவலிங்கத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு நடப்பதாகவும் ஐதீகம்
உண்டு. இதனால் தான் சுவாமியை மங்களபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். சதுர வடிவ
கருவறை, அர்த்த மண்டபம் , முகமண்டபம் அதன் எதிரே எட்டுதூண்களுடன் கூடிய தாழ்வாரப்
பகுதியும் கொண்டது. மேலும் ஒரே இடத்தில் நின்ற வாறே மூலாவரையும் அம்மனையும்
வழிபடுவது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாகும். இம்மூலவருக்கு குங்குமமும் ,
குளியல் மஞ்சளையும் வைத்து வழிபட்டு வந்தாள் தீராத நோய்களுக்கு நிரந்தர தீர்வு
ஏற்படும். மேலும் இக்கோயிலுக்கு வேண்டிவரும் பக்தர்களுக்கு வேண்டியதை வழங்கிடுவார்
மங்கள புரீஸ்வரர் என்ற சிறப்பும் இம் மூலவருக்கு உண்டு. வாழ்வில் தடை பெற்றவற்கு
வளம் பெற்றிட திருச்சோபுரம் நாதரை வணங்கினால் போதும்.
தட்சணாமூர்த்தி சிறப்பு
சில
சிவாலயங்களில் கையில் வீணையை மீட்டியவாறு இசைக்கு அதிபதியாக காட்சியளிக்கும்
தட்சணாமூர்த்தி இக்கோயிலில் இசையின் வடிவமாகவே அருள்பாளிகிறார். இவரது சிலையை
தட்டிப்பார்த்தல் சப்தஸ்வரங்களின் ஓசையினை கேட்கமுடியும். எனவேதான் இசைப்பயிற்சி
மாணவர்கள் இங்கு விசேஷ பூஜை செய்து வந்தாள் இசைஞானத்தில் மேலும் உயர்வு
பெறமுடியும்.
ஒரு
காலத்தில் முற்றிலும் கடலால் மூழ்கடிக்கப்பட்ட இக் கோயில் மணலால் மூடப்பட்டு
விட்டது. பிறகு இங்கு வந்த மதுரை இராமலிங்க சிவயோகி என்பவர் மணல் மேட்டில்
கலசத்தின் நுனிப்பகுதி காணப்பட்டதால் பிறகு மணல் முழுவதும் அகற்றப்பட்டு கோயில்
முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் அவனது மனைவியான தியாகவல்லியும் வணங்கியவாறு புடைப்பு சிற்பமாக வடக்கு பிரகாரத்தில் காணப்படுகிறது.
Comments
Post a Comment