தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

 

 

DrJ.R.SIVARAMAKARISHNAN, 

ASSISTANT PROFESSOR IN HISTORY

KUNTHAVAI NAACCHIYAAR GOVT.ARTS COLLEGE 

THANJAVUR-7


 

முன்னுரை

 தமிழகத்தில் பாயும் நதிகளினால் பெறப்படும் பாசனம் எதிர் காலங்களில் நிலையற் றதாகும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழ் மன்னர்கள். அதனால்தான் காடு கொன்று நாடாக்கும் பொழுது ஆங்கு குளங்களை வெட்டி நீர்வளத்தை பெருக்கினர். மேலும் பருவக் காலங்களில் மட்டுமே கிடைக்கும் மழை நீரை எந்தவித சேதாரமின்றி அதை ஓரிடத்தில் நிலையாக சேமித்து வருடம் முழுவதும் பயன்படுத்தி விவசாயம் மற்றும் குடிநீர் தேவையில் தன்னிறைவையும், உணவு உற்பத்தியில் உயர்வையும் பெற்று விளங்கினர். இப்படிப்பட்ட பண்டைய தமிழ் மக்களின் நீர்மேலாண்மை நுட்பக் கூறு களை பற்றி விரிவாக விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நீர்நிலைகள் ஏற்படுத்துதல் அறமே

  நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் கருதுகோளுக்கு ஏற்ப நீர்நிலை களை ஏற்படுத்துவது சிறந்த அறமென கருதவேண்டும் என்பதை சங்க இலக்கியங் களின் ஊடாக உணரமுடிகிறது. குறிப்பாக குளம் வெட்டுதல், அதனைச்சுற்றி மரக்கி ளைகளை நடுதல், மக்கள் நடக்கும் வழியை செதுக்கிச் சீர்திருத்துதல், தரிசு நிலத் தின் உள்ளிடத்தைச் செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்ற இந்த ஐந்து அறப்பணிகளை செய்பவர் சொர்க்கம் செல்வர் என்பதை,

‘’குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து

உளந்தொட்டு உழுவயல் ஆக்கி-வளந்தொட்டுப்

பாகு படுங்கிணற்றோடு என்றிவ்ஐம் பாற்படுப்பான்

ஏகும் சுவர்க்கத் தினிது. என சிறுபஞ்சமூலம் சுட்டுகிறது. மேலும் உலகத்தில்மேலான புகழை நாட்டியவனும், சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்ற வனும், குடிக்க நீர் குறைவுபடாதபடி கிணறுகளைத் தோண்டி வைத்தவனும் என்ற இம்மூவ ரும் எக்காலத்திலும் இறவாத புகழை எய்துவர் என்பதை, 

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்

பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும்-உண்ணும்நீர்

கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்

சாவா உடம்பெய்தினர்....என திரிகடுகம் குறிப்பிடுகிறது. நீர்நிலைகளை ஏற்படுத்துதலே ஒருவனுக்கு நீடித்த புகழை தரும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் மக்களுக் கும், விலங்குகளுக்கும் பயன்படும் வகையில் நீர்நிலைகளை ஏற்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயலாற்றியதை எழுத்து ஆவணங்கள் மூலம் அறியமுடிகிறது.   

தண்ணீரின் அவசியமும் பயன்பாடும்

 இவ்வுலக உயிரினங்கள் வாழ்வதற்கு நீரானது மிக அவசியமான ஒன்று. இதனால் தான் சங்கப் பாடல்களில் தண்ணீர் செமிப்பு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. ‘’வருசிறைப் புனலைக் கற்சிறை போல’’,அதாவது ஆறு, ஓடைகளின் வழியாக வரும் தண்ணீரை குறுக்கே கற்சிறை எனப்படும் தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சிறைபிடித்து நிலவளம் பேனப்படுவ தன் முக்கியத்துவத்தை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ‘’நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருக‘’, ‘’காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி‘’, போன்ற சங்கப்பாடல் வரிகளால் நீர்நிலையின் அவசியத்தை உணரமுடிகிறது. மேலும் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை பாதுகாப்பதற்காக சேமிப்புக்கட்டு மானங்களை ஏற் படுத்துவது சிறந்த அறமாக அக்கால மக்களும், செல்வந்தர்களும் கருதினர். குறிப் பாக புகார் நகர மக்களின் தேவைக்காக எந்திரக்கிணறு, எந்திர வாவி, உறைக் கேணி கள் அமைக்கப்பட்டு இருந்ததை இலக்கியங்கள் சுட்டுகின்றன. மேலும் ‘’வான் முகந்த நீர் மலைப் பொழியவும், மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்’’, அதாவது கடலில் இருந்து ஆவியாகும் நீரானது மலை மற்றும் சமவெளிகளில் மழையாக பொழியவும், பின் கடலில் வந்து சேரவும் என்ற இயற்கை சுழற்சியை நன்கு உணர்ந்ததால் சம வெளிகளில் விழும் மழைநீரை வீணடிக்காமல் அப்படியே சேமிப்பதற்கான தளங் களாக ஏரி, கயம், குளம், தடாகம் போன்றவற்றை ஏற்படுத்தி இருந்தனர். அவ்வாறு சேமிக்கப்படும் தண்ணீரை மடை, சிறை, மதகு, சுருங்கை, நீர்எக்கி போன்ற பாசன தொழில் நுட்பங்கள் மூலம் சிக்கனமாக பயன்படுத்தி வந்ததை பரிபாடல் ஊடாக அறியமுடிகிறது.

  புதியகற்கால மனிதனால் விவசாயம் தொடங்கப்பட்டது. ஆனால் பெருங்கற் காலத் திலேயே தமிழர்கள் நிலைத்தன்மையுள்ள நீர் நிலைகளை ஏற்படுத்தி தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை உற்பத்திசெய்து கொண்டனர். உதாரணமாக புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள தாயினிப்பட்டி போன்ற பகுதிகளில் வாழ்ந்த பெருங் கற்கால மக்கள் தங்களது இடுகாடு மற்றும் வாழ்விடங்களை ஏரிகளின் உட்பகுதி மற் றும் அதனை ஒட் டிய வெளிப்புறங்களில் அமைத்திருந்ததை இன்றும் காணலாம். மேலும் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பெருங்கற்கால மக்களின் வாழ் விடப் பகுதிகள் அனைத்தும் நீர்நிலைகளின் அருகிலேயே அமைக்கப்பட்டிருந்ததை காணமுடிகிறது. இதன் வாயிலாக நீர்மேலாண்மை தொழில்நுட்பமானது கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்னறே தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை உணரமுடிகிறது.         

முதல் அணை

   கபிலவஸ்துவை ஒட்டி ரோகிணி என்ற ஆறு பாய்ந் தோடியது. அதன் குறுக்கே சாக்கிய மற்றும் கோலிய வம்சத்தவர்கள் இணைந்து கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அணையொன்றை கட்டி நீரினை பகிர்ந்து விவசாயம் செய்ததாக தம்மபாதம் என்ற நூல் சுட்டுகிறது. இதுவே இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணையாகும். ஆனால் பரப்பில் அகன்றும் மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கை உடைய காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அணை கட்டுவது என்பது முடியாத ஒன்று. இதையே சவாலாகக் கொண்டு காவிரியின் குறுக்கே வளிமையான அணையை கட்டிய பெருமைக்குரியவன் கரிகால சோழன் ஆவான். இவன் காலத்திய உயர் கட்டுமான தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த கர்னல் பேர்டுஸ்மித் என்ற ஆங்கி லேய பொறியாளர் கல்லணையின் வயது 1800 ஆண்டுகள் என குறிப்பிட்டுள்ளார். இவ்வணை கட்டப்பட்டதன் நோக்கம் வியப்பிற்குறிய ஒன்று. அதாவது கல்லணை அருகில் இயற்கையாகவே கொள்ளிடம் சற்று தாழ்வாகவும் காவிரி சற்று மேடாக வும் அமைந்துள்ளது. இரண்டையும் இணைக்கும் பகுதியே உள்ளாறாகும். இதில் காவிரி ஆறு முதன்மையான ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. இதனால் வெள்ளப் பெருக்கு காலங்களில் அடிக்கடி உடைத்துக் கொண்டு உள்ளாற்றின் வழியாக கொள் ளிடத்தில் கலந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி நீர் வீணாக கடலுக்கு சென்றது. மேலும் காவிரி நதியின் கழிமுகத்தில் புகழ் பெற்ற புகார்நகர் அமைந்திருந்தது. இந்நகர் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற சூழலுடன் விளங்கியது. மேலும் வெளி நாட் டினரின் கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்பதற்கும் கப்பல்களில் இருந்து இறக்கப்பட்ட சரக் குகளை சிறிய படகுகளின் மூலம் நாட்டின் உட்பகுதிகளுக்கு எடுத்து சென்று விற் பனை செய்யவதற்கு தோதாக காவிரி ஆறு விளங்கியது. எனவேதான் ஆண்டு முழு வதும் காவிரியில் தண்ணீர் இருக்குமாறு கண்காணிக்கப்பட வேண்டிய கட்டாயம் சோழமன்னர்களுக்கிருந்தது. இதனை கருத்தில் கொண்ட மாமன்னன் கரிகாலன் திருச் சிக்கு அருகே காவிரியிலிருந்து உள்ளாறு பிரியும் இடத்தில் கல்லணையைக் கட்டி தண்ணீர் வீணாகாமல் தடுத்து அதை காவிரியில் அனுப்பினான். விளைவு பாசனத் திற்குப் பயன்பட்டது போக எஞ்சிய நீர் காவிரியில் எப்பொழுதும் ஓடி தடையில்லா கப்பற் போக்குவரத்திற்கு வழிசெய்தது. இதனால் அயலக வணிகர்கள் தமிழகத்தோடு தடையில்லா வர்த்தகம் மேற்கொள்வதற்கு காரணமாக அமைந்தது. விளைவு புகார் நகரம் அந்நியச் செலவாணியை பெருமளவு ஈட்டி சோழப்பேரரசின் மிகப்பெரியசிறப்பு பொருளாதர மண்டலமாகவே திகழ்ந்தது.

 ஜலஸ்தம்பம்

   உலக மன்னர்கள் பலர் பிறநாடுகளை வெற்றி பெரும் பொழுது அவ்வெற்றியின் நினைவாக ‘’ ஜெயஸ்தம்பங்களை ‘’ நாட்டுவது வழக்கம். ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் இராஜேந்திர சோழன் தமது கங்கை படையெடுப்பு வெற்றியின் நினைவாக, தமது தலைநகரில் மக்களுக்கு பயன்படும் வகையில் மிகப்பெரிய ஏரியை வெட்டினான். அதற்கு சோழகங்கம் என்று பெயரிட்டான். இதே போன்று 2200 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவை தமது தர்மக் கோட்பாடுகளால் நல்லாட்சி புரிந்த மாமன்னன் அசோகர் சாலை ஓரங்களில் அரை கோசிற்கு (ஒன்றேகால் மையில் தொலைவு) ஒரு கிணறு கட்டாயம் அமைக்க உத்தரவு இட்டுள்ளதை அம்மன்னனின் ஏழாவது கற்றூண் ஆணையில் குறிப்பிட்டுள் ளது. மேலும் மாந்தருக்கும், விலங்கிற்கும் என தனித்தனியாக நீர் நிலைகளை ஏற் படுத்தி கொடுத்துள்ளதையும் இக்கற்றூண் ஆணையில் காணமுடிகிறது. நீர்நிலை களை ஏற்படுத்துவது சிறந்த அறமென்பது அசோக மன்னனின் தர்மக்கோட்பாடுகளில் முதன்மையானதாக இருந்துள்ளதை அவர்காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டுத் தரவுகள் ஊடாக உணர முடிகிறது. அசோகருக்கு பிறகு வந்த ஆட்சியாளர்களும் நீர்நிலைகளை ஏற்படுத்துவது மற்றும் அதைக்காப்பது சிறந்த அறமாக ஏற்றிருந்தனர்.

நதி நீர் இணைப்பு

   பவானி ஆறு காவிரியில் கலக்கும் இடத்திற்குச் சற்று மேலாக ஒரு பழ மை யான அணைக்கட்டு உள்ளது. கி.பி. 1263 ஆம் ஆண்டு வீரபாண்டியன் காலத்தில் கொங்கு நாட்டின் தலைவனாக இருந்த காலிங்கராயரால் இவ்வணைக்கட்டு கட்டப்பட்டதாகும். இதனோடு இணைந்துள்ள கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரினால் ஆண்டொன் றுக்கு சுமார் 1,40,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனப் பயன் பெறுகின்றன. இக்கால் வாய் 58 மைல் நீளம் உடையது. உபரி நீர் இறுதியில் நொய்யல் ஆற்றில் கலக் கிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை மற்றும் கால்வாய் எந்த வித பாதிப்பும் இன்றி இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத் தக்க ஒன்றா கும். மேலும் தாம் கட்டிய அணையின் மூலம் பாசனப் பயனை தானும் தனது சந்ததியாரும் அனுபவித்தால் அது சுயநலமாகிவிடும் என்பதால் தமது தலைமையி டத்தை ஊத்துகுளிக்கு மாற்றிக் கொண்டார் காலிங்கராயர். உள்நாட்டு நதிகளை இணைப்பதில் காலிங்கராயர் மேற்கொண்ட முயற்சி அளப்பறியது.

தமிழர்களின் நீர்மேலாண்மை நுட்பம்

  இனி வரும் காலங்களில் தமிழக நதிகள் அனைத்தும் பொய்த்து போகும் என்பதை கருத்தில் கொண்டு 39,202 ஏரி, குளங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர். நீர்சேமிப்பு கட்டுமானங்களை உருவாக்குவதில் தமிழர்கள் கைத்தேர்ந்தவர்கள் என லாம். உதாரனமாக ஒரு ஏரியானது நிலவின் மூன்றாம் பிறை வடிவில் அமைக்கப் பட வேண்டும். காரணம் அப்பொழுதான் ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீரினால் ஏற் படும் அழுத்த விசையை சமாளிக்கக் கூடியதிறன் ஏரியின் கரைகளுக்குகிட்டும்.இதன் மூலம் கரை உடைவது நிறந்ததரமாக தடுக்கப்பட்டது.

  மேலும் ஏரி அமைக்கப்படும் இடத்தில் தண்ணீரின் உருஞ்சு திறன் மிகமிகக் குறை வாக இருக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு கவணமாக இடத்தேர்வு செய்து ஏரியை அமைத்துள்ளனர். இதனால்தான் நீண்ட நாட்களுக்கு அவர்களால் தண்ணீரின் பயன்பாட்டை பெற முடிந்தது. தொடர்மழை வெள்ளத்தால் கரைகள் சேதப்படாமல் இருக்க ஏரியில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற் காக கலிங்கு பகுதியை அமைத்திருந்தனர். இக்கலிங்கு பகுதியே ஏரியின் உறுப்புக ளில் தலையாய பகுதியாகும். இதனை ‘’சேறு சிந்திக் கலிங்கு திறந்தவன்றோ’’ என்ற வரிகளின் மூலம் கலிங்கின் சிறப்பை சீவகசிந்தாமணி வலியுறுத்துவது குறிப்பிடத் தக்க ஒன்றாகும். மேலும் ஏரியில் உள்ள நீரை சிறுகச் சிறுக வெளியேற்றி பயிர்க ளின் தேவைக்கேற்ப சிக்கனமாக அனுப்பும் பிரதான உறுப்பே மதகாகும். இது ஏரி கட்டுமானத்தின் மிக வலிமையானப் பகுதியும் கூட. பாசனத்திற்கு தண்ணீர் தேவைப் படாத பொழுது அடைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு. இதை கண்டுபிடித்த தமிழர்களின் நுட்பம் அளப்பறியதாகும்.

நீர்நிலைபராமரிப்பு      

 குஜராத் அருகே ஜூனாகட்டிலுள்ள கி.பி. 150 இல் வெளியிடப்பட்ட சக வம்சத்தை சார்ந்த ருத்ரதாமனின் கல்வெட்டில் சந்திரகுப்த மௌரியன் காலத்தில் வசுகுப்தன் என்னும் வணிகனால் வெட்டப்பட்ட ஸுதர்சனம் என்னும் ஏரியிலிருந்து விளை நிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்ல அசோகர் காலத்தில் வாய்க்கால்கள் வெட் டப்பட்டிருந்தன. பிறகு ஏற்பட்ட கடும் புயலால் இந்நீர்நிலையின் உறுப்புகள் பாழ்பட்டு மக்கள் பெறும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதைகண்ட ருத்ரதாமன் ஏரியிலிருந்து நிலங்களுக்கு செல்லும் வாய்க்கால்கள் அனைத்தையும் சரிசெய்து கொடுத்ததை ஜூனா கட்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இவ்வேரி ஏறத்தாழ ஐநூறு ஆண்டுக ளாக தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்ததையும் அறியமுடிகிறது. வடஇந்திய மன்னர் களை போன்றே நீர்நிலைகளை காப்பதில் தமிழ் மன்னர்களும் சளைத்தவர்கள் அல்ல. இதற்கு உதரணமாக புதுவை மாநிலத்தில் உள்ள பாகூர் திருமூலநாதர் கோயிலில் உள்ள முதலாம் இராஜேந்திர சோழனின் 16 ஆம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி. 1027 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கல்வெட்டை குறிப்பிடலாம். அக்கல்வெட்டில் பாகூரில் இருந்த ஏரியை தூர்வாரும் பணியில் அப்பகுதி மக்கள் கட்டாயமாக ஈடுபட வேண் டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அப்பணியில் பத்து வயதிற்கு மேல் உள்ள வரும் என்பது வயதிற்கு உட்பட்டவர்களும் கட்டாயமாக ஈடுபடவேண்டும் என்பதை உணரமுடிகிறது. அவ்வாறு ஈடுபடாதவர்களுக்கு தண்டம் விதிக்கப்படும் என்ற செய்தி யையும் அக்கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளது. இது போன்ற பொதுவான அறப்பணிக ளில் மக்கள் அனைவரையும் ஈடுபடவைப்பதன் மூலம், அவர்களை சமூக பொறுப் புள்ளவர்களாக மாற்றமுடியும் என்று அக்கால அரசர்கள் கருதியதன் வெளிப்பாடே இக்கல்வெட்டாகும். எனவேதான் மன்னர்கள் வெட்டுவித்த ஏரி, குளம், வாய்க்கால் போன்றவற்றில் மராமத்துப் பணிகளைசெய்து அவைகளை பாதுகாப்பது சிறந்த அற மாகவே அக்கால மக்கள் கருதினர்.              

  இதற்கு அணிசெய்யும் வகையில் திருவண்ணாமலை அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள முதலாம் இராஜராஜசோழனின் கல்வெட்டைக் குறிப்பிடலாம். அக் கல்வெட்டில் இவ்வூரில் உள்ள ஏரியை பாதுகாப்பவர்களின் திருப்பாதங்களை தன் தலைமீது வைத்து தங்குவேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில கல்வெட் டுக்கள் நீர் நிலைகளுக்கு குந்தகம் விளை விக்காமல் அதை பாதுகாப்பவர்கள் சொர்க் கம் செல்வார்கள் என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் நீர் மேலாண்மைக்காக நம் முன்னோர்கள் எந்த அளவிற்கு கீழிறங்கி வந்துள்ளனர் என்பதை அறியும்பொழுது வியப்பளிப்பதாக உள்ளது.

ஏரிவாரியம்

 பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சி காலத்தில் பரமேஸ்வரமங்கலம் என்ற புதிய ஊர் உருவாக்கப்பட்டது. குடியேறப்போகும் மக்களுக்காக பரமேஸ்வரத் தடாகம் என்ற ஏரி வெட்டுவிக்கப்பட்டது. ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருக் கவேண்டும் என்பதால் பாலாற்றிலிருந்து பெரும்பிடுகு என்ற கால்வாய் வெட்டப்பட்டு அதை பரமேஸ்வர தடாகத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் அக்கால்வாயிலிருந்து தலைவாய், தலைப்பேழை, ஊற்றுக்கால் எனும் கிளைகளை வெட்டிக் கொள்ள அனு மதியும் அளிக்கப்பட்டிருந்தது. தொண்டைநாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர்நிலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பதற்காக ஏரிவாரியம் ஏற்படுத்தப்பட்திருந்ததை உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் உணரமுடிகிறது. சுமார்10 சதுர கி.மீ.பரப்பளவினைக்  கொண்ட இவ்வூர் பத்து சேரிகளும், பதினைந்து பிடாகை ஊர்களும் இதனுள் அடக் கம். இவ்வூரின் முக்கிய நீராதாரமாக விங்கியது வைரமேகத் தடாகம் என்னும் பேரே ரியாகும். இதனை பராமரிப்பதற்காகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரிவாரியம் என்ற அமைப்பு செயல்பட்டது. மேலும் வைரமேகத்தடாகம் ஆண்டுதொரும் குழிகுத் திப் பராமரிப்பட்டு வந்தது. இப்பரமரிபிற்காக வணிகர்களும், செல்வந்தர்களும் நன் கொடைகளை வழங்கிவந்தனர். கி.பி.739 ஆம் ஆண்டில் குழி குத்தப்பட்ட செய்தியை கல்வெட்டொன்று சுட்டுகிறது. மேலும் செட்டத்தரையன் தானவேந்தன் என்பவன் 20 கழஞ்சு பொன்னும் எரு விலையால் வந்த திரவியத்தையும் உத்திரமேரூர் சபையோ ரிடம் கொடுத்து குழிகுத்த ஏற்பாடு செய்தான். கி.பி.803 இல் பல்லவ மன்னனாக விளங்கிய தந்திவர்மன் வழங்கிய ஐந்து பட்டி நிலத்தை பெற்ற பெருங்குறி சபை யோர் அதைக்கொண்டு ஏரியைத்தோண்டி கரையை உயர்த்தினர். கி.பி. 883 இல் கழுக் குன்றன் எனும் வணிகன் 100 கழஞ்சு பொன்னும் 28 காடி நெல்லும் ஏரி பராமரி பிற் காக கொடைவழங்கியுள்ளான். மேலும் பல்லவர் காலத்தில் ஆண்டு தோரும் ஏரிகள் அனைத்தும் முறையாக தூர்வாரப்பட்டதை மாமல்லபுரம் பயனூர்க் கல்வெட்டு குறிப் பிடுகிறது. கி.பி. 550 இல் சமணத் துறவி வஜ்ரநந்திக்கு பருத்திக்குன்றம் என்ற ஊரை பள்ளிச் சந்தமாக கொடுத்த பொழுது ஏந்தால் ஏரி, வெள்வடுகள் ஏரி, நீர் இறைக்கும் ஏற்றம், முருக்கங்கேணி போன்ற நீராதாரங்களும் அவ்வூரில் இருந்துள்ளதை கல் வெட்டு மூலம் அறியமுடிகிறது.        

மழைநீர் சேமிப்பு

  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் தென்னிந்திய சைவர்களின் தலைமையிடமாக விளங்கியது. சோழமன்னர்களின் குலதெய்வ கோயி லாக இது விளங்கியதால் பலத்திருப்பணிகளை இம்மன்னர்கள் செய்துள்ளனர். குறிப் பாக முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், விக்கிரமசோழன், முதலாம் குலோத்துங்கன் வரை மிகப்பெரிய விரிவாக்க திருப் பணிகள் மேற்கொண்டுள்ளப்பட் டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க திருப்பணியாக விளங்குவது மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பாகும். ஐம்பத்தொரு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் உட்பகுதில் விழும் மழை நீரை நடராஜர் கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் அருகே தொடங்கும் நிலவரை கால்வாய்  மூலம் கொண்டுசெல்லப்பட்டு திருப்பாற்கடல் மற்றும் தில்லை காளிக்கோயில் முன்பாக உள்ள சிவப்பிரியை குளத்தையும் இணைப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இக்கால் வாயின் மொத்தநீளம் 2200 மீட்டர் ஆகும். இக்கால்வாய் 65 செ.மீ அகலமும்,77 செ.மீ ஆழமும் கொண்டது. இதற்கு 24x15x5 செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுதப்பட்டுள் ளன. மேற்பகுதி செங்கல் கட்டுமானத்தால் முழுக்க மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் மேற்பகுதி நீள்செவ்வக வடிவ கருங்கல் பலகையால் மூடப்பட்டு உள்ளது. காரணம் கால்வாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் கருங்கல் பலகையை எடுத்து விட்டு அதனை சீர்செய் யவே இம்மூடிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நில வரை கால்வாய் மூலம் சிதம்பரம் நட ராஜர் கோயிலில் விழும் மொத்த மழை நீரை யும் சேதாரமின்றி இரண்டு குளங்களி லும் சேமிக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் புவி மட்டத்திலிருந்து 30 செ.மீ அளவில் தொடங்கி சிவப்பிரியை குளத்தை அடையும் பொழுது 200 செ.மீ ஆழத்தில் முடிகிறது. இதனால் மழை நீர் நேராக குளத்தினை அடைவது எளிதாக்கப்பட்டது. இக்கட்டுமான தொழில் நுட்பத்தின் காலம் கி.பி.11–12 ஆம் நூற்றாண்டாகும். மழைநீர் சேமிப்பின் மூலம், நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சோழர்கள் காட்டிய அக்கறை அளப்பரியாதாகும். கடற்கரை அருகே அமைந்துள்ள சிதம்பரநகரின் நிலத்தடித்தடி நீர் கெட்டுப் போகாமல் பாதுக் காக்கப்பட வேண்டுமேயானால் மழை நீர் சேமிப் பின் மூலமே அதுசாத்தியமாகும். இதை உணர்ந்த நம் மன்னர்கள் சிதம்பரம் கோயிலை சுற்றி ஒன்பது நீர்பிடிப்பு குளங் களை ஏற்படுத்தியுள்ளனர். இவைகளை நாம் சரியாக பாரமரிக்கப் படாததாலேயே நக ரின் நிலத்தடிநீர் இன்று உப்பாக மாறியதற்கு முக்கிய காரணமாகும்.

   மழைக் காலங்களில் சிதம்பரத்தின் மேற்குப் பகுதியில் பொழியும் மழைநீரினால் இந்நகர் அடிக்கடி வெள்ளத்தால் பாழ்பட்டது. இதை நன்கு உணர்ந்த பராந்தகசோழன் சிதம்பரத்திற்கு மேற்கே வீரநாராயணப்பேரேரியை வெட்டுவித்தான். அதிகப்படியான தண்ணீர் அங்கு சேமிக்கப்பட்டதன் விளைவாக நடராஜர் கோயிலுக்கு மழைக்காலங்க ளில் கூட மக்கள் பயமின்றி வந்து செல்ல முடிந்தது. மேலும் ஆண்டுக்கு இரண்டு டி.எம்.சி தண்ணீர் வீனாக கடலில் கலப்பது தடுக்கப்பட்டு ஏரியில் செமிக்கப்பட்டதன் விளைவாக இப்பகுதி உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியது.

 மேலும் ஆற்று நீர் பாசனத்தால் பயனிள்ளா மாவட்டமான புதுக்கோட்டை மாவட்ட தில் மட்டும் 5128 ஏரி, குளங்களை ஏற்படுத்தி அப்பகுதி மக்களை உணவு உற்பத்தி யில் உயர்வடைய வைத்த பெருமை நமது முன்னோர்களையே சாரும். மேலும் பல் லவர், பாண்டியர், சோழர்களிடையே பகையிருந்தாலும் தமிழகத்தை நீர் மேலாண் மையின் மூலம் உணவு உற்பதியில் தன்னிறைவை எட்டவைப்பதில் ஒற்றுமையோடு செயல்பட்டுள்ளனர். குறிப்பாக நதிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே நதிகளை ஒட்டி நீர் பிடிக்கும் பெரிய ஏரி மற்றும் குளங்களை ஏற்படுத்தி மழைக்காலங்களில் வரும் அதிகப்படியான தண்ணீரை அதில் நிரப்பிக் கொண்டனர். அவ்வாறு சேமிக்கப் பட்ட அத்தண்ணீரை வாய்க்கால்கள் மூலம் கொண்டுச் சென்று விளை நிலங்களை வளப்படுத்திக் கொண்டனர்.  

மழைநீர் சேமிப்பின் முன்னோடி        

   உலகில் மழைநீர் சேமிப்பிப்பு தொழில்நுட்பத்தை முதன் முதலில் அறிமுகம் படுத் திய பெருமை ஜோர்டனில் வாழ்ந்த நபாட்டன்களையே சாரும். நபாட்டன்களின் நாக ரிகம் அரேபிய தீபகர்ப பகுதியில் உள்ள ஜோர்டனின் ஹர் மலைப்பிரதேசத்தில்  தோன்றியதாகும். இப்பண்பாட்டுப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2657 அடி உயரத் தில் அமைந்திருந்தது. இம்மலைப் பிரதேசமானது ரோஜா இதழின் நிறத்தை கொண் டது. நபாட்டன்களின் தலைநகர் பெட்ராவாகும். இந்நகரியம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இங்கு வாழ்ந்த நபாட்டன்கள் ஹர் மலையை குடைந்து தங்களுக்கு தேவையான பாதுகாப்பான வாழ்விடங்களை உருவாக்கிக் கொண்டனர். இவைகளை குடைவரை இல்லங்கள் என அழைக்கப்பட்டன. கி.மு. 312 முதல் கி.பி. 106 வரை செழித்தோங்கிருந்த இந்நாகரிகம் கி.பி. 363 மற்றும் கி.பி.700 ஆகிய ஆண்டு களில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் முற்றிலும் அழிந்தது.

நபாட்டன்களின் நீர் மேலாண்மை நுட்பம்

  கி.பி.1812 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சார்ந்த தொல்பொருள் ஆய்வாளர் ‘’ஜோஹன்னன்’’ என்பவரின் முயற்சியால் அழிந்த இந்த நாகரிகம் வெளிவுல கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்ட இவர்களின் நீர்மேலாண்மை நுட்பங்கள் உலக மானுடத் தையே திரும்பிப் பார்க்க வைத்தது. காரணம் பெட்ரா மற்றும் ஜோர்டனை ஒட்டி உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏறாளமான குடிநீர் குழாகளின் தொடர் கள் கண்டறியப்பட்டன. இக்குழாய்கள் அனைத்தும் மலையைக் குடைந்து உருவாக் கப்பட்டிருந்த தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளோடு இணைக்கப்பட்டிருந்தது. பெட்ரா நகரில் மட்டும் சுமார் 20,000 ஆயிரம் பேர் வாழ்ந்துள்ளனர். ஆண்டில் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பொழியும் மழைநீரை எந்த வித சேதாரமின்றி அவைகளை பூமிக் கடியில் சூரிய ஒளி படாவண்ணம் தோண்டப்பட்ட நிலவரை தொட்டிகளில் சேமித்து வைத்தனர். மேலும் ஹர் மலைமீது விழும் மழை நீரை மலைகனின் கீழ் அடிப் பகு தியில் பாறைகளில் வெட்டப்பட்ட சிறுசிறு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்லப் பட்டு அதை நிலவறையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய தொட்டிகளில் சேமித்தனர். இது போன்ற இணைப்புக் கால்வாய்கள் மற்றும் தொட்டிகள் ஹர் மலை முழுவதும் அமைத்திருந்தனர். இதன் வாயிலாக தாங்கள் வாழும் பாலைவனப் பிரதேசத்தை சோலைவனமாக்கிய இவர்களின் நீர் மேலாண்மை திட்டம் இன்றளவும் போற்றத்தக்க ஒன்றாக உள்ளது.

  மேலும் சமவெளிப்பகுதியில் விழும் மழைநீரின் போக்குகளை கண்டறிந்து அவ் வழித்தடங்களில் சிறுசிறு தடுப்பணைகளை அமைத்து சேமித்தனர். அத்தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவைபெற்றனர். இவர்க ளின் நுட்பமான மழைநீர் சேகரிப்பின் விளைவாக 20,000 பேர்களை கொண்ட பெட்ரா நகரில் மட்டும் ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் அளவிற்கு மழைநீர் சேமிக்கப்பட் டிருந்தது. அதாவது ஒரு துளி மழைநீரைக் கூட வீணாக்கக் கூடாது என்பதே நபாட் டன்களின் நீர் மேலாண்மை திட்டத்தின் தலையாய நெறியாக இருந்துள்ளது.

இன்கா மக்களின் நீர் மேலாண்மை திட்டம்

  இன்கா நாகரிகம் உலகில் சிறந்த நகரிகங்களிள் ஒன்று. இது தென்அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் தோன்றியதாகும். இன்கா மக்களின் புகழ் பெற்ற நகரம் மெச்சு பிச்சி. இந்நகர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2400 மீட்டர் உயரத்தில் உருபாம்பா பள்ளத்தாக்கில் காணப்படும் மலைத் தொடரின் மீது அமைந்திருந்து. கி.பி. 1450 ஆண் டுகளில் சிறப்புற்றிருந்த இந்நாகரிகம் கி.பி.1572 ஆம் ஆண்டு ஸ்பானியர்களின் படை யெடுப்பால் முற்றிலும் அழிந்தது. கடுமையான மலைத்தொடர் மீது வாழ்ந்த இன்கா மக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை பெறுவது மிகக் கடுமையாக இருந்தது. காரணம் மலைமீது வாழ்ந்த மக்கள் கிணறுகளை தோண்டவோ அணைகள் கட்டி தண்ணீரை சேமிக்கவோ முடியாது. மேலும் இம்மலைத்தொடர் அடிக்கடி நிலச் சரிவு ஏற்படும் தன்மைக் கொண்டது. இதனை நன்குணர்ந்த இம்மக்கள் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை பயன்படுத்த அவர்கள் கையாண்ட உயர் தொழில்நுட் பம் சிறப்புவாய்ந்ததாகும். தண்ணீரை நிலையாக ஓரிடத்தில் தேக்கினால் ஆபத்து என் பதால் மலைகளின் மீது இயற்கையாக உள்ள சுனைகளை கண்டறிந்து அத்தண்ணீரை கருங்கற்களால் உருவாக்கப்பட்ட சிறுசிறு கால்வாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு அதை குடிநீருக்குப் பயன்படுத்திக் கொண்டனர். மீதியை மலைச் சரிவிற்கு கொண் டுச்சென்று அப்படியே விவசாயத்திற்கு பயன்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னி றைவு எட்டினர்.

முடிவுரை

  நபாட்டன்கள் நாகரிகம் மழைக் குறைந்த பாலைவனப் பகுதியில் தோன்றியது, தமி ழர் நாகரிகம் சமவெளிப்பகுதியில் உயர்வுபெற்றிருந்தது, இன்காமக்களின் நாகரிகமோ மலை உச்சியில் நிலைபெற்றிருந்தது. ஆனால் இந்த மூன்று புகழ்பெற்ற நாகரிக மக் களின் அத்தியாவசிய தேவை தண்ணீர். அதனால்தான் அவர்கள் வாழ்ந்த இடங்க ளைப் பற்றி கவலைப்படாமல் அப்பகுதியில் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு நாட்டை வளப்படுத்தி பொருளாதாரத்தில் உயர்வு பெற்றனர். குறிப்பாக தமிழர்கள் ‘’எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை வரூஉம்‘’ போன்ற முதுமொழியை கொண்டு பருவகாலத்தில் பொழியும் மழை நீரை சமவெளிகளில் சேமிக்க ஏரி, குளங் களை ஏற்படுத்தி சேமித்தனர். அவ்வாறு சேமிக்கப்பட்ட தண்ணீரை பாம்பு போல் வாய்க்கால் அமைத்தால் தண்ணீர் பனையேறும் என்ற பழமொழியினை பின்பற்றி அனைத்து இடங்களையும் வளப்படுத்தினர். மேலும் இந்த மூன்று  நாகரிகங்களிடம் இருந்துதான் மேற்கத்திய உலகம் நீர் மேலாண்மை தொழில்நுட்ப படிப்பினையை முழுமையாகப் பெற்றது என்றால் அதுமிகையன்று.

குறிப்பு நூல்பட்டியல்

·         G. VIJAYAVENUGOPAL, PONDICHERRY INSCRIPTIONS, INSTITUT FRANCAIS DE PONDICHERY.

·         K. RAJAN , ANCIENT IRRIGATION TECHNOLOGY ,HERITAGE INDIA TRUST.

·         டாக்டர் கொடுமுடி .சண்முகம், பண்டைப் பாசனப் பொறியியல்.

·         தொல்காப்பியம், கழக வெளியிடு.

·         புலவர் அ.மாணிக்கனார், புறநானூறு, வர்த்தமானன் பதிப்பகம்.

·         புலவர் அ. மாணிக்கனார், பரிபாடல், வர்த்தமானன் பதிப்பகம், பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன், சீவக சிந்தாமணி, வர்த்தமானன் பதிப்பகம்

·         பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம், தி.வை.சதாசிவ பண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

·         மறைமலை அடிகள், பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை, மணிவாசகர் பதிப்பகம்.

·         டாக்டர் கி.ர.அநுமந்தன், பண்டைக்கால நாகரிகங்களின் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்.

                                 

இன்கா மக்களின் நீர் மேலாண்மை


             

                                             

  

                     

 

                    

                                       

 தமிழரின் மழைநீர் சேகரிப்பு நுட்பம்

                                                                                                                

               

 

 

                       




Comments

Popular posts from this blog

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு