கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்
முன்னுரை
இடைக்கால தமிழக
வரலாற்றில் அரசுத்துறை மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டது. பல்வேறுத்துறை
அதிகாரிகள், ஊர்கள், நகரங்கள், சபைகள், கோயில் நிர்வாகத்தினர் ஆகிய அமைப்புகள்
திறம்பட செயல்பட்டு சட்டம், ஒழுங்கு, தர்மநெறி பிறழாமல் கடமையாற்றியுள்ளனர். இருப்பினும்
அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, போது நிறுவனங்களின் சொத்துக்களை முறையற்ற
வழியில் அனுபவிப்பது, லஞ்சம் வாங்குதல், கோயில் மற்றும் அறநிறுவனங்களில்
வைக்கப்பட்ட நிரந்தர இருப்புகளை கையாடல் செய்தல், கொலை குற்றங்கள், தற்கொலைக்குத்
தூண்டுதல் போன்ற முறை கேடான செயல்களும் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. அரசும் இதை
கண்டறிந்து எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டது. குற்றங்களை
கண்டறிதல், தண்டித்தல், தீர்வு என ஏராளமான நிகழ்வுகள் இடைக்கால கல்வெட்டில்
காணக்கிடக்கின்றன. அவைகளைப் பற்றி ஆராய் கிறது இக்கட்டுரை.
குற்றங்களின் வகை
இடைக்காலத்தில் அரசுத்துறைகள் மிகச்சிறப்பான
முறையில் நிர்வகிக் கப்பட்டு வந்துள்ளன. பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள்
, நகரசபை, ஊர் சபைகள், கோயில் அமைப்புகள் போன்றவை திறத்தன்மையோடு நிர்வா கப் பணியினை
செய்துவந்துள்ளன. இருப்பினும் ஆங்கங்கே ஊழல்களும், முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளதை கல்வெட்டுக்கள்
சுட்டுகின்றன. இக்குற்ற நடவடிக்கைகளின் தன்மைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.
அரசின் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சரியாக
கணக்கு காட்டாமல் இருத்தல். அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து பிறர் சொத்துக் களை
அபகரித்தல். கையூட்டு வாங்குதல். அரசுக்கு வரிசெலுத்தாமல் நிலங்களை அனுபவித்தல்,
தம் கடமையை செய்யாமல் ஏமாற்றுதல்.
2.
கோயில் நிர்வாக அமைப்பினர், கோயில் வழிபாட்டுக்கென
வைத்த நிரந்தர வாய்ப்புகளை திருடுதல், தாமே அனுபவித்தல் போன்ற ஒழுக் கக்கேடான
செயல்களில் ஈடுபடுத்தல்.
3.
திட்டமிடப்பட்ட கொலை, தற்செயல் கொலை, தற்கொலைக்கு
தூண்டு தல், முன்பகை காரணமாக கொலை என குற்றவியல் வழக்குகளை வகைப்படுத்தலாம்.
இவற்றில் முதல் இரண்டு குற்றங்கள் சிவில்
குற்றங்களாகவும் மற்றதை கிரிமினல்
குற்றமாகவும் கருதலாம். இத்தகைய குற்றங்கள் பற்றிய செய்தி கள் நமக்கு கி.பி. 9 ஆம்
நூற்றாண்டிலிருந்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை யிலான இடைக்கால கல்வெட்டுக்களில்
கிடைகின்றன. இத்தகைய குற்றங்க ளைப் புரிந்தவர்கள் நிறைந்த உரிமைகளும், தன்னாட்சியுரிமை
பெற்ற தேவ தான , பிரம்மதேய, சதுர்வேதிமங்கலத்தை நிர்வாகம் செய்யும் பிராமணர்கள் ,
வழிபாடு செய்து சமயத்தை வளர்க்கும் தேவகண்மிகள் போன்ற அலுவலர் களே பெரும்பாலும்
இடம் பெற்றுள்ளனர். மேலும் சாமான்ய மக்களும் குற்ற நடவடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகிறது.
திட்டமிட்ட கொலை
பாண்டிய நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற கொலை
வழக்கின் விசாரணை பற்றி சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சௌ மிய நாராயணபெருமாள்
கோயிலில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் குறிப் பிடுகின்றன. திருக்கோஷ்டியூர்
பெருமாள் கோயில் ஐந்து அலுவலர்கள் இருந்தனர். இவருளுள் ஒருவர் வாமனபட்டர்
என்பவராவார். இவர் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி கோயிற் பணிகளை முடித்து கிழக்கு வீதிவழியாகத்
தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சத்தியநாவன் என்ப வன் தெரு வின் இருமருங்கிலும் தன் அடியாட்களை
ஆயுதங்களோடு நிறுத்திவைத் திருந்தான். பட்டர் இருட்டில் வருவதை அறிந்த
அவ்வடியாட்கள் ஆயுதங்க ளால் தாக்கி கொலை செய்தனர். சத்தியநாவனும் அடியாட்டகளும்
அருகி லுள்ள பன்றித்திட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாயினர்.
கொலையாளிகள் தப்பியோடவே ‘’ மூலப்பரிஷத்து
என்னும் ஊர்ச்சபை யினர் ஒன்று கூடினர். சத்தியநாவனுக்குச் சொந்தமான நிலங்கள், வீடுகள்,
தோட்டங்கள் முதலிய உடைமைப் பொருட்களும் ஆண், பெண் பணியாட்க ளும் கையாகப்படுத்தப்பட்டு சொக்கநாராயணப்
பெருமாள் கோயிலுக்கு திரு நாமத்துக் காணியாக கொடுத்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு
சம்பவம் நடந்த பத்து நாட்களுக்குள் வழங்கப்பட்டது. மேலும் கொலையில் தொடர்புடைய மற் றொரு குற்றவாளியான
தேவர்கள்நாயன் என்பவன் அயல்நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதை அறிந்த ஊர்சபையோர்
அவனுடைய அனைத்து உடைமை களையும் கையகப்படுத்தி கோயிலுக்கு உரிமையாக்கினார். பின்னர்
வாமனப் பட்டரின் ஆட்கள் பழிக்குப்பழி தீர்க்கும் நோக்கில் சத்தியநாதனைத் திட்ட மிட்
டுக் கொலை செய்தனர். இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த நான்கு மாதங்களுக்குப் பின்
சத்தியநாவன் மகன் சேர்மலைப்பெருமாள் என்பவன் அவ்வூர்க் கோயில் அலுவலர் முதல்
பணியாளர்கள் வரை அனைவரையும் ஒருங்கு கூட்டினான். தம்தந்தை செய்தகொலைக்கும்
தமக்கும் எந்த தொடர்பு இல்லை எனவும் தாம் நிரபராதி என்றும் , உடைமைகளின் பறிமுதலால்
தாம் பெருந்துன்பத் திற்கு ஆளாகியிருப்பதாகவும் ஊர்சபையோர் கையகப்படுத்திய நிலங்கள்
, வீடுகள், தோட்டங்கள், பணியாளர்கள் முதலிய அனைத்தையும் மீள அளிக்க வேண்டுமென்றும்,
அதற்கு ஈடாக கோயிலுக்கு எண்ணூறு பணம் கொடுப்ப தாகவும் விண்ணப்பம் செய்தான்.
அவனுடைய
வேண்டுதல் விண்ணப்பத்தில் உண்மையிருப்பதை ஊர் சபையோர் உணர்ந்தனர். அவ்விண்ணப்பதையும்
ஊர்ப் பொதுமக்களின் பரிந் துரையையும் ஊர்சபை ஏற்றுக்கொண்டது. கோயிலுக்கு வீரகேரள
மலைய ரையன் சந்தி என்ற கட்டளையைத் தொடர்ந்து நிறைவேற்றி வைக்கவேண் டும் என்ற உறுதிப்பாட்டின்
அடிப்படையில் சேர்மலைப் பெருமாளுக்கு உடை மைகள் அனைத்தும் மீள வழங்கப்பட்டது.
பிறன்மனை விருப்ப கொலை
விழுப்புரம்
மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் ஜம்பையில் உள்ள சம்புநாதர் கோயிலில் முதலாம்
இராஜராஜனின் கி.பி. 1013 ஆண்டில் வெளி யிடப்பட்ட கல்வெட்டில் பிறன்மனை விருப்பதால்
நடந்த கொலை பற்றி குறிப்பிடுகிறது. அதாவது பாலைப்பந்தல் என்னும் ஊரை சார்ந்த
அங்காடி பொற்றாமன் என்பவன் வாணிபம் செய்து வந்தான். அவன் சீமாதேவி என் னும்
பெண்ணைத் தன் வாழ்க்கை துணைவியாக கொண்டிருந்தான். நாவலூர் என்ற கிராமத்திலிருந்து
இவ்வூரில் வாழ்ந்து வந்த சீராளன் என்பவன் சீமா தேவியை அடைய விரும்பினான். ஒருநாள்
நள்ளிரவில் பாலைப்பந்தலுக்குச் சென்று சீமாதேவியை கற்பழிக்கும் நோக்கில் வீட்டில்
புகுந்து கட்டாயப்ப டுத்தி இழுத்தான். இந்நிகழ்வை நேரில் பார்த்த
அங்காடிப்போற்றாமன் தானி ருக்கும் போதே என்னுடைய மனையாட்டியை என் கண்முன்னர் கட்டாயப்
படுத்தினாயே என்று சினம் கொண்டு சீராளனைக் குத்தி கொன்றுவிட்டான்.
இவ்வழக்கை விசாரித்த ஊர்சபையோர் அங்காடிப்
போற்றாமனின் செயல் மனவெழுச்சியால் நிகழ்ந்ததாகக் கருதினர். இருப்பினும் சீராளனைக்
கொன்ற குற்றத்திற்காக ஒரு நந்தா விளக்கைச் சூரிய சந்திரர் உள்ளவரை கோயிலில் எரிக்க
வேண்டுமென ஆணையிட்டனர். ஊர்சபையோர் கணவனை இழந்த சீராளனின் மனைவியை அணுகி இத்தீர்ப்பிற்கு
இசைவையும் பெற்றனர். இந் நிகழ்வை ....‘’ அங்காடி பொற்றாமன் வைச்சுக் கொண்டிருந்த
பெண்டாட்டி சீமாதேவி பெற்றியை முனைப்பாடி நாவலூரிருக்கும் பிராட்டி சீராளன் இராத் திரி
சீமாதேவி பெற்றியை வலிய புக்கு பிடித்து .... அங்காடி பொற்றா மன் என் மண வாட்டியை
நானிருக்கவே வலிய பிடிச்சானென்றுபுக்கு படக்குத் தின மையில் அங்காடி பொற்றாமன்
மேல் வழக்காவு இலாமையில்’’... என்ற கல்வெட்டு வரிகளால் தீர்ப்பின் வலிமையை
உணரமுடிகிறது.
முன்பகை கொலை
கி.பி. 1127 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட
விக்கிரம சோழனின் ஒன்ப தாம் ஆட்சியாண்டில் இராஜேந்திரசோழ வளநாட்டில் பெண்ணைத் தென்கரை
நாட்டில் இருந்த கடம்பூரில் நிகழ்ந்த கொலைசம்பவத்தைப் பற்றி இவ்வூர் கல்வெட்டு
குறிப்பிடுகிறது. கடம்பூரில் வாழ்ந்த கூடலுடையான் குளத்தான் சேந்தன் என்பவனுக்கும்,
பிச்சன்பன்மன் கண்டன் என்பவனுக்கும் பகை மூண் டிருந்தது. முன்பகைக் காரணமாக
இருவரும் ஒரு வரையொருவர் சண்டை யிட்டுக் கொண்டனர். அப்போது கூடலுடையான் சேந்தன்
முட்டிக்குத்தினான் அதனால் பிச்சன்பன்மன் கண்டன் இறந்துவிட்டான். இவ்வழக்கு ஊர் சபை
யோரிடம் வந்தது. பன்மன்கண்டனின் தந்தை, பிச்சன்பன் மனைவியும், உடன் பிறந்த தம்பியான
பெரியானயும், அவன்தம்பிமுனையானையும், இளையான் அக்களனையும் அழைத்துப் பேசினர்.
அவர்கள் அனைவரும் கூடலுடையான் சேந்தன் செய்த கொலைக் குற்றத்திற்காக அவனை ஒரு
அறச்செயல் செய்ய வேண்டினர். அவர்களுடைய அனுமதி பெற்ற ஊர்சபையினர் ஊர் வழக்கப் படி
உரியனசெய்வதாக உறுதியளித்தனர். அக்குற்றத்திற்காகச் சேந்தனிடம் தண்டமாக
முப்பத்திரண்டு பசுக்களைக் கைக்கொள்ளலாம் என முடிவெடுத் தனர். அம்முடிவை
பன்மன்கண்டனின் குடும்பத்தார் ஏற்றுக் கொண்டனர். சேந் தனும் அத்தீர்ப்புக்கு
கட்டுப்பட்டு முப்பத்திரண்டு பசுக்களைக் கொடுத்தான்.
தற்கொலை வழக்குகள்
கி.பி. 1055 ஆம் ஆண்டு முதலாம் இராஜேந்திர
சோழனின் மூன்றாம் ஆட்சியாண்டில் இராஜேந்திர சோழ வளநாட்டின் பெண்ணை ஆற்றின் தென் கரையில்
கூகுர்ப்பாடி என்னும் ஊர் இருந்தது. இதேவூரில் வீரபுத்திரன் என்ப வனின் அன்னை
சேந்தன் உமையாளும் வாழ்ந்து வந்தாள். அவரை வரிசெ லுத்த வேண்டுமென அவ்வூர் அரசு
அலுவலரான பழங்கூரன் குன்றன் என்ப வன் வற்புறுத்தினான். அனைத்து வரிகளையும் சேந்தன்
உனையால் செலுத் திவிட்டதாகவும் எதற்கும் வரிசெலுத்த வேண்டியதில்லை எனவும் மறுத்துக்
கூறிவிட்டார். பழங்கூரன், உமையாளை அரசன் முன்பு நிறுத்தி வரியை மீண் டும்
செலுத்தசெய்தான். அச்செயலால் மனம் நொந்த சேந்தன் உமையாள் அவமதிப்பு தாங்க
முடியாமல் நஞ்சு குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
நான்கு
திசைகளிலிருந்த பதினெண் ஊர்களைச் சேர்ந்த ஊர்சபையினர் அனைவரும் கூடினர். வரி
செலுத்திய சேந்தன் உமையாளை அரசன் முன்பு கொண்டு நிறுத்தி அவரை மீண்டும் வரி
செலுத்தச் செய்து அவமதிப்புக்குள் ளாக்கிய செயலே தற்கொலைக்குக் காரணம் என உணர்ந்தனர்.
பழங்கூரன் குன்றனுக்கு ஊர்சபையோர் முப்பத்திரண்டு பொற்காசுகளைத் தண்டம் விதித்
தனர். அக்காசுகளை முதலீடாகக் கொண்டு அதன் வட்டியில் நாள்தோறும் உழக்கெண்ணெய் வாங்கி
கோயிலில் விளக்கு எரிக்க ஆணையிடப்பட்டது.
இரண்டாம் இராஜேந்திர சோழனின் நான்காம்
(கி.பி.1055 – 1056) ஆட்சி யாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் திசை
ஆயிரத்து ஐநூற்றுவர், பெருநிரவி என்று இரண்டு வணிகக்குழுவினர் இருந்தனர். வணி கர்
குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி கட்டிலேறுவதற்குத் (திருமண சடங்கு) தயாராக
இருந்தாள். தில்லைக்கூத்தனும் , மற்றொருவனும் அதற்கு தடையாக இருந்து மணமகனுக்கு இராமன்
என்வனின் மகளை திருமண ஏற் பாடு செய்தனர். இதனால் முதல் பெண் நஞ்சு குடித்து உயிரை
மாய்த்துக் கொள்கிறாள். இதனை அறிந்த திசை ஆயிரத்து ஐநூற்றுவரும், பெருநிரவிய ரும்
இதற்கு பிராயச்சித்தமாக சங்கு பரமேஸ்வரியை எழுந்தருளுவித்தனர். இவ்வூர்
மாதேவர்க்கு மூன்று சந்தியும் விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தற்செயல் கொலைகள்
திண்டிவனம் வட்டம், கிடங்கில் பக்தபிரஹதீஸ்வரர்
கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கசோழனின் 21 வது (கி.பி.1091) ஆட்சி யாண்டை
சார்ந்த கல்வெட்டு தற்செயல் கொலையைப் பற்றி கூறுகிறது. ஒய்மாநாட்டு குடிப் பள்ளி கிராமத்தில்
மாலன் என்பவனின் மகன் கற்றளி என்னும் ஆறு வயது சிறுவன் இருந்தான். இவன் ஒருநாள்
கையில் அரிவாளைக் கொண்டு மரத் தை வெட்டிக் கொண்டிருந்தான். அப்போது இவ்வூர்
பொன்மகனார் மகன் நக்கன் என்னும் ஏழு வயது சிறுவன் விளையாட்டாகத் தன் கையை முன் நீட்ட
கையை வெட்டிவிட்டான். சிறுவன் நக்கன் இதனால் இறந்து விடுகி றான். தன்மகன் கற்றளி
கையை வெட்டி மரணத்தை ஏற்படுத்திய செயலுக் காக மாலன் மனம் நொந்து கோயிலுக்கு
விளக்கெரிக்க நாள்தோறும் உழக் கெண்ணெய் அளித்துள்ளான்.
விழுப்புரம் மாவட்டம் , உளுந்தூர்பேட்டை
வட்டத்தில் எலவனாசூர் அர்த்தநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள
இரண் டாம் இராஜாதிராஜ சோழனின் பத்தாம் ஆட்சியண்டை சார்ந்த (கி.பி. 1173) கல்வெட்டு
தற்செயல் கொலை வழக்கை பற்றி குறிப்பிடுகிறது. சனநாதவள நாட்டு பரனூர்க் கூற்றது
மாடுரில் வாழ்ந்த கோச்சாத்தன்காமன் என்பவனின் அகமுடையாள் ஏதோ காரணத்திற்காக தன்
மகள் மீது கடும் கோபத்துடன் அரைமனை (அரிவாள்மனையாக இருக்கலாம்) கோலை வீசினாள்.
அக்கோலா னாது இலக்கு மாறி அவ்வூரை சார்ந்த மிண்டன்காமன் என்பவனுடைய மகள் மீது பட்டது.
காயமுற்ற அப்பெண் இருபது நாள் வரை இன்னல்பட்டு இறந் தாள். இவ்வழக்கு ஊர்சபைக்கு
வந்தது. குற்றங்களை தீர விசாரித்த சபை யோர் கோச்சாத்தன்காமனின் அகமுடையாள்
உயிர்கொலை செய்யும் நோக் கத்தில் அரைமனைகோலை எறியவில்லை. இந்நிகழ்வு எதிர்பாராமல்
கைப் பிழைப்பாடாக நடந்த விபத்து என்று தீர்ப்பு கூறினர். இருப்பினும் கோச்சாத் தன்காமனிடம்
முப்பத்திரண்டு பசுக்களை தண்டமாக பெற்றனர். இப்பாவத் திற்கு கழுவாயாக கோச்சாத்தன்
அகமுடையாள் கோயிலுக்கு விளக்கு வைக்க இருதிறத்தாரும் ஒப்புகொண்டனர்.
இதேக்கோயிலில் உள்ள மூன்றாம் இராஜராஜசோழனின்
பத்தாவது ஆட்சி யாண்டு(கி.பி.1226)கல்வெட்டு மற்றொரு தற்செயல் கொலை வழக்கைப் பற்றி
கூறுகிறது. வடநாரையூர்க் கூற்றத்து வாணபிராட்டியிலிருக்கும் ஆறிக் குளத் தூருடையான்
முடிகொண்டான் காரியாந வீரபாலன் என்பவன் பன்றி வேட் டையாட இரவு காட்டிற்குச் சென்று
அம்பு எய்ய, அது குறிதவறி புஞ்ச நூற் பள்ளிபடியன் கந்தனான புஞ்சநூற் போயன் மகன் தில்லையாந்
ஆறாயிரப் போயன் மீது பட அவன் இறந்து விடுகிறான். இவ்வழக்கை விசாரித்த ஊர் சபையோர்
இச்சம்பவத்திற்கு ஏதேனும் முன்பகை உள்ளனவா என்பதை தீரவி சாரித்தனர். இந்நிகழ்வு
தற்செயலாக நடந்ததே தவிர பகையேதும்மில்லை என்று தீர்ப்பு கூறினர். இதன்
கழுவிரக்கமாக வீரபாலன் எலவனாசூர் கோயி லுக்கு முப்பத்திரண்டு பசுக்களை தானமாக
கொடுத்துள்ளான்.
சிவில் வழக்குகள்
வரியெப்பு செய்வோர் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கைகளைப் பற்றி காண் போம். பண்டையகால அரசுக்கு நிலவருவையே
நிரந்தரவருவாயாகும். ‘’அறு கூறினால் புரவு மாயாதியும் பொன்னும் பெறுமாறு சோழகோன்’’
என்ற கல் வெட்டு வரியில் ஆறில் ஒருபங்கு நிலவரியாக வசூளிக்கப்பட்டதை அறிய முடிகிறது.
இதில் ‘’புரவு’’ என்ற சொல் நிலவரியை சுட்டுவதாகும். இவ்வரி களை வசூல் செய்வதற்காக
ஒவ்வொரு ஊரிலும் புரவுவரி சீகரணம், புரவு வரியார், புரவுவரித் திணைக்களநாயகம் என்ற
பெயரில் அதிகாரிகள் நியமிக் கப்பட்டிருந்தனர். இவர்கள் மக்களிடம் நிலவரியை வசூல் செய்து
அரசுக்கு செலுத்த வேண்டும். இருப்பினும் வரியெப்பு செய்தவர்கள், பொய்க் கணக்கு எழுதும்
அரசு அதிகாரிகளும் இருந்துள்ளனர். இவர்கள் மீது அரசு எடுத்த நட வடிக்கைகள் பற்றிக்
காண்போம்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்
வட்டம் ஓமாம் புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம்
கோப்பெருஞ்சிங்கன் கல் வெட்டில் நிலவரி செலுத்தாதவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை
பற்றி கூறு கிறது. ஸ்ரீஉலகளந்த சோழச் சதுர்வேதிமங்கலத்திலிருந்த சிலர் நிலத்தின்
மீதான வரிகயை செலுத்தாமல் ஊரைவிட்டுச் சென்று விட்டனர். இவர்க ளுக்கு இதேவூரைச்
சேர்ந்த பிராமணர்கள் சிலர் பிணையளித்திருந்தனர். பிணையளித்தவர்களும் வரியை செலுத்தவில்லை.
இதனால் வரியை உடனே செலுத்துமாறு இவர்களுக்கு ஆணையிடப்பட்டது. ஆணைப்படி வரிகட்ட தவ றியதால்
பிணை அளித்தவர்களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவர்களின் நிலத்தை புணைவிளையாகப்
பெற்றுக் கொள்ளயாரும் முன்வராததால் நிலத் தின் ஒரு பகுதியினை கோயில்
நிர்வாகத்தினரே விலைக்கு பெற்றுக் கொள் ளுமாறு வேண்டினர். கோயில் பயன்பாட்டில்
இல்லாமல் இருந்த ஆபரணங் களை விற்று நிலங்களை கோயில் நிர்வாகமே வாங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பலூர்
கைலாசநாதர் கோயி லில் உள்ள மூன்றாம் இராஜராஜ சோழனின் 19 ஆம் ஆட்சியாண்டைச்சார்ந்த
கல்வெட்டு பொய் கணக்கு எழுதியதற்காக கொடுக்கப்பட்ட தண்டனையைப் பற்றி கூறுகிறது. ‘’
நம்மூரில் காணி உடையநாய் கணக்கெழுதி வன்தசேஞலூ ருடையான் மதளை உத்தமப் பிரியன்
எல்லோமுக்கும் மேற்கிராமத்துரோகி யாய் கணக்கெழுதலாகா தொழிகையால் இவனும் இவன்
வங்கிஷத்தாரும் இவன் உறவு முறை யென்று வந்து கணக்கெழுதுவார்களாகில் திருவாணை புவன
முழுதுடையாரா ணை ‘’ என்ற கல்வெட்டு வரியால் மூன்றாம் இராஜ ராஜ சோழனின் (கி.பி.
1235 ) காலத்தில் சேஞலூருடையான் மதளை உத்தம பிரியன் என்பவன் பொய்க்கணக்கு எழுதியதை
அவ்வூர் சபையோர் தணிக்கை செய்த போது கண்டறிந்தனர். உடனே அவனை அரசுப்பணியிலிருந்து நீக்கம்
செய்யப்பட்டான். இனி அவனும், அவனது வழித் தோன்றல்களாக வருவோ ரும், அவனுடைய உறவினர்
என்று சொல்லிக் கொண்டு வருகின்றவர்களும் ஊர்கணக்கு எழுத நிரந்தர தடை
விதிக்கப்பட்டது.
மெகாவரியெய்ப்பு நடவடிக்கை
பழையவடஆர்க்காடு மாவட்டம் அரக்கோணம் வட்டம்
திருமால்புரத்தி லுள்ள சோழர் கல்வெட்டில் மெகாவரியெய்ப்பு முறைகேடு பற்றி
குறிப்பிடு கிறது. இக்கல்வெட்டு நூறு வரிகளை கொண்டது. இவ்வரியெய்பு முதலாம் ஆதித்த
சோழனின் 22 ஆவது (கி.பி.893) ஆண்டிலிருந்து, உத்தம சோழனின் நான்காம் (கி.பி.974)
ஆட்சியாண்டு வரை ஏறக்குறைய 82 ஆண்டுகள் நடந்துள் ளது. திருமால்புரத்து கோயில்
வழிபாட்டிற்காக புரவுநெல் 3,000 காடி, இரவு நெல் 561 காடி, பொன்னாக 200 கழஞ்சு,
சிற்றியாற்றூர் என்ற ஊரும் தானமாக அளிக்கப்பட்டது. இவ்வூர் நிலங்களில்
சங்கப்பாடிகிழான் என்பவனின் நிலம் மட்டும் நீக்கி பிற நிலங்கள் அனைத்தும் கொடையாக
அளிக்கப்பட்டன.
இந்த
ஊரை ஏற்று மேற்கூறிய அளவு வரியை செலுத்தும் பொறுப்பை புதுபாக்கம் சபையோர் ஏற்றுக்கொண்டனர். இது
தொண்டைமானாற்றூர் துஞ்சி யனதேவரின் (முதலாம் ஆதித்த சோழன்) 21 ஆட்சிண்டில்
கொடுக்கப்பட்டு 22 ஆவது ஆண்டில் சாசனம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றிய விவரம் அர சாங்க
வருவாய் கணக்குப் புத்தகத்தில் எழுதப்படவில்லை. ஆனால் இப்படி அரசுக் கணக்கில்
எழுதப்படாமல் இருந்த விவரம் பராந்தக சோழனின் நான் காவது ஆட்சியாண்டில்
கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அரசின் கணக்கில் சேர்க் கப்பட்டது. அதன் பிறகும்
புதுப்பாக்கத்துச் சபையோர் கோயிலுக்கு சேரவேண் டிய பொன்னையும், நெல்லையும்
கொடுக்காமல் இவ்வரசனின் 36 ஆவது ஆண்டுவரை அதாவது முப்பத்திரண்டு ஆண்டுகள் ஏமாற்றி
வந்துள்ளனர். இத னால் கோபமடைந்த அரசன் சபையோரிடமிருந்து சங்கப்பாடிகிழன் முதலிய
அனைத்து நிலங்களையும் மீட்டு கோயிலின் நேரடி நிர்வாகத்தில் விடுகிறான்.
ஆனால் இப்படி முன்னர் நீக்கிய
சங்கப்பாடிகிழான் நிலத்தைக் கோயி லுக்கு வரியிலிட்டு குடுத்தப்பின்னரும் அந்த
நிலத்தை புதுப்பாக்கதுச் சபை யார் வன்முறையினால் கைப்பற்றி அனுபவித்துக்
கொண்டதுடன் கோயிலுக் குச் சேரவேண்டிய இறையையும் கட்டாமல் விடுகின்றனர். இந்த
வரியெப்பை எதிர்த்துக் கேட்ட கோயில் அதிகாரிகளையும் அவர்கள் துன்புறுத்தியுள்ளனர்.
சபையோர்களின் அட்டகாசம் எல்லை மீறியபோது இத்தகவல் அரசனிடம் முறையிடப்படுகிறது.
அதனைகேட்ட அரசன் கோயில் அதிகாரிகளையும், சபையோரையும் அழைத்து நேரடி விசாரணை செய்த போது
ஊழல் வெளிப் படுகிறது. சபையோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள்
தண்டிக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்பட்ட பிறகும் அரசன் மீண்டும் அந்நிலங் களை சபையோரே
பெற்று கோயிலுக்குத் தேவதான இறை செலுத்தும் உரி மையை வழங்கினான். மேலும் இத்தகைய
வரியெப்பு ஊழல் விசாரணையா னது இனிமேல் இந்த மாதிரி நடவாமல் இருக்கவேண்டும் என்று
பலர் முன் னிலையில் நடத்தப்பட்டது. இப்பகுதியின் பிரம்மதேயக் கிழவர்கள், நாட்டார் கள்,
நகரத்தார்கள், ஊரார்கள், பள்ளிச்சந்தம் மற்றும் பிற சபை அமைப்புகளின் அலுவலர்கள்
ஆகியோரை அழைத்து நடத்தப்பட்டது. மேலும் அப்போது மன் னனுடன் கருமம் ஆராய்கின்ற அதிகாரி
ஒருவனும், நடுவிருக்கை, ஆணத்தி, வாய்க்கேழ்வி, ஓலை எழுதும் அதிகாரி, ஓலைநாயகம்,
புரவுவரி அதிகாரி, உத்தரமந்திரி, வரிப்பொத்தகக் கணக்கு ஆகிய வருவாய்த்துறை
அதிகாரிக ளும் உடனிருந்து நடத்தி ஒழுங்குபடுத்தியுள்ளனர். இதிலிருந்து பிரம்மதேய
சபையோர்கள் அரசனின் ஆணைகளையே மதியாமல் ஏமாற்றும் துணிச்சல் மிக்கவர்களாக
இருந்துள்ளனர். இவ்வழக்கிற்காக மன்னன் காஞ்சிபுரம் வந்து விசாரணை செய்ததையும்
கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தண்டனைகள்
சபையோர் நீதி வழங்குவதில் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன்
வாதி, எதிர்வாதி ஆகியோரின் முன்னிலையில் விசாரணை செய்து தீர்ப்பு வழங் கினர்.
மேலும் வாதியின் குடும்பத்தினரை அழைத்து இக்குற்றத்திற்கு என்ன வழிகாணலாம் எனக்
கேட்கப்பட்டிருப்பது ஊர்சபையோரின் மிக உயர்ந்த நீதி வழங்கும் பண்பயைக்காட்டுகிறது.
சபையோர் மரண வழக்குகளைகையாண்ட விதம் அளப்பரியதாக உள்ளது. காரணம் கொலை குற்றத் திற்கு
மரணதண் டனை விதிக்கப்பெறாமல் குற்றவாளி திருந்துவதற்கு வாய்ப் பளிக்கும் நோக் கில்
தண்டம் விதித்து அத்தொகையைக் கோயிலுக்கு விளக் கெரிக்கும் நிவந் தமாக அளிக்க
வேண்டுமென விதியமைத்துள்ளனர். மனிதன் சமுதாய , அரசி யல் சட்டங்களுக்கு மேலாகத்
தன்னுடைய மன சாட்சிக்குக் கட்டுபட்டவன் ஆவான். கொலைசெய்தல் கொடுமையான செயல் என்று
அறிந்தும் மனவெ ழுச்சியால் அறிவிழந்து அக்கொடிய செயலுக்கு உட்படுகி றான்.
சூழ்நிலையே ஒருவனைக் குற்றவாளியாக ஆக்குகிறது. இதனை உணர்ந்த சபையோர் கொலைகுற்றம்
செய்தவர்களுக்கு தாம் செய்த தவறை உணர்ந்து சிந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்ற
உயரிய கருது கோளை கொண்டிருந்தனர் என் பதை அறியமுடிகிறது. குற்றம் செய்தவனை மரணத்
தின் மூலம் தண்டிப் பதை விட அவனைச் சீர்திருத்து வதில்தான் நீதியின் பெருமை
நிலைநிறுத் தப்படுகிறது. குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்க விதியிருந்தும் 302
இ.பி.கோ. வின் கீழ் ஆயுள்தண்டனை யாக மாற்றி விதிப்ப தற்கு ஒப்பாக இக்கல்வெட்டு
தீர்ப்புகள் உள்ளன. காலம் தாழ்த்தினால் நியாயம் மறுக்கப் படுகிறது என்பர்.
கல்வெட்டுக்களில் காலம் தாழ்த்தப்படாமல் நீதி வழங்கிய முறை சிந்திக்க வைப்பதாக
உள்ளது.
தீர்வுகள்
வேண்டுமென்றே திட்டமிட்டுக் கொலை செய்தமை
இன்றைய குற்றவி யல் சட்டம் இ.பி.கோ. 300 விதிக்குப்பொருந்த வாமனப்பட்டர்
சத்தியநாவனால் கொலைசெய்யப் பெற்றான். மரணம் நேரிடும் என்று தெரிந்தே மரணம் நேரி டும்
வகையில் ஈடுபட்டமை. இன்றைய குற்றவியல் விதி இ.பி.கோ.299 விதிக் குப் பொருந்த
சீராளனை அங்காடி பொற்றாமன் கொன்றது. இந்தியக் குற்றவி யல் சட்டம் 350 பிரிவில்
உடலைத் தாக்குதல் குற்றம் எனக் கூறப் பெற்றுள் ளது. கூடலுடையான் குளத்தான் சேந்தன்
பிச்சன் பன்மனைக் கொலை செய் தது. தற்செயலாக வேட்டையாடும் போதோ, சுடும்போதோ,
நேரிடக் கூடிய மரணம் இன்றைய குற்றவியல் விதி இ.பி.கோ 304 சட்டப்பிரி வின் படி
குற்ற மாகும். கோச்சாத்தன்காமன் அகமுடையாள் அரைமனைகோல் எறிந்தது, வீர பாலன் அம்பு
எய்ந்தது, கற்றளி என்னும் ஆறுவயது சிறுவனின் கையை வெட்டியது. சேந்தன் உமையாள்,
செட்டியார் குடும்ப பெண் இவர்களின் தற் கொலைக்குக் காரணமாக அமைந்த வழக்கு.
முதலாம் பராந்தகனின் காலத்தில் ஊர் சபைகள்
எவ்வாறு குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்கின என்பதை அவனது 19 மற்றும்
21 ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டு
ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுபினர் என்னென்ன தகுதிகள் பெற்றி ருக்க
வேண்டும் என்று தெளிவாக கூறுகின்றது.. ஆனால் மூன்று ஆண்டுக ளுக்கு பிறகு அதே ஊரில்
நடக்கும் சபை தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் தகுதி,
விதிமுறைகள் முற்றிலும் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. அவ்விதி முறைகளின் வீரியத்
தன்மைகளை நோக்கும் போது, எந்த அளவுக்கு முந்தைய கால நிர்வாகத்தில் உறுப்பினர்கள்
ஊழல் புரிந்தி ருக்க வேண்டும் என்பது புலனாகிறது. இதனை உணர்ந்த அரசன் ஊழலை
நிரந்தரமாக தடுக்கும் விதிகளை ஆராய்ந்து வகுத்தளிதுள்ளான். இதன்விளை வாக கிராம
நிர்வாகத்திலிருந்த ஊழளின் ஊற்றுக் கண்கள் முழுவதும் அடைக்கப்பட்டது எனலாம்.
முதலாம் பராந்தகனுக்கு பின்பு இராஷ்டிரகூட
மன்னன் கன்னரதேவனின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது தொண்டைமண்டலம். திடீர் அரசியல்
மாற்றத்தால் கிராம சபையில் ஊழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சபையோர் நீதி
வழங்கும் முறைக்கான விதிமுறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. உத்திரமேரூரில்
மகாசபை பேரம்பலத்தின் முன்புள்ள திண்ணை யில் பகல் நேரத்தில் கூடி நீதி
வழங்கியதையும், ஊர்சபையோர் எடுத்த சில முடிவுகள் பற்றியும் கன்னரதேவனின் கல்வெட்டு
குறிப்பிடுகிறது.
·
ஊர்சபையோரால் தண்டிக்கப்பெற்ற குற்றவாளிக்கு
விதித்த தண்டத் தொகை அனைத்தையும் உடனே ஊர்சபை வசூல் செய்ய வேண்டும். வசூல் செய்த தொகையை
அந்த ஆண்டே கிராமத்தை ஆட்சி செய்யும் பெருமக்கள் குழுவிடம் கணக்கை கொடுத்து பைசல்
செய்யவேண்டும்.
·
அவ்வாறு தண்டத்தொகை செலுத்த இயலாமல் தீர்வு
பெறாத வழக்கு களைச் சபையோரைக் கொண்டு மீண்டும் தண்டம் விதிக்கச் செய்து
முழுத்தொகையும் வசூல் செய்யவேண்டும்.
·
தண்டனை பெற்ற ஒருவன் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து
தன் குற் றமின்மையை மெய்ப்பிக்க விரும்பினாலோ, வேறு சபையோரிடம் தன் னுடைய வழக்கை
முறையிட்டு நீதி பெற விரும்பினாலோ, அதற்கும் அக்கிராம சபையினர் ஆவன செய்ய வேண்டும்.
அவ்வூர் நடுநிலை யாளரையும், பாடிகாவலரையும் உடன் சேர்த்துப் பேசித் தண்டிக்கப் பெற்ற
அதே ஆண்டிற்குள் அவ்வழக்கைத் தீர்த்து வைக்க வேண்டும்.
·
தீர்வுபெறாத வழக்குகளை மீண்டும் சபையோரைக்
கொண்டு உடனடி யாக தீர்க்க வேண்டும்.
·
இவ்வாறு கிராம காரியம் செய்வோர் செய்யாத நிலையில்
அவர்களு டைய பதவியைப் பறித்து காணம் பொன் தண்டமிட்டனர். மேலும் எவ் வித அநீதிச்
செயல்களுக்கும் நிகழாமல் வழக்கைத் தீர்த்துக் கொடுப்ப தாக உத்திரமேரூர் சபையோர்
உறுதி செய்துள்ளனர்.
எனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை
உடனுக்குடன் விசாரணை செய்து தீர்ப்பதில் கிராமசபை உறுப்பினர்கள் எந்த அளவிற்கு
விவேகத்துடன் செயல்படவேண்டும் என்பதை உத்திரமேரூர் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது.
முடியுரை
தமிழக வரலாற்றில் இடைக்காலம் என்பது சோழர் காலமாகும்.
இக்கால கட்டத்தில் பராந்தக சோழனது காலத்திற்கு பிறகும், இராஜராஜனின் ஆரம்ப காலத்திலும்,
சோழப் பேரரசின் இறுதி காலக்கட்டத்திலும், அதிகமாக ஊழல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
பராந்தகனுக்கு பிறகு கெடிலக்கரை வரையில் இராஷ்டிரகூடர்களின் ஆளுகையின் கீழ்
தொண்டைநாடு சென்றது. இக்காலத் தில்தான் அப்பகுதிகளில் கிராமசபை, கோயில் நிர்வாகம்,
சதுர்வேதிமங்கலம், பிரமதேயங்களில் ஊழல்கள் மலிந்த நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. அதன்
பிறகு முதலாம் இராஜராஜசோழன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் நிலைமைசரி
செய்யப்பட்டுள்ளது. மேலும் சோழப்பேரரசின் இறுதி நூற்றாண் டில் ஆட்சிசெய்த வலிமை
குன்றிய சோழமன்னர்களின் காலத்தில் உள்ளாட்சி அமைப்பினர் எதேச்சிய அதிகாரம்
பெற்றவர்களாக செயல்பட்டுள்ளனர் என்ப தையும் உணரமுடிகிறது. ஆனால் 399 ஆண்டு
சோழர்களின் ஆட்சியில் வலி மைமிக்க, வல்லமைப்பெற்ற தலைமையில் ஊழல், குற்றங்களின்
எண்ணிக் கை கணிசமாக குறைந்துள்ளதையும் அறியமுடிகிறது.
குறிப்பு நூல்பட்டியல்
1.
தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், மடலம், VII.
2.
கடலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், மடலம், I.
3.
INSCRIPTIONS TEXTS OF THE PUDUKOTTAI STATE.
4.
ஜம்பை ஓர் ஆய்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.
5.
தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், மடலம், XXII. I.
6.
கல்வெட்டு ஆண்டறிக்கை, மடலங்கள், 1914,
1918,1927,1939.
7.
அருண்மொழி ஆய்வுத் தொகுதி, தமிழ்நாடு அரசு
தொல்லியல்துறை.
8.
ச. கிருஷ்ணமூர்த்தி, வரலாற்றில்
எலவானாசூர்க்கோட்டை.
9.
தி.வை.சதாசிவப்பண்டாரத்தார், பிற்கால சோழர்
வரலாறு.
10.
தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், மடலம், XVII.
Comments
Post a Comment