கடலூர் மாவட்டத்தின் சமயப் பதிவுகள்

 முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

வரலாற்றுத்துறை

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி 

தஞ்சாவூர்


சமணம்

சமண சமயத்திற்கு ஜைன மதம் , அநேகாந்தவாத மதம் , நிகண்ட மதம் என பலப்பெயர்கள் உண்டு . சமணர் என்றால் துறவி என்று பொருள். புலன் களையும், கர்மங்களையும் வென்றவர் ஜினர் என அழைக்கப்பட்டார் . இவர் களுக்கு தீர்த்தங்கரர் என்ற பெயரும் உண்டு. சமண சமயத்தின் கொள்கை களை உலக மக்களிடையே பரப்புவதற்காக தோன்றிய பெரியோர் களை தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்பட்டனர். விருஷப தேவர் என்பவர் முதல் தீர்த்தங்கரர் ஆவார் . இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவ நாதர் கி.மு எட்டாம் நூற்றாண்டில் ( கி.மு. 817 முதல் கி.மு. 717 ) வாழ்ந்தவர். இவருக்குப் பின்னர் 250 ஆண்டுகளுக்குப்  பின்பு தோன்றிய தீர்த்தங்கரர்தான் மகாவீரர் ஆவார். இவர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரை 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார் . தீர்த்தங்கரர்களால் அருளப்பட்ட சமணக் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் பணியை சமண சமய குருமார்கள் செய்து வந்தனர். கோவர்த்தனருக்கு பிறகு சமண சமயத்தின் குருவாக இருந்த பத்தி ரபாகு வடஇந்தியாவில் இருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களுடன் தென் னாடுவந்தார். அவர்கள் அனைவரும் மைசூர் அருகே உள்ள சிரவண பென் கொள என்ற இடத்தில் தங்கினர். பத்திர பாகுவின் சீடரான வைசாக முனி வரால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிற்குள் சமண சமயம் வந் தது.

  கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த சமணம் தொண்டை நாடு , புதுக்கோட்டை , மதுரை போன்ற பகுதிகளில் செல்வாக்கு பெற்றி ருந்தது. எனவேதான் இப்பகுதிகளில் அதன் தடையங்கள் அதிகம் காணப் படுகின்றன. தமிழகத்தில் வாழ்ந்த சமணர்கள் சமண சமயத்தை மட்டும் வளர்க்காமல் தமிழையும் வளர்த்தனர். இதனால்தான் அவர்கள் வாழ்ந்த இடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் அதிகம் கிடைக்கின்றன. குறிப்பாக சங்ககாலத்தில் வாழ்ந்த சமணர்கள் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக சமண கருத்துக்களை மக்களிடையே கொண்டுச் சென்றனர். குறிப்பாக சமணர்களால் மனிதனை பண்படுத்தும் வாழ்வியல் நூல்களான அறநூல்கள் அதிகம் எழுதப்பட்டன.

கடலூர்

   கடலூர் மாவட்டத்தில் களப்பிரர் மற்றும் பல்லவர் காலத்தில்  சிறப்புற்றி ருந்த சமண சமயம் பிறகு வந்த சோழர், பாண்டிர் காலத்தில் போற்றி வளர்க் கப்பட்டதை வரலாற்று தரவுகள் மூலம் அறியமுடிகிறது. குறிப்பாக திருப்பாதி ரிப்புலியூர் இருந்த மிகப்பெரிய சமணப் பள்ளி இம்மாவட்டத்தில் வாழ்ந்த சமணர்களின் தலைமையிடமாக விளங்கியது. இப்பள்ளிக்கு பல்லவ மன்னர் களும், வணிக பெருமக்களும் ஏராளமான தானங்களை வழங்கியுள் ளனர். மேலும் இம் மாவட்டத்தில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை பெருநகரங்களாக விளங்கியப் பகுதிகளில் சமண தடை யங்கள் அதிகம் கிடைப்பது ஆய்விற் குறிய ஒன்றாகும். 

 திருப்பாதிரிப்புலியூர்        

  கடலூர் பாடலீஸ்வரர் கோயிலின் கிழக்கு பகுதியில் வீடுகட்டு வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலை கிடைத் தது. அத்தீர்த்தங்கரர் சிலை பாதுகாப்புக் கருதி மஞ்சக்குப்பம் பயணியர் விடு திக்கு அருகே வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அச்சிலை அங்கு இல்லை. சில ஆண்டுகளுக்கு மூன்பு காணமல் போய்விட்டதாக அப்பகுதியினர் தெரி வித்தனர். அமர்ந்த நிலையில் காணப்பட்ட அத்தீர்த்தங்கரர் சிலை கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மனால் இடிக்கப்பட்ட சமணப் பள்ளிக்கு சொந்தமானதாகும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.  

குமாரப்பேட்டை

  கடலூரில் இருந்து திருவந்திபுரம் செல்லும் சாலையில்  குமாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தின் வடக்கு பகுதியில் அமர்ந்த நிலையில் தீர்த்தங்கரர் சிலை ஒன்று உள்ளது. 125 சே.மீ உயரமும் 105 சே.மீ அகலமும் கொண்ட இச்சிலையானது கம்பீரமான தோற்றத்துடன், வட்டவடிவமுகம், சுருண்ட தலைமுடி,  நீண்ட காதுகள், கண்களை மூடி தியான நிலையில் காட்சியளிக் கிறது . இத்தீர்த்தங்கரர் சிலையானது பீடம் , முக்குடை , பிரபை போன்றவை எதுவுமின்றி எளியமையாகக் காட்சியளிக் கிறது . இச்சிலையின் காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திருவந் திபுரம் அருகே உள்ள கருட நதியின் கரையோரம் இச்சிலை கிடைத்ததாக இவ்வூர் மக்கள் தெரிவித்தனர். பல்லவர் காலத்தில் இப்பகுதி யில் சமண சமயம் செல்வாக்குப் பெற்று இருந்ததற்கான அடையாளமாக இச்சிலை உள் ளது.

கனிசப்பாக்கம்

   பண்ருட்டி அருகே உள்ள கனிசப்பாக்கம் கிராமத்தின் நீர்தேக்க நிலையம் அருகே சமண தீர்த்தங்கரரின் சிலை ஒன்று உள்ளது. இச்சிலையானது தியான நிலையில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறது. காதுகள் தோள் வரை நீண்டுள்ளது . தலைக்கு மேலே முக்குடையமைப்பு காட்டப்பட்டுள்ளது . சிலையின் பின்பகுதியில் கல்வெட்டு பொறிப்புகள் காணப்படுகின்றன. அதில் ‘’ படுவன் பொற்காலி என்பவரின் தமக்கை செனக்கத்தி ‘’ என்பவள் இவ்வூரில் இருந்த தீர்த்தங்கரர் கோயிலுக்கு ஆண்டு தோறும் நடந்து வந்த திருவிழா விற்கு பொற்காசுகள் வழங்கியுள்ளதை கூறுகிறது. சிலையின் வடிவம் கல் வெட்டு எழுத்துக்களின் அமைப்பு இவைகளை ஆய்வு செய்ததில் கி.பி. 12 – 13 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தீர்த் தங்கரர்சிலை உள்ள இடத்தில் செங்கல் காட்டுமானங்கள் காணப்படுவதால் இச்சிலை கட்டடத்திற்குள் இருந்திருக்க வேண்டும்.

திருவதிகை 

  திருவதிகை குணபர ஈஸ்வரர் கோயிலின் அருகில் சமண தீர்த்தங்கரர் சிற் பம் ஒன்று இருந்ததாகவும் , அச்சிலையானது சில ஆண்டுகளுக்கு முன்பு காணமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கீழ்காவனூர்

 பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றின் தெற்கு கரையில் கீழ்காவனூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள ஐய்யனார் கோயிலில் சமண தீர்த்தங்கரரின் சிலை ஒன்று வழிபாட்டில் உள்ளது. இச்சிலையானது அமர்ந்த தியானநிலையில் காட்சியளிகிறது. தலைக்கு மேலே முக்குடை காட்டப்பட்டுள்ளது. இடது தோளும் , மூக்கும் சிதைக்கப்பட்டுள்ளன. இச்சிலையானது 34 செ.மீ உயரமும் , 25 செ. மீ அகலமும் கொண்டதது. இதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டாகும்.

எனதிரிமங்கலம்

       பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் இருந்து தென் பெண்ணை ஆற்றுக்கு செல்லும் வழியல் சமண தீர்த் தங்கரர் சிலை ஒன்று உள்ளது . இச்சிலையானது 110 செ.மீ உயரமும் 46 செ.மீ அகலம் கொண்ட தாகும். தீர்த் தங்கரர் பீடத்தின் மீது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கையா னது தியான முத்திரையுடன் காட்டப்பட்டுள்ளது. முகம் நீள்வட்ட வடிவிலும் ,காதுகள் கழுத்துவரை நீண்டும் காணப்படுகிறது. முக்குடையானது உடைந் துள்ளது . தீர்த்தங்கரரின் அருகே இருபுறமும் இயக்கன், இயக்கி ஆகியோரின் உருவங்கள் உள்ளன . இயக்கியின் கையில் பத்மத்தை பிடித்தவாறு உள்ள தால் இவள் பத்மாவதியாவாள். இயக்கனின் பெயர் தரநேந்திரன் என்பதாகும். தீர்த்தங்கரர் அருகே இவர்கள் இருவரும் காட்டப் பட்டுள்ளதால் இவர் பார்சு வநாதராவார். இச்சிற்பத்தின் அமைப்பை பார்க்கும் போது இதன் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டாகும்.

முகாசாபரூர்

   விருத்தாசலம் வட்டம் முகாசாபரூர் கிராமத்தின் உள்ள பெருமாள் கோயி லுக்கு அருகே சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று உள்ளது. இச்சிலையானது அர்த்த பத்மாசனத்தில் கை தியான முத்திரையுடன் வயிற்று பகுதியை ஒட் டியவாறு தொடையின் மீது வைக்கப்படுள்ளது. முகமானது சதைப்பற்றுடன் வட்டவடிவில் கண்களை மூடி தியான நிலையில் உள்ளது. காதுகள் கழுத் துவரை நீண்டும் வலது மார்பில் திருமறு என்றழைக்கப்படும் ஸ்ரீவஸ்தம் காணப்படுகிறது . இது மாகாபுருஷர்களுக்கான அடையாளமாகும். நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் போன்றவைகளை குறிக்கும் முக் குடையானது உடைந் துள்ளது. தலையின் பின்பகுதியில் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அதை ஒட்டியவாறு மகரதோரணம் காணப்படுகிறது. மேலே இரண்டு கந்தர்வர்கள் தீர்த்தங்கரரின் முகத்தை ஆச்சரியத்துடன் பார்த்தவாறு கையில் சாமரத்துடன் உள்ளனர்.  அவர்களின் கீழே இயக்கன் தரனேந்திரனும், கையில் பத்மத்துடன் இயக்கி பத்மாவதி ஆகியோர் காட்சி யளிக்கின்றனர். இயக்கியின் கையில் சாமரம் பிடித்திருந் தால் அது மகாவீரர் சிற்பமாகும். ஆனால் இங்கு கையில் பத்மத்துடன் இயக்கி காட்டப்பட்டுள்ளதால் இவர் பார்சுவநாதர் ஆவார். மேலும் இச்சிற்ப அமைதியில் கி.பி. 11 ஆம் நூற்றாண்டின் முற்பகு தியைச் சார்ந்த சிற்பக் கலையின் சாயல் காணப்படுகிறது. இந்த பார்சுவநா தரின் சிற்பத்தின் அருகே செங்கற்கட்டடத்தின் சிதைந்த பகுதிகள் காணப் படுவதால் சோழர்கள் காலத்தில் இப்பகுதியில் சமண சமயம் சிறப்புற்று இருந்ததை அறியமுடிகிறது .

      வடஇந்தியாவில் தோன்றிய சமணம் கடலூர் மாவட்டத்தில் வாழ்ந்த பண்டையகால மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததை  மேற்கண்ட தரவுகள் சுட்டுவது ஆய்விற்குரிய ஒன்றாகும். மேலும் இம்மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம், வானமாதேவி, பாலூர், பண்ருட்டி ,சிதம்பரம், விருத்தாசலம் போன்ற ஊர்களில் சமண சமயத்தை பின்பற்று வோர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வடலூரில் ஆரம்ப காலத் தில் சமண சமயத்தை பின்பற்றுவோர்கள் வாழ்ந்த தற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் தற்காலத்தில் சமண சமயத்தை பின் பற்றுவோர் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.    

 பௌத்தம்

  வட இந்தியாவில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே வளரத் தொடங்கிய புத்தமதம் தமிழ்நாட்டில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் பரவத்துவங்கி விட்டது எனலாம். வடஇந்தியாவில் இருந்து தமிழகம் வந்த புத்த பிக்குகள் பெரு நகரங்கள் , கடற்கரைப் பட்டினங்கள் போன்ற இடங்களில் தங்கினர். இவர்கள் வணிகர் மற்றும் அரசனிடமிருந்து நிரந்தர மானி யங் களைப் பெற்று புத்த விகாரைகளை ஏற்படுத்தி புத்தரின் வாழ்வியல் போத னைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியினை செய்தனர். உதாரண மாக சங்ககாலத்தில் சோழர்களின் வர்த்தக தலைநகராக விளங்கிய பூம்புகா ரில் நடைபெற்ற அகழாய்வில் ஐந்து அறைகளை கொண்ட மிகப்பெரிய புத்த விகாரை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்நகரின் சிறப் பினைப் பற்றி பௌத்த நூலான அபிதம்மவதாரம் புகழ்பெற்ற வடஇந்திய நகரங்களான உஜ்ஜயினி, அவந்தி ஆகிய நகரங்களுக்கு இணையானதாகும் என்று குறிப் பிடுகிறது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் நாகைப்பட்டினத்தில் கடாரத்து அரசனான சூளாமணி வர்மானால் கட்டத் தொடங் கப்பெற்று அவன் மகன் மாறவிஜயோதுங்க வர்மானால் கட்டி முடிக்கப்பட்ட புத்த விகாரத்திற்கு ஆணைமங்கலம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளதை இராஜராஜனின் ஆணைமங்கலம் செப்பேட்டின் மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தில் சங்க காலம் தொட்டு இடைக்காலம் வரை பௌத்த மதம் மன்னர்களின் ஆதரவில் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்ததை வரலாற்று சான்றுகள் பரவலாக சுட்டுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் பௌத்தம்

  இம்மாவட்டத்தில் புத்தமதமானது கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்பே புகழ்பெற்று இருந்தது. குறிப்பாக இம்மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப் புலியூர் , திருச்சோபுரம் , திருமாணிக்குழி , திருவதிகை, பெண்ணடம், இரா ஜேந்திரப் பட்டினம் போன்ற ஊர்களில் பௌத்தமத வழிபட்டு இடங்களும், அம்மதத்தை சார்ந்த மக்களும் அதிக அளவில் வாழ்ந்துள்ளதை தொல்லியல் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது .

திருப்பாதிரிப்புலியூர்

   திருப்பாதிரிப்புலியூரில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த சமணபள்ளி யில் தருமசேனராக இருந்தவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவ ரான திருநாவுக்கரசராவார். இவர் சமண சமையத்தில் இருந்து சைவசம யத்திற்கு மாறியதன் காரணமாக இங்கிருந்த சமண பள்ளி முற்றிலும் அழிக் கப்பட்டது. அவ்வாறு அழிக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டு திருவதிகையில் முதலாம் மகேந்திரவர்ம பல்லவனால் குணபர ஈச்சுரம் என்ற சிவன்கோயில் கட்டப்பட்டது. மேலும் திருப்பாதிரிப்புலியூரில் சமண பள்ளி இருந்ததை போன்று பௌத்த சமயத்திற்கான மடங்களும் இருந்துள்ளன. காரணம் திருப் பாதிரிப்புலியூர் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய புத்தர் சிலை கிடைத்து. அச்சிலை தற்போது குமாரப்ப நாயக்கன் பேட்டையில் உள்ளது. இந்த புத்தர் சிலையானது முற்காலத்தில் திருப்பா திரிப்புலியூரில் இருந்த பௌத்த விகாரத்திற்கு சொந்தமானது என்று வர லாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

திருவதிகையில் பௌத்தம்

   இவ்வூரில் உள்ள வீராட்டானேஸ்வரர் கோயிலின் இராஜகோபு ரத்தின் அருகே ஒரு புத்தர் சிலையும், கடலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. குணபர ஈசுரம் கோயில் இங்கு கட்டப்படும் போது இங்கிருந்த புத்த விகாரைகள் இடிக்கப்பட்டிருக்கலாம். தற்போது திருவதிகை வீராட்டானேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில் இராஜ கோபுரத்தின் அருகே உள்ள புத்தர் சிலையானது நீள் வட்ட வடிவ தாமரை பீடத்தின் மீது தியான நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இருகைகளும் தியான முத்திரையுடன் வயிற்று பகுதியை ஒட்டியவாறும், கணுக்கால் வரை நீண்டு செல்லும் மெல்லிய கீழாடையின் குஞ்சம் முதுகின் வழியாக வந்து மார்பில் விடப்பட்டுள்ளது. அகன்ற தோள்கள் குறுகிய இடை கூர்மையான நாசி , சாந்த ரசத்தை வெளிப்படுத்தும் முகபாவனை, மூடியகண்கள். தோள் வரை நீண்ட காதுகள் ,நெற்றியில் உள்ள திலகம் ஒளிப்பிழம்பாக அதாவது கூம்பு வடிவ தீபசுடர் போன்று காட்டப்படுள்ளது. குஷாணர்களுடைய ஓவி யங்கள் மற்றும் மதுரா சிற்பங்களில் இதுபோன்ற குறியிடுகள் காணப்படு கின்றன. புத்தரின் சிகையானது நத்தையின் கூடுகளை போன்று சுருள் சுரு ளாக வடிக்கப்பட்டுள்ளது .இவ்வகை சிகை அலங்காரங்கள் கிரேக்க சிற்பக் கலையில் காணமுடிகிறது. தலைமுடியானது உச்சியில் கொண்டையுடன் காட்சியளிக்கிறது. இந்த அமைப்பிற்கு உஷ்னிசம் என்று பெயர். இந்த புத்தர் சிலையின் சிறப்ப அமைப்பானது கி.பி. 11 ஆம் நூற்றாண்டு சிற்பக்கலை பாணியை ஒத்துள்ளது.  

வானமாதேவி புத்தர் சிற்பம்

   கடலூர் திருவந்திபுரம் வழியாக பண்ருட்டி செல்லும் சாலையில் அருங் குணம் என்னும் ஊருக்குத் தெற்கில் கெடிலம் ஆற்றின் தென்கரையில் வான மாதேவி என்னும் ஊர் அமைந்துள்ளது.  இவ்வூரில் உள்ள சிவன் கோவில் முன்பாக ஆலமரத்தின் அருகில் புத்தர் சிலை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பாக கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது அந்த புத்தர் சிலை இவ் விடத்தில் இல்லை. அங்கு ஆய்வு மேற்கொண்ட போது சிலையானது திருடு போய்விட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

   இன்று குக்கிராமமாக உள்ள வானமாதேவி கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை புகழ்பெற்ற வர்த்தக நகரமாக விளங்கி யுள்ளது. குறிப்பாக கி.பி. 1120 ஆம் ஆண்டு விக்கிரம சோழனின் ஆட்சி காலத் தில் வெளியிடப்பட்ட ஏழு கல்வெட்டுக்கள் திருமாணிக்குழி வமானபுரீஸ்வரர் கோயிலில் உள்ளன. விக்கிரமசோழனின் நான்கு மற்றும் ஆறாம் ஆட்சி யாண்டில் வெளியிடப்பட்ட இரண்டு கல்வெட் டுக்களில் சாத்தன் , புத்தநடிகள் என்ற பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன . இவை புத்த , சமண சமயத்திற்கு தொடர்புடைய பெயர்களாகும். மேலும் திருமாணிக்குழி அருகே உள்ள வான மாதேவி  கிராமம் சோழர் காலத்தில் பெருவணிக நகரமாக இருந்துள்ளதை கோயிலில் உள்ள அனைத்து சோழர்கால கல்வெட்டுக்களும் பெருமையாக குறிப்பிடுகின்றன. வானமா தேவியில் வணிகக்குடிகள் அதிகமாக இருந்ததி னால் இப்பகுதியில் புத்த மதமும் , சமண மதமும் செழிப்புற்று இருந்திருக்க வேண்டும்.

   குறிப்பாக வட இந்தியாவில் புத்தமதமானது வணிகர்கள் மூலமாக வளர்க் கப்பட்ட மதமாக கருதப்படுகிறது. காரணம் புத்த ஜாதகக் கதைகளில் வணிகர் கள் வாழும் தெருக்கள், கடைவீதிகள் போன்றவற்றோடு தொடர்புடைய கதை களே அதிகமுள்ளன . மேலும் சில ஜாதகக் கதைகளில் வணிகர்களை துன் பங்களில் இருந்து புத்தபிரான் காப்பாற்றுவது போன்ற கதைகளும் உள்ளன. அந்த அடிப்படியில் சோழர் காலத்தில் பெருவணிக நகரமாக விளங்கிய வான மாதேவியில் புத்தர் சிலை கிடைத்திருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருத லாம்.     

பெண்ணாடம் புத்தர் சிற்பம்

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. பெண்ணாடத்தில் இரண்டு புத்தர் சிலைகள் இருந்தன. ஒன்று சென்னை அருங்காட்சியகத்திலும் மற்றொரு சிலையானது இவ்வூரில் உள்ள புத்தர் தெருவிலும் உள்ளது . பெண்ணாடம் சுடர்க்கொழுந்தீசரைப் பற்றி  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் தமது தேவாரப் பதிகத்தில் இவ்வூரை கடந்தை நகர் என்றே குறிப்பிடுகின்றனர் . மேலும் கி.பி. 18 ஆம் நூற் றாண்டை சார்ந்த வள்ளல் இராமலிங்க அடிகளாரும் தமது அருட்பாவில் ‘’ வீங்கானை மாடஞ்சேர் விண்ணென்றகல் கடந்தை ‘’ என்று குறிப்பிடுகிறார். அதாவது கடம் என்பது வெள்ளையானை என்று பொருள். புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் வெள்ளையானை குறித்த செய்தி சிறப்பிடம் பெறுகிறது . எனவே கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்தாகவே இப்பகுதியில் புத்தமதம் பரவிவிட்டது எனலாம்.

இராஜேந்திரப் பட்டினம் புத்தர் சிற்பம்

       விருத்தாசலத்தில் இருந்து திருமுட்டம் செல்லும் சாலையில் இராஜேந் திரப்பட்டினம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண் டில் எருக்கத்தம் புலியூர் என அழைக்கப்பட்டதை திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகத்தின் மூலம் அறியமுடிகிறது. மேலும் இராஜேந்திரப்பட்டி னத்தில் உள்ள வீறாமுலையம்மன் உடனுறை திருக் குமாரசாமி கோவிலின் கருவறையின் முன் மண்டபத் தூண்களில் கி.பி. 7 - 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த மூன்று பல்லவர் கால கிரந்த கல்வெட் டுக்கள் உள்ளன. அதில் ஒரு கல்வெட்டில் ’’ ஸ்ரீ புத்தவர்ம்மஸ்ய மாணாக்கர் ஸாரிபுத்ரஸ்ய ‘’ என்ற வாச கம் காணப்படுகிறது . இக்கல்வெட்டில் கூறப்பட் டுள்ள சாரிபுத்திரர் என்பவர் புத்தவர்மரின் சீடர் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திரப் பட்டினத்தில் இருந்த புத்த விகா ரையில் இவர் தங்கியிருக்கக் கூடும். மற்றொரு கல்வெட்டில்  ‘’ ஸ்ரீ மஹேந்த் ரஸ்ய  ‘’ என பொறிக்கப் பட்டுள்ளது. இப்பெயர் பல்லவ மன்னனுடன் தொடர்பு உள்ள பெயராக இருக்கலாம். மேலும் இவ்வூரின் தெற்குப் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோயிலின் பின்புறம் நடனம் பிள்ளை என்பவருக்கு சொந்த மான நிலத்தின் மையப்பகுதியில் உள்ள மேட்டுப்பகுதியை கடந்த 21 .04 . 2007 அன்று சீர்செய்ய முற்பட்டபொழுது 98 செ.மீ உயரமும் 56 செ.மீ அகல மும் உடைய அமர்ந்த நிலையில் புத்தர் சிலையொன்று வெளிப்பட்டது. சிற்பத்தின் தலையில் ஞானமுடிச்சும் சுருள் முடியும் தோல்வரை தொங்கும் நீண்ட காதுகளும், முகம் நீள்வட்ட வடிவிலும், ஆழ்ந்ததியானத்தில் புத்தபி ரான் இருப்பதை வெளிப்படுத்தும் கண்களும், மடித்து வைத்துள்ள கால்களின் மீது இருகைகளை தியானமுத்திரையுடன் வைக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது .

  இச்சிற்ப அமைப்பை பார்க்கும்பொழுது கி.பி. 8 – 9 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். கிடைக்கப்பட்ட இச்சிலையை கொண்டுவந்து கன்னியம்மன் கோயிலின் பின்பகுதியில் உள்ள ஆலமரத்தின் கீழ் மக்கள் வழிபாட்டிற்காக வைக்கபட்டது. ஆனால் அச்சிலை சிலமாதங் களில் திருடு போய்விட்டதாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.   

      சிலை கிடைக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததில் கட்டடப் பகுதி ஒன்று வடக்கு தெற்காக செல்வது கண்டறியப்பட்டது. 30 செ.மீ அகலம் கொண்ட இக் கட்டடப் பகுதிக்கு  7 x 17 x 27 செ.மீ அளவுகளையுடைய  செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தரை தளப் பகுதிக்கு 40 செ.மீ அளவுகளை கொண்ட சதுர வடிவ கருங்கல் பலகை பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குமார சுவாமிக் கோயிலில் உள்ள பல்லவர்கால கல்வெட்டுக்கள் பொறிக்கப் பட்ட தூண்கள் கடந்த 1983 ஆம் இங்கிருந்து எடுக்கப்பட்டது என்று அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட கள ஆய்வில் உடைந்த செங்கற்களின் துண்டு களுடன், சிவப்பு வண்ண மட்கல ஓடுகள் , தானியங்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப் பட்ட பெரிய அளவிலான மட்பாண்டங்களின் ஓடுகள், வெளிறிய கருப்பு நிற முடைய  மட்கலங்களின் ஓடுகள், பழுப்பு நிறங்களை கொண்ட மட்கல ஓடு கள் மற்றும் கூறைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ‘’ ட ‘’ வடிவ ஓடுகளின் உடைந்த பாகங்கள் போன்றவை மண்ணின் மேற்பரப்பில் இருந்து சேகரிக்கப் பட்டுள்ளன. இவை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற் றாண்டு வரையிலான காலகட்டத்தை சார்ந்தவைகளாகும். எனவே கி.பி. 7  ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற் றாண்டு வரை இப்பகுதியில் பௌத்த மதம் சிறப்புற்று இருந்துள்ளது எனலாம். 

திருச்சோபுரத்தில் பௌத்தச் சான்று

   கடலூர் மாவட்டம் திருச் சோபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சோபுரநாதர் கோயிலில் கி.பி. 1264 ஆம் ஆண்டு முதலாம் சடைய வர்மன் சுந்தரபாண்டிய னின் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது.  ஆறுவரிக ளைக் கொண்ட இக்கல்வெட்டில் ‘’ சாரிபுத்திர பண்டிதர் ‘’ என்பவர் பௌர்ணமி நாளில் இக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைக்காக நில தானம் வழங்கி தைப் பற்றி கூறுகிறது.  மேலும் சாரிபுத்திர பண்டிதர் புத்த சங்கத்தோடு தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எனவே கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் பௌத்த சங்கத்தை சார்ந்தவர்கள் வாழ்ந்துள் ளதை இக்கல்வெட்டின் வாயிலாக அறியமுடிக்கிறது .

  கடலூர் மாவட்டத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற் றாண்டு வரையிளான காலக்கட்டதில் புத்த மதம் இப்பகுதி மக்களி டையே செல்வாக்கு பெற்றிருந்ததை மேற்கண்ட சான்றுகளின் மூலம் உணர முடிக் கிறது. மேலும் வடலூரில் வாழ்ந்த சமய சீர்திருத்த வாதியான வள்ளல் பெரு மானார் கூட தாம் எழுதிய அனைத்து திருமுறைகளிலும் சமண மற்றும் பௌத்த கருத்துக்களை அதிகம் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் குறிப் பிடும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது கூட மேற்கண்ட சமயங்களின் தலை யாய கோட்பாடுகளில் ஒன்றாகும். எனவே கடலூர் மாவட்டத்தில் சமணம் மற்றும் பௌத்த சமயங்கள் வீழ்ச்சியுற்றாலும் அக்கருத்துக்கள் மக்களிடயே இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சைவ சமயம்

   தமிழர்தம் சமய வாழ்வினைக் குறிக்கும் முதல் தமிழ்நூல் தொல்காப்பிய மாகும். சமய வாழ்வில் சங்ககால மக்களிடயே ஒரே மாதிரியான தெய்வ வணக்கம் இருந்ததாகத் தொல்காப்பியத்தில் செய்தி இல்லை. ஐவகை நிலங்களிலும் வெவ்வேறு கடவுளரே வணங்கப்பட்டனர் எனத் தெரிகிறது.

       ‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

         சேயோன் மேய மைவரை உலகமும்

         வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

         வருணன் மேய பெருமணல்உலகமும்’’.

  என்ற தொல்காப்பியச் செய்யுளால் முல்லை நிலத்தில் திருமாலும், குறிஞ் சியில் முருகனும் , மருத நிலத்தில் இந்திரனும், நெய்தல் நிலத்தில் வரு ணனும் கடவுளாக வணங்கப்பட்டனர். பாலை நிலத்தில் வெற்றித் தெய்வ மான கொற்றவை வணங்கப்பட்டாள். இக் கொற்றவை துர்க்கை எனவும் அழைக்கப்பட்டால்.

சிவன்  

  தொல்காப்பியர் காலத்தில் கோயில்கள் , சிலைகள் இருந்தன என்றும். பூசைகள் நடைபெற்றன என்பது இளம்பூராணரின் உரையின் மூலம் தெரிய வருகின்றது. ஆனால் தொல்காப்பியத்தில் சிவபெருமான் பற்றிய வெளிப்ப டையான குறிப்புகள் எதுவும் இல்லை. அதே போன்று சிவன் என்னும் பெயர் எட்டுத்தொகை , பத்துப்பாட்டு நூல்களிலும் காணமுடிய வில்லை. ஆனால் சிவபெருமானின் மற்ற இயல்புகளை குறிக்கும் பெயர்கள் ஏராளமாக உள்ளன. சங்க நூல்கள் சிவபெருமானை குறிக்கும்போது  ..... ‘’ அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப் , பிறைநு தல் விளங்கும் ஒருகண் போல ‘’ – புறம் 166 , ‘’ நன்றாய்ந்த நீள் நிமிர் சடை  முதுமுதல்வன்...’’, புறம் 55  ‘’ நான்மறை முதுநூல் முக்கண் செல்வன் , ஆல மூற்றம் கவின் பெற ...’’ - அகம் 181 , ‘’ ஆல் அமர் செல்வர்க்கு ‘’.... சிறு பாணாற்றுப்படை – 97 , ‘’ மழு வாள் நெடியோன் ‘’..... மதுரைக் காஞ்சி – 455 , போன்ற பாடல் வரிகளில் சிவ பெருமானின் பெயர்களை நேரடியாக கூறாமல் அவரோடு தொடர்புடைய பிறப்பெயர்களில் சுட்டப்படுவதை காணமுடிகிறது. எனவே சங்ககால முதலே சிவன் வழிபாடு இருந்துள்ளதை அறியமுடிகிறது.

            குறிப்பாக மதுரை காஞ்சியில் தெய்வங்களின் வரிசையில் சிவபெரு மானுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது என இராசமாணிக்கனார் கூறு கின்றார். ‘’ மழுவாள் நெடுயோன் தலைவனாக ‘’ என்ற வரியின் மூலம் சிவ வழிபாட்டின் முதன்மையை அறியமுடிகிறது. சேரன் செங்குட்டுவன் சிவனது அருளால் தோன்றியவன் . அவன் சைவன் , சிவபூஜை செய்தவன் என சிலப் பதிகாரம் குறிப்பிடுகிறது. ஆயினும் சிவன் என்ற சொல் பின்னால் ஏற்படுதப் பட்டிருக்கலாம். சிந்து சமவெளி நாகரீகத்தின் மூலம் சங்க காலத்திற்கு முன்பே சிவ வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனத்தெரி கிறது. ஆனால் எப் போது லிங்க வழிபாடு தோன்றியது என்பதற்குச் சரியான வரலாறு இல்லை. ஆரியர் ருத்ரனை வழிப்பட்டனர் . திராவிடர்களோ மேலே சொன்ன பலப் பெயர்களில் ஓரிறைவனை வணங்கினர். இவ்விரு பண்பாட்டுப் பிரிவுகளும் இணைந்த போது சிவன் தோன்றிவிட்டான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சைவம்

   கடலூர் மாவட்டத்தில் சைவ சமய நாயன்மார்களான அப்பர் என்று அனை வராலும் அழைக்கப்பட்ட திருவாமூரில் பிறந்த திருநாவுக்கரசர், இவரது சகோதரி திலகவதி யார் , திருநாவலூரை சார்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் , திருமுனைப்பாடி நாட்டின் மன்னர் நரசிங்க முனையரைய நாயனார், கொள் ளிடத்தின் வடகரையில் உள்ள ஆதனூரில் பிறந்த நந்தனார் போன்ற சைவ சமய பெரியோர்கள் தோன்றிய பெருமைக் குறிய மாவட்ட மாகும். மேலும் சமஸ்கிருதம் மட்டுமே இறைமொழியாக இருந்த காலத்தில் தாய்மொழியா கிய தமிழ் மொழியில் இந்நாயன்மார்கள் பாடிய பாசுரங்களை கேட்க சிவபி ரானே கைலைமலையில் இருந்து இறங்கிவந்து அருள்புரிந்த பெருமைக் குறியது இவர்களது பாடல்கள். அந்த அளவிற்கு தமிழ் பாசுரங்களின் மீது சிவபிரானுக்கு ஒரு ஈர்ப்பு . சிறப்பு வாய்ந்த அத்தேவாரபாசுரங்கள் அனைத் தும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்த அறையில் வைக்கப்பட்டு இருந் தது. பனையோலையில் எழுதப்பட்ட அப்பாடல்கள் அழிவின்விளிம்பில் இருந் ததை மீட்டெடுத்தப் பெருமை முதலாம் இராஜராஜ சோழனை சாரும். மேலும் சோழமன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தென்னக சைவ சமயத்தின் முக்கிய தலைமையிடமாக விளங்கியது.  

வடலூர் பகுதியில் சைவ சமயம்

   வடலூரை சுற்றி நான்கு பாடல்பெற்ற சிவலையங்கள் உள்ளன. கிழக்கே தீர்த்தனகிரி சிவன் கோயில், மேற்கே விருத்தாசலம் பழமலை நாதர் கோயில், வடக்கே திருவதிகை வீராட்டானேஷ்வரர் கோயில், தெற்கே சிதம் பரம் நடராஜர் கோயில் போன்றவை அமைந்துள்ளன. இக்கோயில்களின் மையப் பகுதியில்தான் வடலூர் நகர் அமைந்துள்ளது. மேலும் கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய சிவன்கோயில் ஒன்று வடலூரில் இருந்துள்ளது. இதன் வாயிலாக வடலூர் பகுதியில் கி.பி. பத்தாம் நூற் றாண்டின் தொடக்க முதலே சைவசமயம் வடலூர் பகுதியில் பரவியி ருந்ததை அறியமுடிகிறது. வடலூர் அருகே உள்ள சந்தவெளிப் பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம்  போன்ற ஊர்களில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு வரை சைவசமயம் தழைத்தோங்கி இருந்ததை இப்பகுதியில் கிடைக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள் மூலம் உணரமுடிகிறது. அப்பர், திலகவதியார், திருநாவுக்கரசர் போன்ற சைவசமய முதல்வர்கள் தோன்றியதன் விளைவாக சமணம், பௌத்த சமையங்கள் வீழ்ச்சி அடைந்து சைவசமயம் புத்துயிர் பெற்றது.

வைணவ சமயம்

  மாயோன் மேய காடுறை உலகமும் என்ற தொல்காப்பிய வரிகளின் மூலம் வைணவ கடவுள் திருமால் வழிபாடு தமிழ் சமூகத்தில் ஊடுருவிட்டதை அறியமுடிகிறது. மேலும் திருமாலை முல்லை நிலமக்களின் திணைக் கடவு ளாக்கப்பட்டதையும் தொல்காப்பிய வரிகள் சுட்டுகின்றன. மாயோன் (திரு மால் ) பலராமன் ஆகிய வைணவக் கடவுளர்களுக்கு காவிரிப்பூம்பட்டினத் தில் கோயில்கள் இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மாயோனை வெற்றிக்கு இலக்கணமாகவும், பலராமனை வலிமைக்கு இலக் கணமாகவும் நக்கீரர் குறிப்பிடுகிறார். கண்ணன், இராமன் பற்றிய செய்திகள் அகநானூற்றில் உள்ளன. பரிபாடல் கண்ணன், பலராமன் ஆகியோர் உருவச் சிலைகள் அழகர் கோயிலில் வழிபடப்பட்டதை கூறுகின்றது. அதோடுமட்டு மன்றி திருவேங்கடம், திருவரங்கம், அழகர் மலை என்பன சிறந்த வைண வத்தலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எட்டுத்தொகை நூல்களிலும், சிலப் பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் திருமால் பற்றிய தரவுகள் விரவிக் காணப்படுகின்றன. இதன் மூலம் வைணவ சமயம் சங்ககால முதலே தமிழா கத்தில் பரவிவிட்டதை அறியமுடிகிறது.

நாத முனிகள்

   கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீரநாரா யணபுரம் என்ற ஊரில் கி.பி. 824 ஆம் ஆண்டு நாதமுனிகள் பிறந்தார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். வீரநாராயண பெருமாள் நாதமுனி களை ஆட்கொண்ட திருத்தலம். ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை தொகுத்து நாலா யிர திவ்வியபிரபந்தத்தை உலகிற்கு அருளிய பெருமை நாதமுனி களையே சாரும். மேலும் இவ்வூர் சோழர் காலத்தில் வைணவர்களின் முக்கிய இட மாக விளங்கியது.

வைணவ தலங்கள்

   கடலூர் மாவட்டத்தில் சுமார் 58 வைணவகோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவற்றில் திருமங் கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில், திரு வதிகை சரநாராயணபெருமாள் கோயில் , சிதம்பரம் கோவிந்தராஜ பெரு மாள் கோயில் , காட்டுமன்னார்கோயில் வீரநாராயணப் பெருமாள், திரு முட்டம் பூவராகவ சுவாமி கோயில் போன்றவை சிறப்பு வாய்ந்த வைணவ திருத்தலங்களாகும். இக்கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் பல் லவர் காலம் தொட்டு நாயக்கர் காலம் வரையில் வைணவ சமயம் கடலூர் மாவட்டத்தில் எவ்வாறு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியமுடி கிறது. மேலும் சிதம்பரம் போன்ற இடங்களில் சைவம், வைணவ சமயங் களுக்கு இடையே வலுவான சச்சரவுகள் இருந்துள்ளத்தையும் வரலாற்று சான்றுகளில் காணமுடிகிறது.

  வடலூர் பகுதியில் இடைக்காலத்தை சார்ந்த வைணவ கோயில்கள் எதுவும் இல்லை. ஆனால் நாயக்கர்கள் காலத்தை சார்ந்த பெருமாள் கோயில்கள் வடலூர் அருகேவுள்ள கருங்குழி, வெங்கடாம்பேட்டை போன்ற ஊர்களில் உள்ளன. வடலூர் கோட்டைகரையில் சமகாலத்தில் கட்டப்பட்ட இராமர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் வடலூரில் வாழ்ந்து வரும் வைணவ சமயத்தை சார்ந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தலமாக விளங்கிவருகிறது.

கிருத்துவசமயம்

     கிருத்துவசமயம் ஏசு பிரானால் தோற்றுவிக்க பட்டதாகும். தமிழ் நாட்டில் கிருத்துவ சமயம் பரவுவதற்கு அடித்தளமிட்டவர் புனித தோமையார் ஆவார். இவரை கிருத்துவர்கள் புனித தோமா என்று அழைப்பர். இவர் ஏசுவின் பன் னிரெண்டு சீடர்களில் ஒருவர். புனித தோமா அவர்கள் கி.பி. 52 – 72 ஆண் டுகளில் கிருத்துவ சமயத்தை தென்னிந்தியாவில் பரப்புவதற்காக கடல் மார்க்கமாக வந்து கேரள கடற்கரைப்பட்டினமான முசிறியில் வந்து இறங் கினார். அங்கு சிலகாலம் தங்கியிருந்த பிறகு தமிழகம் வந்த தோமையார் மைலாப்பூரில் வந்து தங்கினார். இங்கிருந்து தமது கிருத்துவ சமய பரப்புரை தொண்டினை செய்து வந்தார். இவரது கல்லறையின் மீது கட்டப்பட்ட தேவா லயமே இன்றைய சென்னை சாந்தோம் தேவாலையமாகும். இதன் மூலம் சங்க காலத்திலேயே கிருத்துவ சமயம் தமிழகத்தில் தடம் பதித்து விட்டதை அறியமுடிகிறது. இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே கி.பி 1498 ஆம் ஆண்டு கடல்வழி கண்டுபிடிக்கப் பிறகு ஐரோப் பாவில் இருந்து தமிழகம் வந்த கிருத்துவ சமய பரப்புரையாளர்களின் முயற்சியால் கிருத்துவ சமயம் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி , இராம நாதபுரம், மதுரை , நாகைப்பட்டினம், கடலூர் , சென்னை ஆகிய மாவட்டப் பகுதிகளில் பரவதொடங்கியது. ஐரோப்பாவில் இருந்து தமிழகம் வந்த கிருத்துவ மிஷனரிகள் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்கு சமத்துவக் கல்வியை வழங்கிவந்தனர். இதனால் தமிழ்மக்கள் முறையான மேற்கத்திய கல்வியை பெற்றனர். மேலும் இந்த கிருத்துவ மிஷனரியினரால் தான் இந்தியாவில் அச்சு எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் வாயி லாக ஓலைச்சுவடியில் இருந்த தமிழ் காகிதத்தில் அச்சாக்கப்பட்டது.

வடலூரில் கிருத்துவ சமயம்

   கடலூருக்கு வர்த்தகம் செய்ய வந்த ஐரோப்பிய நாட்டினரால்  கிருத்துவ சமயம் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைந்தது. வடலூர் பகுதியில் கத்தோ லிக்க கிருத்துவ மதம் கி.பி.1900 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்கள் பின் பற்ற தொடங்கிவிட்டனர் எனலாம். காரணம் கி.பி. 1900 ஆம் ஆண்டு முதல் கி.பி. 1925 ஆம் ஆண்டு வரையில் உளுத்தூரில் இயங்கி வந்த கிருத்துவ மிஷ னரினர் வடலூர் பகுதி மக்களிடையே கிருத்துவ மதத்தை பரப்பிவந்தனர். கி.பி. 1925 ஆம் ஆண்டு உளுத்தூர் மிஷனரினர் போக்குவரத்து நலன் கருதி வடலூருக்கு தங்களது தலைமையகத்தை மாற்றினர். அதோடு மட்டுமன்றி வடலூர் பகுதியில் கல்வி நிலையங்கள், இலவச மருத்துவ மனைகளையும் ஏற்படுத்தினர். இதன் விளைவாக இப்பகுதி மக்களுக்கு தரமான கல்வியும் , இலவச மருத்துவ சேவையும் கிடைத்தன. தற்போதுள்ள திரு இருதய ஆண்டவர் கத்தோலிக்க தேவாலையம் கி.பி. 1935 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கி.பி. 1938 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதாகும். வடலூர் நிர்வா கத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி , கல்குணம், பெத்தநாயக்கன்குப்பம் ,மருவாய் , கொளக்குடி போன்ற ஊர்கள் உள்ளன. இன்று சுமார் 8,500 கத்தோலிக்க கிருத் துவர்கள் வடலூரில் வாழ்ந்து வருகின்றனர் என்று அருட்தந்தை லூர்துஜெய சீலன் தெரிவித்தார்.      

இஸ்லாம் மார்க்கம்

    மக்கா மாநகரில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபி முஹ்ம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார். தமது இளைமைபருவத்தில் வாணிப நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக பலநாடுகளுக்கு வாணிப நிமித்தமாக செல்ல நேரிட்டது. அந்நாடுகளில் இறைவன் பேரால் நடத்தப்படும் கீழ்தரமான அவலங்களை கண்ட நபிகள் பெருமானார் மனம் கலங்கினார். ஒரு கட்டத் தில் பிற மதங்களில் இருக்கும் குறைகளை வெறுக்க முற்பட்டார். சில நாடு களில் உண்மையான மார்க்கம் எது என்பது குறித்து மக்களே குழம்பி போயி ருந்ததையும் கண்டார். இந்த உலகின் தன்மை பற்றிய தமது மக்களின் விளக் கமும் அவர்களது சமய நம்பிக்கைகளும் வழிபாட்டு முறையும் பிழையா னவை என்பதை உணர்ந்த நபிகள் பெருமானார் உண்மையைக் கண்டறிய முயன்றார் ; அந்த உண்மையோடு தமது ஆன்மாவைப் பிணைத்துக் கொள் ளவும் அதனை ஊடுருவிச் செல்லவும் அதன் அந்தரங்கத்தைப் பற்றிக் கொள் ளவும் விரும்பினார். இதன் விளைவாக மக்காவிலிருந்து மூன்று மைல் தூரத் தில் இருந்த பாலைவனக் குன்றில் இருந்த குகைக்கு அடிக்கடி சென்று தியா னத்தில் ஈடுபட்டு வந்தார். அக்காலத்தில் இக்குன்று ஜபல் ஹிராக் என அழைக்கப்பட்டது.

   அங்கேயே பிற்காலத்தில் நபிகள் பெருமானார் மக்களைச் சன்மார்கத் தின்பால் வழிபடுத்திய தெய்வீக ஒளியை தரிசித்தார். அதனால் இந்த குன் றின் பெயர் பின்னாளில் ஜபல் அல் நூர் ( ஒளிக் குன்று ) என அழைக்கப் பட்டது. கி.பி. 610 ஆம் ஆண்டு றம்ழான் மாதம் புனித ‘’ லைலதுல் கத்ர் ‘’ இரவு , நபிகள் நாயகம் ஹிராக் குகையில் போர்வை ஒன்றால் தம்மைப் போர்த்தியவாறு சாய்ந்திருந்த வேளையில், அமரர் ஜிப்ரீல் (அலை ) எதோ எழுதப்பட்ட பட்டுச்சுருள் ஒன்றைப் பிடித்தவாறு அவர்கள் முன்னால் திடீ ரெனத் தோன்றி, ஓதுவீராக என்று பணித்தார். எதை நான் ஓதுவது ? என்று நபிகள் கேட்க ஜிப்ரீல் மூச்சுமுட்டும் அளவுக்கு இறுக அணைத்து விட்டு ஓதப் பணித்தபோது நபி பெருமானார் பட்டுச்சுருளில் காணப்பட்ட பின்வரும் வசனங்களை ஓத ஆரம்பித்தார்.

 ‘’ (யாவையும்) படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக; அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைதான். (பின்னும்) நீர் ஓதும் உமது இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுது கோலைக் கொண்டு எழுதக் கற்றுக் கொடுத்தான்; அன்றி, (அதன் மூலம்) மனிதன் அறி யாதவைகளை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.’’  முதன் முத லாக அருளப்பட்ட இந்த வேத வெளிப்பாட்டின் மூலம் அண்ணல் நபிகள் பெருமானார் அல்லாஹ்வின் தூதராக ஆனார். அதன் பின்னர் இருபத்து மூன்று ஆண்டுகளாக அல் குர்ஆனின் வசனங்கள் யாவும் சிறிது சிறிதாக ஜிப்ரீல் மூலம் அருளப்பட்டு பூர்த்தியாயிற்று. இந்த அல்குர்ஆன் அண்ணல் நபி அவர்களால் உலக மனித சமுதாயத்திற்கு புதிய தூதத்தில் அருளப்பட்ட தெய்வீக வழிகாட்டலின் தொகுதியாகும். மேலும் அது மனித இனத்தின் நன் மைக்காக அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட முற்கால நபிமார்களின் முயற்சிகள் செயற்பாடுகள் ஆகியவற்றின் பதிவேடாகவும் இருக்கிறது. கிரேல் என்ற அறிஞர் அல்குர்ஆன் அற ஒழுக்கங்களின் முழுமையான கோவையை யும் அவற்றின் அடிப்படையில் அமைந்த சட்டங்களின் கோவையையும் கொண்டிருகிறது. இவை அனைத்துமே மனிதனது தலைவிதியைத் தனது கையிலே பிடித்திருக்கும் ஒரே இறைவனில் உள்ள நம்பிக்கை மீது நிறுவப் பட்டவை ஆகும் என்கிறார். நபி முஹம்மத் அவர்களின் புதிய தூதம் ‘’ இஸ்லாம் ‘’ என அழைக்கப்பட்டது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு பணிதல் என்பது பொருள்.

  இந்த பிரபஞ்சத்தின் தனி எஜமானனான அல்லாஹ்வின் சித்தத்திற்குச் சம்பூர்ணமாகப் பணிதலை இந்த மார்க்கம் அடிப்படையாகக் கொண்டியிருப் பதணாலேயே இது இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஏகத்துவம் , சகோ தரத்துவம் , சமத்துவம் முதலான அடிப்படைக் கோட்பாடு கள் மீது கட்டியெ ழுப்பப்பட்ட ஒரு மார்க்கம். இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை கடமைகள் ஐந்து. அவை ஏகத்துவப் பிரகடனம், ஐவேளைத் தொழுகை, ஏழை களுக்குரியதைக் கொடுத்தல் , றம்ழான் மாத நோன்பு, புனித கக்பாவுக்கு யாத் திரை ( ஹஜ்) செய்தல் என்பதாகும். அல்லாஹ்வால் அருளப்பட்ட இந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர் முஸ்லிம் அல்லது முஸல்மான் என்று அழைக்கப்படுகிறார்.

கடலூர் மாவட்டத்தில் இஸ்லாம் மார்க்கம்

   நபிகள் பெருமானார் தோற்றுவித்த இஸ்லாம் மர்க்கமானது அரேபிய நாட் டிலிருந்து கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் உலகம் முழுவதும் பர வத்துவங்கியது. குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வேகமாக பர வியது. இந்தியாவில் தரைமார்கமாக வந்தது இஸ்லாம். தமிழகத்திற்கு கடல் மார்கமாக வந்தது. தமிழகம் தொடக்ககாலத்திலிருந்தே பொருள் வளத்தால் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்திருந்தது. இதன் விளைவாக அரேபிய வணிகர்கள் தமிழகத்துடன் தொடர்ந்து வாணிபம் செய்து வந்ததனர். இதன் விளைவாக நபிகள் பெருமானாரின் சீடர்கள் சிலர் கடல் மார்கமாக தென்னகம் வந்தனர். நபிகள் நாயகத்தின் தோழர் ஹசரத் அபிவக்காஸ் ( ரலி) என்ற அருளாளர் கடலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கிய பரங்கிப்பேட்டை யில் வந்து தங்கினார். இங்கிருந்த மக்களுக்கு நபிபெருமானார் அருளிய இஸ்லாம் மார்க்க கருத் துக்களை போதித்து வந்தார். நிறைய மக்கள் இஸ்லாம் மார்கத்திற்கு மாறி னார். இவரது அடக்கஸ்தலம் இன்றும் பரங்கிப்பேட்டையில் உள்ளது. மேலும் , டெல்லி சுல்தானியர்களின் தென்னகப் படையெடுப்பு, மாலிக் காபூர் மற்றும் பாமினி சுல்தான்களின் படையெடுப்புகள் போன்றவற்றால் இஸ்லாம் மதம் தென்னகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆற்காட்டு நவாபுகள் காலத்தில் கடலூர் மாவட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் அதிகம் பரவியது. கடலூர் முது நகர் இஸ்லாமாபாத் என்றும் பரங்கிப்பேட்டை முகமதுபந்தர் என அழைக் கப்பட்டதை இஸ்லாமிய ஆவணங்கள் மூலம் அறியமுடிகிறது.

வடலூரில் இஸ்லாம் மார்க்கம்

  கடலூர் மாவட்டத்தின் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் மட்டுமே செல் வாக்குப்பெற்றிருந்த  இஸ்லாம் மதம் சிறுக சிறுக மாவட்டத்தின் உட்பகுதி களிலும் பரவியது. குறிப்பாக வடலூர் பகுதியில் இஸ்லாம் மார்க்கத்தை வளர்த்தவர் ஹஸரத் ஷம்சுத்தின் (ரலி) ஆவார். இவர் கி.பி. 1568 ஆம் ஆண்டு வடலூர் ஐய்யன் ஏரியின் மேற்கு கரையில் இயற்கை சூழ்ந்த அமைதியானப் பகுதியில் வந்து தங்கினார். ஷம்சுத்தின் நாகூர் ஷாஹீல் ஹமீது வலி ரலி யல்லாஹு அன்ஹீ அவர்களின் 440 சீடர்களில் ஒருவர். நாகூர் ஆண்ட வரின் காலம் கி.பி.1532 – 1600 ஆகும். நாகூர் ஆண்டவர் தமது சீடர்கள் 440 பேர்களு டன் மெக்க நகருக்கு சென்றுவிட்டு மேற்கு கடற்கரை நகரான கோவா வழி யாக தரைவழி மார்கமாக தென்னாடு வரும் போது தமது சீடர்கள் சிலரை இஸ்லாம் மார்கத்தை மக்களிடயே போதிக்க கட்டளை இட்டார். இதனால் சீடர்கள் வரும் வழியிலேயே தங்கிவிட்டனர். அவ்வாறு நாகூர் ஆண்டவர் இட்ட கட்டளையையேற்று வடலூர் பகுதியில் தங்கிய வர்தான் ஹஸரத் ஷம்சுத்தின் (ரலி) அவுலியா. இப்பகுதி மக்களிடையே நபிகள் பெருமானார் அருளிய இறைமார்க்கத்தின் வாழ்வியல் நெறிகளை போதித்து வந்தார். மேலும் ஷம்சுத்தின் தம்மைநாடி வரும் அனைத்து மக்களுக்கும் சாதி , சமய பாகுபாடு இன்றி அருட்சேவை புரிந்து வந்தார்.          

   மேலும் தம்மை நாடி வரும் மக்களின் மனக்கஷ்டம் மற்றும் தீராத நோய் களையும் தமது இறைமார்கதால் போக்கினார். இவரை வடலூர் பகுதி மக்கள் மிகப்பெரிய மகானாகவே தரிசித்து வந்தனர். வடலூர், குறிஞ்சிப்பாடி, வெங் கடாம்பேட்டை, நெய்வேலி போன்ற பகுதிகளில் இஸ்லாம் மார்க்கம் பரவ ஹஸரத் ஷம்சுத்தின் முக்கிய காரணமானவர். குறிஞ்சிப்பாடி குப்பத்தை சார்ந்த K.N.T.R.சன் நாடார் தமது நாடார் எஸ்டேட் பிரார்த்தனை நிறைவேறிய தற்காக 1938 ஆம் ஆண்டு ஹஸரத் ஷம்சுத்தின் (ரலி) அவுலியா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தீபஸ்தம்பம் ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளதை இங் குள்ள கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இதன் வாயிலாக அனைத்து மதத் தவரின் அன்பிற்கு பாத்திரமாக ஷம்சுத்தின் அவுலியா அடக்கஸ்தலம் விளங் குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு வடலூர் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் அனைவரும் சமய வேறுபாடுயின்றி வருவது மத ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. வள்ளலாருக்கு முன் வடலூரில் வாழ்ந்த அற்புத மாகான் ஹஸரத் ஷம்சுத்தின் (ரலி) அவு லியா ஆவார் . ஹஸரத்தா ஷம்சுனாபீ (ரலி அன்ஹா)  தமது சகோதரர் ஷம் சுத்தினுக்கு பிறகு இங்கிருந்து இறைப்பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப் பிடத்தக்க ஒன்றாகும். 






              

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு