வரலாற்றில் மருங்கூர்
முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்
வரலாற்றுத்துறை
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி - தஞ்சாவூர்
வரலாற்றில் மருங்கூர்
முன்னுரை
கடலூர்
மாவட்டம் பண்டைய காலத்தில் தொண்டைநாட்டிற்கும், சோழநாட்டிற்கும் நடுவில்
இருந்ததால் இதற்கு நடுவில் மண்டலம், நடுநாடு
என்று பெயர். நிலவியல் அடிப்படையில் மிகவளமான மண்வளம் கொண்டது. இந்நிலப் பகுதியில் தென் பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுக்தாநதி போன்றவை
விவசாய உற்பத்தி யின் முக்கிய அலகாக விளங்குகின்றன. எனவேதான் இப்பகுதி புஞ்சை, நஞ்சை
சார்ந்த விவசாய உற்பத்தியில் பன்னெடுங்காலமாக வளம் பெற்றுவருகிறது. எங்கே மானுடம்
உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டுகிறதோ அங்கே தொழில்வளர்ச்சி ,வாணிபம், மொழியாளுமை,
இலக்கியம், கலை நுட்பங்கள், பண்பாடு, சமயம், பொரு ளாதாரம் போன்றவற்றில் மேன்மையடைய
முடியும். இக் கருதுகோளின் அடிப்படை யில் சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றுப் பின்புலத்தை
தன்னகத்தே கொண்ட மருங் கூர் பகுதியில் நிலவிய உயரிய பண்பாட்டுச் சூழளை தொல்லியல்
தரவுகளின் வாயி லாக ஆய்வதை இக்கட்டுரை கருப்பொருளாகக் கொண்டுள்ளது.
அமைவிடம்
மருங்கூர் கிராமம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில்
அமைந்துள்ளது. கடந்த 2009 ஆண்டு மருங்கூர் வழியாக விருத்தாசலம் செல்லும் சாலையின்
வடபகு தியில் உள்ள இராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சாலை விரிவாக் கத்திற்காக
கனரக எந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டது. சுமார் ஒரு மீட்டர் ஆழத்தில் ஐந்திற்கும்
மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. சிதைந்த தாழிகளின் அருகே மூடுகற்கள்,
இரும்பு ஆயுதங்களின் சிதைவுகள், வெண்கலக் கிண்ணத்தின் உடைந்த பாகங்கள், கருப்பு -
சிவப்பு நிற மட்கலன்களின் பாகங்கள் மண்ணின் மேற் பரப்பில் வெளிப்படிருந்தன.
களஆய்வு
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் கருப்பு - சிவப்பு
நிறபானையோடு கள், வழுவழுப்பான கருப்பு நிற மூடிகள், தாங்கிகள், விளக்கின் உடைந்தபாகம்,
இரும்பாலான சிதைந்த குறுவாள், ஈட்டி, வெண்கலக்கிண்ணத்தின் சிதைவுகள் போன் றவை
மண்ணின் மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்டன. மேலும் உடைந்த முதுமக்கள் தாழியிலிருந்து
எடுக்கப்பட்ட கருப்பு - சிவப்பு நிற கிண்ணத்தின் உடைந்த பாகத்தின் விளிம்பு
பகுதியில் எழுத்துபொறிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழ்பிராமி எழுத்துகள்
இப்பகுதியில் மொத்தம் ஐந்து முதுமக்கள் தாழிகள் கழுத்துவரை
சிதைக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டிருந்ததன. எழுத்து பொறிப்பு கிடைத்த தாழியானது
95 செ.மீ உயரமும் 180 செ.மீ சுற்றளவும் கொண்டது. இத்தாழியின் உள்ளிருந்து 25 செ.மீ
நீளம் கொண்ட இரும்பாலான குருவாள், உடைந்த விளக்கு தாங்கி, கருப்பு- சிவப்பு நிறம்
கொண்ட உடைந்த மட்கலன், வட்டில், கருப்பு நிறம் கொண்ட கூம்பு வடிவ மூடியின் உடைந்த
பாகம், மனித எலும்புகளின் சிதைவுகள் போன்றவை கிடைத்தன. கருப்பு-சிவப்பு நிறம்
கொண்ட உடைந்த கிண்ணமொன்றின் விளிம்பு பகுதியின் அருகே கீறல் எழுத்து பொறிப்புகள்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்பகுதி யில் சேகரிக்கப்பட்ட
55 கருப்பு – சிவப்பு நிற பானை ஓடுகளை ஆய்வு செய்ததில் இரண்டு பானை ஓடுகளில் எழுத்துருக்கள்
இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து முன்னால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்
கல்வெட்டியல் மற்றும் தொல்லி யல்துறையின் பேராசிரியர் முனைவர் Y.சுப்புராயலு,
புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் K.இராஜன், முன்னால்
தமிழ்நாடு அரசு தொல்பொருள்துறையை சார்ந்த முனைவர் வேதாசலம், இணைப் பேராசிரியர்
சு.கண்ணன் போன்றோர் முதுமக்கள் தாழி கிடைத்த பகுதிக்கு வருகை புரிந்து நேரடி
களஆய்வை மேற்கொண்டு சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களை ஆய்வு செய்தனர்.
தாழியின் உட்பகுதியில்
இருந்து எடுக்கப்பட்ட மட்கல ஓட்டில் இருந்த எழுத்துருக் களை ’’அ – தி - ய – க – ன்‘’
என்றும். மண்ணின் மேற்பரப்பில் இருந்து கிடைத்த ஓடு களில் ” அ – ம் ’’மற்ற இரண்டு
எழுத்துக்கள் குறீயிடுகள். மற்றொன்றில் “ம-ல–அ” என பொறிக்கப்பட்டுள்ளதாக வாசித்துள்ளனர்.
இவைகளின் காலத்தை கி.பி. முதல் நூற் றாண்டு என வரையறுத்தனர். ஆனால் இம்மட்கல
ஓடுகளை ஆய்வு செய்த(மார்ச் 16, 2010) மறைந்த தொல்லெழுத்து அறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம்
மகாதேவன் அவர்கள் ‘’அ - ம் ‘’என்று கீறப்பட்டுள்ள எழுத்துக்களின் அருகே இருப்பவை
இரண்டும் சிந்துசமவெளி குறீயிடுகளுக்கு இணையானது என்று தெரிவித்தார். மேலும் ’’அ –தி
-ய –க – ன் ‘’என்ற எழுத்துருக்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என அதன் காலத்தை வரைய றுத்தார்கள்.
இரும்பு மற்றும் வெண்கலக் காலம்
இப்பகுதியிலிருந்து உடைந்த
வாள் ஒன்றின் மையப்பகுதி இருதுண்டுகள், உடைந்த குறுவாள் துண்டு ஒன்று, ஈட்டி
ஒன்றின் இரு துண்டுகள் என ஐந்து இரும்புத் துண்டு கள் சேகரிக்கப்பட்டன. மேலும்
வெண்கல கிண்ணமொன்றின் இரு உடைந்த பாகங் கள் கிடைத்தன. இப்பண்பாட்டுப் பகுதியில்
வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் இரும்பு மற்றும் வெண்கலத்தை பயன்படுத்தியுள்ளதால் இரு
உலோகப் பண்பாட்டுக் கூறு களும் இங்கு நிலைபெற்றிருந்தது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
பண்பாட்டுப்பகுதி
இராமலிங்கம் என்பவர்
நிலத்தில் உள்ள பண்பாட்டுமேடானது ஐந்து அடி, உயரமும் இருபது அடி அகலமும் கொண்டது.
இம்மேடானாது வடக்குத் தெற்காக செல்கிறது. மேட்டின் தெற்கு பகுதியில் மருங்கூர்
வழியாக விருத்தாசலம் செல்லும் தார் சாலை அமைந்துள்ளது. சாலையின் வடக்கு பகுதியில்
40 X 20 அடி அளவிற்கு சாலை விரி வாக்கத்திற்காக மண் அள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில்
மட்டும் ஐந்து முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இராமலிங்கம் என்பவர் நிலத்தில்
மீதம் முப்பது அடி தூரத்திற்கு இப்பண்பாட்டுமேடு பாதுகாப்பாக உள்ளது. இப்பகுதியில்
இருந்து மேற்கே மருங்கூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தின் பின்புறம் மற்றும் இராஜசேகர்
என்பவருக்கு சொந்தமான வீட்டுமனை வரையில் ஆய்வுசெய்யப்பட்டதில் 67 முதுமக்கள் தாழிக
ளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மக்கள் வாழ்விடப் பகுதி
மருங்கூர் கிராமத்திலிருந்து
கீழக்கொல்லை செல்லும் சாலையின் வட பகுதியில் உள்ள குளத்தை ஒட்டிய கிழக்கு
பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய பண்பாட்டுமேடொன்று உள்ளது.
இம்மேட்டின் மையப்பகுதியில் வெளிர் சாம் பல் நிற ரௌலட்டட் வகை மட்கல ஓடுகள்,
கருப்பு – சிவப்பு நிற பானை ஓடுகள், செங்காவிப்பூசப்பட்ட பானை ஓடுகள் போன்றவை
சேகரிக்கப்பட்டுள்ளன. மேட்டின் மேற்கு கீழ்பகுதியில் செங்கற்கட்டுமானப் பகுதி
ஒன்று வெளிப்பட்டுள்ளது. இக் கட்டு மானத்திற்கு 7 X 21 X 42 செ.மீ அளவுள்ள
செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதே அளவுள்ள செங்கற்கள் அழகன்குளம், கீழடி,
உறையூர், அரிக்கமேடு, காவிரிப் பூம்பட் டினம் போன்ற அகழாய்வுகளில்
கிடைக்கப்பட்டுள்ளது. கட்டடப்பகுதியை ஒட்டி குளத் தின் கரையில் கருப்பு - சிவப்பு
நிற பானை ஓடுகள் காணப்பட்டன. அவைகளை சேக ரித்து ஆய்வு செய்ததில் இரண்டு ஓடுகளில் தமிழ்
பிராமி எழுத்துருக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றில் ‘’ அ - ம - ன் ’’ என்றும்
மற்றொன்றில் ‘’ அ – த ‘’ என கீறப்பட்டிருந்தன. இவைகளின் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டாகும்.
மேலும் நான்கு ஓடுகளில் கீறல் குறீயிடுகள் இருந்தன. இது போன்ற குறீயிடுகள்
தமிழகத்தில் நில விய இரும்பு கால பண்பாட்டுப் பகுதிகளில் நடைபெற்றுள்ள
அகழாய்வுகளில் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இக்குறீயிடுகளின் துவக்கமே தமிழ்
மொழியின் துவக்கமென சில தொல்லெழுத்து அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் இப்பண்பாட்டு
மேட்டிற்கு தெற்கு பகுதியில் உள்ள இராமலிங்கம் என்பவ ரது நிலத்தில் நான்கு அடி
அகலமும், மூன்று அடி ஆழத்திற்கு முந்திரிக்கன்று வைப் பதற்காக தோண்டப்பட்ட
பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப்பகுதி ஒன்று காணப்பட் டது. இத்தரைதள பகுதிக்கு
பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் 7 X 21 X 42 செ.மீ அள வுள்ளவை. இக்குழியில்
இருந்து இருபது அடி தள்ளி கிழக்குப் பகுதியில் தோண்டப் பட்ட மற்றொரு குழியில்
மூன்றடி ஆழத்தில் நான்கு கால்களுடன் கூடிய அம்மி ஒன்று கிடைத்துள்ளது. இது ஒரு அடி
அகலமும், இரண்டடி நீளமும், ஒரு அடி உயர மும் கொண்டதாகும். இப்பண்பாட்டுப்
பகுதியில் நடத்தப்பட்ட விரிவான களஆய்வில் சிறுமியர்கள் விளையாடப் பயன்படுத்திய
வட்டச்சில்லு, பச்சை, ஊதா, மஞ்சள்,கருப்பு, வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட பாசிமணிகள்.
கருப்பு - சிவப்பு நிற மட்கல ஓடுகள் போன்றவை சேகரிக்கப்பட்டன. சுமார் நான்கு
ஏக்கர் பரப்பளவில் பெருங்கற் படை மக்களின் வாழ்விடப்பகுதி இங்கு நிலைபெற்றிருந்ததை
அறியமுடிகிறது. மருங் கூர் பகுதியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்கள் நீர்நிலையை
மையப்படுத்தி தங்களது வாழ்விடத்தை அமைத்துள்ளனர். மேலும் இங்கிருந்து வடக்கே
சுமார் 800 மீ தொலை வில் உள்ளப்பகுதியை தங்களில் இறந்தவர்களை புதைப்பதற்கான
இடுகாடாக பயன் படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நுண்கற்கால பண்பாடு
பெருங்கற்கால மக்களின்
வாழ்விடப்பகுதியைச் சுற்றி நுண்கற் காலத்தைச் சார்ந்த கற்செதில்கள், சிறியவகை
கூர்முனை ஆயுதங்களை தயாரிப்ப தற்கென்றே சரியான விசையில் உடைக்கப்பட்ட பாகங்கள், பிறைவடிவ
கற்சீவல்கள் என அறுபதிற்கும் மேற்பட்டவை மண்ணின் மேற்பரப்பில் இருந்து
சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணர்கள் இவைகளின் காலம்
கி.மு. 10,000 என்று வரை யறுத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இயற்கையாகவே
கிடைக்கின்ற குவார்ட்சைட் வகையைச் சார்ந்த வெள்ளைநிற கூழங்கற்களில் இருந்து
நுண்கருவிகள் தயாரிக்கப் பட்டிருக்கலாம். அவ்வகை கருவிகளை அம்பு முனையில் வைத்து
மெல்லிய தோலி னையுடைய பறவைகள், மான், முயல் போன்ற விலங்குகளை வேட்டையாட பயன்ப
டுத்தி இருக்கலாம்.
மருங்கூர் பகுதியில்
பெருங்கற்படை பண்பாடு நிலைபெறுவதற்கு முன், நுண்கற் காலத்தைச் சார்ந்த வேட்டைச்
சமூக மக்கள் இங்கு புழக்கத்தில் இருந்துள்ளனர் என் பது மேற்கண்ட தரவுகள்
உணர்த்துவனவாக உள்ளன. மேலும் முதுமக்கள் தாழிகள் காணப்படும் பகுதியில் உள்ள
இராஜசேகர் என்பவரின் வீட்டுமனையில் தண்ணீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட
பொழுது சுமார் ஆறு அடி ஆழத்தில் வட்டமாக, நடுவில் துளையுடன் கல் ஆயுதமொன்று 2011
ஆண்டு கிடைத்தது. 70செ.மீ சுற்றளவும், 30 செ.மீ விட்டமும், மையத்தில் 7 செ.மீ
விட்டதில் துளையுடன் காணப்ப டும் இவ்வாயுதம் 1000 கிராம் எடைகொண்டதாகும். இது குவார்ட்சைட்
வகை கல்லி னால் உருவாக்கப்பட்டதாகும். நடுப்பகுதியில் உள்ள துளையில் மரக்குச்சி
ஒன்றை சொருகி கைபிடியாகக் கொண்டு கதை (MACE HEAD) போன்று பண்டையகால மக்கள்
பயன்படுத்தியுள்ளனர். இதை தங்களின் சுயபாது காப்பிற்காகவும், விலங்குகளை
வேட்டையாடவும் அக்காலமக்கள் இவ்வகை ஆயுதத்தை பயன்படுத்தி இருக்கலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி
மருங்கூர் பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் களஆய்வில் கிடைக்கப்பட்ட
தொல் மானுடத்தின் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தனிமனிதனின் சுயபாதுகாப்பிற் காக
உருவாக்கப்பட்ட ஆயுதங்களின் எச்சங்களின் ஊடே அக்காலமக்களின் அறிவி யல் தொழில்நுட்ப வளர்ச்சியின் படிநிலைகளை அறியமுடிகிறது.
மட்பாண்ட மற்றும் செங்கல் தயாரிப்பு நுட்பங்கள்
ஒவ்வொரு கால படிநிலைகளில்
தயாரிக்கப்பட்ட மட்பாண்டங்களின் மூலம் அக் காலத்தில் நிலவிய மானுடத்தின் பரிணாம நுட்பங்களை
விரிவாக அறியமுடியும். முதலில் விளிம்பில்லா மட்பாண்டங்களை தயாரித்த மனிதன் அதனால்
ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடுகளை கண்டறிந்து பிறகு விளிம்புடன் கூடிய மட்பாண்ட வடி
வமைப்பிற்கு பரிணமித்திருக்க வேண்டும். மருங்கூரில் சேகரிக்கப்பட்ட பெருங்கற் காலத்தை
சார்ந்த மட்பாண்டங்கள், மட்கல ஓடுகளில் கழுத்துப் பகுதியை ஒட்டிய வாறு சிறிய
அளவிலான விளிம்புகள் மட்டுமே காணப்படுகின்றன. இது ஒருபடிநிலை முன்னேற்றம் எனலாம். மேலும் ‘’அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய ’’ என்ற பாடல் வரியால் பண்டைய
கால தமிழர்கள் சக்கரத்தின் உதவியோடு நேர்த்தியான மட்கலன்களை தயாரித்துள்ளதையும்
உணரமுடிகிறது. இதற்கு அகழாய்வு தரவுகள் வலுச்சேர்ப்பவனவாக உள்ளன. மூவாயிரம்
ஆண்டுகள் முற்பட்ட இடுகாடான ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் 110 வகையான மட்பாண்டங்கள்
கிடைத்துள்ளதாக அலெக்சாண் டர் ரீ குறிப்பிடுகிறார்.
மேலும் இப்பகுதியில்
புழக்கத்தில் இருந்த மட்கல ஓடுளின் வலிமைத் தன்மை குறித்து (X – Ray Floresence
Study) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மருங்கூரில் தயாரிக்கப்பட்ட
மட்பாண்டங்களில் சிலிக்கா – டை - ஆக்சைடு 60.610%, அலுமினா ஆக்சைடு 19.290%,
கால்ஷியம் ஆக்சைடு 3.860%, இரும்பு ஆக்சைடு 7.780%, மக்னீஷி யம் ஆக்சைடு 1.980%
இருப்பதினால் தான், அவை உலோகத்தன்மைக்கு இணையான
உறுதியோடு இருப்பதற்கு காரணமாகும். இவ்வேதி மூலக்கூறுகள் மருங்கூர்
குளத் தின் கிழக்குப் பகுதியில் உள்ள மண்ணோடு ஒத்துச் செல்வதால் மட்பாண்ட மற்றும்
செங்கற்கள் தயாரிக்க தேவையான மூலமண் இங்கிருந்தே பெறப்பட்டிருக்க வேண் டும். சிலிக்கா,
அலுமினா, இரும்பு. இம்மூன்று மூலக்கூறுகள் நிறைந்த மண்ணில் தயாரிக்கப்படும்
பாண்டங்கள் நூற்றாண்டு கடந்தாலும் வலிமையோடு நிலை பெற்றி ருக்கும் என்ற
கருத்துகோள், மண்ணியியல் குறித்த ஆய்வில் தமிழர்கள் சளைத்தவர் கள் அல்ல என்பதற்கு வலிமைச்
சேர்பதாக உள்ளது. எனவேதான் பண்டைய இலக்கி யம் மட்பாண்ட கலைஞர்களை ‘’கலஞ்செய் கோவே‘’
என அரசனுக்கு நிகராக சுட்டு கிறது போலும். மருங்கூர் பெருங்கற்கால பண்பாட்டுப்
பகுதியில் சேகரிக்கப்பட்ட மட் கலன்கள் 590 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில்
சுடப்பட்டதாகும். இது ஆய்விற் குரிய ஒன்று. மேலும் முதுமக்கள் தாழி கிடைத்த
பகுதியில் இருந்து 350 மீ தூரத்தில் உள்ள சுந்தர் என்பவருக்கு சொந்தமான முந்திரித்தோப்பில்
அதிக அளவில் இரும்பு கசடுகள் காணப்படுகின்றன. மேலும் மண்ணின் மேற்பரப்பில் இரும்பு
தயாரிப்பிற்கான மூலப்பொருட்களும், கருப்பு – சிவப்பு நிறப் பானையோடுகளும் காணப்படுகின்றன.
இப்பகுதியின் நிலவியல் சூழலை பார்க்கும்பொழுது மருங்கூர் பகுதியில் வாழ்ந்த பெருங்கற்படை
மக்களுக்கு தேவையான தற்காப்பு, விவசாய கருவிகளுக்கான தேனி ரும்பு இங்கு தயாரிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் செப்பு கலன் மட்டும் பண்ட மாற்று முறையில் வெளியில் இருந்து பெறப்பட்டிருக்கவேண்டும்.
இது வர்த்தக தொடர்பிய லின் உச்சம்மெனலாம்.
முடிவுரை
மருங்கூர் பகுதியின் புவிசார் சூழலை
நோக்கும்பொழுது பண்டையகாலத்தில் காடு சார்ந்த முல்லை நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இப்பகுதியில்
கால்நடை வளர்ப்பு மற்றும் பயறுவகைகள், கம்பு, கெழ்வரகு, வரகு, சாமை, திணை போன்றவை,
விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்களாக இன்றுவரை உள்ளன. இவை களை இப்பகுதியின்
பாரம்பரிய உற்பத்தி என்று கூட சொல்லலாம். மேலும் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்
தமிழகத்தில் முல்லை, மருதம் போன்ற நிலப்பிரிவில் மட் டுமே காணப்பட்ட பெருங்கற்படை
ஈமச்சின்னமான முதுமக்கள் தாழிகள் மருங்கூரில் காணப்படுவது அதன் முந்தைய கால
புவிசார் அமைப்பை பிரதிப்பலிப்பதாக உள்ளது.
இவ்வூரில் கிடைத்த தொல்லியல் தரவுகளின் வாயிலாக இங்கு வாழ்ந்த பெருங்கற் கால
மக்களின் மொழியாளுமை, இரும்பை பிரித்து ஆயு தமாக்கும் தொழில்நுட்பம், மட்பாண்ட
தயாரிப்பு நுட்பங்கள், பண்டமாற்று வர்த்தகம் போன்ற நீடித்த பண்பாட்டுக் கூறுகளை
விரிவாக அறியமுடிகிறது.
குறிப்புநூற் பட்டியல்
1.
புலவர்
அ.மாணிக்கனார், புறநானூறு மூலமும் உறையும்.
2. Dr
Gurumurthy, Ceramic Traditions In South India, University of Madras.
3. Rock
Magnetic And Geomagnetic Field Intensity Studies On Megalithic Archaeological
Pottery Samples From Tamil Nadu, India. Quaternary International Journal
Vol.298, 17 June 2013.
Comments
Post a Comment