சோழர்கால மருத்துவம் பற்றிய ஆவணக் குறிப்புகள்

 

           
                சோழர்காலத்தின் மருத்துவம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள்

 

    பேரரசர் அசோகரால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் கல்வெட்டின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதை அறிகிறோம். அவ்வாறே சமணத்துறவிகள் தங்கள் பள்ளிகளில் அன்னதானம், அபயதானம், ஒளடததானம், சாத்திரதானம் ஆகியவற்றைச் செய்ததாக மதுரை மாவட்டத்தின் மலையில் உள்ள பிராமி கல்வெட்டுகளால் அறிகிறோம். இக்கொடைகள் முறையே உணவு, அடைக்கலம், மருத்துவம், கல்விக் கொடைகள் எனப் பொருள்படும் (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பக்கம் 41). மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்நாட்டில் மருத்துவம் பற்றிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

மருத்துவ மூலிகைகளைப் பயிரிடுவதற்கு செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் போன்ற வரிகள் விதிக்கப்பட்டதையும், மருத்துவர்களுக்கு மருத்துவப்பேறுஎன்ற நிலமானியம் கொடுக்கப்பட்டதையும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது (தமிழர் நாகரிகமும் பண்பாடும், டாக்டர். அ. தட்சிணாமூர்த்தி, பக்கம் 366).

பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டில், நாமக்கல் குன்றுச் சரிவில் வெட்டப்பட்டிருக்கும் இம்மன்னரின் அரசாணைக் கல்வெட்டு ஒன்று நாமக்கல் பகுதியில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் பணியாற்றிக் கொண்டிருந்த சிறப்பு மருத்துவர்களுள் ஒருவரான நாங்கூர் நாட்டைச் சேர்ந்த சுவர்ணன் பாராசிரயன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாளான வைத்ய புரந்தரன்என்பவருக்கு வாழ்வூதியமாக மன்னர் நிலம் அளித்ததைப் பதிவுசெய்துள்ளது. இக்கல்வெட்டில் மருத்துவர் புரந்தரர் அங்க வைத்தியர்எனச் சுட்டப்படுகிறார்.

தமிழகத்தில் சோழர் காலத்திலிருந்த மருத்துவச் செய்திகளைப் பற்றியும் ஒரு சில கல்வெட்டுக்களே அறியத்தருகின்றன. ஆதுலர்சாலை மற்றும் ஆரோக்கியசாலை என மருத்துவமனைகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருமுக்கூடல், திருப்புகலூர், திருவாவடுதுறை, கீர்களூர், கூகூர் மற்றும் கடத்தூர் ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் சோழர்காலம் மருத்துவம் குறித்து சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்புமிக்கது எனச் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் கோயில் கல்வெட்டைக் குறிப்பிடலாம். பாலாறு, செய்யாறு, வேகவதி(வேகவதி ஆற்றை புவிவரைபடத்தில் காண இயலவில்லை) ஆறுகள் கூடுமிடம் திருமுக்கூடல் என்ற ஊர். இங்கு உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் (புவியிடக் குறிப்பு: 12.762813, 79.860516) சோழர்கால கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து களத்தூர்க் கோட்டத்து, தனியூர் ஸ்ரீ மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்து வடபிடாகை திருமுக்கூடல்என்று சோழர்கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கோயில் கலசத்தின் அமைப்பு தொண்டைமண்டல வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் இக்கோயிலின் கட்டமைப்பு சோழர் காலம் எனக் கூறப்படுகிறது. இக்கோயிலில் மொத்தம் 22 கல்வெட்டுகள் இருப்பதாகவும், அவை 1915 ஆம் ஆண்டில் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டதாகவும் திருமுக்கூடல் கோயில் குறித்து தொல்லியல் ஆய்வாளர் ஜெ. ரஞ்சித் எழுதிய நூல் குறிப்பிடுகிறது. இவை இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் வரிசை எண்: 167-188 வரை இடம் பெறுகின்றன. அத்துடன், “தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி – 30 என்ற நூலிலும் இக்கல்வெட்டுகளின் முழுவரிகளும் இடம் பெற்றுள்ளன. பல்லவர் கால கோயில் ராஜராஜ சோழன் ஆட்சியில் கற்றளியாகப் புதுப்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

பல்லவ மன்னர் நிருபதுங்க வர்மனின் 9ஆம் நூற்றாண்டு கல்வெட்டு முதற்கொண்டு பிற்கால விஜயநகர, செஞ்சி நாயக்கர் காலம் வரை உள்ள கல்வெட்டுகளின் பட்டியலில் இடம் பெரும் பெரும்பான்மையான கல்வெட்டுகள், அதாவது 17 கல்வெட்டுகள், இடைக்காலச் சோழர்களின் கல்வெட்டுகளாகும். இவற்றில் 10 கல்வெட்டுகள் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் வெட்டப்பட்டவை. ஆகவே, சோழர்களின் 11 ஆம் நூற்றாண்டு அரசாட்சியை ஆவணப்படுத்துபவையாகவே இக்கல்வெட்டுச் செய்திகள் அமைகின்றன. முதலாம் ராஜேந்திரனின் மகன் வீரராஜேந்திரனின் 5 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு ஒன்று இவனது காலத்தில் திருமுக்கூடல் கோயிலில் வேதக் கல்லூரியும், மருத்துவமனையும் இயங்கியதைப் பதிவு செய்துள்ளது.

வீரராஜேந்திரன் கால ஆதுலர் சாலை மற்றும் வேதக் கல்லூரி

 மேவரு மனுநெறி விளக்கிய கோ இராசகேசரி வர்மரான உடையவர் ஸ்ரீ வீரராஜேந்திரதேவர்என்று மெய்க்கீர்த்தியில் குறிப்பிட்டுக் கொண்ட வீரராஜேந்திர சோழன் ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஆண்டு – 1063. இம்மன்னரின் 5 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட, 55 வரிகளைக் கொண்ட மிகப்பெரிய கல்வெட்டு திருமுக்கூடல் கோயிலில் உள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்துச் சோழ கேரளன் என்னும் திருமாளிகையில் ராஜேந்திர சோழ மாவலி வாணராஜன்என்ற இருக்கையில் அமர்ந்து இந்த ஆணையை வீரராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ளார். இச்சிறப்புமிக்க கல்வெட்டில் ஆதுலர் சாலை என்று அறியப்பட்ட மருத்துவச்சாலை பற்றிய குறிப்புகள் உள்ளன.

இக்கோயிலில் 15 படுக்கைகள் கொண்ட வீரசோழன்என்ற மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. வியாதிபட்டுக் கிடப்பார்என நோயாளிகள் குறிப்பிடப்பட்டனர்.

    ஆதுலர் சாலை வீரசோழனில்

     வியாதிபட்டுக் கிடப்பார்

     பதினைவர்க்குப் பேரால் அரிசி நாழியாக

     அரிசி குறுணி ஏழுநாழி.

நோயாளி ஒருவருக்கு ஒருவேளை உணவுக்கு 1 நாழி அரிசி கொடுக்கப்பட்டது. மருத்துவச்சாலை விளக்கெரிக்க இரண்டேகால் காசும், விளக்கொன்றுக்கு ஆழாக்கு நெய் வழங்கப்பட்டதும் தெரிகிறது.

நாடி பார்த்து மருத்துவம் செய்யும் பொது மருத்துவர் ஒருவரும், அறுவைச்சிகிச்சை செய்யும் மருத்துவர் ஒருவரும் இந்த ஆதுலர் சாலையில் பணியாற்றியுள்ளனர். மருத்துவர் ஆதுலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார் அறுவைச்சிகிச்சை மருத்துவர் சல்லியக்கிரியை பண்ணுவான்என்று குறிப்பிடப்பட்டுள்ளார். நாடி மருத்துவரின் பெயர் ஆலம்பாக்கத்து சவர்ணன் கோதண்டராமன் அசுவத்தாம பட்டர்என்பதாகும். இவருக்கு நாளொன்றுக்கு ஊதியம் 3 குறுணி நெல்லும் 4 காசுகளும். அறுவைச்சிகிச்சை மருத்துவரின் ஊதியம் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 2 காசுகளும் ஆகும்.

மருத்துவர்களைத் தவிர்த்து அவர்களுக்கு உதவியாளர்களாகமருந்து தயாரிக்கத் தேவையான மூலிகைச்செடிகளைக் கொண்டு வருவதற்காகவும், அவற்றைக் கொண்டு மருந்து தயாரிப்பதற்காகவும் மருந்தாய்ந்து கொடுப்பார்என்ற மருந்து கொண்டுவருபவர் இருவர் பணியாற்றினார். இவர்கள் விறகும் சேகரித்து வந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

    ஆதுலர்க்கு மருந்துகளுக்கு வேண்டும்

     மருந்து பறித்தும் விறகிட்டும்

     பரியாரம் பண்ணுவர் இருவர்.

இவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 1 குறுணி நெல்லும் 1 காசும் ஊதியம் பெற்றனர். மேலும், கத்தியைத் திறம்பட உபயோகிக்கும் சவரத்தொழில் செய்யும் நாவிதர் ஒருவரும் சவரத்தொழிலுடன் அறுவைச் சிகிச்சையும் செய்துள்ளார்.

    ஆதுலர்க்கும் கிடைகளுக்கும் சத்திரர்க்கும்

     வேண்டும் பணி செய்யும் நாவிதன் ஒருவன்.

இவரும் மருத்துவர் என்றே அழைக்கப்பட்டார். மகப்பேறு மருத்துவத்தில் உதவிய நாவிதர் மனைவி மருத்துவச்சிஎன அழைக்கப்பட்டார். நாவிதருக்கு ஊதியமாக நாளொன்றுக்கு 4 நாழி நெல் அளக்கப்பட்டது.

மருத்துவச்சாலை சிறப்பாக இயங்குவதற்கு மேலும் சில பணியாட்களும் இருந்தனர். நீர் கொண்டு வருபவர்ஒருவர் மருத்துவச் சாலைக்குத் தேவையான நீர் கொண்டுவரும் பணியிலிருந்தார். ஆண்டொன்றுக்கு 15 கலம் நெல் அவருக்கு ஊதியமாகக் கொடுக்கப்பட்டது. மருந்து ஆடும் பெண்கள்என அழைக்கப்பட்ட மருத்துவப்பணி மகளிர் இருவரும் பணியாற்றினார்.

    ஆதுலர்க்கு வேண்டும் பரியாரம் பண்ணி

     மருந்தாடு பெண்டுகள் இருவர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 4 நாழி நெல்லும் அரைக்காசும் ஊதியமாகக் கொடுக்கப் பட்டது.

மருத்துவ மனையில் பின்வரும் 17 மருந்துகளும், தைலங்களும், கல்பங்களும் எந்த அளவில் இருப்பில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இந்த மருந்துகளைப் பாதுகாக்க 40 காசுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதைக் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. 1) பிராமியம் கடும்பூரி (1 எண்ணிக்கை); 2) வாசா ஹரீதகி (2 படி); 3) தஸ-மூலா-ஹரீதகி (1 படி); 4) பல்லாதக-ஹரீதகி (1 படி); 5) கண்டீரம் (1 படி); 6) பலாகேரண்ட தைலம் (1 தூணி); 7) லசுநாக ஏரண்ட தைலம் (1 தூணி); 8) பஞ்சக தைலம் (1 தூணி); 9) உத்தம கர்ணாதி தைலம் (1 தூணி); 10) பில்வாதி கிருதம் (1பதக்கு); 11) மண்டூர வடகம் (2000 எண்ணிக்கை); 12) திராவத்தி (1 நாழி); 13) விமலை (2000 எண்ணிக்கை); 14) சுனேற்றி (2000 எண்ணிக்கை); 15) தம்ராதி (2000 எண்ணிக்கை); 16) வஜ்ரகல்பம் (1 தூணி 1 பதக்கு); 17) கல்யாண லவணம் (1 தூணி 1 பதக்கு).

சோழர் காலத்தில் இத்தகைய மருத்துவப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு இந்த ஏற்பாடுகள் மதுராந்தக சதுர்வேதிமங்கல மகாசபையின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்பட்டதையும் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. இப்பெரிய கல்வெட்டுச் செய்தி தவிர்த்து மேலும் சில சோழர் கால கல்வெட்டுகள் அவர்கள் காலத்து மருத்துவப் பணிகளையும் அவற்றுக்கான கொடைகளையும் அறியத் தருகின்றன.

விக்கிரமசோழனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு திருவாவடுதுறையில் ஒரு மருத்துவக் கல்லூரி இருந்ததைக் குறிப்பிடுகிறது. இக்கல்லூரியில் 364 மருத்துவ மாணவர்களுக்குக் கல்வியுடன் உணவும் அளிக்கப்பட்டிருக்கிறது. இங்கும் பொது மருத்துவர், அறுவை மருத்துவர் மற்றும் மருந்தாடு பெண்டுகள் குழுவினர் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தனர் (K.A.N. Sesatri the Chola, P.469 & 159 of 1979 EP1 Ind. Vol. XXI 182 – of 1915). சோழர் காலத்து ஆதுலர் சாலைகள் கோயில்களில் இயங்கியதையும் இதன் மூலம் அறிய முடிகிறது. குன்றத்தூரில் சரவணன், அரையன், சந்திரசேகரன், கோதண்டராம அசுவத்தாமபட்டர், மங்களாதி ராஜன், சீராளன் என்ற மருத்துவர்களின் பெயர்களும் கிடைக்கின்றன. மருத்துவர்களுக்கு சைவசிந்தாமணி, சிவகீர்த்தி, கடகமெடுத்த கூத்தபிரான் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்தது என்ற குறிப்பும், பல்லவர்கால மருத்துவமுறைகள் சோழர்காலத்திலும் தொடர்ந்தது என்ற தகவலும் கிடைக்கின்றன.

மகப்பேறு மருத்துவம் சூல் மருத்துவம்என அழைக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் கருவறையின் வடபுறத்தில் உள்ள கல்வெட்டு ஒன்று இரண்டாம் ராஜேந்திர சோழன் காலத்தில் களப்பால் சபையார் சூல்மருத்துவக் காணிக்கையாக நிலக்கொடை கொடுத்ததைப் பதிவு செய்கிறது. கி.பி. 10, 11 காலத்திய கல்வெட்டு கீரக்கடூர் மன்னனின் ஆட்சிக்காலத்தில் பரசுராமர் என்பவர் சிறந்த சூல் வைத்தியர் என்றும், சிசு மருத்துவத்திற்காக 250 கழஞ்சு பொன் சிசுவைத்தியக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. தகட்டூர் கிழவன் சிசு மருத்துவசாலைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டதாக கி.பி. 1221 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது (டாக்டர்.எ.றி. அரசு, சித்தர்களும் நோய் தீர்க்கும் மருத்துவமும், பக்கம் 43).

திருவரங்கத்தின் அரங்கநாதர் கோயிலின் 1257-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றும் ஆதுலர் சாலை பற்றிய குறிப்பைத் தருகிறது. தனது குருவாகிய ஸ்ரீ ராமானுஜரின் அறிவுரைப்படி கருட வாகன பட்டர் என்பவர் நான்காம் பிரகாரத்தில் ஒரு ஆதுலர் சாலையை அமைத்துள்ளார்.

               வைத்தியரில் எனக்கு ரட்சகராய்

                இத்தர்மம் நெடுநாள்பட

                நடத்திக் கொண்டு வந்த நாயகனான

                கருட வாகன பட்டர்.

என்கிறது அந்தக் கல்வெட்டு. நான்காம் பிரகாரத்திலிருந்த திருநடை மாளிகையின் இடைக் கூடத்தில் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு, அது ஒரு நீண்ட அறையாக மாற்றப்பட்டு அதில் ஆரோக்கிய சாலை நடத்தும் பொறுப்பு கருட வாகனப் பட்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹொய்சாள மன்னர் வீர இராமநாதரின் முதன்மைத் தளபதி சிங்கதண்ட நாயக்கர் இவ்வாறு ஆதுலர் சாலை அமைக்க உதவியதாகத் தெரியவருகிறது.

               முன்னாள் பிரதாப சக்ரவர்த்தி காலம் துடங்கி

                இவருடைய பூர்வாள் கருட வாகன பட்டர்

                நடத்தி வந்த ஆரோக்கிய சாலை.

என்று கி.பி. 1493-ஆம் ஆண்டைச் சேர்ந்த மற்றொரு திருவரங்கக் கல்வெட்டு குறிப்பிடுவதால், இந்த ஆதுலர் சாலை பல ஆண்டுகள் இயங்கியதையும், பிற்காலத்தில் அந்த ஆதுலர் சாலை மீண்டும் மூன்றாம் கருட வாகன பட்டரால் புனரமைக்கப்பட்டதையும் அறியலாம்.

தஞ்சையின் தேவராயன் பேட்டை கோயில் கல்வெட்டு சுந்தரசோழ விண்ணகர ஆதுலர் சாலைஒன்று தஞ்சையில் இருந்ததைக் குறிப்பிடுகிறது (ARS I.E – 1924 – P.162/No.249-1923). இந்த ஆதுலர் சாலைக்கு இளவரசி குந்தவை ’9 மாநிலம் நன்கொடை அளித்துள்ளதும், பின்னர் முதலாம் ராஜேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு (கி.பி. 1015) காலத்துக் குறிப்பின்படி, இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டு மருத்துவ சேவைக்கு நிதி பெறப்பட்டதும், மேலதிக நிதித் தேவைக்கு களகரச்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஒருவர் தனது நிலத்தினை விற்று மருத்துவமனைப் பராமரிப்புச் செலவை ஈடுகட்டியதையும் (கி.பி. 1019) கல்வெட்டுக் குறிப்புகள் அறியத் தருகின்றன (ARS I.E – 1924 – P.162/No.249-1923).

மருத்துவர்களுக்குக் கொடையாக மருத்துவக்காணிஎன்ற பெயரில் நிலக்கொடையும் அளிக்கப்பட்டுள்ளது. முதலாம் ராஜேந்திரனின் ஆட்சிக்கால கல்வெட்டு ஒன்று திருவிசலூர் என்ற கும்பகோணத்தை அடுத்துள்ள ஊரின் சிவயோகநாதர் ஆலயத்தில் காணப்படுகின்றது. அறுவைசிகிச்சை மருத்துவர் ஒருவரின் மருத்துவப்பணிக்காக நிலமும், வீடும் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது (S.I.I. Vol. XXIII No.350 & 351). அவ்வாறே, முதலாம் ராஜேந்திரனின் சகோதரி இளவரசி குந்தவை வேம்பத்தூரில் வாழ்ந்த அறுவைச் சிகிச்சை மருத்துவர் பிரயோகத்தரையன் என்பாருக்கு அவ்வூரில் உள்ள ஒரு வீட்டையும், ஒரு வேலி ’4 மாநிலத்தையும் மருத்துவப்பணிக்கான கொடையாக வழங்கியுள்ளார் (S.I.I. VoI. XXIII P. (iii)).

அரச குடும்பத்தினர் மட்டுமன்றி அரசர் உருவாக்கிய ஆதுலர் சாலைகளின் பராமரிப்பிற்குப் பொதுமக்களும் ஊர்ச்சபையினரும் நன்கொடைகள் வழங்கியுள்ளனர் என்பதையும் கல்வெட்டுப் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது. வீர ராஜ ராஜன் நிறுவிய திருப்புகலூர் மருத்துவமனை குறித்து விக்கிரம சோழர் காலத்திய கல்வெட்டு ஒன்று குறிப்பு தருகிறது. முடிகொண்ட சோழர் பேராற்றின் வடகரையில் நிறுவப்பட்டிருந்த திருப்புகலூர் மருத்துவமனைக்கு, சத்திரிய நாத சதுர்வேதி மங்கலத்து ஊர்ச்சபையினர் வரி விலக்களிக்கப்பட்ட நிலம் ஒன்றைக் கொடையாக வழங்கியுள்ளனர் (திருப்புகலூர்க் கல்வெட்டு 323-1978).

மருத்துவ மனையிலிருந்து வெளிவரும் நோயாளிகள் இலவசமாகத் தங்கி ஓய்வெடுக்கவும், சத்துணவு உண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை இரண்டாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியலாம் (TN SDA Serial No. 17/ 1976-1977 No.371/1976-1977). சிவம் என்பவர் திருத்தொண்டத் தொகையான் திருமடத்திற்கு நன்கொடையாக அளித்த நிலத்தின் வருவாயின் ஒரு பகுதியின் மூலம் அங்கு அந்த மடத்தில் தங்கிச் செல்லும் நோயாளிகளுக்கும் பயணிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்ட செய்தியை மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246-1279) காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

திருப்புவனை என்ற ஊரில் அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோயில் முன்னர் வீரநாராயண விண்ணகரம் என்று அழைக்கப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது. இந்நாட்களில் தோதாத்ரிநாதர் கோயில் என்றும் அழைக்கப்படும் இக்கோயில் மன்னர் பராந்தகரின் மனைவியின் பெயரில், ‘திருபுவனை மகாதேவி சதுர்வேதி மங்கலம்என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் சிற்பங்களில் ஒன்று யானைக்கும் மருத்துவம் பார்த்த காட்சியைக் காட்டுகிறது.

சோழர் காலத்துக் கோயில்கள் மருத்துவமனைகளாகவும் இயங்கியது தெரிகிறது. நோயாளிகளிடம் கட்டணம் பெறாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதையும் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. சேக்கிழாரின் பெரியபுராணம் போன்ற அச்சமகாலத்தில் எழுதப்பட்ட நூல்கள் கோயிலில் நுழைவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு இருந்ததில்லை என்பதையும் அறியத் தருவதால், இந்த ஆதுலர் சாலை தரும் மருத்துவத் தொண்டை அனைத்துப் பொதுமக்களும் பெறும் நிலை இருந்ததா என்பது மேலும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு கேள்வி.

 

 

உதவிய தளங்கள்:

[1] ‘திருமுக்கூடல்’, ஜெ. ரஞ்சித், பதிப்பாசிரியர் முனைவர் சீ. வசந்தி, தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு, 2013 பதிப்பு, பக்கம் 74-77.

http://www.tamildigitallibrary.com/admin/assets/book/TVA_BOK_0010776_திருமுக்கூடல்.pdf

 

[2] கல்வெட்டில் மருத்துவர், மு. நளினி, வரலாறு, இதழ் 62, [ஆகஸ்ட் 15 - செப்டம்பர் 15, 2009]

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=916

 

[3] தமிழில் நாட்டு மருந்துப் பாடல்கள் ஓர் திறனாய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, வே. மல்கிஜா பிரபா, 2004, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். பக்கம் 75 – 80. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/77905/9/09_chapter3.pdf & http://hdl.handle.net/10603/77905

 

[4] பழந்தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், டாக்டர் சு.நரேந்திரன்; உங்கள் நூலகம் பிப்ரவரி 2018.

https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/noolagamfeb18/34597-2018-02-13-06-15-57

 

[5] காணாமல்போன ஏரி, யானைக்கு மருத்துவம் பார்த்த முன்னோர்மரபு நடைப்பயணத்தில் கிடைத்த அரிய தகவல்கள்!

https://www.vikatan.com/events/miscellaneous/121203-the-story-about-heritage-walk-through-people

இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கட்டுரை.

இக்கட்டுரையை இணையத்தில் பகிர்ந்த நண்பருக்கு 

நன்றி : இணைய பகிர்வு நண்பர் 


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு