விளாகம் களஆய்வும் அதன் பொருண்மை விளக்கமும்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்                                

வரலாற்றுத்துறை                                   

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி  

தஞ்சாவூர்             

             


     

           விளாகம் களஆய்வும் அதன் பொருண்மை விளக்கமும்

முன்னுரை

   ஒரு நாட்டின் பழங்கால வரலாற்றையோ, பண்பாட்டினையோ, அறிந்துகொள்ள இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், பிற நினைவுச்சின்னங்கள் எந்த அள விற்கு துணைநிற்கின்றனவோ அந்த அளவிற்கு துணைபுரியும் தன்மை ஊர் பெயர் களுக்குண்டு. எனவேதான் ஊர்பெயர்களை பழைமையின் எச்சங்கள் என்கிறோம். ஊர் உருவாக்கம் என்பது தமிழர்களின் திணைசார்புடையதாக இருப்பினும் அது இனவரை வியளோடு நெருங்கியத் தொடர்புடையதாகும். மேலும் ஊராய்வு என்பது புதைபொ ருள் ஆய்வைப் போன்று வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி கூறும் தன்மையு டையது. எனவேதான் மேற்கத்திய நாடுகளில் மனிதப்பரிணாமத்தின் வரலாற்றினை அறிவியல் தொழில்நுட்பத்தோடு கண்டறியும் முயற்சியாக ஊரகத் தொல்லியலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இக்கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு கட லூர் மாவட்டம் விளாகம் என்ற ஊரில் நடத்தப்பட்ட தொல்லியல் களஆய்வில் திரட் டப்பட்ட தரவுகளைக் கொண்டு அவ்வூரின் வரலாற்றுப்பின் புலத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விளாகம் அமைவிடம்

   கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் இருந்து மேற்கே மதுராந்தகநல்லூர் வழியாக சென்றால் பழையவிளாகம் என்ற கிரா மத்தை அடையலாம். நஞ்சை நிலங்களால் சூழப்பட்ட வளமையான ஊர் விளாகமா கும். இவ்வூரி லிருந்து மேற்கே 6 கி.மீ தூரத்தில் வீரநாராயண ஏரி அமைந்துள்ளது. பழைய விளாகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான குடியிருப்பகளே உள்ளன. ஆனால் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை புதியவிளாகம் என்று பழைய விளக்கத்தைச் சார்ந்த மக்கள் அழைக்கின்றனர்.

புவிசார் அமைப்பு

 வீரநாராயணப்பேரேரியின் பாசனப் பரப்பிற்குட்பட்ட பகுதியில் விளாகம் அமைந்துள் ளதால், இப்பகுதி முழுவதும் வேளாண் உற்பத்திக்கு ஏற்ற நஞ்சசை நிலப் பகுதியாக காட்சியளிக்கிறது. வளமையான கருப்பு நிற களிமண் பிரதேசத்தில் இவ்வூர் அமைந் துள்ளதால் மூன்று போகமும் நெல்சாகுபடி சிறப்பாக நடைபெறுகிறது. நீடித்த நீர்வ ளம், வேளாண் உற்பத்திக்கு ஏற்ற மண்வளம் போன்றவை இப்பகுதி மக்களுக்கு சாதகமாக உள்ளதால் இங்கு வாழும் மக்கள் உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்று விளங்குகின்றனர்.    

களஆய்வு

   கடந்த 2007 ஆம் ஆண்டு பழைய விளாகம் குழவித்தோப்பு பகுதியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் சாலை அமைப்பதற்காக மண் தோண்டும் பொழுது சுமார் 15 அடி ஆழத்தில் செங்கற் கட்டடப் பகுதி, சதுர, நீள்செவ்வக வடிவிலான பெரிய கருங்கல் துண்டுகள் மற்றும் பைரவர், சூரியன், சந்திரன் போன்ற இறைவுருவ கற்சிலைகளும் இப்பகுதியில் வெளிப்பட்டன. இங்கு தோண்டப்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்ததில் 15 அடி உயரம் கொண்டதூண், கொடுங்கை பகுதிகள், நான்கு அடி அகல செங்கற்சுவர், ஆறு அடி விட்டம் கொண்ட கட்டுமான கிணறு அதன் அருகே வணங்கிய நிலையில் அடியவர் ஒருவரின் கற்சிலையும் கண்டுபிடிக்கப்பட்டது. கட்ட டத்தின் சுவரானது சுண்ணாம்பு சாந்து கொண்டு கட்டப்பட்டதாகும். இதற்கு 24 x 16 x 4 செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இப்பண்பாட்டுப் பகு தியிலிருந்து தெற்கே சுமார் 100மீட்டர் தூரத்தில் மீன்குட்டை அமைப்பதற்காக தோண்டப்பட்ட 12 அடி ஆழபள்ளத்தில் 24 x 16 x 4 செ.மீ அளவுள்ள செங்கற்களை கொண்டு கட்டப்பட்ட இரண்டு அடி அகலம் கொண்ட கட்டடத்தின் சுவர் பகுதியை ஒட்டி மேற் குபுறமாக தரைதளப்பகுதி ஒன்று செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பண்பாட்டுப் பகுதியில் பூவேலைப்பாடுகள் மிக்க சிவப்பு நிறபானையோடுகள், சிறுமியர்கள் விளையாட பயன்படுத்திய வட்டச்சில்லுகள், கெண்டியின் மூக்குப்பகுதி,பச்சை, வெள்ளை, ஊதா, கருப்பு நிற பாசிமணிகள், திருகையின் சுழளும் மேல் பகுதி, அம்மி, உடைந்த குழவி, கழிவுநீர்களை வெளியேற்றப்பயன்படுத்திய சுடுமண்குழாய்களின் உடைந்த பாகங்கள் போன்றவை சேகரிக்கப்பட்டன. இக்குட்டையானது நீள்செவ்வக வடிவில் 12 அடி ஆழம், 25 அடி அகலம் 50 அடி நீளம்கொண்டதாகும்.

கிணறுகள்

  கோயில் கட்டுமானங்கள் கிடைத்த பகுதிக்கும் வடகிழக்கு பகுதியில் உள்ள மஞ்சா னாங்குட்டையில் கடந்த 2012 ஆம் ஆண்டு கனரக எந்திரத்தால் தூர்வாரும் பொழுது குட்டையின் மேற்குகரை படித்துறையின் வடக்கு பகுதியில் 170 செ.மீ உயரம், 113 செ.மீ விட்டமும் கொண்ட செங்கற் கட்டுமானக் கிணறு ஒன்று வெளிப்பட்டது. இக் கிணற்றுக்கு24 x 16 x 4செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குளத்தின் கிழக்கு பகுதியில் மூன்று இடங்களில் சுடுமண் உறை கேணிகளின் சிதைந்த பாகங்கள் வெளிப்பட்டிருந்தன. இக்கிணற்றிற்கு 60 செ.மீ உயரம் கொண்ட சுடுமண் உறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடைக்காலத்தை சார்ந்த பானையோடுக ளும் இப்பண்பாட்டுப்பகுதிலிருந்து சேகரிக்கப்பட்டன. இக்குளம் அமைந் துள்ள பகுதி கருப்புநிற களிமண் நிறைந்த விவசாய நிலப்பகுதியாகும். அதனால்தான் 15 அடிவரை குளத்தில் கருப்பு நிற களிமண் வெளிப்பட்டிருந்தது. ஆனால்15 அடிக்கு கீழே தோண் டப்பட்ட பொழுது ஆற்றுமணல் அதிக அளவில் வெளிப்பட்டது. அம்மணல் அடுக்கு களை ஆய்வு செய்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மண்ணியல் துறை பேராசிரியர் குமார், பேராசிரியர் செல்வம் ஆகியோர் சுமார் ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வழியாக பாய்ந்தோடிய ஆறு ஒன்றின் (PALEO RIVER CANAL)பழைய வழித்தடம் என்பதனாலேயே இங்கு அதிக அளவில் மணல் வெளிப்பட் டுள்ளதாக கூறினர்.அருகாமையில் ஓடும் வெள்ளாற்றின் பழைய வழித்தடமாகக் கூட இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

  குழவித்தோப்பு பகுதியில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தார்கள் தோண்டியப்பள்ளத்தில் கிணறு ஒன்றின் அருகே கிடைத்த சிலையானது மூன்றடி உயரம் கொண்டதாகும். சிலையானது வலதுகாலை மட்டும் சற்று மடித்தவாறும், உடல் நறுங்கிய நிலையில், தலைமுடி தூக்கி கட்டப்பட்டு பின்புறம் கொண்டையிட்டு காட்சியளிக்கிறது. காது நீண்டு தோள்வரை செல்கிறது. மீசையானது மேல்நோக்கி முறுக்கிய நிலையிலும் தாடி அடர்ந்து சீராகவும் முகம் நீள்வட்டமாக சாந்தநிலையில் உள்ளார்ந்த சிரிப்புடன் காணப்படுகிறது. கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச காப்பும், கைகள் அஞ்சலிக முத்திரையுடன் காட்டப்பட்டுள்ளது. வணங்கப்படும் இரு கைகளின் இடை யில் ருத்ராட்சமாலையும், கீழாடையானது பாதம்வரையில் கணுக் காலை தொட்ட நிலையில் உள்ளது. கீழாடையின் குஞ்சங்கள் இரண்டு கால்களுக்கிடையே தொங் கியவாறு, கீழாடையின் மீது கட்டப்பட்டுள்ள இடைக்கச்சையின் மடிப்புகள் வரிவரி யான கோடுகளைப் போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதே போன்ற தோற்ற முடைய சிலை சிதம்பரம் நடராஜர் கோயிலின் மேற்கு கோபுர நுழை வாயிலில் உள்ள மாடத்தில் உள்ளது. இக்கோபுரத்தை கட்டியவன் சுந்தரபாண்டியனேயாவான். எனவே விளாகத்தில் கிடைக்கப்பட்டுள்ள இச்சிலையானது பாண்டிய மன்னன் முத லாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்று வரலாற்று அறிஞர்களால் அடையாள படுத்தியுள்ளனர்.

விளாகம் என்பதன் விளக்கம் 

  தமிழகத்தில் விளாகம் என்ற பெயர் கொண்ட ஊர்கள் பல உள்ளன. விளாகம் என் பதற்கு போர்களம் சூழ்ந்தவிடம் என்று மதுரைத் தமிழ்ப் பேரகராதி விளக்கம் தரு கிறது. சங்க இலக்கியங்களில் விளா, வளாகம் என்ற சொற்கள் மட்டுமே உள்ளன. ஆனால் விளாகம் என்ற சொல் இலக்கியப் பயன்பாட்டில் இல்லை. மாறாக கல்வெட் டுக்களில் விளாகம் என்ற சொல் அதிக அளவில் கையாளப்பட்டுள்ளதை காணமுடி கிறது. திருக்குறுங்குடியிலுள்ள முதலாம் வரகுண மகாராஜரின் கல்வெட்டே விளாகத் தைச்சுட்டும் முதல் கல்வெட்டாகக் கொள்ளப்படுகிறது. கோயிலுக்குரிய நிலத்தின் எல்லைகளைக் குறிக்கும்பொழுது ‘’வைகுண்ட விளாகத்துக்கே போன பெரு வழி‘’ என சுட்டுகிறது. இங்கு ‘’வைகுந்த விளாகம்‘’ என்பதை ஊராக கொள்வதற்கு இடமுள்ளது காரணம் போன பெருவழி என்பதை இவ்வூர்வழியாக போகின்ற பெரு வழியாக கொள்வதற்கும் இடமுள்ளது. பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மரின் திருவைகாவூர் கல்வெட்டில் நந்தாவிளக்குக்கு, அமுதுபடிக்கும் கொடையாகத் தரப் பட்ட இறையிலியாக வழங்கப்பட்ட நிலத்தை விளாகம் எனக் குறிப்பிடுகிறது. இங்கு விளாகம் என்ற சொல் இறையிலி நிலத்தை சுட்டுகிறது. சோழர் கல்வெட்டுக்கள் அதிக இடங்களில் விளாகங்களைப் பற்றிப் பேசுகின்றன. திருவிளக்குடியிலுள்ள முத லாம் இராசராசனுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் பரகேசரியின் கல்வெட்டில், ‘’கல் லுவிச்ச ஸ்ரீகரணப் பெருவிளாகம்’’ என்று புதியதாகப் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்ட நிலத்தை விளாகம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. திருவெண்காட்டிலுள்ள முதலாம் இராஜாதிராஜனின் கல்வெட்டொன்று பாழாயிருந்த பண்படுத்தப்பட்ட நிலத் தைக் ‘’கல்லித் திருத்தின பிச்ச தேவவிளாக நிலம்‘’ எனசுட்டுகிறது. அச்சிறுபாக்கத் திலுள்ள ஸ்ரீமூலஸ்தானத்து இறைவனுக்கு வேண்டிய நிவந்தங்களுக்காக மண்ணை கொண்ட சோழப் பல்லவரையன் என்ற அதிகாரி பயன்பாட்டில் இல்லாத நிலத்தை விளைச்சலுக்குக் கொண்டுவந்து அதை ‘’தெக்ஷணாமூர்த்தி விளாகம்‘’ என்ற பெயரில் கொடையாக அளித்ததை வீரராஜேந்திரன் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

   திருவரங்கத்திலுள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் எண்பத்து மூன்று கல் வெட்டுக்களில் இருபத்தொன்பது கல்வெட்டுக்கள் விளாகங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கின்றன. முதலாம் குலோத்துங்கனின் முப்பத்தொன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பாண்டிநாட்டைச் சேர்ந்த கண்ணகருமாணிக்கமான வளவ விச்சாதிரப் பல்ல வரையர் தம் பேரால் வைத்த திருநந்தவனத்தைக் கண்ணகருமாணிக்க விளா கம் என்று குறிப்பிடுகிறது. விளாகம் பற்றிப் பேசும் அனைத்துக் கல்வெட்டுக்களுமே பயன் படுத்தப்படாமலிருந்த நிலத்தை விளைச்சல் நிலமாக்கியதை பற்றியே குறிப்பி டுகின்றன. ‘’சுரபி விளாகமாகத் திருத்தும் நிலம்’’,‘’கஸ்தூரி சாத்துவதற்கு புதுவிளாக மாகக் கொண்ட திருத்தி’’, ‘’இராமதேவி விளாகமாகக் கல்லி, விளாகமென்னும் பெய ரில் திருத்தி’’, ‘’திருத்துவித்த கண்ட நாராயண விளாகம்’’, ‘’திருமல்லிநாத விளாக மென்று பேர் கூவப்பட்ட நிலம் வேலியும் திருத்தி’’ என்ற கல்வெட்டுத் தொடர்களால் திருத்திச் சீரமைக்கப்பட்ட விளைநிலப் பகுதியையே கல்வெட்டுக்கள் விளாகம் என்ற பொதுச் சொல்லல் அழைப்பதைக் காணமுடிகிறது. மேலும் ‘’மதுராந்தக விளாகம் என்று பேர்கூவப்பட்ட நிலம் முக்காலும் ஆக நிலம் ஒன்றையும் திருத்தித் தான் வேண்டும் பயிர் செய்து கொள்ளவும் என்ற வரியின் மூலம், விளாக நிலத்தால் பய னடையும் பயனாளிகள் தாம் விரும்பும் பயிர்களை செய்துகொள்வதற்கான உரிமை கொடுக்கப்பட்டிருந்ததையும் அறியமுடிகிறது. குலோத்துங்கனைத் தொடர்ந்து வந்த பிற சோழ மன்னர்களின் காலத்திலும் விளாகங்கள் பற்றியக் குறிப்புகள் காணமுடிகி றது. திருவானைக்காவில் ‘’மறித்துலகங்காத்தான் விளாகம்’’,‘’திருப்புதியூர் விளாகம்’’ எனும் இரண்டு விளாகங்கள் இருந்தன. திருவெண்காட்டில் உள்ள முதற் குலோத் துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று ஊர் கீழ் இறையிலியாக விடப்பட்ட பல்வேறு விளாகங்களிருந்து வரியாகப் பெறப்பட்ட காசுகள் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது. மேற்கண்ட தரவுகளின் மூலம் புதிய நிலப்பரப்பைத் திருத்தி விளை நில மாக்கப்பட்டப் பகுதியே விளாகம் என சுட்டப்பட்டதை அறியமுடிகிறது. இந்த விளா கங்கள் பின்னாளில் ஊராக்கம் பெற்றதை திருமழப்பாடி மற்றும் மன்னார்குடி கல்வெ டுக்களில் ‘’ஸ்ரீகுலோத்துங்க சோழச் சதுர்வேதிமங்கலத்து பிடாகையான குலோத்துங்க சோழ விளாகமும்’’, ‘’கண்டராதித்தசோழச்சதுர்வேதிமங் கலத்துப் பிடாகையான உல குய்யவந்த சோழநல்லூரிலிருந்து வேறு ஊராகப் பிரிக்கப்பட்ட பொன்னார் மேனி விளாகம்’’ போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

  விளை நிலங்களைக் குறிக்கப்பயன்படுத்தப்பட்ட விளாகம் என்ற சொல்லுடன் முன் முன்னொட்டாக மடை என்ற சொல்லைச் சேர்த்து மடை விளாகம் என அழைக்கப் பட்டதை பல கல்வெட்டுக்களில் காணமுடிகிறது. கோயிலுடன் தொடர்புடைய பணியாளர்களின் குடியிருப்புப் பகுதியையே மடைவிளாகம், திருமடைவிளாகம் எனும் சொற்கள் குறிக்கின்றன என்பது கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் உண்மையாகும்.

  முதலாம் ஆதித்தனின் கல்வெட்டில் திருஎறும்பியூர்க் கோயிலைக் கட்டுவித்த வேதிவேளான் என்பவன் மடை விளாகம் அமைக்க கண்டராதித்த சதுர்வேதிமங்கலத் துச் சபையோரிடம் நிலம் விலைக்கு வாங்கியதைக் கூறுகிறது. குத்தாலம் கோயி லைக்கட்டிய செம்பியன் மாதேவியார் கோயில் தொடர்பான பணிகளுக்கு நிலம் ஒதுக்கும் போது மடை விளா கத்திற்கும் நிலம் ஒதுக்கிய தகவலை கல்வெட்டின் மூலம் அறியப்படு கிறது. இது போன்ற மடைவிளாகங்களில் திருக்கோயிலுடையார் கள், உவச்சர்கள், ஸ்ரீகாரியம் செய்பவர்கள், அடிகள்மார், கவரிப்பிணாக்கள், தபஸ்யர் ஆகி யோரின் குடியிருப்புக்களும் அமைந்திருந்தன. இவர்களைத் தவிர இவ்விளாகத் தில் மன்றாடிகளும் மற்றும் வணிகர், கைக்கோளர், தேவரடியார், உவச்சர், இடையர் போன்றோர் வாழ்ந்ததாக கல்வெட்டுகள் சுட்டுகின்றன.

       திருமடை விளாகத்தில் மடங்கள் இருந்ததற்கான குறிப்புகளும் உள்ளன . திருவா னைக்காவில் திருஞானசம்பந்தன் மடமும், கொமரலிங்கத்தில் திருநீறிட்டான் திரும டமும், திருவீழிமிழலையில் திருத்தொண்டத் தொகையார் திருமடமும், திருஞான சம்பந்தன் திருமடமும் இருந்துள்ளன. திருக்கச்சூரில் உள்ள இரண்டாம் இராஜாதிரா ஜரின் கல்வெட்டு திருமடை விளாகத்தில் செக்கிட்டு ஆட்டப்பட்டதாகக் கூருக்கிறது. கோயிலுக்கு தேவையான எண்ணெய்க்காக இச்செக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண் டும். மக்கள் வரி தரமுடியாமல் ஊரைவிட்டு ஓடிபோய் விட்டதாகவும் அதனால் திரு மடைவிளாகம் பாழ்பட்டு இறைவனுக்குப் பூசைகள் நடத்தப்படாமல் கோயில் மூடப் பட்டது. அதனால் மடைவிளாகத்தில் மீண்டும் மக்களைக் குடியேற்றித் தறியும் இடப் பெற்ற தகவலை அரியண்ன உடையாரின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 காளத்திக் கோயில் மடவிளாகம் முதலாம் இராஜேந்திரனின் காலத்தில் ஓர் ஊரா கவே அமைந்திருந்ததை மடவிளாகமான சிவபாதசேகரமங்கலம் என்ற கல்வெட்டு வரி உணர்த்துகிறது. கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே மடவிளாகமும் கட்டப்பட்ட தகவல் துறையூரிலுள்ள மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டில் கிடைத்துள்ளது. நிலம் ஒன்றரையில் ஸ்ரீகோயிலும் திருமடைவிளாகமும் தீர்த்தக் குளமும் அமைக் கப்பெற்றன. திருமடை விளாகத்தில் யார், யார் எந்தெந்தப் பகுதியில் குடியிருந்தனர் என்பது பற்றியும் அவர்கள் வாழ்ந்த மனைகள் பற்றியும் கல்வெட்டுக்களில் குறிப்புக் கள் கிடைக்கின்றன. மடை விளாகத்தின் கிழக்கில் திருப்பூத் தொண்டர்களுக்காக நிச் சயித்த பகுதியில் இருந்த திருஞானசம்பந்தப் பிச்சன் மனை கோனேரிராஜபுரம் கல் வெட்டில் எல்லையாகக் குறிக்கப்பட்டுள்ளது. திருநெடுங்களம் மடைவிளாகத்தில் இருந்த தில்லையுளார் மனையும் கல்வெட் டொன்றில் எல்லையாகச் சுட்டப்பட்டுள் ளது. திருக்கண்ணபுரத்து மடைவிளாகத்தில் மாளிகைகளும் அமையப் பட்டிருந்த தக வலை அறியமுடிகிறதுகிறது. திருக்கோடிக்கா கல்வெட்டுடொன்று மடைவிளாகத்தில் இருப்பவர் களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வைத்திய விருத்தியாக சத்துருமானி யன் ஆளப்பிறந்தான் என்பார்க்கு நிலம் கொடையளிக்கப்பட்டதை கூறுகிறது . திரும டைவிளாகத்தில் குடியிருந்தவர்கள் தறியிறை, தட்டாரப்பாட்டம் போன்ற வரிகளைக் காசாகவோ நெல்லாகவோ தந்ததாகவும் அது இறைவனின் திருப்பணித் தேவை களுக்குப் பயன்படுத்தப் பட்டதாகவும் திருக்கழுக் குன்றம் கல்வெட்டு சுட்டுகிறது.

 விளைந்தறியா இயல்புடையதாக இருந்து திருத்திச் சீர்செய்து விளைவுக்குக் கொண ரப்பட்ட நிலப்பகுதியை குறிக்கப்பயன்பட்டதுடன், மடை எனும் முன்னொட்டை ஏற்று கோயில் சார்ந்தவர்களின் குடியிருப்பைச் சுட்டும் சொல்லாக வளர்ந்த நிலையையும் காணமுடிகிறது. மடை எனும் சொல் சமையல் தொழிலைக் குறிப்பதாகும். கோனே ரிராஜபுர கல்வெட்டில் மடையர்கள் என்று சமையற் காரர்களைக் குறிப்பதை நோக்கும் பொழுது மடைவிளாகம் என்பது முதலில் கோயிற்சார்ந்த அடுக்களைப் பணியாளர்க ளுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாக இருந்து, பிறகு கோயிற் பணியா ளர் அனைவருக்குமான குடியிருப்புப் பகுதியாக வளர்ந்து பணியாளர்கள் எண்ணிக் கையில் பெருக்கம் ஏற்படவே விளாகம் என்பது முழு ஊராக்கம் பெற்றதாகக் கொள்ளலாம். இதனை முன்னொக்காகக் கொண்டே விளாகம் குழவித்தோப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த சிலைகள், கோயிலின் கட்டுமானப்பகுதிகள், குடியிருப்புபகுதிகள், கட்டுமானகிண றுகள், பானை ஓடுகள், பிற கலைபொருட்கள் போன்றவை கி.பி.12-13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். கோயிலின் கட்டுமானங்கள் கிடைத்த இடத்திலிருந்து கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பண்டையகால மக்களின் வாழ்விடப்பகுதி இருந்துள்ளது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகம், ஏழு ஏக்கர் பரப்பளவில் மக்கள் வாழ்விடப்பகுதி போன்றவை மண்ணில் புதையுண்டதற்கு காரணம் வீராண ஏரியின்கரை உடைபால் ஏற்பட்ட வெள்ளப்பாழாக இருக்கலாம். இப்பண்பாட்டுப் பகுதியை ஒட்டி உருவாகி உள்ள புது விளாகத்தில் வேளான்குடியி னர், மட்பாண்டகலைஞர்கள், தச்சர், கம்மாளர், செட்டியார், நெசவுதொழில் செய்வோர், பொற்கொல்லர், வண்ணார், கோயில்பணி செய்வோர் போன் றோர் வசித்து வருவது ஆய்விற்குரிய ஒன்றாகும்.  

முடிவுரை

 ‘’ நின் ஆடு குடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த’’ என்ற சங்கப்பாடலில் குடி என்பது ஆடுகுடி என்றும் திணை என்பது விழுத்திணை குடியிலும் உயர்ந்த குடி என்று பொருள் கூறும் வகையில் அமைந்துள்ள வரியின் மூலம் உயர்ந்த தொல்குடிகளின் துவக்கம் என்பது திணைபுலம் சார்ந்து வழி பெற் றதை உணரமுடிகிறது. எனவேதான் தமிழக வரலாற்றில் ஐந்திணைகளின் தொடக் கமே ஊராக்கத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகிறது. அரசு உருவாக்கம் என்பது திணை புலம் சார்ந்த குடிகளிலிருந்தே துவக்கம் பெறுவதை சங்கப் பாடல்களும் நமக்கு படம்பிடித்து காட்டுவதாக உள்ளன. மேலும் விளாகம் ஊர் உருவாக்க ஆய் வில் நிலம் சார்ந்த அறிவியல் கோட்பாடுகளோடு தொடர்புடையதை காணமுடிகி றது. இந்தியாவில் மட்டும் ஐந்து லட்சம் ஊர்கள் இருகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் 54,000 ஊர்கள் உள்ளன. இவைகளை பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்திய வரலாறு மறுகட்டமைப்பிற்கு பயணிப்பதை உணரலாம். எனவே தான் ஊர்களின் வரலாற்றினை ஆய்வதில் மேலை நாட்டவர்கள் தற்பொழுது அதிக கவணம் செலுத்தி வருகின்றனர். ஊராக்க ஆய்வை செம்மைப்படுத்தும் விதமாக கடந்த 1949 ஆம் ஆண்டு 48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு அனைத்துலக வரலாற்று ஊர்பெயராய்வுக் குழு பெல்ஜியத்தில் உள்ள லூவேஸ் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.     

நோக்குநூற் பட்டியல்

1.       A.R.E – 1937

2.       தென்னிந்திய கல்வெட்டு மடலம்- V,VII,XII,XIV,XIX,XXIV.

3.       புலவர் அ.மாணிக்கனார், புறநானூறு.

4.       KAVERI, STUDIES IN EPIGRAPHY AND HISTORY.

5.       தி.வை.சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் வரலாறு.

6.       முனைவர் வெ.வேதாசலம், பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு.

7.       ர.பூங்குன்றன், தொல்குடி வெளிர் வேந்தர்.

8.       ஆர்.ஆளவந்தார், கல்வெட்டில் ஊர்ப் பெயர்கள்.

9.       ஆனைமுத்து, சிந்தனையாளன் மாத இதழ் – 06.04.1997.




 








  

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு