குறிஞ்சிப்பாடி அருகே 2500 ஆண்டுகள் முற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழை நீரை வெளி யேற்றுவதற்காக நிலத்தை தோண்டிய போது முதுமக்கள் தாழி வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர் மணிவாசகம் என் பவர் கொடுத்த தகவலின் பேரில் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற் றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் தலை மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதுமக்கள் தாழி
அரசடிக்குப்பம் வண்ணன்குட்டையின் மேற்கு
பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் தரைதளத்தில்
இருந்து 75 செ.மீ ஆழத்தில் முதுமக்கள் தாழி வெளிப்படிருந்து. கனரக எந்திரத்தின்
மூலம் மண் தொண்டப்பட்டதால் தாழியின் கழுத்து பகுதிவரை சிதைந்து விட்டது. 120 செ.மீ
உயரம் கொண்ட முதுமக்கள் தாழியின் வாய் பகுதி 65 செ.மீ அகலம் கொண்டதாகும். மேலும்
தாழியின் அருகே மூடுகற்கள், தாழியை சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட்
கற்கள் போன்றவை காணப்பட்டன. சிதைந்த தாழியின் உட்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு
பிடித்தமான உணவு பொருட்களை வைக்க பயன்படுத்தப் பட்ட சிறியவகை கருப்பு சிவப்பு நிற மட்கலன்களின்
உடைந்த பாகங்கள் காணப்பட்டன. அப்பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
கீறல் குறியீடு பொறிக்கப்பட்ட பானையோடு
தாழியின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் உடைந்து
கிடந்த பானை ஓடுகளை சேகரித்து ஆய்வு செய்ததில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் ,
வழுவழுப்பான சிவப்பு நிற பானை ஓடுகள், பளபளப்பான கருப்பு நிற பானை ஓடுகள் போன்றவை
கண்டறியப்பட்டன. மேலும் கருப்பு சிவப்பு நிறம் கொண்ட ஒரு பானை ஓட்டின் கழுத்து
பகுதியில் கீறல் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில்
பெருங்கற்கால மற்றும் இரும்புக்கால மக்களின் பண்பாட்டுப் பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள்
கிடைத்துள்ளன. இக்கீறல் குறியீடுகளே படிப்படியாக வளர்ந்து தமிழ்பிராமி எழுத்து வடிவத்தினை
எட்டியதாக தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட
கொடுமணல் , கீழடி போன்ற அகழாய்வுகளில் கீழ் மண்ணடுக்குகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்ட
பனையோடுகளும் அதற்கு மேலுள்ள மண்ணடுக்குகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட
பானையோடுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் மொழியாளுமை
மற்றும் கல்வி நிலை குறித்து அறியமுடிகிறது. இதே போன்று அரசடிக்குப்பம் பகுதியில்
வாழ்ந்த பெருங்கற்கால மக்களும் எழுத்துக்களை கீறல் குறியீடுகளாக பயன்படுத்தி யுள்ளனர்.
எனவே இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களில் எழுத்தறிவு பெற்றவர்களும் இருந்துள்ளனர்
என்பதை அறியமுடிகிறது.
பெருங்கற்கால மக்களின் வாழ்விடப்பகுதி
வண்ணான் குட்டையையின் வடமேற்கு
பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட மேற்கள ஆய்வில் 7 செ.மீ கன
அளவு கொண்ட செங்கற்களின் உடைந்த பாகம், கருப்பு சிவப்பு மற்றும் வழுவழுப் பான
சிவப்பு நிற பானை ஓடுகளின் உடைந்த பாகங்கள், பெரிய அளவிலான மட்பாண்டங்களின் உடைந்த
பாகங்கள் , சுடுமண் உறைகேணிக்கு பயன்படுத் தப்பட்ட வட்டவடிவிலான சுடுமண் உறைகளின்
உடைந்த பாகம் போன் றவை கிடைக்கப்படுவதால் இப்பகுதி வாழ்விடப் பகுதியாகும். மேலும்
இரும்பு உருக்கப்பட்ட கசடுகளின் பாகங்கள் அதிக அளவில் காணப்படுவதால் இங்கு வாழ்ந்த
பெருங்கற்கால மக்கள் இரும்பின் பயன்பாட்டினையும் அதை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தை
அறிந்திருந்தனர் என்பதை அறியமுடி கிறது. தெற்கு பகுதியை இடுகாடாகவும் வடக்கு
பகுதியை வாழ்விடமாகவும் இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பெருங்கற்காலம் முதல் தற்காலம்வரை
வண்ணான்குட்டையின் கிழக்கு , மேற்கு பகுதியில் நிறைய முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. மேலும் சிங்களராஜன் ஏரியின் தெற்கு , கிழக்கு பகுதியில் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. சிங்களராஜன் ஏரிக்கு கிழக்கே உள்ள பாலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள சிவலிங்கம் மற்றும் சண்டிகேஸ்வரர் சிலை சோழர் காலத்தை சார்ந்தவை. மேலும் இதேபகுதில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சார்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடையங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட’’ ட ‘’ வடிவ கூரை ஓடுகள், 5 X 15 X 24 செ.மீ அளவுள்ள செங்கற்கள், இடைக்காலத்தை சார்ந்த பானையோடுகள், அம்மியின் குழவி போன்றவை கிடைத்துள்ளன. மேலும் இதேபகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சார்ந்த தொல்பொருட்களும் கிடைப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எனவே அரசடிக்குப்பம் கிராமத்தில் கி.மு 5 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்து வருவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் என்று ஆய்வாளர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment