நடுநாட்டில் நீர் மேலாண்மை கல்வெட்டுகள்

 

                  நடுநாட்டில் நீர் மேலாண்மை கல்வெட்டுகள்

 

   "நீரின்றி அமையாது உலகு" தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக் காதே..!!போன்ற அந்தக்காலத் தமிழ் முது மொழிகளிலிருந்தே உயிர்களின் வாழ்வாதாரமான நீரின் தேவையையும் முக்கியத்து வத்தையும் தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.





 

தொன்று தொட்டே தமிழகத்தில் குறிப்பாக   நடுநாட்டில் பெரும்பாலான ஆறுகளும் ஏரிகளும் மழையை எதிர் பார்த்தவையே. இப்பகுதியின் ஜீவநதியான தென்பெண்ணையும் கூட சில காலங்களில் நீரின்றி பொய்த்து விடுவதுண்டு... எனவே ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும் , குளங்களும் அமைத்தே வாழ்வாதாரமான வேளாண்மை நடை பெற்று வந்துள்ளது..

 காடுகளை அழித்து புதிய நாடுகள் உருவான போதும் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவை நீர். எனவேதான் சங்கத் தமிழ் மன்னர்கள் "காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கினர்". நாட்டில் குளம் வெட்டினால் தான் நலம் பெறுகும் என்பதை எந்தளவுக்கு அந்தக் கால ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தனர் என்பதனை

 பதினெண் கீழ்க்கணக்கு நூலில் ஒன்றான "சிறுபஞ்சமூலத்தில் " காரியாசான் சுவர்கத்துக்குப் போகும் வழி என எதைக் குறிப்பிடுகிறார் பாருங்கள்...

 

குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து

உளந்தொட்(டு) உழுவயல் ஆக்கி - வளந்தொட்டுப்

பாகு படுங்கிணற்றோ(டு) என்றிவ்ஐம் பாற்படுப்பான்

ஏகும் சுவர்க்கத்(து) தினிது.

 அதாவது குளம் வெட்டுதல், அதனைச் சுற்றி மரம் நடுதல், மக்கள் நடக்கும் வழியை சீர்திருத்துதல்,தரிசு நிலத்தை  செப்பம் செய்து உழுவயலாக்குதல் அவற்றுடன் வளமான நீர் வரும் படி தோண்டி சுற்றிலும் சுவர் எழுப்பிக் கிணறு உண்டாக்குதல் என்று சொல்லக் கூடிய இந்த ஐந்து பகுதிகளையும் உண்டாக்கியவனே சொர்க்கத்திற்கு செல்கிறவனாம்...

 மழைப்பொழிவினைத் தேக்கி வைத்துப் பயன்படுத்த ஏரிகள், குளங்கள் வெட்டுவிக்க வேண்டும் என்று கூறும் தமிழ் நூல்கள் அவற்றோடு நில்லாமல் அவைகள் எந்த வடிவில் அமைந்தால் நல்லது என்ற அறிவியல் உண்மையையும் எடுத்துச் சொல்லுகின்றன.

 புறநானூற்றுப் பாடலில் கபிலர்,

அறையும் பொறையும் மணந்த தலைய

எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ (118:1-3)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்கவேண்டும் என்று பாடுகின்றார். ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும் என்கிறார்..

 

 "திரிகடுகம்" என்னும் மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலில் நல்லாதனார் பின்வருமாறு கூருகிறார்.

மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்

பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் - உண்ணுநீர்

கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர்

சாவா உடம்பெய்தி னார்.

 

உலகத்தில் மேலான புகழை நாட்டியவனும்,சிறந்த கற்புடைய பெண்ணை மனைவியாகப் பெற்றவனும், குடிக்க நீர் குறைவு படாத படி கிணறுகளைத் தோண்டி வைத்த இம்மூவரும் எக்காலத்திலும் இறவாத புகழுடம்பைப் பெற்றவர்கள் என்கிறார்.

 திருக்கோவிலூர் அருகே  பொன்னியந்தல் மெய்யூர்  கிராமத்தில் உள்ள பாறை  கல்வெட்டு

 

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி எனத் தொடங்கும் ஆதித்த கரிகாலன் கல்வெட்டு அது..  அவன்  காலத்தில் ஔகண்டன் என்பவன் அவ்வூர் ஏரிக்கு நிலத்தினை வரிநீக்கி தானமாக வழங்கப்பட்டதை ஓம்படைகிளவியுடன் பதிவு செய்கிறது அக்கல்வெட்டு... 

 

அக்கல்வெட்டு வாசகம் பின்வருமாறு.

 

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை

கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு

............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து

..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க

....னேன்  இவூர்க்கு நஞ்செயரை

..()ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ()

யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)

தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா

தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ

ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்

தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்

மேலை கற்றூபும் இட்டாருமிவரே.

 இதில் குறிப்பிடப்படும் ஔகண்டன் என்பவன் யார் என்பது எங்களுக்கு பெரும் குழப்பத்தை உருவாக்கியது...

 

இப்பகுதியில் வேறேதும் தகவல்கள்  இருக்கிறதா என பர்க்கலாமென அந்த  ஏரிக்கு கிளம்பினோம்.

அந்த ஏரியின் தற்போதைய கரைக்கும் இந்த கல்வெட்டு உள்ள பாறைக்கும் 500மீட்டர் தொலைவு இருக்கும்.. 

 

அங்கு சென்றவுடன் மற்றொரு ஆச்சரியம் காத்திருந்தது... 

உடைந்த தூம்பும் அதன் அருகே பலகைகல்லில் பொறிக்கப்பட்ட 9ம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட ஒருகல்வெட்டும் இருந்தது... 

 

அருகில் ஒரு பாறையில் மற்றொரு கல்வெட்டு தென்பட்டது 15, 16 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட அக்கல்வெட்டு மிகவும் சிதைத்து புதர் மண்டி கிடந்தது... 

 

பொழுது சாய்ந்து விட்டதால் அந்த தூம்பு கல்வெட்டை மட்டும் படியெடுத்துக்கொண்டு கிளம்பினோம்... 

 

ஓரிரு நாட்கள் கழித்து அந்த கல்வெட்டை சகோதரர் குமரவேல் இவ்வாறு படித்து கூறினார்..

 

 ஸ்வதிஸ்ரீ மூகை நாடு...

... மெயூராலுங்காலத்து ஸ்ரீ வித்தை கற்றும் இத்தூம்பு ...

... பு க்கினான் ஔகண்ட...

கந்த மதியனயானன்.

 

இக்கல்வெட்டை கொண்டு பார்க்கையில்,

இந்த இரண்டு கல்வெட்டுகளும் வெவ்வேறு காலத்தைய எழுத்தமைதியைக் கொண்டது.

 

ஆதித்த கரிகாலன் காலத்திய நிலதான கல்வெட்டை விட இத்தூம்பு கல்வெட்டு காலத்தால் முந்தியது...

 

தூம்பு கல்வெட்டில் மெயூராலும் எனக்குறிப்பிடப்படுகிறான். 

அதற்கு பிற்காலத்திய தானக்கல்வெட்டில் ஆதித்தன் பெயரை குறிப்பிட்டு தன் தானத்தை பதிவு செய்கிறான்.

 

 இதில் வரும் ஔகண்டன் என்பவன் யார்..!?

அவ்வூரின் அதிகாரியா..!?

 இல்லை

அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனா...!?

 

இப்படியாக எனக்குள் ஒரு பெரும் தேடலை உருவாக்கிவிட்டான் அந்த ஔகண்டன்..!!

 

திருக்கோவிலூர்

ஆதித்தகரிகாலன்

குமிழித்தூம்பு

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி