கூத்து, நாடகம், பூம்புலியூர் நாடகக் குழுவும்

   முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

  உதவிப்பேராசிரியர்

  வரலாற்றுத்துறை

 குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி 

தஞ்சாவூர்

                   

                    கூத்து, நாடகம், பூம்புலியூர் நாடகக் குழுவும்


முன்னுரை

 இவ்வுலகில் தோன்றிய மானுடத்தின் முதல் தேடல் உணவு. அதற்காக வேட்டை யாட முற்பட்டான். உணவிற்காக வேட்டையாட வேண்டிய கட்டாயத்திற்குள் பய ணித்துக் கொண்டிருந்த மனிதன் அதற்காக அதிக உடலுழைப்பு, நேரம் மற்றும் மனித உயிரிழப்புகள் போன்ற சவால்களை சந்திக்க வேண்டியதாயிற்று. நாள் தோறும் உணவு என்ற கோட்பாட்டிற்குள் சிக்கித் தவித்த மனிதனுக்கு அக்காலக் கட்டத்தில் ஓய்வு என்பது அருகிப்போன ஒன்றாக இருந்தது. இருப்பினும் தமது உணவுத் தேட லுக்குப் பிறகு கிடைத்த சொற்ப நேரத்தில் வேட்டையின் பொழுது கிட்டிய அனுபவச் சூழளை தாம் தங்கிய குகைகளின் சுவர்களில் ஓவிங்களாக தீட்டி வைத்தான். இதுவே கவின்கலைகளின் துவக்கமாகும். இக்கலைகளின் துவக்கம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதற்கு சான்றாக விளங்குவது மத்திய இந்தியாவில் உள்ள பிம்பேடகா ஓவியங்களை கூறலாம். இவ்வோவியங்களில் வேட்டைகாட்சிகள், நடன காட்சி போன்றவை அக்கால வேட்டை சமூக மக்களால் ஓவியங்களாக குகை சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன. இது போன்ற பதிவுகளை தமிழகத்தில் உள்ள கீழ் வாளை ஓவியங்களிலும் காணலாம். இவைகள் கலைகளின் தோற்ற ஆவணங்களா கும். இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவிய பதிவுகளின் மூலம் கவின் கலைகளின் முன்னோடி நடன கலை என்பதை உணரமுடிகிறது. புதிய கற்காலத்தில் பயணித்த மனிதன் விவசாய உற்பத்தியின் நுணுக்கங்களை கண்டுபிடித்தான். அத னால்தான் உணவுத் தேவைக்காக நீர்நிலை சார்ந்து ஒரு குழுவாக தங்கினான். அதன் பிறகு இரும்பின் பயன்பாட்டினை விவசாயத்தில் புகுத்தியதால் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி உபரி உற்பத்தி என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பொழுதுதான் அவனுக்கு ஓய்வுகிட்டியது. இந்த ஓய்வு இயல், இசை, நாடகம் என்ற கலைகளின் பரிணாமத்திற்கு வழிவகுத்தது. அப்படிப்பட்ட கலைகளின் கூறுகளைக் கொண்ட கூத்து, நாடகம், பூம்புலியூர் நாடகக் குழு போன்றவற்றைப் பற்றி விவாதிக்கப் படு வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

அமைவிடம்

   கடலூர் என அழைக்கப்படும் நகரம் பணடைய காலத்தில் பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டது. இங்கு சமண மற்றும் பௌத்த சங்கங்கள் இருந்ததன. இப்பகுதி யில் பாதிரிமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் பாதிரியூர், பாதிரிப்புலியூர் என்ற பெயரை பெற்றது. தற்போது திருப்பாதிரிப்புலியூர் என அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள பாடலீஸ்வரர் கோயில் சோழர்காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டதாகும். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காலத்தால் முந்தியது பராந்தகசோழனின் கல்வெட்டாகும். பூம்புலியூரான திருப்பாதிரிப்புலியூரில் சோழர் காலத்தில் நாடகக்குழு ஒன்று இருந்ததையும் அது பூம்புலியூ நாடகக்குழு என அழைக்கப்பட்டதை இக் கல் வெட்டின் மூலம் அறியமுடிகிறது.  

சமயமும் கலையும்

 கி.பி.முதல் நூற்றாண்டில் புத்தசமயம் மகாயானம், ஹீனயானம் என பிரிந்தது. மகா யானம் புத்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை பாமரமக்கள் எளிதில் புரிந்துகொள்ள எது வாக சிற்பகலையின் ஊடாக வெளிப்படுத்தி வந்தனர். சிற்பக்கலையை மகாயான பிரிவை பின்பற்றியவர்கள் பௌத்த சமயத்தின் சிறந்த பரப்பு ஊடகமாக்கினர். இதன் மூலம் சிற்பக்கலையும் வளர்ந்தது பௌத்த சமயமும் கடல்தாண்டி பரவிற்று. எனவே தான் சமயமும் கலையும் இணைபிரியாதவை. அவை ஒன்றையொன்று தாங்கிநிற் பன. நீண்டகாலமாக நம் நாட்டில் அறுப்பது மூன்று கலைகளுமே சமயச் சடங்குக ளின் ஊடாக பயணப்பட்டு வந்தவைகளாகும். வைதிக சமயங்களில் வழிபாட்டுமுறை சடங்குகள் புகுத்தப்பட்ட காலத்திலேயே இயல், இசை, நாடகம் என்பன இறை வழி பாட்டுக் கூறுகளாக்கப்பட்டன. இறைவழிபாட்டு நிறுவனங்களான கோயில்கள் இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும்மையங்களாக செயல்பட்டன. பல்லவ மன்னன் பரமேஸ்வர்மன் (கி.பி.670-685) புதியதாக பரமேஸ்வர மங்கலம் என்ற ஊரை ஏற்படுத்தும்பொழுது மாலை நேரத்தில் அவ்வூர் மக்களின் பொழுது போக்குமைய மான கோயில் மண்டபத்தில் மகாபாரதக் கதைகள் வாசிப்பவர்களின் ஊதியத்திற்காக இரு பங்கு நிலம் ஒதுக்கப்பட்டதை ‘’கூரத்துத் தளிக்கு நவகருமஞ் செய்வதாகவும் கூரத்து மண்டகத்துக்கு தண்ணீர்க்குந் தீக்கும் ஒரு பங்காகவும் இம் மண்டகத்தெ பார தம் வாசிப்பதற்கு இரு பங்காகவும்’’ என்ற செப்பேட்டு வரிகளால் அறியமுடிகிறது. ஊர் நிர்மாணத்தில் மக்களின் பொழுது போக்கு என்ற முக்கிய அம்சம் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளதை காணமுடிகிறது. எனவே இங்கு கலைகள் என்பது மக்களின் பொழுபோக்கிற்கானது மட்டுமன்று அது தம்மை சார்ந்த மக்களை அறிவுசார்போடு உயர்த்த வேண்டும் என்பதற்கான ஊடகக் கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை கூரம் செப்பேடு உணர்த்துவதாக உள்ளது.

கூத்துக் கலை

  ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கூத்துக் கலை, காட்சித் திரைகள், நாடக அரங்கின் அமைப்பு பற்றி விரிவாக அறியமுடிகிறது. மேலும் ‘’இரு வகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து, பல்வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்ந்து’’ என்ற வரிகளின் மூலம் இருவகை கூத்து, பலவகை கூத்து இருந்ததை அறியமுடி கிறது. நாட்டியக்கலையும், கூத்துக்கலையும் இசையோடு தொடர்புடையவை. சங்க இலக்கியங்களிலிருந்து வெறியாடல், குரவை போன்ற கூத்துக்களின் வழியாக அக் கால மக்கள் இறைவனை வழிபட்டுவந்ததை காணமுடிகிறது. மக்கள் தங்களது படைப்புப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமாறு முருகனைக் கூத்தின் வழியாக வழி பட்டதை குறுந்தொகை சுட்டுகிறது. சிலம்பு கூத்துத் தொழில்புரிவோரை கூத்தர், கூத் தியர் என சுட்டுகிறது. ‘’எண்ணும் எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும், பண் நின்ற கூத்து பதினொன்றும் - மண்ணின்மேல், போக்கினாள்; பூம்புகார்ப் பொன்தொடிமாதவி’’, என்ற வரிகளால் பதினொருவகையான கூத்தினை திறன்பட ஆடக்கூடிய வல்லமை மாதவிக்கு இருந்துள்ளது.

வ.எண்

கூத்தின் பெயர்கள்

     ஆடப்பட்ட விவரங்கள்

1

கொடுகொட்டி

சுடுகாட்டில் சிவன் உமையொரு பாகனாக வெற்றிக்களிப்பில் ஆடிய கூத்து

2

பாண்டரங்கக் கூத்து

பிரம்மன் முன்பு ஆடப்பட்டது

3

அல்லியம்

கண்ணனை அழிக்க ஏவப்பட்ட யானையை அழித்ததை குறித்து ஆடும் கூத்து

4

மல்லாடல்

கண்ணன் வாணாசுரனை மற்போரில் வெல்ல ஆடப்பட்டது

5

துடிகொட்டி

சூரபத்மனை வென்ற பின் முருகன் ஆடிய கூத்து

6

குடைக் கூத்து

தோற்ற அசுரர்கள் முன் குடையை சாய்த்து, சாய்த்து முருகன் ஆடியது.

7

குடக் கூத்து

கண்ணன் குடத்தைக் கொண்டு ஆடிய கூத்து

8

     

பேடிக் கூத்து

 

தன் மகான் அநிருத்தனை சிறையில் இருந்து மீட்டக ஆண் தன்மை நீங்கி பெண் தன்மையோடு காமன் ஆடிய கூத்து

 

9

மரக்கால் கூத்து

துர்க்கை அசுரரை அழித்த சினத்தோடு ஆடிய கூத்து

10

பாவைக் கூத்து

அசுரர்களை அழித்து திருமகள் பாவை வடிவில் ஆடிய கூத்து

11

கடையக் கூத்து

இந்திராணி உழவர் குலத்திற்காக ஆடியது

 

இடைகாலத்தில் கூத்துக்கலை

  பாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி வர்மரான இரண்டாம் ஆதித்தசோழனின் நான்காம் ஆட்சியாண்டில் (கி.பி.960) திருவிடைமருதூரில் கீர்த்திமறைக்காடனான திரு வெள்ளறைச்சாக்கை என்பவன் அவ்வூர் கோயிலில் ஆரியக்கூத்தாடுவதற்காக அவ் வூர் அலுவலர்களும் ஊர்பொதுமக்களுக்கும் நிலத்தை நிவந்தமாக அளித்துள்ளனர். இந்நிலத்தைப் பெற்றுக்கொண்டு அவன் தைப்பூசத் திருநாளில் ஒரு கூத்தாடவும், அடுத்து மூன்று கூத்தாடவும், வைகாசித் திருநாளில் மூன்று நாட்களில் மூன்று கூத் தாடவும் ஆக மொத்தம் ஏழு கூத்தாடப் பண்டாரத்திலிருந்து பதினாறு கலநெல் அளக் கப்பெற்றது. இதேபோன்று காமரசவல்லி என்ற ஊரில் உள்ள முதலாம் இராஜேந்திர னின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டுக்குரிய (கி.பி.1041) கல்வெட்டில், மார்கழி, வைகாசி மாதங்களில் திருவாதிரைத் திருநாளில் மூன்று முறை சாக்கைக் கூத்தாட சாக்கைமாராயன் விக்கிரம சோழன் என்பவருக்குக் காமராசவல்லி சதுர்வேதிமங்க லத்தார் நிலம் அளித்துள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனின் பதினெட்டாம் ஆட்சியாண்டு(கி.பி.1088)கல்வெட்டில் தமிழக்கூத்து ஆடுவது பற்றிக் குறிப்பு காணப்பெறுகின்றது. மிழலை நாட்டில் வீரநாராயணபுரம் என்னும் ஊர் இருந்தது. அவ்வூரில் கைலாசமுடைய மகாதேவர் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. அவ்விழாவில் ஐந்து முறை தமிழக்கூத்து நிகழ்த்த விக்ரமாதித்தன் திருமுதுகுன்றனான விருதராசபயங்கர ஆசாரியான் என்பவர் நியமிக்கப் பெற்றிருந் தார். அவருக்கு நாகன்பாடி என்னும் ஊரில் கூத்துக்காணியாக நகரத்தாரும் கொவிலா ரும் நிலமளித்த செய்தி கூறப்பெற்றுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் வியாக்ரபுரீசுவரர் கோயிலில் உள்ள கல்வெட்டில் சாந்திக்கூத்து ஆடுவதற்காக நிலமளித்த செய்தி கூறப் பெற்றுள்ளது. இக்கல்வெட்டு விக்கிரமசோழனின் பதிநான்காம் ஆட்சியாண்டைச்(கி.பி.1132) சார்ந்த தாகும். சிங்ககுலகால வளநாட்டுப் பெருவாயில் நாட்டுத் திருவேங்கை வாயிலாண் டார் கோயில் வாயில் முன்பாகச் சித்திரைத் திருவிழாவில் சாந்திக்கூத்து ஆடப்பெற் றுள்ளது. இக்கூத்தை எழுநாட்டு நங்கை என்பாள் ஆடியுள்ளள். அக்கூத்து ஆடுவதற் காகத் தேவதான இறையிலி நிலமாகத் திப்பையர் என்பவரின் வயலும் குளமும் சார்ந்த பகுதியை அளித்துள்ளனர். அந்நிலத்தைத் துய்த்துக் கொண்டு திருநாளின் போது ஒன்பது கூத்துக்களை ஆடியுள்ளாள். அந்நிலம் விளையாது போனால் அவ் வாண்டில் ஆடின கூத்துக்கு உணவு அளிக்க வேண்டுமெனவும் பெருவாயில் நாட்டு மகாசபையார் குறிப்பிட்டுள்ளனர். சாந்திக்கூத்தென்பது கடவுளர் அல்லது தலைவனை சந்தப்படுத்து வதற்காக ஆடப்படுவதே சாந்திக்கூதாகும். மற்றொரு கல்வெட்டு இரண் டாம் இராசாதிராசனின் ஐந்தாம் ஆட்சியாண்டில்(கி.பி.1168) பொறிக்கப்பட்டுள்ள சதிரன் இராசனான குலோத்துங்க சோழ கிடாரத்தரையன் என்பவன் சதிரவிடங்க நாயகன் என்னும் திருமேனியை எழுந்தருளிவித்தான். அத்திருக்கோயிலில் வைகாசித் திங்க ளில் திருவாதிரைத் திருவிழாக் கொண்டாடப் பெற்றது. அவ்விழா வின் போது ஆறு சாந்திக் கூத்துக்கள் நிகழ்த்தப் பெற்றன. அச்சாந்திக் கூத்தை இருபெண்கள் ஆடியுள் ளனர். அவர்களுக்குத் திருவேங்கைவாசல் சபையாரிடமிருந்து நிலம் வாங்கி வரியி லிருந்து விலக்களித்து எல்லைகளை வரையறுத்துக் கொடுத்துள்ளனர். நிலத்தில் விளையினும் விளையாவிடினும் ஆறு கூத்துக்களை ஆடி ஆண்டுதோறும் கல நெல்லை பெற்றுள்ளனர். இதே ஊரில் சோணாடு வழங்கியருளிய முதலாம் மாறவர் மன் சுந்தரபாண்டியனின் பத்தாம் ஆட்சியாண்டுக்குரிய(கி.பி.1226) கல்வெட்டு உள்ளது. அதில் அவ்வூர்த் திருக்கோயிலில் அறச்செயல்களை ஆராய்கின்ற கோயில்தானத்தார் அந்நாட்டுச் சாந்திக்கூதத்தன் அரையன் ஒன்றாயிரம் என்பவனுக்கு நீர்நிலத்தைக் குடி நீங்காத் தேவதானமாகக் (குடிவார உரிமை) கல்வெட்டிக் கொடுத்த செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. மேற்கண்ட கல்வெட்டுச் சான்றுகளின்படி கூத்து என்பது மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கலைஞகர்களைக் கொண்டு ஆடப்படுவதை அறியமுடிகிறது.

கூத்துக் கலையின் பொதுத்தன்மைகள்

  கூத்துக் கலை என்பது வெறும் பொழுதுபோக்கிற்கானதாக மட்டும் பார்க்காமல் அது மனித வாழ்வியலை செம்மையுரவைப்பதற்கான கருத்து ஊடகமாக்கப்பட்டிருந்ததை சங்க இலக்கியங்கள் வழியாக உணரமுடிகிறது. மேலும் கதையின் கருஎன்பது இங்கு பொதுத் தன்மையாக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பண்டையகால தமிழர்களின் வாழ்க்கை முறையில் அகம், புறம் இருந்தது போன்று கூத்துக் கலையிலும் அகக் கூத்து,புறக்கூத்து என வகுக்கப்பட்டு இருந்தது. அகப்பொருள் பற்றியதை அகக் கூத்து என்றும். புறப்பொருள் பற்றியதைப் புறக்கூத்து என்றும் பகுத்திருந்தனர். அகக் கூத்தா வது தலைவன், தலைவி என்னும் இரண்டு தலைமை உறுப்பினரையும், தோழி, செவிலி போன்ற ஏனைய துணை உறுப்பினர்களைக் கொண்டு சிற்றின்பமாகிய காமச் சுவையைப் பொருளாகக் கொண்டு வாழ்வியலை அடிப்படையாக வைத்து ஆடப்படு வதாகும். புறக்கூத்து என்பது தலைவனின் வீரம், கொடை போன்ற செயல்களைமை யமாக வைத்து ஆடப்படுவதாகும். எனவேதான் ’’இருவகை கூத்தின் இலக்கணம் அறிந்து’’ என சிலம்பு குறிப்பிடுகிறது.கூத்து கதைகளை தழுவி ஆடப்பட்டதை’’ ஆதிக் கதையை யாவற்றிற் கொப்ப ’’என்ற வரியின் மூலம் அறியலாம். மேலும் ‘’நாடகம் நாடகத்து ஆட்டமும் ஆளத்து அலைவழியாகும்’’என்கிறது கூத்துநூல். அதனால்தான் தமிழரின் கூத்து, நாடக கலையை பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்களின் பிம்பங் கள் என்கின்றனர் அறிஞர்பெருமக்கள்.

சங்க இலக்கியத்தில் நாடகம்

 ‘’நாடக வழக்கினும் உலகியல் வழகினும், பாடல் சான்றா புலனெறி வழக்கம்’’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதால் அதற்கு முந்திய காலங்களிலிருந்தே தமிழ் நாட்டில் நாடகம் சிறப்புற்று இருந்ததை அறியலாம். வாடா வளவள்ளி எனத் தொல்காப்பிய ரால் சிறப்பிக்கப்பட்ட வள்ளிக்கூத்து சிற்றூர்களில் நடத்தப்பட்டு வந்ததை ‘’வாடா வள்ளியின் வளம்பல தரூஉம், நாடு பல கழிந்த பின்றை’’ என்ற வரியின் மூலம் அறியமுடிகிறது. நாடகம் ஆடும் பெண்களை நாடக மகளிர் எனவும் அவர்கள் ஆடுமி டத்தை ஆடுகளம் என அழைக்கப்பட்டதை ’’நாடகமகளிர் ஆடுகளத் தெடுத்த விசி வீங்கின்னியம் கடுப்ப’’ என பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது. ஆதிக்கதையை தழு வியதாக நடிக்கப்படுவது நாடகமாகும்.’’ நாடகமேத்தும் நாடகக் கணி கையொடு’’, ‘’நாடக முருப்பசி’’, ‘’வாலசரிதை நாடகங்களும்’’ ,‘’நாடக மடந்தையர் ஆடரங்கு’’, ‘’நாடக மகளிர் ஈரைம்பத் திருவரும்’’, ‘’நாடக மகளிரும் நலத்தகு மாக்களும்’’. போன்ற சிலம்பு வரிகளால் நாடகம் என்ற சொல்லாடல்களை காணமுடிகிறது. பெரும்பா ணாற்றுப்படையில் நடனமாதரை நாடகமகளிர் என்றே குறிப்பிடுகிறது. திருவிழாக் காலங்களில் இரவு நேரத்தில் நாடகங்கள் நடத்தப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகி றது. கூத்து வேறு, நாடகம்வேறு என்பதை முதன் முதலாகப் பெருங்கதை என்னும் நூல்’’ வாயிற்கூத்தும் சேரிப் பாடலும் கோயில் நாடகக் குழுக்களும் வருகென’’ பிரித் துக் காட்டுகிறது. ‘’பாடல் ஒர்த்தும் நாடகம் நயந்தும்’’ என்ற பட்டினப்பாலை வரியி னால் தமிழர்கள் வகுத்த நாடகக் கூறுகளை உணரமுடிகிறது. சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நிரம்பப்பெற்றது கலித்தொகையேயாகும். ஒவ்வொருபாடலும் ஓர் ஓரங்க நாடகம் போல் அமைந்துள்ளது. ஓரங்க நாடகத்திற்கு வேண்டிய நிகழ்ச்சி வரு ணனை, காட்சியின் தொடர்ச்சி, கருத்து, கதை, உரையாடல், உணர்ச்சிப் போராட்டங் கள் போன்றவை கலித்தொகையில் நிறைந்துள்ளன. முல்லைக்கலி, மருதக் கலியி லும் பல பாடல்கள் ஓரங்க நாடகங்களாகவே விளங்குகின்றன.

இடைக்காலத்தில் நாடகக்கலை

  பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கி.பி.615-630) நாடகக் கலையில் மிக்க ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இவர் இயற்றிய மத்த விலாசப் பிரகசனம் என்ற சிறிய நாடக நூலினைக் கொண்டு அக்காலத்தில் நாடகங்கள் நடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கொள்ளலாம். ஆனால் பல்லவர், தொடக்ககாலப் பாண்டியர் கல் வெட்டுக்களில் நாடகங்கள் நடத்தப்பட்டதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் சோழர் காலத்தில் இக்கலையானது சிறப்புற்று இருந்ததை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. திருவிடைமருதூர் கோயிலில் நாடகங்கள் நடத்தப்பெருவதற்கென்று நாடக சாலைகள் அமைக்கப் பெற்றிருந்ததை,’’ திருவிடைமருதில் தேவர் நாடக சாலையே இத்தேவர் ஸ்ரீகாரியம் திருத்தன் கடவ திரைமூர் சபையொன்’’ என்ற தொடரால் அறியலாம். முத லாம் இராஜராஜ சோழனைப் பற்றி ‘’ இராசராசவிசயம்’’, ‘’இராசராசேச்சுவர நாடகம்’’ என்ற இருநாடக நூல்கள் இருந்ததை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இராசராசவி சயம் என்னும் நூல் இராஜராஜனின் வரலாற்றை ஓட்டியதாக இருக்க வேண்டும். அதை நடிக்கப்படுவதற்காக கவர்ணன் ஆன நாராயணன் பட்டாதித்தனுக்கு கொடை கள் வழங்கப்பெற்றன. இராஜராஜன் காலத்தில் இயற்றப்பட்ட இராசராசேச்சுவர நாட கம் இராஜராஜனின் பிறப்பு, வாழ்க்கை முறை, வீரம், அறம் முதலிய அருஞ் செயல்க ளைப் பற்றியும், அவன் தஞ்சையில் இராசராசேச்சுவரம் என்னும் கோயில் கட்டிய வரலாற்றைப் பற்றியும் பாடப்பெற்ற நாடக நூலாகும். இந்நாடகங்கள் நடிக்கப்பெறு வதற்கு வழங்கப்பட்ட தானத்தைப் பற்றி ,’’ திருவாலந் திருமுது குன்றனான விசயரா சேந்திர ஆசாரியன் உடையா வைய்காசிப் பெரிய திருவிழாவில் இராசராசேசுவர நாடகமாட இவனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காநியாகப் பங்கு ஒன்றுக்கும் இராச கேசரியோடொக்கும் ஆடவலா னென்னும் மரக்காலால் நித்த நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கல நெல்லும் ஆட்டாண்டு தோறும் தேவர் பண்டாரத்தேய்பெறச் சந்  திராதித்தவல் கல்வெட்டித்து’’. என்னும் கல்வெட்டுத் தொடரால் அறியலாம். மேலும் இக்கல்வெட்டில் வரும் இராசராசேசுவர நாடகமாட திருமுது குன்றனான விசயரா சேந்திர ஆசாரியனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் என்ற வரியால் பல நாடகக் கலை ஞர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நாடகக் குழுவாக இது இருந்திருக்க வேண்டும்.

  முதலாம் இராஜராஜனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 994) புரட்டாசித் திருவி ழாவில் திருவாடுதுறை எம்பெருமான் திருக்கோயிலில் திருமூல நாயனாரது நாட கம் நடத்தப் பெற்றதை காணமுடிகிறது. பொதுவாக கல்வெட்டுக்கள் குறிப்பிடும் இந் நாடகங்கள் கூத்துக்களினின்றும் வேறானவையாகும். நாடகங்களில் வரும் கதாப் பாத்திரங்களுக்கு ஏற்ப நாடக கலைஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை மேற் கண்ட கல்வெட்டுக்களின் ஊடாக அறியமுடிகிறது. மேலும் நாடகங்கள் மன்னரார்க ளால் வளர்க்கப்பட்டு மிகுந்த செல்வாக்குடன் விளங்கியுள்ளன.

பூம்புலியூர் நாடகக் குழு

  புராணம் மற்றும் மன்னர்களின் கதைகளை மையமாகக் கொண்டு நாடகங்கள் நடத் துவதற்காக ‘’பூம்புலியூர்’’ என்னும் பெயருடைய நாடகக்குழு ஒன்று இற்றைக்கு எண் ணூறு ஆண்டுகட்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் இருந்துள்ளது. திருப்பாதிரிப்புலி யூர் பாடலீஸ்வரர் கோயில் கருவறையின் மேற்கு சுவரில் உள்ள முதலாம் குலோத் துங்கனின் நாற்பதாவது(கி.பி.1111)ஆட்சியாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ‘’பூம்புலியூர் நாடகஞ்செய் நாவலன்’’ என்பவன் ‘’பூம்புலியூர் என்ற பெயரில் நாடகக் குழு’’ ஒன்றை அமைத்து நாடகம் செய்து மக்களின் மனதில் நின்றதனால் இந்நாவலனைப் பாராட்டி நிலதானம் வழங்கப்பட்டதை...’’ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 41 திருவாழுங் கறைநாழற் சினைமாறும்,....ஸாஸந்த தெந்மருதம் பாகைக் கருவாழ் வருங்கமலாலயற்க்குக்கன நிவனபுராணம் பாடிப்பரிசி, வாடுங் நாடகமுஞ் செய்தாற்கு சிறப்பாப் பாலையூரினிலிரு பூவும் விளையும் பாரில் ஒருமா நன் நில, (ப)ருங்கொழு கிளையி னெடு முழிதொறு மிறையிலியே புரைத்தானெய் உமாங் கொல்லை, இரண் டுமா பொருமா முக்காணியோங்கு மறப்பெருஞ்செல்வி யொரு காணி...,பூவமர் காணி யிற் பூம்புலியூர் நாடகஞ்செய் நாவலன் பெற்றநிலம்’’. என்ற கல்வெட்டு வரிகளால் அறியமுடிகிறது.  

நாடகச் சாலைகள்  

   திருவிடைமருதூரில் நாடகசாலை ஒன்று இருந்துள்ளது. அங்கு ஊர்ச் சபையினர் கூடித் தங்கள் பணிகளைச் செய்தனர். அததாமன் ஐயாறனான கண்ட தோள் கண்டப் பையன் என்பவன் திருவதிகைக் கோயிலில் நாடகசாலை மண்டபம் அமைத்து அதில் விளக்கு எரிக்க தொண்ணுற்றாறு ஆடுகளை அளித்த செய்தி உத்தமசோழனின் பதி னான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியப்பெறுகிறது. முதலாம் இராஜராஜ சோழனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் (கி.பி. 994) புரட்டாசித் திருவிழாவில் திருவா டுதுறை எம்பெருமான் திருக்கோயிலில் திருமூலநாயனாரது நாடகம் நடத்தப் பெற் றதை காணமுடிகிறது. இங்கு நானாவித நாடகச் சாலை என்னும் பெயரில் நாடக அரங்கு ஒன்று இருந்தததையும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளது.

முடிவுரை

    சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டைச் சமூக மக்கள் தங்க ளின் ஓய்வு நேரங்களில் குழு நாடனமாடி மகிழ்ந்திருந்ததை பிம்பேடகா ஓவியப் பதி வின் மூலம் அறியமுடிகிறது. அதனால்தான் கலைகளின் தோற்றுவாய் என்பது வேட் டைச் சமூக மக்களின் வாழ்விடமான குறிஞ்சித் திணையில் தோற்றம் பெற்றதாக இனவரைவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிஞ்சி நிலமக்களிடம் தோன்றிய வழி பாட்டுச் சடங்குகள் நடனக்கலைக்கு வித்திட்டதை மலைகுகைகளில் தீட்டப்பட்டுள்ள பழங்கால ஓவியங்களின் வாயிலாக உணரமுடிகிறது. குறிஞ்சி நிலத்தில் தோற்றம் பெற்ற இக்கலைகள் முல்லை நிலத்திற்கு பயணித்து பின்னர் மருத நிலத்தில் ஏற் பட்ட உபரி உற்பத்தி என்ற தன்னிறைவு பெற்ற பொருளாதார வளர்ச்சியின் வழியாக மக்களுக்கு அதிக ஓய்வுகிட்டியது. அவ்வோய்வை மன மகிழ்ச்சிக்கானதாக மாற்றிக் கொண்ட அம்மக்கள் விவசாய உற்பத்திக்கு துணைநின்ற கடவுளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக திருவிழாக்களை நடைத்தினர். அவ்விழாக்காலங்களில் கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், ஏருதழுவல், குழுநடனம், கூத்து, நாடகம் போன்ற கவின் கலைகள் (FINE ARTS) தோன்ற ஆரம்பித்தன. இவை மக்களிடையே மனிதத்தையும், உறவு கட்டமைப்புகளையும் பலப்படுத்தியது. மேலும் நாடகம், கூத்து போன்றவற்றின் ஊடாக நல்லொழுக்கம் மிக்க புராணக்கதைகள், அரச னின் சாதனைகள் போன்றவை நாடகக்கலைஞர்களால் நடித்துக்காட்டப்பட்டதால்  மக் களிடையே சுயஒழுக்கம், நாட்டுப்பற்று, சமூக ஒற்றுமை ஏற்பட காரணமாக அமைந் தது. அதனால் தான் சமூகத்தின் மீது அக்கறை மிக்க கலைஞர் வழிநடத்தும் முகமா கவே முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல் போன்ற நாடக நூல்கள் தோன்றின.

குறிப்புநூல்பட்டியல்

1.       புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுக்கள்

2.       தென்னிந்தியக் கல்வெட்டு மடலம்- II,III,V

3.       கல்வெட்டு ஆண்டறிக்கை – 1814, 1924

4.       தொல்காப்பியம்

5.       சிலப்பதிகாரம்

6.       பட்டினப்பாலை.

7.       மதுரைக்காஞ்சி

8.       பெருங்கதை

9.       பெரும்பாணாற்றுப்படை.

10.    கலித்தொகை

11.    கடலூர் மாவட்ட தடயங்கள் மடலம் I & II

12.    ஆறு.ஆழகப்பன், தமிழ் நாடகத் தோற்றமும் வளர்ச்சியும்.

13.    வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார், நாடகவியல்.

14.    அ.அறிவு நம்பி, தமிழகத்தில் தெருக்கூத்து.

 



 

 

.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு