சேவல்சண்டை

 

                 


 
சேவல்சண்டை- கோழிப்போர் நடுகல்

  பாய்ந்தும் எறிந்தும் படிந்தும் பலகாலும்

காய்ந்தும்வாய்க் கொண்டும் கடுஞ்சேவல் ஆய்ந்து

நிறக்கண்டு வித்தகர் நேர்விட்ட கோழிப்

புறங்கண்டும் தான்வருமே போர்க்கு

 புறப்பொருள் வெண்பாமாலையில் சேவற்சண்டை குறித்து வரும்பாடல் இது. பலசண்டையில் கலந்தாலும்(ஈராஸ், மூராஸ்) விடாமல் வெறியுடன் சண்டையிடுதலை மேற்கண்டபாடல் கூறுகிறது. இதில் வரும் 'எறிந்தும்' என்பதற்கு "காலின் முள்ளை இட்டு இடித்தும்" என இப்பாடலின் உரை கூறுகிறது. சமீபகாலம் வரையிலும் சேவலின் காலிடுக்கில் கூரான சிறிய கத்திபோன்ற பொருளைகட்டி சண்டையிட வைப்பர். எத்துணை வருடமாய் இவ்வழக்கம் தொடர்கிறது என இப்பாடல் வாயிலாய் அறியலாம். இன்று நாம் ஆண்கோழியை சேவல் என்று கூறுகிறோம். அன்று சேவல், பெட்டைக்கோழிகளை போதுவாக கோழி என்றே அழைத்தனர். பெண்கோழியை "அளகு" என கூறினர். சேவற்சண்டையிடும் Jockyகளை அன்று வித்தகர் என அழைத்தனர். கோழிசண்டையின் நுட்பங்களை விளக்க "கோழிநூல்" என்ற நூல் இருந்து பிற்பாடு அழிந்துள்ளது. இந்நூலிலிருந்து பல மேற்கொள்கள் பல இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. பொதுவாக சண்டைக்கோழிக்கென்று சில இனங்கள் உண்டு. இவ்வினங்களின் குஞ்சுகளையோ அல்லது முட்டைகளையோ வாங்கி, வீட்டுக்கோழிகளிடம் அடைகாக்கவைத்து அதன்பின் 5 மாதம் வரை கோழிகளோடு பழகவிட்டு பின் தனியே பிரித்து 2 வயதுவரை பயிற்சி கொடுப்பர்.

போட்டி நடக்கும் தேதிக்கு சுமார் மூன்றுமாதம் முன்பே சேவலை தயார்படுத்துகின்றனர். சண்டைசேவலுடன் கூடவே அதே எடையுடைய சில சேவல்களையும் வாங்கி தினமும் மோதவிடுவர். அதன்பின் நீச்சல்பயிற்சி இன்னும் சில பயிற்சிகள் உண்டு. சேவலுக்கு வலுகூட்ட சோளம், பாதாம், அவித்த ஈரல் கொடுப்பதுண்டு. Tournament அறிவித்தவுடன் 21 நாள்கள் கடும்பயிற்சி சேவலுக்கு அளிக்கப்படும்.

அதன்பின் போட்டியில் கலந்துகொள்ளும் சேவலுக்கு 15 நிமிடம் சண்டை 15 நிமிட ஓய்வு என்று நேரம் ஒதுக்கப்படும். ஓய்வுநேரத்தில் அடிபட்டசேவலுக்கு முதலுதவி அளிக்கப்படும். வெதுவெதுப்பான நீரில் சேவலின் உடலின் வழிந்தோடும் ரத்தம் முதலில் கழுவப்படும். அதன்பின் கால், முகம், முள் ஆகியவற்றில் காயத்தின் தன்மை ஆராய்ந்து, இரத்தத்தை வாயால் உறிஞ்சி, ஆழமான காயங்களில் ஊசியால் தையல்போடுவர். இதற்கென பிரத்யேக நூலும் உண்டு.அதன்பின் வெதுவெதுப்பான நீரை சேவலின் வாயில் குடிக்க கொடுத்து, தொண்டையில் இறங்கியதும் அந்நீரை உமிழச்செய்வர்.அப்போது இரத்தம் கலந்த நீர்வெளிவரும். இவ்வாறு பலமுறைகொடுத்தபின். நல்லநீர் கொடுக்கப்படும். ஒருதோசைக்கல்லில் துணியை வைத்து கொஞ்சம் சூடேறியதும் அதத்துணியை வைத்து ஒத்தடம் கொடுக்கப்படும். அதன்பின் க்ளுக்கோஸ் உருண்டை கொடுப்பர். அக்காலத்தில் நாட்டுச்சக்கரையுடன் அறைத்த சுக்கு உருண்டை தரப்பட்டது. அதன்பின் சேலை கொஞ்சம் நடக்கவைத்து Warmup செய்யப்பட்டு பின் அச்சேவல் போட்டியில் கலந்துகொள்ளும்,ஒவ்வொரு வருடமும்  தை முதல் சித்திரை மாதம் வரை ஐந்து மாதங்களே சேவல்சண்டை சீசன். 

 

சண்டைசேவல் வளர்ப்பது கலை மட்டுமின்றி அது கௌரம் சார்ந்த ஒரு நிகழ்வு, ஆகவே சிலர் வறுமையில் இருப்பினும் இச்சேவல்களை சிறப்புடன் கவனித்து வளர்க்கின்றனர். கீழே படத்தில் காணும் நடுகற்கள், இதேபோன்ற கோழிப்போரில் ஈடுபட்டு மரணமடைந்த கோழிகள். இவற்றின் உரிமையாளரான 'கோழிவித்தகர்கள்' தாம் உயிருக்குயிராய் வளர்த்த சேவலை மறக்கவியலாது கல்லெழுப்பி வணங்கினர். இந்நடுகற்கள் 1500 வருடம் பழமையானது.

 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி