கடலூர் மாவட்டத்தில் வெண்கல காலம்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

 உதவிப்பேராசிரியர்

 வரலாற்றுத்துறை

 குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி - 

தஞ்சாவூர்

                      


              கடலூர் மாவட்டத்தில் வெண்கல காலம்

     வட இந்தியாவில் புதிய கற்காலத்தை தொடர்ந்து கி.மு. 3300 ஆண்டு களுக்கு முன்பாக வெண்கலக்காலம் தொடங்கியது. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குவது சிந்துசமவெளி நாகரிகமாகும். காரணம் இரும்பின் பயனை இப்பண்பாட்டு மக்கள் அறிந்திலர். செம்புக் காலத்திற்கு பிறகுதான் இரும்பின் பயன்பாடு வடஇந்திய மக்களிடையே புழக்கத்திற்கு வந்தது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை புதிய கற்காலத்தை தொடர்ந்து கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பு மற்றும் வெண்கலத்தின் பயன் பாட்டினை தமிழர்கள் அறிந்திருந்தனர். அதனால்தான் தமிழகத்தில் பெருங்கற் கால மக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் நடத்தப்படும் அகழாய்வுகளில் வெண்கலப் பொருட்களுடன் இரும்பு பொருட்களும் கிடைக்கின்றன. மூவா யிரம் ஆண்டுகள் பழமையான ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 391 வகையான இரும்பு பொருட்களும், என்பதிற்கும் மேற்பட்ட வெண்கலப்பொருட்களும் கிடைத்துள்ளன. இதே போன்று வடலூரில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஆணையம்பேட்டை கிராமத்தின் தெற்குப்பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் குமார் என்பவரது நிலத்தின் மீதிருந்த மேலடுக்கு மண் சுமார் இரண்டு மீட்டர் ஆழத்திற்கு அடித்து செல்லப்பட்டது. இதன் விளைவாக சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் மேற்பபட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் கால்களுடன் கூடிய நான்கு ஈமப்பேழைகள் வெளிப்பட்டன. சிதைந்த தாழி ஒன்றின் உட்பகுதியில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட இரும்பு வாள் ஒன்றும், 30 செ.மீ அளவுள்ள ஐந்து குருவாட்களும், மனித எலும்புத் துண்டுகள், கருப்பு – சிவப்பு மட்கலன்கள், விளக்கு மற்றும் தாங்கிகள், கருப்பு நிற மூடி, சிதைந்த வெண்கலக் கிண்ணம் போன்றவை கிடைத்தன.

    மேலும் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள குருப்பம்பேட்டை கிராமத்தில் உள்ள ஐயனார்கோயிலின் தெற்கு பகுதியில் உள்ள மண்மேட்டில் கடந்த 1992 ஆம் ஆண்டு மண் தோண்டும் போது முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. அதில் இரும்பு போருட்கால், கருப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்கள், வெண்கல தட்டு போன்றவை கிடைத்துள்ளன. வடலூர் செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள இராமலிங்கம் என்பவரது நிலத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டப் பள்ளத்தில் முதுமக்கள் தாழி கிடைத்தது. அதில் சிதைந்த மனித எலும்புகள், கருப்பு – சிவப்புநிற மட்கலன்கள், சிதைந்த வெண்கலப் பொருளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே வடலூர், அதை சார்ந்த மாவட்டத்தின் பிறப் பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் வெண்கலத்தின் பயன்பாட்டினை அறிந்திருந்தனர் எனலாம்.       

பெருங்கற்காலம்

   பெருங்கற்காலத்தை இரும்புகாலம் என்றும் அழைப்பர். இரும்பின்பயனை மனிதன் முழுமையாக அறிந்த காலம் இதுவே. இக்காலத்தில் வாழ்ந்த மனி தன் நிலையாக ஓரிடத்தில் தங்கி கூட்டமாக இணைந்த சமூக வாழ்க்கையை மேற்கொண்டதோடு, வேளாண்மை, கால்நடை வளர்த்தல் இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டான். குறிப்பாக மானுடம் எழுத் தறிவும் பெற்றுதும் இக்கால கட்டத்தில்தான். இப்பண்பாட்டை சார்ந்த மக்க ளின் ஈமச்சின்னங்களும் அவர்களின் வாழ்விடப் பகுதி களும் கடலூர் மாவட் டத்தில் 385 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதுமக்கள் தாழி

     பெருங்கற்காலம் என்ற இரும்பு கால பண்பாட்டை சார்ந்த மக்கள். தங் களில் இறந்தவர்களை மிகப்பெரிய அளவிலான மட்பாண்டம் செய்து, அத னுள் உடலை வைத்து அடக்கம் செய்தனர். இதையே முதுமக்கள் தாழி என் பர். இப்புதைப்பு முறைபற்றி சங்க இலக்கியமான புறநானூற்றில் ‘’ வியன் மலர் அகன்பொழில் ஈமத்தாழி’’  என்றும் ‘’ கவி செந்தாழிக் குவி புறத்து’’ என்ற வரிகளின் மூலம் அறியமுடிகிறது. எனவே பெருங்கற் காலத்தில் தோன்றிய இப்புதைப்பு முறையானது சங்ககாலம் வரை தொடர்ந்துள்ளது. மேலும் முதுமக்கள் தாழியினுள் இறந்தவரின் உடலுடன் சேர்த்து அவருக்கு பிடித்தமான முக்கிய உணவு பொருட்களை சிறியவகை மட்கலங்களில் வைத்து புதைத்தனர். இவ்வாறு வைக்கப்படும் உணவு பொருட்களை இறந்த வரின் ஆன்மா உண்டு வாழும் என்று நம்பினர். மேலும் அவர்கள் பயன்படுத் திய ஆயுதங்கள், ஆபரணங்கள் போன்ற வற்றையும் இறந்தவர்களுடன்  வைத்தே புதைத்தனர். சில முதுமக்கள் தாழிகளின் வாய்பகுதியை மூடுவ தற்கு பயன்படுத்தப்பட்ட மூடிகளில் கிழக்கு திசையை பார்த்தவாறு சிறிய துளை இடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் புதைக்கப்பட்டவரின் ஆன்மா வெளியே சென்று மீண்டும் தாழிக்குள் வரும் என அக்கால மக்கள் கருதி யுள்ளனர். இதன் மூலம் தமிழர் மனித உடலுக்கு அழிவு உண்டு, ஆனால் ஆன்மாவிற்கு அழிவில்லை என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

     மேலும் இவ்வகை புதைப்பு முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தோன்றிவிட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறு கின்றனர். தமிழகத்தில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளில் காலத்தால் முந்தயதாகக் கருதப்படுவது தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள தாழிகளேயாகும். இவை கி.மு. 1000 ஆம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.



Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு