வரலாற்றில் தேவிக்கோட்டை

 முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

 உதவிப்பேராசிரியர்                                                                                   

 வரலாற்றுத்துறை                                                                                     

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி  

தஞ்சாவூர்                                                   

         

                                 வரலாற்றில் தேவிக்கோட்டை

முன்னுரை

   சங்ககாலம் தொட்டு தமிழகம் கலை கட்டடக்கலையில் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்கி வந்துள்ளது. இங்கு காணப்படும் கோயில்களும், அரண்மனைகளும் இதர கட் டடங்களும் தமிழரின் கட்டடக்கலை நுட்பங்களை அறிந்துகொள்ள உறுதுணையாக நிற்கின்றன. தமிழரின் கட்டடக்கலை மரபினை இருவகையாக பிரிக்கலாம் ஒன்று வாழ்வியல் தொடர்புடைய அரண்மனைகள், மாளிகைகள், மண்டபங்கள் போன்ற வைகளாகும். மற்றொன்று வழிபாட்டியல் தொடர்புடைய கோயில்களாகும். கோயிற் கலை சார்ந்த ஆய்வுகள் தமிழகத்தில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சூழலில் கோட்டைகளின் உருவாக்க நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படாதது பெருங்குறையாக உள்ளது. அந்தடிப்படையில் கடலூர் மாவட்டத்தின் இடைக்கால வரலாற்றில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தேவிக்கோட்டையின் வர லாற்றுப் பின்புலத்தை முழுமையாக ஆய்வதை இக்கட்டுரையின் முக்கிய கருதுகோ ளாக்கப்பட்டுள்ளது.                          

கோட்டை உருவாக்கம்

   குறிஞ்சி நிலத்தில் சந்தித்த உற்பத்தி குறைபாடுகளை சரிசெய்வதற்காக முல்லை நிலத்திற்கு புலம்பெயர்ந்த மானுடம் உணவு உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இங்கு விவசாய உற்பத்தியின் முக்கிய அலகான நீரின் மூலம் ஏறப்பட்ட பற்றாக்குறை, இந்நிலமக்களை அடுத்தக்கட்ட இடப்பெயர்விற்கு வழிவகுத்தது. இவ் வாறு நீரின் நிலைத்தன்மையை முன்னிலைப் படுத்தியாதாக அமைந்த இடப்பெயர்வு மானுடத்தை மருதநிலத்தில் நிலைநிறுத்தியது. இங்குதான் மானுடம் உபரி உற்பத்தி என்ற நிலையை எட்டியது. இந்த உற்பத்தியே மக்களை பண்டமாற்று வாணிபத்திற்கு வழிவகுத்தது. வாணிபத்தின் மூலம் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிய மருத நில மக்களுக்கு சுயபாதுகாப்பிற்காக தலைமை என்பது அத்தியாவசிய தேவையாகி யது. உபரி உற்பத்தியின் துவக்கமே அரசு உருவாக்கத்தின் புள்ளி என்ற கோட்பாட் டின் அடுத்தப்படி நிலையே அரசன், படைபலம், பாதுகாப்பு, கோட்டை, கொத்தளங்கள் போன்றவை உருவாக காரணமாக அமைந்தது. இவ்வாறு பகைவர்களிடமிருந்து மக்க ளைக் காப்பாற்ற பெரும் மதிற்சுவர்கள் அரசர்களால் கட்டப்பட்டன. கோட்டை என்ற பாதுகாப்பு அரணுக்குள் நகரங்களும், ஊர்களும் கொண்டுவரப்பட்டன. மேலும் கோட் டைக்குள்ளும், எல்லைப் புறங்களிலும் மக்களின் பாதுகாபிற்காக 'படைகள்' தங்க வைக்கப்பட்டிருந்தன. இவை படைப்பற்று, படைவீடு என அழைக்கப்பட்டது. இவ்வ லிமை மிக்க கோட்டையின் பராமரிப்பு செலவிற்காக மக்களிடமிருந்து "கோட்டைப் பணம்" என்ற வரி வசூலிக்கப்பட்டது. பிற்காலத்தில் கோட்டை என்பது போரின் முக் கிய கருவியாக்கப்பட்டது. ஆட்சித் தலைவன் தனது பாதுகாப்பிற்காக உருவாக்கப் பட்ட மிகப்பெரிய தற்காப்பு எந்திரவியல் கோட்பாடே கோட்டைகளாகும். அது மேம் போக்காகப் பார்பதற்கு உண்ணவும், உறங்கவும் பாதுகாவலர்கள் நிறைந்த அரண்ம னையாகத் தோன்றினாலும் அவற்றுள் பெறும் இரகசியங்களும் சூழ்ச்சி வினைஞர் களும், படைக்கலக் கருவிகள் பதுக்கி வைப்பதற்கான பாசறையாகவும் விளங்கியிருக் கிறது.

கோட்டையின் அரண்கள்

 கோட்டைகளின் வலிமையை தீர்மானிக்கும் காரணியாக விளங்குபவை அரண்களா கும். இவை மதிலரண், நிலவரண், நீரரண், காட்டரண், மலையரண் என ஐவகைப்ப டும். இதனையே ‘’மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’’, என வள்ளுவம் சுட்டுகிறது. மதிலரண் என்பது கோட்டையின் பிரதான உறுப் பாகும். மதில், எயில், இஞ்சி, சோ என நான்கு வகைப்படும். இம்மதிலில் திருமகள் நிலை பெற்று வெற்றியைத் ஈட்டித்தருவாள் என்பது நம்பிக்கை. இந்த மதிலரண்கள் மலை போல் உயர்ந்து வானைமுட்டும் வரை உயர்ந்திருந்ததை’’திருநிலை இய பெரு மன் னெயில்’’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. ‘’ கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யாவனர்க்கு அயிராது புக்கு’’ என சிலம்பும், ‘’ செம்பு புனைந்தி யற்றிய சேணெடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு’’ அதாவது செம்பையு ருக்கி சாந்தாக வார்த்து கருங்கல்லாற் கட்டின மதில் என கோட்டையின் பிரதான உறுப்பாகிய மதிற்சுவரின் வலிமையை புறநானூறு சுட்டுகிறது. மதில்கள் அகழியால் சூழப்பட்டிருந்தது. அகழி சூழ்ந்த இடம் கிடங்கில் எனப்பட்டது. இரை தேடி உலாவும் வளைந்த கால்களையுடைய முதலைகள் நிரம்ப அகழிகள் இருந்ததாக மலைபடுக டாம் சுட்டுகிறது. மேலும் இம்மதில்கள் அகமதில், புறமதில் என இரண்டு நிலைகளை கொண்டிருந்ததாக பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. நெடுநாட்பட அடைமதிற்பட்ட காலத் தில் விளைத்துக் கோடற்கு மதிற்புறத்து மருத நிலம், குளம் உளவாகச் சமைத்து வைக்கப்பட்டிருந்ததையும் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. மதில் புறத்தே இயற் கையாகவோ, செயற்கையாகவோ அமையப்பட்ட நீரரண் இருந்துள்ளது.         

கோட்டையின் முக்கிய உறுப்புகள்

 வீர மறவர்களாக விளங்கிய பண்டைய தமிழர்கள் சிறந்த கோட்டைகளை உருவாக் குவதில் கைத்தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஒரு கோட்டையின் வலிமையை தீர் மாணிப்பது கட்டடக்கலை நுட்பம்மட்டுமன்று அதன் பிற உறுப்புகளும் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழர்கள் கோட்டை என்பது நிலவியளை தீர்மா னிக்கின்றன பஞ்சபூதங்களின் வரையறைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டினை முழுமையாகப் பின்பற்றி தங்களது கொட்டைகளை உரு வாக்கியுள்ளனர். இத்துறையில் சங்கத் தமிழர்கள் அதிநுட்ப பொறிஞர்களாக விளங் கிதை சங்க இலக்கியப் பதிவுகள் விரிவாக சுட்டுகின்றன.

‘’ மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்

கருவிரலூகமும் கல்லுமிழ் கவணும்

பரிவுறு வெந்நெயும் பாகடு குநிசியும்

காய்பொன்னுலையும் கல்லிடு கூடையும்

தூண்டிலும் தொடக்கும் ஆண்டலையடுப்பும்

கவையும் கழுவும் புதையும் புழையும்

ஐயவித்துலாமும் கைபெயருசியும்

சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்

எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்

கோலும் குந்தமும் வேலும் பிறவும்’’... (சிலம்பு 207-217) என்ற பாடல்வரிகளின் மூலம் மதுரை மாநகரில் அமைக்கப்பட்டிருந்த கோட்டை வடிவமைப்பின் சிறப்புகளையும், பிற பாதுகாப்பு கட்டமைப்புகளைப் பற்றி உணரமுடிகிறது. மேலும்... ‘’மாற்றவர் மறப் படை மலைந்துமதில் பற்றின்

நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந்

தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங்

கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா’’.

‘’விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள்

கற்பொறிகள் பாவையனம் மாடமடு செந்தீக்

கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய்கூகை

நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே’’.

 செம்புருகு வெங்களிகளுமிழ் வதிரிந் தெங்கும்

வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ

வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித்

தம்புலங்களால் யவனர் தாட்படுத்த பொறியே’’.

‘’கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங்

குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்

பரந்தபசும் பொற்கொடிப தாகையொடு கொழிக்குந்

திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே’’. என்று சீவகசிந்தாமணியும் சங்க காலத்தில் கோட்டையின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கருவி கள் பற்றி நாம் விரிவாகக் குறிப்பிடுகிறது.

பாதுகாப்பு உறுப்புகளின் பொருள் விளக்கம்

  மேற்கண்டப் பாடல்களில் சுட்டப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்புகளின் பொருள் விளக்கங்களைப் பற்றி காண்போம்.             

·         ஆண்டலையடுப்பு :  ஆந்தையின் தலையை போன்ற பாத்திரம், இதில்தான் இரும்பு, செம்பு, எண்ணெய் போன்றவை காய்ச்சப்படும்.

·         காய்பொன்உலை : காச்சிய இரும்பு குழம்பு, செப்பு குழம்பு,

·         பாகடு குழிசி     : சூடான தேன் கொண்ட பாத்திரம்.

·         காடி : மிகப்பெரிய அடுப்பு

·         பரிவுறு வெந்நெய் : சூடேற்றப்பட்ட எண்ணெய் கொண்ட பாத்திரம்.

·         விதப்பு : இதிலிருந்துதான் எதிரி மீது எண்ணெய் போன்றவை ஊற்றப்படும்

·         கவண் : தொடர்ந்து கற்களை எதிரிகள் மீது வீசுவதற்கான கருவி

·         கல்லிடுகூடை : எதிரிகள் மீது வீசுவதற்கு கோட்டை மதில் மீது வைக்கப்படிருக்கும் எறிகற்கள் கொண்ட கூடை.

·         உலக்கல் : எதிரிகள் மீது வீசுவதற்காக வைக்கப்பட்ட உருண்டு திரண்ட பெரிய கல்

·         தூண்டில் : இதன் மூலம் அகழியினுள் உள்ள எந்த பொருளையும் இலகுவாக தூக்கி வீசி விடலாம்.

·         தொடக்கு/நூக்கியெறிபொறி  : இதன் நுனியில் உள்ள சுருக்கின் மூலம் எதிரியின் கழுத்தினுட் செருகி அவனை பிடித்து தூக்கி கொன்று வீசிவிடலாம்.

·         கவை/ நெருக்குமர நிலை : மதில் மீது ஏறுவோரை மறித்துத் தள்ளும் ஆயுதம். மிக நீண்ட கைப்பிடி இருக்கும்.

·         புதை : அம்புக்கட்டு

·         ஏவறை/ சூட்டிஞ்சி : சிறுசிறு துளைப் பொந்துகள் போலிருக்கும் இவற்றிலி ருந்து எதிரியை நோக்கி அம்பு எய்யப்படும்.

·         ஆரல்/குருவித்தலை : மதிற்சுவரின் மேல் மறைப்பு.

·         ஞாயில்/ஞாஞ்சில்/ஏப்புழை : கோட்டை சுவரில் உள்ள இரு குருவித்தலைக ளுக்கு இடையிலான பகுதி. இங்கிருந்து எதிரி மீது தாக்குதல் தொடுப்பார்.

·         கைப்பெயர் ஊசி : கோட்டை சுவர் மீது ஏறுபவர்களை குத்தி கிழித்து விடும் கருவி.

·         சென்யெறி சிரல்/கையம்பு : கையால் எறியும் ஆயுதம்.

·         எழுவுஞ் சீப்பு : கோட்டை வாயிலின் கதவு இலகுவாக இடித்து உடைக்க இய லாது.

·         ஐயவித்துலாம் : கீழே இறக்கப்பட்டால் இக்கதவு மேலே எழும். மேலேதூக்கப் பட்டால் கீழே இறங்கும்.

·         கவர்தடி : இருபக்கமும் கூரான எறி ஆயுதம்.

·         கழு/கழுக்கோல்/யானைத்தடை : கோட்டைக்கு முன்னாள் எதிரிப்படைகளின் யானைகளை தடுக்கும் வண்ணம் மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கூர் முனை தடுப்புகள்.

·         எந்திரவில்/வளைவிற்பொறி/வேலுமிழ்ப் பொறி/ அம்புமிழ்ப்பொறி : இப் பொறியில் இருந்து தொடர்ந்து கூர் ஆயுதங்களை எதிரிகள் மீது வீசப்படும்.

·         குடப்பாம்பும்/கதநாகம் : எதிரிகள் மீது எறிய குடத்தினுள் வைக்கப்பட்டிருக் கும் பாம்புகள்.

·         பாவைகள் : உணமையான வீரர்கள் போன்று செய்யப்பட்ட பொம்மை வீரர்.

·         செய்கொள்ளி : பழுக்க காய்ச்சப்பட்ட செந்தீயான இரும்பு ஆயுதம்.

·         சுறட்டுக்கோல்/தொரட்டி : எதிரியை இழுத்து வீழ்த்தும் கோல்.

·         கோண்மா : புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகள் கோட்டைசுவரை தாக்கும் எதிரியை வீழ்த்த பயன்படுத்தப்பட்டன.

·         கூர்ந்தரிநுண்ணூல் : எதிரிகளின் உடல்களை அறுக்கும் நூல்

·         அடிப்பனை : கோட்டை சுவர் மீது ஏறும் எதிரி வீரர்களை உருட்டி கீழே தள்ள பயன்படுத்திய பனைமரங்கள்.

·         விடுசகடம் : உருட்டி விடப்படும் தீச்சக்கரம்.

·         முட்செடி : இரும்பால் செய்யப்பட்ட முர்செடிகள் கோட்டை மீது படரவிடப் பட்டிருக்கும்.

·         நச்சுக்கொடிகள் : தொட்டால் உடலை வருத்தக்கூடிய வலியினை தரும் விஷச்செடிகள். கோட்டை சுவர் மீது விளைவிக்கப்பட்டிருக்கும்.

·         உக்கடம் : எதிரிகளை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட கோபுரம்.

·         கரும்பொன்னியல் பன்றி : காட்டுப் பன்றிகள். இவை எழுப்பும் சத்தத்தைக் கேட்டு யானைகள் சினம்கொள்ளும்.

·         தோற்றமுறு பேய்களிறு : கூர்முனை ஆயுத்தாலான அங்கியை கொண்ட யானைகள்.

·         நூற்றுவரைக் கொல்லி : அம்பு மழையை எதிரி மீது பொழியவைக்கும் கருவி.

·         துற்றுபெறும் பாம்பு : மலைப்பாம்புகள்.

கடலூர் மாவட்ட கோட்டைகள்

 கடலூர் மாவட்டத்தில் பழைய கற்காலம்தொட்டு மானுடம் வாழ்ந்துவருகிறது. இம் மாவட்டத்தில் 63 இடங்கள் கோட்டைமேடு என்றபெயரில் அழைக்கப்படுவதை கள ஆய்வுவில் கண்டறியப்பட்டுள்ளது. சங்ககால வேந்தன் அவியன் வாழ்ந்த ஊர் அவிய னூராகும். இது தற்போது பண்ருட்டி வட்டத்தில் உள்ளது. இங்கு நடத்தப்பட்ட கள ஆய்வு கருப்பு-சிவப்பு, செங்காவிப்பூசப்பட்ட சிவப்பு நிற பானையோடுகள், வழுவழுப் பான கருப்பு நிறப்பானையோடுகள், 8X24X42 செ.மீ அளவுள்ள செங்கற்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1x2, 2X5 அடி அள வுள்ள செவ்வக வடிவ கருங்கற் துண்டுகள் இங்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை அவியனின் கோட்டைச் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட வைகளாக இருக்கலாம். எனவே சுமார் 2000 ஆண்டு களுக்கு முன் பழமையான கோட்டை அவியனூரில் இருந்துள்ளதாக கொள்ளலாம். மேலும் கண்டரக்கோட்டை, பத்தரக்கோட்டை, போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட கள ஆய்வில் சங்ககாலத்தை சார்ந்த தொல்சான்றுகள் கிடைத்துள்ளன. சேமக்கோட்டை பகுதியில் இடைக்காலத்தை சார்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியில் இரண்டாம் குலோத்துங்கசோழன்(கி.பி.1136-1150) காலத்தில் மோகன் ஆட்கொல்லி என்பவன் கோட்டை அமைத்து சிற்றரசனாக ஆள தலைப்பட்ட போது குலோத்துங்கன் இவனை அடக்கி அங்கு விஜயாபிஷேகம் செய்துகொண்டான். இங்குள்ள சிவன் கோயில் பக்கத்தில் கோட்டை இருந்து குலோத்துங்கனால் அழிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இக்கோட்டையின் வடபகுதியில் கெடிலநதியும், கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதிகள் கேப்பர்மலையும் சூழ்ந்து மலை, நீரரன் மிக்க கோட்டையாக இருந்துள்ளதை உணரமுடிகிறது.

  திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாகடத்தை தலைநகராகக்கொண்டு மெய்கண்ட முனிவரின் தந்தையான அச்சுத களப்பாளரும் அவருக்குப்பின் மெய்கண்டரும் சிற்ற ரசராக இருந்து ஆட்சிசெய்துள்ளனர். கிழக்கே கிளிமங்கலம், மேற்கே போத்தி மங்க லம், வடக்கே நந்திமங்கலம், தெற்கே சேந்தமங்கலம் வரை இவரின் ஆட்சிப் பகு தியாக இருந்துள்ளது. களப்பாளர் மேடு என்ற பெயருடைய பகுதி பெண்ணாகடம் ஊர் அருகே உள்ளது. இப்பண்பாட்டு மேடானது சுமார் 50 ஏக்கர் பரப்பளவினைக் கொண் டது. இங்கு களப்பாளரின் அரண்மனை கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்பண் பாட்டுப்பகுதியில் 4X16X24, ட வடிவ கூரை ஓடுகள், பானை ஓடுகள், கட்டடத்தின் கட் டுமானப்பகுதிகள், கருப்பு, ஊதா நிற கண்ணாடிமணிகளும் கிடைத்துள்ளன.

  பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையின் தெற்கே கெடில நதியின் தென்பகுதியில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பண்பாட்டுப்பகுதி ஒன்று உள்ளது. இதனை குறும்பன் கோட்டை என அழைக்கின்றனர். இங்கு 7X21X42, 6X12X22 செ.மீ அளவுள்ள செங்கற்கள், கூரை ஓடுகள், மட்பாண்டங்கள், 2X2 அளவுள்ள கருங்கற் பலகைகள் போன்றவை கிடைத்துள்ளன. மேலும் பல்லவர் காலத்தை சார்ந்த சிவலிங்கம் ஒன்றும், சோழர் காலத்தை சார்ந்த சண்டிகேஸ்வரர், சிவன், துர்க்கை சிலைகளும் இங்கு காணப்படு கின்றன. இங்கு குறும்ப அரசன் ஒருவன் கோட்டை அமைத்து ஆட்சிசெய்ததாக திரு வதிகை சரநாராயணப்பெருமாள் கோயில் தலபுராணம் கூறுகிறது. இதுதவிர விருத்தா சலம், திருவதிகை சிவன் கோயில், சிதம்பரம் நடராஜர்கோயில் போன்றவை பிற்கா லத்தில் கோட்டைகளாக பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆங்கிலேயர்கள் வருகையால் கடலூரில் சென்டேவிட் கோட்டை கட்டப்பட்டது. இக்கோட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றுப் பின்புலத்தை கொண்டிருப்பது ஆய்விற்குறிய ஒன்றாகும்.         

தேவிக்கோட்டை

 தீவுக்கோட்டை, தீவுப்பட்டினம் என்று வழங்கப்படும் தேவிக்கோட்டை கொள்ளிடம் ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. கடற்கரையின் அருகில் அமைந்துள்ள தேவிக்கோட்டை பற்றி அப்பகுதி மக்கள் பல கர்ணப்பரம்பரை கதை களை கூறுகின்றனர். இக்கோட்டையை தஞ்சையை ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவனால் கட்டப்பட்டு தனது மகளுக்கு சீதனமாக கொடுக்கப்பட்டதால் அதற்கு தேவிக்கோட்டை என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்தி ஒன்று கூறப்படுகிறது. இதை மையமாக வைத்து நாவலாசிரியர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜப்பே ரிகை என்னும் வரலாற்றுப் புதினத்தில் இத்தீவுக்கோட்டை சோழமன்னன் ஒருவ னால் கட்டப்பட்டு தன் மகளுக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார்.     

அமைவிடம்

 நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில்(E:11.37.2317,N:79.80.6319)தேவிக்கோட்டை அமைந் துள்ளது. சிதம்பரத்தில் இருந்து 16 கி.மீ தூரத்தில் கொடியம்பாளையம் கிராமத்தின் அருகே கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் தேவிக்கோட்டை உள்ளது. சுமார் 200 ஏக் கர் பரப்பளவை கொண்ட சமவெளியில் 100 ஏக்கர் பரப்பளவில் கோட்டை கொத்தளத் தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் தெற்குப்பகுதிக்கு அரணாக அகன்ற கொள்ளிடம் ஆறு உள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெட்டப் பட்ட மிகப்பெரிய கால்வாய் ஒன்று கோட்டையின் மேற்கு பகுதியிலிருந்து தொடங்கி நேர்வடக்கே சென்று மீண்டும் கிழக்குபகுதி வழியாக கொண்டுவரப்பட்டு  கொள்ளி டம் ஆற்றில் சேர்க்கப்பட்டுள்ளது. இது கோட்டையின் அகழிப்பகுதியாக இருந்துள் ளது. கோட்டையை மையமாக வைத்து நாற்புறமும் மிகப்பெரிய அகழியுடன் கூடிய நீரரண் இருந்துள்ளதை காணமுடிகிறது.      

புவிசார் அமைப்பு

தேவிக்கோட்டை பகுதியானது கொள்ளிடம் ஆறு கடலுடன் கலக்கும் கழிமுகப்பகு தியில் இயற்கையாக அமையப்பட்ட மிகப்பெரிய மணற்குன்றின் (SAND DUNES) மீது கட்டப்பட்டதாகும். இந்த புவிசார் அமைப்பினை எக்கர் என சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. இக்கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவினைக்கொண்ட இப்பகுதியை சுற்றி நான்கு புறமும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் சில வரலாற்று ஆவணங்கள் இதனை தீவுக் கோட்டை என குறிப்பிடுகின்றன. மாங்குரோ என்கிற தில்லைமரக் காடுகளால் சூழப் பட்ட இந்நிலப்பகுதியின், கோட்டைப் பகுதியை விடுத்த மற்றப் பகுதிகள் சதுப்பு நிலப் பகுதியாகும். இந்த சதுப்புநிலப் பகுதியானது இக்கோட்டையின் மேற்கு, வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுமார் 7X15X4 கி.மீ தூரத்திற்கு பரவியுள்ளதால் நிலமார்க்கமாக எதிரிகள் இக்கோட்டையை அடைவது மிகக்கடினமானதாகும். இந்த சதுப்பு நிலப்பகு தியும் அதில் அடர்த்தியாக வளர்ந்துள்ள மாங்குரோ என்ற சிற்றின மரங்களும் கோட்டையின் முக்கிய புவிசார் அரணாக இருப்பது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.   

களஆய்வு

  கடந்த 2013-14-15-16 ஆகிய நான்காண்டுகளில் தேவிக்கோட்டை பகுதியில் நடத்தப் பட்ட களஆய்வில் கி.பி.11 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை யிலான காலக்கட்டத்தை சார்ந்த தொல்சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் இக்கோட்டையின் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இருந்துள்ளன. மேலும் கோட்டையின் உட்பகுதியில் நிரந்தர குடிநீர் தேவைக்காக கட் டுமான கிணறுகள், சுடுமண் உறைகிணறு, குளம் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.

தொல்லியல் சான்றுகள்

 கோட்டையின் உட்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்பட்ட களஆய்வில் மட்கலஓடுகள், ட வடிவ கூரை ஓடுகளின் உடைந்த பாகங்கள், செங்கற்கள், பீங்கான் துண்டுகள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடிமணிகள், முதலாம் இராசராசன் வெளியிட்ட செப்பு நாணயம், கட்டடங்களின் தரைதளப் பகுதிகள், கோட்டை சுவரின் தரைதளம், இரண்டு கல்வெட்டுகள், பீரங்கிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கல்குண் டுகள் போன்ற தொல்சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்ன. கோட்டையின் தெற்குப்பகுதி யில் கொள்ளிடம் ஆற்றின் அருகே கிழக்கு மேற்காக நடத்தப்பட்ட ஆய்வில் ‘’ட’’ வடிவ கூரை ஓடுக ளின் சிதைந்த துண்டுகள், சிவப்பு நிற பானையோடுகள், முதலாம் இராசராச சோழன் வெளியிட்ட செப்பு நாணயம், கட்டடப்பகுதிகள் போன்றவை கண்டறியப்பட்டன. மேலும் கொள்ளிடம் ஆற்றின் வடகரையிலிருந்து 40 அடி தூரத்தில் ஆற்றின் உட்பகு தியில் நான்கடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவறொன்று கிழக்கு மேற்காக செல் கிறது. இது தரை தளத்தில் இருந்து ஐந்து அடி உயரம் கொண்டது. இதற்கு பயன் படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் 4X16X24, 24X15X5 செ.மீ அளவுள்ளவை. இக்கட்டடப்பகுதி யின் அமைவியலை பார்க்கும் பொழுது மரக்கலன்களை நிறுத்துவ தற்காகப் பயன் படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் இக்கரை பகுதியில் இதே அளவுள்ள செங்கற்துண்டு கள், பச்சை நிற கண்ணாடிமணிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கிடைத் துள்ள தொல்சான்றுகள் கி.பி.10–13 நூற்றாண்டை சார்ந்ததாகக் கொள்ளலாம்.

  முதலாம் இராஜேந்திரன் தமது தலைநகரை தஞ்சையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றிய பிறகு தமது கப்பற்படை தளமாக தேவிக்கோட்டையை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. கழிமுகப்பகுதியில் தேவிக்கோட்டை அமைந் துள்ளதால் கடலில் இருந்து மரக்கலன்களை தடையின்றி நிலைநிறுத்துவதற்கும், நிலைநிறுத்தப்பட்ட கலன்களை கடல்நோக்கி செலுத்துவதற்கும் ஏற்ற இடமாக இது விளங்கியிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியானது கடற்நீரோட்டமிக்க பகு தியாகும் எனவே கடலோடிகளுக்கு இப்பகுதி உகந்ததாக இருப்பதால் சோழமன்னர் கள் தேவிக்கோட்டையை கப்பற்தளமாக பயன்படுத்தியிருக்கலாம். மேலும் இங்கி ருந்து 45 கி.மீ கொள்ளிடம் ஆற்றில் பயணித்தால் கங்கைகொண்டசோழபுரத்தை அடையலாம்.

   கோட்டையின் தென்பகுதியில் குடியிருப்புகள் இருந்துள்ளன இங்கு நான்கடி அக லத்தில் செங்கற்சுவர், செங்கற்களால்பாவப்பட்ட தரை தளப்பகுதிகள் காணப்படுகின் றன. இக்கட்டடப் பகுதியில் சேகரிக்கப்பட்ட செங்கற்கள் 4X16X24, 5X13X21செ.மீ அள வுள்ளவை. இவை கி.பி. 11-16 ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். மேலும் இப் பகுதியில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டை சார்ந்த பூவேலைப்பாடுகள் மிக்க பீங்கான் துண்டுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. கோட்டையின் தென்பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரும் பொழுது பீரங்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 120 கல்குண்டுகள் வெளிப்பட் டன. இதில் 79 குண்டுகள் ஒரு கிலோ எடையும், 12 குண்டுகள் நான்கு கிலோ எடை யையும், 29 குண்டுகள் இரண்டு கிலோ எடையையும் கொண்டவைகளாகும். மேலும் கோட்டையின் மேற்கு, கிழக்கு, தெற்குப் பகுதிக ளில் சிதையுற்ற நிலையில் கல் குண்டுகளின் பாகங்கள் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் நடைபெற்ற பீரங்கி தாக்குதலின் சுவடுகளாக கருதலாம்.

கல்வெட்டுக்கள்

 தேவிக்கோட்டையின் உட்பகுதியில் உள்ள காளி அம்மன் கோயிலில் துண்டு கல் வெட்டொன்று உள்ளது. இதில் ‘’ஒருமா நிலம், நஞ்சைக் குழி, நானாழிக்கு கொடுத் தது’’. என்ற தகவளை காணமுடிகிறது. மேலும் இக்கோயிலின் வடக்குப்பகுதியில் மற்றொரு கல்வெட்டுள்ளது. அதில் ‘’னார்செய்த, நெறியுடை, ச்சோழகோன், திருத் தோப்பு’’ என்ற செய்தி மட்டும் உள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள மகேந்திரப்பள்ளி சிவன் கோயிலில் இருந்த சில மண்டபங்கள் பிரித்து வந்து தேவிக்கோட்டையின் உட்பகுதியில் கட்டப்பட்ட மண்டபங்களுக்கு பயன்படுத்தப்பட் டுள்ளதை களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இக்கல்வெட்டுக்கள் அக்கோ யிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம்.

கோட்டையின் வரலாற்றுப் பின்புலம்

  இங்கு கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வசித்துவந்தனர். கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கை சமாளிக்க முடியாத அம்மக்கள் பாதுகாப்புக்கருதி பிற வூர்களில் குடிபெயர்ந்துவிட்டனர். இம்மக்களில் சிலர் தங்களின் முன்னோர்கள் இக் கோட்டையில் பணியாற்றியவர்கள் என கூறுகின்றனர். மேலும் கி.பி.1695 – ல் தஞ்சை மராட்டிய மன்னன் சகசியின் ஆட்சிகாலத்தில் இக்கோட்டை பகுதியில் குடியானவர் கள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. காளிக்கோயிலின் அருகே 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளிக்கட்டடம் ஒன்று நல்ல நிலையில் உள்ளது.

சோழகனாரும் தேவிக்கோட்டையும்

 தஞ்சையை இரகுநாதநாயக்கர் ஆட்சிசெய்த பொழுது (கி.பி.1600-1645) தீவுக்கோட் டையை தலைமையிடமாகக் கொண்டு சோழகன் என்பவர் ஆண்டுள்ளார். இவர் செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்பநாயக்கருக்கு கட்டுப்பட்ட சிற்றரசராவார். இவர் கட லூர் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போர்த்துகீசியர்களிடம் நட்பு டன் இருந்தார். போர்த்துக்கீசிய ஜேசு சபையைச் சேர்ந்த பாதிரியார் பிமெண்டா என் பவர் தமது குறிப்புகளில் சோழகனார் பற்றி பெருமையாகச் சுட்டுகிறார். கி.பி.1597 ஆம் ஆண்டு கிருஷ்ணப்பரின் அரசவைக்கு சென்ற பிமெண்டா செஞ்சி அரசருக்கு கட் டுப்பட்ட சிற்றரசாக தேவிக்கோட்டை சோழகனையும், வேலூர் லிங்கமநாயக்கரையும் குறிப்பிடுகிறார். தாம் செஞ்சியில் தங்கியிருந்த பொழுது சோழகனின் பதினான்கு வய துமகன், அமைச்சர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோறுடன் வந்திருந்து கிருஷ்ணப்ப நாயக் கரை சந்தித்ததாக பகர்கிறார். மேலும் கிருஷ்ணப்பரின் பெயரை தனது பெயருக்குப் பின் (SUFIX) சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும் தங்க நாற்காலி, கொஞ் சம் நிலமும் (Several Of Land) வழங்குமாரு சோழகனின் மகன் கிருஷ்ணப்பரிடம் கேட் டதாக தமது ஆவணத்தில் கூறுகிறார். விடைபெற்றுச் சென்ற இளம் சோழகனை பாதுகாப்பாக தேவிக்கோட்டையில் சேர்க்குமாறு தமது படை வீரர்களுக்கு செஞ்சி மன்னர் உத்தரவிட்டதாக பிமெண்டா தமது குறிப்பில் எழுதியுள்ளார்.

  பாதிரியார் டூஜெரிக்(DuJarric) என்பவர் எழுதிய கடிதங்களில் தேவிக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு செஞ்சி ராஜ்ஜியத்தின் தென்கிழக்குப் பகுதியான சிதம் பரம், புவனகிரி பகுதிகளை சோழகன் ஆட்சி செய்தார் என்பதை அறியமுடிகிறது. சோழகனிடமிருந்து கி.பி.1615 ஆம் ஆண்டு தேவிக்கோட்டையை காப்பாற்றிய இரகு நாதர் புவனகிரிப் போரில் சோழகனுக்கு துணைநின்ற செஞ்சி மன்னன் கிருஷ்ணப்ப ரையும் தோற்கடித்தான். புவனகிரி கோட்டையையும் தஞ்சை வசமானது. தேவிக் கோட்டை சோழகனைப் பற்றி ராமபத்ராம்பா என்ற பெண்பாற் புலவர் எழுதிய ரகு நாதயுதயம் என்ற நூளில் இரகுநாத நாயக்கர் தன்னுடைய அமைச்சர்களிடம் இடப் பட்ட கட்டளைகளில் ஒன்று தீவுக்கோட்டை சோழகனை நிர்மூலமாக்குவது. இதற் காக பெரும்படையுடன் காவிரி ஆற்றின் கரை வழியே கும்பகோணம் வந்தடைந் தான். பிறகு கடலோரத்தில் இருக்கும் சோழகனின் கோட்டையை தாக்குவதற்காக கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ள மகேந்திரப்பள்ளியில் முகாமிட்டான். கொள்ளி டம் ஆற்றின் தென்கரையில் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டு தேவிக்கோட்டையின் தென்பகுதியை தாக்கினான். யானைகளின் உதவியால் கொள்ளிடம் ஆற்றை கடந்த தஞ்சைப்படைகள் கோட்டையை முற்றுகையிட்டன. கோட்டையின் அகழியில் வளர் கப்பட்டிருந்த முதலைகளிடமிருந்து தப்பிப் பதற்காக நீண்ட ஏணிகளைப் பயன்படுத்தி அகழியை கடந்த படைவீரர்கள் கோட்டையைத் தாக்கினர். சோழகனின் படைகள் கோட்டைக்குள் இருந்து நெருப்பு, கற்களை கொண்டு தாக்கி தஞ்சை படைக்கு பெறும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால் கோபமுற்ற தஞ்சைப்படையினர் கோட்டைச்சுவரை பீரங்கிகளால் தாக்கி சிதைத்தனர். கோட்டையினுள் சென்ற வீரர்களால் சோழகன் தோற்கடிக்கப்பட்டான். போர்களத்தில் தப்பிக்க முயன்ற சோழகன் கைதுசெய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அவ்விலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தேவிக்கோட்டை சோழகனைப் பற்றிக் கூறும் மற்றொரு நூல் சாகித்தியரத்னகாரம். இது இரகுநாத நாயக்கரின் அவைக்களப் புலவர்களில் ஒருவரான யக்ஞநாராயண தீட் சிதரால் எழுதப்பட்டதாகும்.இந்நூலில் இரகுநாதர் கோவிந்த தீட்சிதரிடம் தனது நாட்டு நிர்வாகத்தை ஒப்டைத்து விட்டு, தனது காலாட்படை, குதிரைப்படை, யானைப் படை களுடன் தனது தலைநகரிலிருந்து தேவிக்கோட்டை நோக்கி புறப்பட்டதை கூறுகி றார். கவசமணிந்த யானைகள் மீது இரும்பு அம்பாரிகள் கட்டப்படிருந்தன. குதிரை கள் மீது அமர்ந்திருந்த வீரர்கள் நீண்ட தலைப் பாகை அணிந்திருந்தனர். அவர்களது கைகளில் வில்லும், அம்பும் இருந்தன. அணிவகுப்பில் ஒட்டகப்படை, முகமதிய வீரர் கள், யவனர்கள் குழு போன்றவைகள் படையில் இருந்ததாக இவ்விலக்கியம் கூறுகி றது. மேலும் படைவீரர்கள் வில், அம்பு, வாள், நலிகாயுதம், அனல்வர்த்தி(துப்பாக்கி யாக இருக்கலாம்)போன்ற ஆயுதங்களுடன் இருந்ததாகவும், இரகுநாதர் கவசமணிந்து வெள்ளை யானையில் புறப்பட்ட குறிப்பினை காணமுடிகிறது. தீவுக் கோட்டையை முற்றுகையிட்ட தஞ்சைப்படை அக்நியந்திரங்களால் தாக்கி கோட்டையை கைப்பற்றி யதுடன் சோழகனையும் அவனது குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைத் ததை சாகித்தியரத்னகாரம் சுட்டுகிறது.

   மேலும் இரகுநாத நாயக்கனின் அரசவைக்கு வந்த பிராமணர்கள் சோழகன் வழிப் போக்கர்களுக்கும், பெண்களுக்கும் தொந்தரவு செய்ததாகவும். தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு காய்ச்சிய ஈயத்தைக் கொடுத்து குடிக்கச்செய்தான் என்றும். கைதிகளின் உடலில் கூறிய ஊசிகளைச் செலுத்தி சித்திரவதை செய்தும், அகழியில் வளர்க்கப் பட்ட முதலைகளுக்கு அவர்களை உணவாக்கியதாக ராமபத்ராம்பா பாடியுள்ளார். இராவணனுக்கு பத்து தலை சோழகனுக்கு ஒரு தலை இதைத் தவிர இராவணனுக் கும் சோழகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், புகழ்பெற்ற வீரர்களான விட்டலா போன்றவர்கள் கூட சோழகனை வெள்ளமுடியவில்லை. மேலும் இவன் பைரவரை வழிபட்டு வந்ததாகவும் ரகுநாதப்யுதயத்தில் சுட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சை இரகுநாதநாயக்கரின் அவைக்களப் புலவர்கள் விசுவாசம் மிக்க தமது மன் னரின் மேலான்மையை ஏற்காத பிற நாட்டவரை கொடுங்கோலனாக உவமையாக்கிப் பாடியுள்ளதை இயல்பான ஒன்றாகவே கருதவேண்டும். காரணம் சோழகன் செஞ்சி நாயக்க மன்னர்க்கு கட்டுப்பட்ட அரசன். இவன் தஞ்சை அரசனுக்கு கீழ்படியும் அவசி யமில்லை. கொள்ளிடம் ஆற்றின் தென்பகுதி தஞ்சை மன்னனின் ஆதிக்கத்திற்கு உட் பட்டப்பகுதி. எனவே எல்லை புறத்தில் இருந்த மக்களுக்கு இவன் கொடுங்கோலனாக தெரிந்திருக்கலாம். தஞ்சை நாயக்கர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு மராட்டியர்களின் வச மானது தஞ்சையின் நிர்வாகம். அதே காலக்கட்டத்தில் தேவிக்கோட்டையும் மராட்டி யர்களின் வசமாயிற்று.

ஆகிலேயர்களின் கீழ் தேவிக்கோட்டை                                                       

   எலிகு ஏல் என்ற ஆங்கிலேயர் செஞ்சி மன்னன் ராமராஜரிடம் சிறிதளவு நிலத்தை விலைக்கு வாங்கினார். அங்கு கி.பி. 1683 ஆம் ஆண்டு புனித டேவிட்கோட்டையை கட்டினார். ஆங்கிலேய பேரரசிற்கு அடித்தளமிட்ட இராபர்ட் கிளைவ் இங்கு தான் தமது வாழ்வை தொடங்கினார். கி.பி. 1757 வரை கிளைவ் கடலூரில் தங்கியிருந்தார். கடலூர் தேவனாம் பட்டினம் புனிதடேவிட்கோட்டையையும், கடலூர் பழையநகர் பகு தியில் உள்ள பேக்டரி ஹவுசும் முக்கிய இராணுவ மற்றும் வர்த்தகக் கேந்திரமாக கிளைவ் உருவாகினார். இந்த புனிதடேவிட்கோட்டைதான் தமிழகத்தின் முதல் தலை நகரமாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் உருவாக்கியிருந்தனர். கடலூருக்கு வந்த இராபர்ட்கிளைவ் கார்டன் ஹவுஸ் என்ற கட்டடத்தில் தங்கியிருந்தார்.

தேவிக்கோட்டை முற்றுகை

   தஞ்சை மராட்டிய மன்னன் சாயாஜிக்கும், பிரதாப் சிங்கிற்கும் இடையே அரிய ணைப் போட்டி நடைபெற்றது. இச்சூழளில் சாயாஜி தமக்கு தஞ்சை அரியணையை மீட்டு கொடுத்தால் டேவிட்கோட்டைக்கு அருகே உள்ள தேவிக்கோட்டையை பிரிட் டிஷாருக்கு தருவதாக கூறினார். ஒப்புக்கொண்ட பிரிட்டிஷ் தளபதி ஜேம்ஸ்கோப் என்பவரின் தலைமையில் 430 ஐரோப்பிய வீரர்களும், 1000 நாட்டுப்படை வீரர்களை யும் கொண்டு தேவிக்கோட்டையை தாக்க முற்பட்டார். ஆனால் போதிய தளவாடங் கள் இல்லாததால் முற்றுகையை விட்டு கடலூர் திரும்பினார். அதன் பிறகு மேஜர் ஸ்டிரிங்கர் லாரன்ஸ் தலைமையில் படை அனுப்பப்பட்டது. இப்படை தேவிக்கோட் டையை முற்றுகையிட்டு கடுமையாக தாக்கியது. ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் படை கள் நிலைகுலைந்துபோனது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமது நம்பிக்கைக் குறிய சில வீரர்களோடு கோட்டையின் மையப்பகுதிக்கே சென்று தீரத்துடன் போர் செய்து கோட்டையை தமது முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான் இராபர்ட் கிளைவ். இந்த தீரர் செயல் தான் இராபர்ட் கிளைவ்விற்கு மேஜர் ஜெனரல் பதவியை பெற்றுத்தர காரணமாக அமைந்தது. ஆங்கிலேயரிடமிருந்து பிரான்ஸ் நாட்டுத் தளபதி லாலி கி.பி.1758 ஆம் ஆண்டு தேவிக்கோட்டையைக் கைப்பற்றி அழித்தார். கி.பி. 1760 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மீண்டும் தேவிக்கோட்டையை கைப்பற்றி தங்களது பொழுது போக்கு மையமாக வைத்திருந்தனர். ஆனால் கொள்ளிடம் ஆற்று வெள்ளத் தால் அடிக்கடி பாதிக்கப்பட்டு கோட்டை கொத்தலங்கள் முற்றிலும் அழிவுற்றதாக ஆங்கிலேயர்களின் குறிப்புகள் மூலம் அறியமுடிகிறது.

தேவிக்கோட்டை பற்றிய குறிப்புகள்

 தேவிக்கோட்டையை பற்றி ஆங்கிலேயர்களின் குறிப்புகள் ‘’ கொடியம்பாளையம் பகு தியில் தேவிக்கோட்டை தீவு உள்ளது அத்தீவில் உள்ள கோட்டை ஒரு மைல் சுற்ற ளவு கொண்டதாகும். சமமற்ற ஆறு பக்கங்களுடன் நான்கு திசைகளிளும் பீரங்கி மேடையுடன் கோட்டை காணப்பட்டது. பதினெட்டு அடி உயரம் கொண்ட கோட்டை சுவர் முழுவதும் லேட்ரைட் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்காரால் எழுதப்பட்டு 1921 ஆம் ஆண்டு வெளியான South India And Her Muhammadan Invaders என்ற நூளில் தேவிக்கோட் டையைப் பற்றி புதிய தகவல்கள் உள்ளன. முகமதியர்களால் ஜாலக்கோட்டை என்று அழைக்கப்பட்ட பகுதியே இத்தீவுக்கோட்டையாகும். ஜாலக்கோட்டை என்றால் ஆழ மான நீர்ப்பகுதியால் சூழப்பட்ட தீவில் அமைந்த கோட்டையாகும். மேலும் அமீர் குஸ்ரூவின் குறிப்புகளை ஆராய்ந்த ஐயங்கார் மாலிக்காபூரின் படைகள் தமிழகத்தில் நுழைந்தபோது வீரபாண்டியன் தேவிக்கோட்டையில் அடைக்கலம் புகுந்ததாக சுட்டுகி றார்.   

முடிவுரை

 சங்க இலக்கியத்தில் எயில் என்ற சொல்லாடல் கோட்டையை குறிக்கும் பொதுச் சொல்லாக பயன்படுத்தப்பட்டது. அகழி, மதில், நுழைவாயில் அதையடுத்கு நகரம், வீதிகள், அங்காடிகள், படைச்சேரி, அரண்மனைவளாகம் போன்றவற்றை உள்ளடக் கியதே எயிலாகும். தற்காலத்தில் பயன்படுத்தப்படும் கோட்டை என்ற சொல் விஜ யநகர காலத்திலிருந்து புழக்கத்திற்கு வந்ததாகும். மேலும் கோட்டை என்பது பண் ணெடுங்காலமாக நாட்டின் தலைநகரில் மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தது. இதன் கட்டுமானங்கள் அனைத்தும் நிலவியல் சாஸ்திர இலக்கண சட்டத்திற்குட்பட்டதா கவே இருந்தது. பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த வேள்குடிகள் தங்களின் விளை நிலங்களையும், ஆநிரைகளையும் எதிரிகளிடமிருந்து காக்கும்பொருட்டு தம் வாழ் விடத்தைச் சுற்றி வலிமையான வேலிகளை அமைத்திருந்தனர். இந்த வேளிகளே பின்னாளில் ‘’கடிமதிலாக’’ மாற்றமுற்றது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோட்டையின் பின்புலத்தை ஆராயப்படும் பொழுது அதன் கட்டுமான நுட்பங்க ளோடு அங்கு வாழ்ந்த மன்னர்களின் பன்முக வரலாற்றினை அறிந்துகொள்வது எளிதாகும். இந்தடிப்படையை முன்னொக்காகக் கொண்டு தேவிக்கோட்டையைப் பற்றி திரட்டப்பட்ட சான்றுகளைக் கொண்டு அதன் வரலாற்றுப் பின்புலத்தினை ஓரளவு வெளிப்படுத்த முடிகிறது. எதிர்காலத்தில் இங்கு விரிவான நீரடி மற்றும் நிலஅகழாய்வுகள் மேற்கொண்டால்தான் தேவிக்கோட்டையின் முழுமையான வரலாற்றினை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.   

நோக்கு நூல் பட்டியல்

1.       Imperial Gazetter Of India Volume – 11

2.       Sokkottai Krishnasamy Aiyanagr, South India And Her Muhammadan Invaders.

3.       G.S.Srinivasachari, History Of Gingee.

4.       Sokkottai Krishnasamy Aiyanagr, Sources Of Vijayanagar History.

5.       M.S.Naravane, The Maritime And Costal Forts Of India.

6.       John Holland Rose, The Cambridge History Of British Empire Vol- vi

7.       The British Diary Of Anandarangam Pillai- 1736-1761.

8.       tHE British Conquest And Domination Of India Penderel Moon.

9.       Dupleix And Clive, Henry Dodwell.

10.   V.Vriddhagirisan, The Nayaks Of Tanjore.

11.   புலவர் செ.ராசு, தஞ்சை மராட்டியர் செபேடுகள்.

12.   சி.எஸ்.முருகேசன், தென்னிந்தியக் கோட்டைகள்.















 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு