வரலாற்றில் தர்மநல்லூர்

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன்

 உதவிப்பேராசிரியர்                                                                          

 வரலாற்றுத்துறை                                                                            

 குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி

 தஞ்சாவூர்                               

                                  


                       

                       வரலாற்றில் தர்மநல்லூர்

முன்னுரை

   ஐந்திணைகளின் துவக்கமே ஊராக்கதின் திறவுகோல் எனலாம். ஊர் என்ற சொல் சங்ககாலத்தில் வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தில் உழவுத் தொழிலை முதன்மை தொழிலாகக் கொண்ட வேளான்குடி மக்கள் வாழ்ந்த இடத்தை சுட்டும் சொல்லாக பயன்படுத்தப்பட்டது. குறிஞ்சித் திணையில் ஏற்பட்ட உற்பத்தி குறைபாடுகளை சரி செய்யும் பொருட்டு மனிதன் முல்லை நிலத்திற்கு பயணித்திருக்க வேண்டும். இங்கு பரந்துபட்ட நிலப்பரப்பும், அதன் மூலம் பாதுகாப்பான உணவு உற்பத்தியும் நடை பெற் றது. ஆனால் நிறந்ததர நீர்மேலாண்மை என்ற அலகு அங்கு பற்றாக்குறையாக இருந் தது. இதை சரிசெய்யும் பொருட்டு மானுடம் அடுத்தக்கட்ட நகர்வாக மருதநிலத் திற்குள் சங்கமித்தது. ‘’உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே’’ என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப மருத நிலப்பகுதியில் உணவு உற்பத்தியை தீர்மானிக்கும் அனைத்து அலகுக ளும் சாதகமாக இருந்தது. எனவேதான் இந்நிலப்பரப்பில் வாழ்ந்த மனிதன் உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டினான். இங்கு மானுடத்திற்கு கிடைத்த உபரி உற் பத்தி பண்டமாற்று வர்த்தகத்திற்கு வித்திட்டது. இந்த உபரி உற்பத்தியின் அடுத்தக் கட்ட நகர்வில் ஊர்களின் உருவாக்கம் இருந்தது. இங்குதான் அதிகாரகட்டமைப்புகள் தோற்றம் பெற்றன. இது அரசு உருவாக்கத்திற்கு வித்திட்டது. அதனால்தான் பழமை வாய்ந்த ஊர்களில் வேளான்குடிகளால் நிரம்பப்பட்டிருப்பதை இன்றும் காணமுடி கிறது. இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த ஊர்களின் துவக்கம் பற்றிய ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்ளவது அவசியமான ஒன்றாகும். இந்த மையப் பொருளினை அடிப்படையாகக் கொண்டது தர்மநல்லூர் பற்றிய ஆய்வாகும்.    

அமைவிடம்

  கடலூர்மாவட்டம், விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் தர்மநல்லூர் (N:11.46.2541,E:79.48.7740) அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் பிரதான சாலையின் தெற்குப்பகுதியில் இவ்வூர் உள்ளது. 

நிலவியல் அமைப்பு

    தர்மநல்லூர் கிராமத்திலிருந்து தெற்கே சுமார் 3 கி.மீ தூரத்தில் வெள்ளாறு பாய்ந் தோடுகிறது. இக்கிராமம் வளமையான களிமண் பிரதேசமாகும். இங்கு மூன்றுபோகம் விவசாயம் நடைபெறுகிறது. நெல் பிரதான சாகுபடி பயிராகும். தர்மநல்லூர் கிராமத் தின் தெற்கே உள்ள பூலாஞ்சேரி பகுதியில் காணப்படும் சுமார் 20 அடி ஆழப்பள்ளத் தில் ஆற்று மணல் வெளிப்படுகிறது. இந்தப்பகுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புவிசார் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், இங்கு தொல் நீர்வழிப் பாதை யொன்று இருந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தொல் நீர் வழித்தடத்தின் போக்கை ஆய்வு செய்ததில் எறும்பூர் வழியாக பதினாறுகண்பாலம், எம்.ஆர்.கே. சர்க் கரை ஆலையின் வடபகுதி வரை சென்று மீண்டும் வெள்ளாற்றில் கலந்துள்ளதை அறியமுடிகிறது. இந்த வழித் தடம் காலவெள்ளத்தில் ஆக்கிரமிக்கபட்டுவிட்டதால் வெள்ளக் காலங்களில் தண்ணீர் இவ்வழியாக பயணித்து வெள்ளசேதங்களை ஏற்படுத் துவதை காணமுடிகிறது. இதன் மூலம் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளாற் றின் வழித்தடம் தர்மநல்லூரை ஒட்டி சென்றுள்ளதை உணரமுடிகிறது. இந்த வழித்த டத்தை ஒட்டியே பண்டையகால மக்களின் பண்பாட்டுத்தடங்கள் காணப்படுவது ஆய் விற்குரிய ஒன்றாகும்.

ஊராக்கத்தின் முக்கிய கூறுகள்

  பண்டைய தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட ஊர்கள் அனைத்தும் ஒருவரை யறைக்குள் கட்டமைக்கப்பட்டவைகளாகும். பொதுவாக ஊர்ப்பெயர்ச் சொற்களை முன்னொட்டு, கரு, பின்னொட்டு என்று மூன்றாகப் பிரித்து ஒரு ஊரின் தொன் மையை அறியலாம். குறிப்பாக தர்மநல்லூர்= தர்மம்+ நல்+ ஊர். இதில் முன்னொட்டு என்பது தர்மம் ஆகும். கரு என்பது  நல். பின்னொட்டு ஊராகும். பொதுவாக ஊர், குடி என்ற பின்னொட்டுக்கள் வெள்ளாளர் சமூகத்திர்க்கு உரிமையுடைய ஊரை குறிக்க வழங்கப்பட்டவைகாளாகும். மேலும் கோயிலுக்கு உரிமையுடைய நிலங்களைப் பெற்று விளங்கிய வெள்ளான் வகை ஊர்கள் நல்லூர் என்ற பின்னொட்டுக்களுடன் அழைக்கப்பட்டுள்ளன. நல்லூரின் நிர்வாகம் பெரும்பாலும் வெள்ளான்வகைச் சமூகத் தினரிடமே இருந்தது. அரசுக்குச் செலுத்தவேண்டிய அவ்வூரின் வரிகள் மட்டுமே கோயிலுக்குச் செலுத்தப்பட்டன. நல்லூர் என்ற பின்னொட்டு கி.பி. 10 ஆம் நூற் றாண்டிற்கு முன்னர் பிராமணர் குடியிருந்த ஊர்களையும் குறிப்பதாக விளங்கியுள் ளன. எனவே தர்மநல்லூரும் விவசாய பணி சார்ந்த வேளாண் குடியிருப்புக்களை உள்ளடக்கியது என்பதை பண்டையகால தமிழர்களின் ஊராக்க விதிகளின் மூலமாக உணரமுடிகிறது. எனவே தர்மநல்லூர் உருவாக்கம் முதல் இன்றுவரை இப்பகுதியில் வேளாண் உற்பத்தியே பிரதான தொழிலாக தொடர்வதை இன்றும் காணமுடிகிறது.   

ஊரக தொல்லியலின் முக்கியத்தும்

  தமிழகத்தில் நில அகழாய்வுகள் குறைந்த பரப்பளவிலேயே நடைபெற்றுள்ளன. அத னால்தான் பண்டைய தமிழ்ச் சமூகம் பற்றிய முழுச்சரித்திரமும் நமக்கு கிடைக்க வில்லை. பண்டையகால நகரங்கள் இருந்த இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்வ தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வெளிநாட்டவர் இதுபோன்ற காரணங்களுக் காக அப்பகுதிகளை கைவிடுவது இல்லை. நகரப்பகுதியில் கிடைக்கும் சொற்பப்பகுதி யானாலும் அவ்விடத்தில் அறிவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிகநுணுக் கமான அகழாய்வினை மேற்கொண்டு, அப்பகுதியில் நிலைப்பெற்றிருந்த பண்பாட்டுக் கூறுகளை வெளிக்கொண்டு வருகின்றனர். இதுதான் அந்நாட்டின் வரையருக்கப்பட்ட சரித்திரத்தை சரியான காலக்கணிப்பின் அடிப்படையில் வெளிவருவதற்கு காரணமாக உள்ளது. இதுபோன்ற ஆய்வுகட்டமைப்புகளில் இந்தியாவில் யாரும் இதுவரை கவ ணம் செலுத்தாது பெருங்குறையே.

     தமிழகத்தில் இராயிரம் ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற நகரங்களாக இருந்த மதுரை, உறையூர், காஞ்சி, புகார், கொற்கை, மாமல்லை, அரிக்கமேடு போன்ற இடங் களில் பெறும்பரப்பில் அகழாய்வுகள் நடத்தப்பட்டால் தான் அக்கால நகர கட்டுமான நுட்பங்கள், உள் மற்றும் அயலக வர்த்தகத்தின் எல்லைகள், நகரத்தில் நிலவியசமூக கட்டமைப்புகளின் முழு விவரங்கள் போன்றவற்றை நம்மால் அறியமுடியும். மேலும் இந்தியாவிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி ஊரகத்தொல்லியலில் (RURAL ARCHAEOLOGY) நாம் அதிக கவணம் செலுத்தாதது சரித்திரப் பிழையாக உள்ளது. இதை ஓரளவு ஈடு செய்யும் முயற்சியும் தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவருவது கூடுதல் சிறப்பா கும். இக்கருதுகோளை முன்னொக்காக கொண்டு தர்மநல்லூர் என்ற ஊரகப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் களஆய்வில் திரட்டப்பட்ட முழுதரவுகளைக் கொண்டு அப்பகுதியில் வாழ்ந்த தொல்குடிகளின் வரலாற்றினை ஓரளவு மீள் உரு வாக்கம் செய்யும் முயற்சியே இக்கட்டுரையாகும். 

களஆய்வு

   தர்மநல்லூர் அருகே எறும்பூர் என்ற ஊர் உள்ளது. இங்கு கடம்பவனேஷ்வரர் என்ற கோயிலை முதலாம் பராந்தகன் கட்டியுள்ளான். தர்மநல்லூரின் வடக்கே கங் கைகொண்டான், மும்முடி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. இப்பெயர்கள் முதலாம் இராஜேந்திரனின் விருதுபெயர்களாகும். அந்தடிப்படையில் தர்மநல்லூர் பகுதியில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 1997 ஆம் ஆண்டு முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை சார்ந்த பேராசிரியர் கா.ராஜன் என்பவரால், தர்மநல்லூர் கிரா மத்தில் உள்ள பூலாஞ்சேரியின் பெரியதோப்பு பகுதியில் இரும்பு காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மநல்லூர் கிராமத்தின் தெற்குப்பகு தியில் உள்ள பூலஞ்சேரி பெரியத்தோப்பு, பகுதியில் சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பண்பாட்டுப்பகுதி உள்ளது. மண்ணின் மேற்பரப்பில் முன் மற்றும் பின் இடைக்காலத்தை சார்ந்த தொல்பொருட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இப் பண்பாட்டுப் பகுதியில் களிமண் அதிகம் காணப்படுவதால் மக்கள் பொங்கல் காலங் களில் அம்மண்ணை வீட்டு உபயோகத்திற்காக வெட்டி எடுப்பதால் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருபது அடி ஆழப்பள்ளம் காணப்படுகிறது. இப்பள்ளத்தில் பெருங்கற் காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழிகளின் உடைந்த பாகங்கள், கருப்பு- சிவப்பு நிற பானையோடுகள் போன்றவை கடந்த 2007 – 2010- 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

முதுமக்கள் தாழிகள்

 சங்க கால மக்களின் வாழ்க்கையை உயர்நிலைக்கு இட்டுச்சென்றவர்கள் அவர்க ளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த பெருங்கற்படைக் காலத்தைச் சார்ந்த மக்களே என்றால் அதுமிகையன்று. தமிழர் பண்பாட்டின் முக்கிய கூறாக விளங்கிய இறந்தவர் களைப் புதைத்து அவர்களை வழிபடுகின்ற வழக்கம் பின்னாளில் பெருங்கற்படைச் சின்னங்களாக உருவாவதற்கு அடிகோலியதும் இம்மக்களே எனலாம். நீத்தோர் நினை வாகப் பெரிய கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் விந்திய மலைகளுக்குத் தெற்கே இந்திய தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன. பெருங்கற்களைக் கொண்டு நீத்தோர் நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டதன் கார ணத்தால் இது பெருங்கற்படைக்காலம் எனத் தொல்லியலார்கள் அழைக்கின்றனர். இப்பண்பாட்டுக்காலம் கி.மு.1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி. முதல் நூற் றாண்டு வரை நின்று நிலைத்திருந்தது. பொதுவாக பெருங்கற்படை சின்னங்கள் தமிழ கத்தில் குறிஞ்சி, முல்லை நிலம் சார்ந்த பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படுகி றது. ஆனால் மருத நிலப்பகுதியில் பெருங்கற்படை சின்னங்களாக முதுமக்கள் தாழி கள் காணப்படுகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளைக் குறிப்பிடலாம். தர்மநல்லூர் பகுதி வயலும் வயல் சார்ந்த மருதநிலப் பகுதியாகும். எனவே தான் இங்கு வாழ்ந்த மக்கள் இறந்தவர்களை தாழியில் வைத்து புதைத்துள்ளனர். மேலும் இப்புதைப்பு முறையினைப் பற்றி மணிமேகலை ‘’தாழியிற் கவிப்போர்’’ எனசுட்டுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.    

பெருங்கற் காலம்

  இக்காலத்தை பொதுவாக இரும்புகாலம் என்பர். இரும்பின் பயனை மனிதன் முழு மையாக அறிந்தகாலம். இக்கால கட்டத்தில் வாழ்ந்த மனிதன் வேளாண்மை, கால் நடைவளர்த்தல் இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்தல் போன்றவற்றில் ஈடு பட்டான். எழுத்தறிவும் பெற்று விளங்கினான். தமிழகத்தில் இரும்புக்காலம் கி.மு. ஆயிரத்திலி ருந்து தொடங்குகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியதோப்புப் பகுதியில் சிதைந்த முதுமக்கள் தாழியின் உள்ளே 40 செ.மீ நீள இரும்பாலான குத்துவாள் ஒன்று காணப் பட்டது. மேலும் இங்கிருந்து தெற்கே இருபது அடி தூரத்தில் முற்றிலும் சிதைக்கப் பட்ட தாழி ஒன்றின் அருகே இரும்பு கருவிகளின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட் டன. இதன் மூலம் இப்பண்பாட்டுப்பகுதியில் வாழ்ந்த வரலாற்றுத் தொடக்க காலமக் கள் இரும்பின் பயன்பாட்டினை அறிந்திருந் தனர் என்பதை உணரமுடிகிறது. மேலும் இங்கு இரும்பு தயாரிப்புக் கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே இம்மக்கள் தங்களுக்கு தேவையான இரும்புக் கருவிகளை மாவட்டத்தின் பிறப்பகுதி மக்களிடமிருந்து பண்டமாற்று முறையில் வாங்கியிருக்கலாம்.  

தமிழ் எழுத்து கீறல்கள்

  கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியதோப்புப் பகுதியில் சிதைந்த முதுமக்கள் தாழி ஒன் றின் அருகே சேகரிக்கப்பட்ட கருப்பு - சிவப்பு நிற மட்கல ஓடுகளில் கீறல் குறியீடு கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு மட்கல ஓடுகளில் இருந்த குறியீடுகளில் ஐந்து மட்கலன்களில் பொறிக்கப்பட்டிருந்த குறீயிடுகள் ஒரே மாதிரியாகவும் மற் றொன்றில் வித்தியாசமான குறியீடுகளும் கீறப்பட்டிருந்தது. அபானையோட்டினை ஆய்வு செய்த மறைந்த தொல்லெழுத்து அறிஞர் பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் அது சிந்துசமவெளி குறியீடுகளோடு பொருந்துவதாக கூறினார். பிற குறி யீடுகள் இறந்தவர்களை புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெருங்கற்படை பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்துள்ள கீறல் குறியீடுகளோடு ஒத்துள்ளது. தமிழ கத்தில் கிடைக்கப்படும் இக்கீறல் குறியீடுகளில் இருந்தே தமிழ் மொழி வளர்ச்சி பெற் றதாக தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால்தான் தமிழகத்தில் கிடைத்துள்ள பெரும்பாலான குறியீடுகள் ஒத்தத்தன்மையோடு இருப்பதை காண முடிகிறது. தர்மநல்லூரில் கிடைத்துள்ள கீறல் குறியீடுகளைப் போன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள வடஹரிராஜபுரம், கொண்டாரெட்டிப்பாளையம், வடலூர், பாலக் கொல்லை, மருங்கூர், போன்ற பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இதே குறீயிடுகள் கொடுமணல், கீழடி, அழகன்குளம், அரிக்கமேடு போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்விலும் கிடைத்துள்ளன.

தமிழ் பிராமி எழுத்து

  தர்மநல்லூர் பூலாஞ்சேரி பெரியத்தோப்பின் தென்பகுதியில் காணப்படும் இருபது அடிபள்ளத்தில் கருப்பு - சிவப்பு நிறப் பானையோடுகள், செங்காவிபூசப்பட்ட ஓடுகள், வழுவழுப்பான கருப்பு நிற ஓடுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் உடைந்த கிண்ணம் ஒன்றின் விளிம்பு பகுதியின் கீழே எழுத்து கீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு எழுத்துக்கள் மிகத்தெளிவாக கீறப்பட்டிருந்தன. அவ்வெழுத்துகளை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ‘’ ய – ம – க – ன்‘’ என்று வாசித்துள்ளனர். இதற்கு தமிழ் அகராதிகள் கடைச்சன், கடைசிமகன், இளையமகன் என்று பொருள் விளக்கம் தரு கின்றன. இருப்பினும் இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயராகும். மேலும் எழுத் துக்கள் தொடங்குமிடம் உடைந்துள்ளதால் அதன் முழுப்பெயரையும் அறியமுடிய வில்லை. கீறப்பட்டுள்ள எழுத்துக்களின் அமைப்பை பார்க்கும் போது இதன் காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டாகும். மேலும் தமிழ் மொழியானது முதலில் குறியீடுகளாக எழுதப்பட்டு பின்பு தமிழ் எழுத்துருக்களாக வளர்ச்சி பெற்றதாகும். அந்த அடிப்படை யில் தர்மநல்லூர் பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள் முதலில் தமிழை குறி யீடுகளாகவும் பின் வளர்ச்சிபெற்ற வரிவடிவத்துடன் எழுதியுள்ளதை கிடைக்கப்பட்ட சான்றுகளின் ஊடாக அறியமுடிகிறது. எனவே இங்கு வாழ்ந்த தொல்தமிழ்குடியினர் கல்வி மேம்பாட்டுடன் வாழ்ந்துள்ளனர் எனலாம்.     

சுடுமண் பொம்மை

  தமிழ் எழுத்து பொறிப்பு கிடைத்த பகுதியின் மேற்கு பகுதியில் சிதைந்த முதுமக் கள் தாழிகள் கிடைக்கப்பட்ட பகுதியிலிருந்து மேற்கே நூறு அடி தூரத்தில் சுமார் இருபது அடி ஆழ பள்ளத்தில் கருப்பு-சிவப்பு நிற பானை ஓடுகள் அதிகம் காணப்படு கின்றன. இப்பகுதிலிருந்து சுடுமண் பொம்மையின் தலையும், உடலும் உடைந்த நிலையில் கிடைத்தது. நன்கு சுடப்பட்ட இவ்வுருவத்தின் தலைமுடி வரிவரியாக காட்டப்பட்டுள்ளது. காதில் மார்பு வரை தொங்கும் நீண்ட மெல்லிய காதணிகளை அணிந்துள்ளது. கழுத்தில் மெல்லிய ஆரம் காணப்படுகிறது. முகம் நீள்வட்ட வடிவில் காட்சிய ளிக்கிறது. வளைந்த புருவம், நீள் வட்ட வடிவ கண்கள், தட்டையான மூக்கு, தடித்த உதடுகள், எடுப்பான தாடை போன்றவை இவ்வுருவத்திற்கு அழகு சேர்கின் றன. இந்த சுடுமண் உருவத்தின் கலைத்தன்மையை பார்க்கும் பொழுது இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டை சார்ந்ததாகும் என தொல்லியியல் அறிஞர் பேராசிரியர் பா.சண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருகையின் பாகம்

 பெரியதோப்பின் கிழக்குப் பகுதியில் இரும்புகால பண்பாட்டைச் சார்ந்த பானை யோடுகளுடன் உடைந்த திருகை எந்திரத்தின் சுழலும் மேல் பாகம் கிடைத்தது. வெள்ளை நிற வலிமை மிகுந்த மணற்கல்லினால் உருவகப்பட்ட தாகும். வட்டநடுவில் 5 செ.மீ விட்டதில் தானியங்களை இடுவதற்கானதுளை உள் ளது. திருகையின் விளிம்பு பகுதியில் விரலின் உதவியால் தானியங்களை அரைக் கும் பொழுது சூழற்றுவதற்காக துளைகள் இடப்பட்டுள்ளன.  

வண்ண மணிகள்

   மேலும் இதே பகுதியில் கருப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், ஊதா, பச்சை, பழுப்பு நிறங்களை கொண்ட வண்ண கல்மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் உள்நாட் டில் தயாரிக்கப்பட்ட இக்கல்மணிகள் கி.பி. முதல் நூற்றாண்டை சார்ந்ததாகும். இது போன்ற வண்ண கல்மணிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கொல்லை, சிலம் பிமங் கலம், பெரியப்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், ஆன்னப்பன்பேட்டை, திருச்சோபு ரம், தியாகவல்லி, குடிகாடு போன்ற ஊர்களில் கிடைத்துள்ளனன. மேலும் இம்மாவட் டத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள குடிகாடு சங்ககாலத்தில் வண்ணமணிகள் தயாரிக் கும் தொழிற்சாலையாக இருந்துள்ளதை அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள் ளது. கடலூர் மாவட்டத்தில் தயாரிக் கப்பட்ட கல் மற்றும் கண்ணாடி மணிகள் ரோம், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, அரேபிய போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதே பகுதியில் 8x24x42 செ.மீ அளவுள்ள செங்கற்கள் வெளிப்பட்டிருந்தன. இதே அளவுள்ள செங்கற்கள் உறையூர், கொற்கை, கொடுமணல், அழகன்குளம், கீழடி, அரிக்கமேடு போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பட்டுள் ளன.

பிற பகுதியுடனான தொடர்புகள்

 இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அணிந்திருந்த மணிவகைகள் மாவட்டத்தின் பிறப் பகுதிகளில் தயாரிக்கப்பட்டவைகளாகும். மேலும் வெளிர் சாம்பல் நிறம் கொண்ட ரௌலட்டட் வகை மட்கல ஓடுகள் களஆய்வில் கண்டறியப்பட்டன. இவ்வகை மட் கலனின் பயன்பாடு இப்பகுதியில் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால் இங்கு ரௌலட் டட் வகை மட்கலன்கள் தயாரிக்கப்பட்ட வில்லை. மாறாக இவ்வகை மட்கலன்கள் ரோமானியர்களோடு தொடர்புடையவை என்று அறிஞர்கள் கூறினாலும், ஒரு சில தொல்லியல் ஆய்வாளர்கள் இவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்ற கூற் றினை முன்வைக்கிறார்கள். தர்மநல்லூரில் வாழ்ந்த மக்கள் இவ்வகை மட்பாண்டங் களையும் இரும்பு கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். இச்சான்றுகள் மூலம் தர்மநல்லூர் பகுதியில் வாழ்ந்த வரலாற்றுத் தொடக்ககால மக் கள் மாவட்டத்தின் பிறப்பகுதி மக்களுடன் உள் நாட்டுவர்த்தக தொடர்பில் இருந்துள் ளனர் என்பதை உணரமுடிகிறது.

இடைக்கால பண்பாடு

   பூலாஞ்சேரி பெரியத்தோப்பு பகுதியில் சுமார் இருபது அடி ஆழத்தில் பெருங்கற் காலம் மற்றும் சங்ககாலத்தை சார்ந்த தொல்பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் மீதமுள்ள மூன்று ஏக்கர் பரப்பளவினைக் கொண்ட இதே பண்பாட்டுமேட்டின் மேற் பகுதியில் பின் இடைக்கால மக்கள் பயன்படுத்திய மட்கல ஓடுகள் கிடைகின்றன. ஆனால் வடக்கு, மேற்குப் பகுதியில் மண் எடுக்கப்பட்ட நான்கடி ஆழ பள்ளத்தில் முன் இடைக்காலத்தை சார்ந்த சுடுமண் உறைகேணிகள், சிவப்பு நிற பனையோடுகள், தானியங்களை சேமிக்க பயன்படுத்தப்பட்ட சொர சொரப்பான தடித்த சிவப்புநிற பனையோடுகள், வீடுகளில் இருந்து கழிவுநீர்களை வெளியேற்றப் பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்களின் உடைந்த பாகம், சிறுமிகள் விளையாடப் பயன்படுத்திய வட்டச்சில்லுகள், மட்பாண்டங்களை மூடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூடிகளின் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் வடபகுதியில் காணப்படும் ஐந்தடி ஆழ பள்ளமொன்றில் 4X12X24 செ. மீ நீளமும் கொண்ட செங்கற்களை கொண்டு கட்டப் பட்டகட்டடப் பகுதியொன்று வெளிப்பட்டிருந்தது.

சுடுமண் உறைகிணறுகள்

   பெரியத்தோப்பின் வடக்கு, மேற்குப்பகுதியில் மண் அள்ளப்பட்ட சுமார் நான்கடி ஆழ பள்ளத்தில் இடைக்காலத்தை சார்ந்த சுடுமண் உறைகிணறுகள் நான்கு இடங் களில் கண்டுபிடிக்கப்பட்டன. களிமண்ணால் செய்யப்பட்ட வட்ட வடிவிலான உறை களைக் கொண்டு இக்கிணறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வுறைகள் ஒவ்வொன் றும் ஒரு அடி உயரமும், நான்கு அடி அகலமும் கொண்டவை. ஒவ்வொரு கிணற் றிலும் இரண்டு முதல் ஆறு உறைகள் வெளிப்பட்டிருந்தன. இக்கிணறுகள் ஒவ்வொன் றும் சராசரியாக 10 மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற உறை கிணறுகள் சங்ககால மக்களிடத்தே புழக்கத்தில் இருந்ததை ‘’உறைக் கிணற்றுப் புறச் சேரி‘’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. மேலும் சுடுமண் உறைகிணறு ஒன்றின் அருகே 30 செ.மீ நீளம் கொண்ட சுடுமண் குழாய் ஒன்றின் உடைந்த பாகம் கிடைத் துள்ளது. இதன் மூலம் இப்பண்பாட்டுப் பகுதியில் வாழ்ந்த இடைக்கால மக்கள் தங் கள் வீடுகளிலிருந்து கழிவுநீர்களை வெளியேற்ற சுடுமண்குழைகளைப் பயன்படுத்தி யுள்ளனர். சங்ககாலத்தில் கழிவுநீர்களை வெளியேற்ற இதுபோன்ற சுடுமண் குழாய் கள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படிருந்ததை ‘’நெடுமால் சுருங்கை நடு வழிப் போந்து’’ என பரிபாடல் சுட்டுகிறது. அதனாலதான் கீழடி, திருக்கோயிலூர், உறையூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் சுடுமண் குழாய்களின் இணைப்பு கள் கண்டறியப்பட்டுள்ளன.     

பண்பாட்டின் காலவரையறை

  தர்மநல்லூரில் பெருங்கற்கால மக்களை தொடர்ந்து சங்ககால மக்களும், அதனை தொடர்ந்து முன் மற்றும் பின் இடைகால மக்களும் வாழ்ந்துள்ளனர். பூலாஞ்சேரி பெரியத்தோப்பின் வடக்குப் பகுதியில் கி.பி. 1739 ஆம் ஆண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று உள்ளது. மேலும் பெரியத்தோப்பின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள பள்ள மான பகுதியில் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையி லான காலக்கட்டத்தைச் சார்ந்த முதுமக்கள்தாழி, கருப்பு-சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணமணிகள், சிந்துசமவெளி பகுதியில் கிடைத்த குறியீடுகளை ஒத்த குறியீடு கள் போன்றவை கிடைத்துள்ளன. இப்பண்பாட்டின் மேற்பகுதியில் கி.பி.10 ஆம் நூற் றாண்டு முதல் கி.பி.18 ஆம் நூற்றாண்டுவரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்த மக் களின் புழங்கு பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே கி.மு நான்காம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இங்கு மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ள னர் என்பதை இங்கு நடத்தப்பட்ட களஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. மேலும் இப்பண்பாடுப் பகுதியினை ஒட்டிய பகுதியில் சமகால மக்கள் வாழ்ந்து வருவது தர் மநல்லூர் கிராமத்தின் தோற்ற பழமையை உணர்த்துவதாக உள்ளது.

முடிவுரை

 அரசு என்ற அதிகார மையத்தின் தோற்றமென்பது தொல்குடிகளின் பரிணாமத்தோடு தொடர்புடையது. இதை சங்க இலக்கியத்தின் மூலம் உணரமுடிகிறது. மேலும் பண் டைய பாரதத்தில் கோலோச்சிய மகதம் மற்றும் அதை சுற்றியிருந்த பதினைந்து அர சுகளும் தொல்குடிகளில் இருந்து உருவானவைகளாகும். எனவேதான் இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் தொல்லியல்ரீதியான ஆய்வுகளை மேற்கொண்டு அவ் வூர்களின் முழுமையான வரலாற்றினை தொகுத்து வெளியிடப்படவேண்டும். அவ் வாறு வெளியிடப்படும் பட்டசத்தில்தான் இந்தியாவின் சரித்திரம் முழுமைபெற்றதாக இருக்கும். இந்நிலையை நாம் அடைய ஊரகதொல்லியலுக்கு அரசு அதிக முக்கியத்து வம் கொடுக்கவேண்டும். இக்கோட்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதே தர்மநல்லூர் களஆய்வாகும். இக்களஆய்வில் கிடைத்த தொல்தரவுகளைக் கொண்டு கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை தர்மநல்லூரில் வாழ்ந்த ஆதிமக்களின் வாழ்வியல் கூறுகளையும், பண்பாட்டின் வளர் படிநிலைகளை யும் ஓரளவு அறியமுடிகிறது.      

நோக்குநூற்பட்டியல்

1.       ர.பூங்குன்றான், தொல்குடி வேளிர் வேந்தர்.

2.       முனைவர் வெ.வேதாசலம், பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு.

3.       நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, கடலூர் மாவட்டத் தடயங்கள்.

4.       முனைவர் கா.ராஜன், தொல்லியல் நோக்கில் சங்ககாலம்.

5.       சு.இராசவேலு, கோ.திருமூர்த்தி, தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள்.

6.       ஜெ.ஸ்ரீசந்திரன், மணிமேகலை மூலமும் உறையும்..

7.       K.RAJAN, Archaeolgical Gaztter of Tmil Nadu.

8.       A.R.E.1906,NO : 176   








Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு