கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள்
பழமையான சுடுமண் உறை கிணறு
முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் ,
உதவிப்பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அரசு கலைக் கல்லூரி - ஆத்தூர் .
அரியலூர் மாவட்டம் உடையார்குடி வட்டம் கங்கை
கொண்ட சோழபுரத்தில் பாண்டியன் என்பவர் தமது நிலத்தை சீர் செய்யும் பொழுது திடீர் என
மேல்மண் உள் வாங்கியது. அப்பள்ளத்தில் வட்டவடி விலான உறைகள் காணப்பட்டன . உடனே
கங்கை கொண்ட சோழபுர அருங்காட்சிய காப்பாட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்
அடிப்படையில் காப்பாட்சியர் பிரபாகரன் , கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியக மேம்பாட்டு
குழு தலைவர் இரா. கோமகன் மற்றும் ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை
உதவிப்பேராசிரியர் ஜே.ஆர். சிவராமகிருஷ்ணன் ஆகியோர் அவ்விடத்திற்கு சென்று ஆய்வை
மேற்கொண்டனர்.
சுடுமண் உறைகிணறு
பள்ளம் ஏற்பட்ட இடத்தில்
தரைதளத்தில் இருந்து இரண்டடி ஆழத்தில் வட்ட வடிவிலான சுடுமண் உறைகள் காணப்பட்டன.
அவைகளை ஆய்வு செய்ததில் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய கால மக்கள் பயன்படுத்திய
சுடுமண் உறை கேணி என்பது உறுதிபடுத்தப்பட்டது. ஒவ்வொரு உறையும் 20 செ.மீ. உயரமும்
100 செ.மீ விட்டமும் கொண்டவைகளாகும். இந்த
சுடுமண் உறைகிணறானது 15 அடி ஆழம் கொண்டது.
எனவே சுமார் 22 உறைகள் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இக்கிணறு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில்
இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் நேர் வடகிழக்குப் பகுதியில் உள்ள
பண்பாட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
பானை ஓடுகள்
சுடுமண் உறை கிணறு அமைந்துள்ள இடத்தில் நடத்தப்பட்ட மேற்கள ஆய்வில் சுமார்
ஐந்து ஏக்கர் பரப்பளவில் சிவப்பு நிற மட்கல ஓடுகள் , கருப்பு நிறம் கொண்ட பானை
ஓடுகள் , தானியங்களை செமிக்கப் பயன்படுத்தப்பட்ட பெரிய அளவிலான மட்பாண்டங்களின்
உடைந்த பாகங்கள் , மட்பாண்டத்தின் விளிம்புப் பகுதியில் விரல் நகத்தினால்
செய்யப்பட்ட பூ வேலைப்பாடுகளுடன் கூடிய பானையோடுகளும் , வெளிறிய சாம்பல் நிற பனை
ஓடுகளும் மண்ணின் மேற்பரப்பில் இருந்து சேகரிக்கப்பட்டன.
இவைகள் அனைத்தும் கி.பி. 11 – 13 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். எனவே இங்கு
கிடைக்கப்பட்டுள்ள சுடுமண் உறை கிணறு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக
கருதலாம். இது போன்ற சுடுமண் உறை கிணறுகள்
சங்ககாலத்தில் பூம்புகார் நகரில் இருந்துள்ளதை ‘’ உறைக் கிணற்றுப் புறச்சேரி ‘’ என்று
பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. மேலும் கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேடு அகழாய்வில்
கிடைத்ததை போன்று இங்கும் சீன தேசத்தை சார்ந்த மட்கலன்களின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளன
என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .
கட்டடப்பகுதி
கிணறு கிடைக்கப்பட்டுள்ள பகுதியின் கிழக்குப்
பகுதியில் உடைந்த செங்கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை 4 x 12 x 24 செ. மீ அளவுள்ளவை. இந்த அளவுள்ள
செங்கற்கள் சோழர்களின் தலை நகரமாக விளங்கிய பழையாறை அகழாய்வில் கிடைந்துள்ளது. இதே
பகுதியில் உடைந்த ‘’ ட ‘’ வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் அதிகம் காணப்படுவதால் இங்கு
மிகப்பெரிய வாழ்விடப் மக்கள் பகுதி ஒன்று இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
மேலும் இங்கு பெண்கள் விளையாட பயன்படுத்திய வட்டவடிவ சில்லுகளின் உடைந்த
பாகங்களும் கிடைத்துள்ளன.
இராஜநகரம்
கங்கை
கொண்ட சோழபுரம் நகரை உருவாக்கி அங்கு தமது விருது பெயர்களில் ஒன்றான முடிகொண்ட
சோழன் என்ற பெயரில் முடிகொண்ட சோழன் திருமாளிகை என்ற மிகப்பெரிய அரண்மனையை
உருவாகினான். இச்செய்தியை கி.பி. 1031 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதலாம் இராஜேந்திர
சோழனின் தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது . கங்கைகொண்ட
சோழபுரம் கோயிலின் தென்மேற்குப் பகுதியில் நடைபெற்றுள்ள அகழாய்வில் சோழமன்னர்களின்
அரண்மனை பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கங்கைகொண்ட சோழபுரம் நகரில்
முடிகொண்ட சோழன் பெருந்தெரு , உத்தமசோழன் பெருந்தெரு , இராஜேந்திர சோழன் திரு வீதி
, அங்காடித்தெரு , இராஜரிச்சார பெருந்தெரு போன்ற பெருந்தெருக்கள் கொண்ட மிகப்பெரிய
ராஜநகரமாககும் . மேலும் இங்கு நடைபெற்றுள்ள கள ஆய்வின் மூலம் கங்கைகொண்ட சோழபுரம்
கோயிலின் தென்மேற்கு பகுதியில் மன்னர்களின் அரண்மனையும் , வடக்கு , கிழக்கு
பகுதிகளில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் இருந்திருக்கலாம் என சிவராமகிருஷ்ணன்
தெரிவித்தார்.
மதிற்பிற்குரிய ஐயா , நீங்கள் பகிர்ந்த செய்தி மிகவும் உண்மை. நான் பல வருடங்களுக்கு முன் குடியாத்தம் அருகில் உள்ள ஒரு கல்லூரி ஆசிரியரிடம் பேசியபோது அவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த போதிலும் திரு தி வை சதாசிவ பண்டாரத்தாரை அறிந்திருக்க வில்லை undefined நன்றி வெள்ளைவாரணன் சென்னை
ReplyDelete