வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்

       அறிந்துகொள்வோம் தினம் ஒரு வரலாறு
!

               ஜனவரி 2 - வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்

               
                                தமிழகத்தில் மாபெரும் வாசக ரசிகர்களை பெற்றுள்ள கல்கியின் பொன்னியின் செல்வன், குந்தவை நாச்சியார் என பல வராற்று புதின நூல்கள் வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சோழர்களின் வரலாற்றை கல்வெட்டுகளை ஆய்வு செய்து அதன்படி தொகுத்து எழுதியவர் வரலாற்று ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார்.
கும்பகோணம் அருகிலுள்ள திரும்பியபுரத்தில் வசித்த வைத்தியலிங்கம் மீனாட்சி தம்பதியரின் மகனாக 1892 ஆகஸ்ட் 15ந் தேதி பிறந்தார். பண்டாரம் என்கிற பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் தமது பெயரின் பின்னால் பண்டாரம் என்பதையும் சேர்த்துக்கொண்டார். தனது பெயருக்கு முன்னால் திரும்பியபுறம் என்கிற ஊர் பெயரையும், தந்தை பெயரையும் தலைப்பெழுத்தாக வைத்துக்கொண்டார். திரும்பியம்புறத்தில் திண்ணைப்பள்ளியில் தொடக்ககல்வியும், புளியஞ்சேரியில் நடுநிலைக்கல்வியும், உயர்நிலைக்கல்வியை கும்பகோணத்திலும் கற்றார்.
நற்றிணைக்கு உரை எழுதிய பிரபல தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி, பாலசுப்பிரமணியப்பிள்ளை ஆகியோரிடம் இலக்கண தமிழை, இலக்கிய தமிழை கற்றார்.
                         1910ல் கல்வியை முடித்திருந்தாலும் வேலை எதுவும் கிடைக் காமல் தமிழ் கற்றல் என வலம் வந்துக்கொண்டுயிருந்தார். 1914 ல் பண்டாரத்தார் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள குறுக்கை என்ற ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயரின் மகள் தையல்முத்து என்கிற பெண்ணை மணந்தார். திருமணம் நடந்த பின்னர் வாழ்க்கைக்கு ஒரு வேலை தேட வேண்டும் என்ற நிலை பண்டாரத்தார்க்கு ஏற்பட்டது. சிபாரிசு மூலும் பண்டாரத்தார் முதன் முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகததில் எழுத்தராக ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார்.
                                  அந்த பணி அவருக்கு சரி வராததால் கும்பகோணம் உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1917முதல் 1942-ஆம் ஆண்டு வரையில் 25 ஆண்டுகாலம் குடந்தையிலுள்ள வாணதுறை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் இவர் பணியாற்றினார்.  பண்டாரத்தார் குடந்தையில் பணியாற்றிக் கொண்டி ருக்கும்பொழுது 1921 ஆம் ஆண்டில் அவரது மனைவி காலமானார். இளம் வயதில் மனைவியை இழந்ததால் 1922ஆம் ஆண்டில் எலத்தூரில் வாழ்ந்த சைவப்பெரியார் சதாசிவக் குருக்கள் மகள் சின்னம்மாவை இரண்டாம் திருமணம் செய்து வைத்தனர் பெரியவர்கள்.
                  செந்தமிழ் என்கிற இதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். 1914ல் செந்தமிழில் எழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரையே இவரது முதல் கட்டுரையாகும். செந்தமிழ்ச்செல்வி என்கிற இதழிலும் கட்டுரைகள் எழுதினார். வசனி என்கிற இலக்கிய இதழின் துணை ஆசிரியராகவும் இருந்து வந்தார். 1930ல் முதலாம் குலோத்துங்க சோழன் என்கிற வரலாற்று புத்தகம் வெளியானது. 1940ல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவ்விரு நூல்களும் தமிழ்ப்பொழில் இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
                      1942 வரை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டில் சர். கே. வி. ரெட்டிநாயுடு என்பவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது அப்பல்கலைக் கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையானது விரிவுபடுத்தப்பட்டது. பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது அவர் பிற்கால சோழர்கள் வரலாற்றை தேடி, ஆய்வு செய்து எழுதும் பணியில் இருந்தார். இது நூலக்கப்படும்போது அண்ணாமலைப்பல்கலை கழகம் வெளியிடும் என அறிவித்தது அண்ணாமலை பல்கலைகழக நிர்வாகம். பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 1951 லும் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன.
            1955ல் அண்ணாமலை பல்கலைகழக பணியில் இருந்து நின்றுவிட்டார். ஆனால் இவரது பணி தேவையென மீண்டும் இவரை அழைத்துக் கொண் டார்கள். அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தபொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் எழுதப்பெற்று 1961 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. அறிஞரின் பிற்காலச் சோழர் வரலாறு தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல்நூல் என்ற சிறப்பிற்குரியதாகும். இந்நூல் வெளிவந்த பின்னர்தான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளைத் தமிழுலகம் அறியத் தொடங்கியது.
                           தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) ஆகிய நூல்கள் 1955 ஆம் ஆண்டு பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. நம்பகத் தன்மையோடு அறிஞர் பண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தாலேயே அவரது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன், போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களைப் படைத்தனர். பண்டாரத்தார் திருப்புறம்பயம் தல வரலாறு, செம்பியன் மாதேவி தலவரலாறு, காவிரிப்பூம்பட்டினம், திருக்கோவலூர் புராணம், தொல்காப்பியப் பாயிரவுரை ஆகிய பல நூல்களையும் எழுதியுள்ளார். இன்றளவும் கலைக்கல்லூரி வரலாற்று பிரிவு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இவை உள்ளன. அந்தளவுக்கு வரலாற்று கல்வெட்டு தகவல்களோடு மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார். பிற்காலகத்தில் இவரது நூல்களை தமிழகரசு நாட்டுடமையாக்கின.
                             பண்டாரத்தார் நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டார். தந்தைப் பெரியார் அவர்கள் கும்பகோணத்திற்கு வரும் போதுயெல்லாம் சந்திப்பார். இன்னும் நிறைய ஆய்வுகள் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். பெரியார் மீது பற்றுக்கொண்டுயிருந்தாலும் சிவபக்தி உடையவராகவும் பண்டாரத்தார் விளங்கினார். தமது பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமய நால்வருக்கும் ஆண்டு தோறும் குருபூசை நடத்தி வந்துள்ளார். 1953-ஆம் ஆண்டில் திருப்புறம்பயக் கோயில் குடமுழுக்கு நடந்தபொழுது பண்டாரத்தார் தமது சொந்தச் செலவில் சைவ சமயக் குரவர்கள் நல்வருக்கு மண்டபம் கட்டித் தந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
                   1959 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பண்டாரத்தார் நோய்வாய்ப்பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக இருந்தார். இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப்பணி செய்துவந்தார். 1960 ஜனவரி 2 ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்தார்.
-ராஜ்ப்ரியன்

நன்றி *நக்கீரன்*

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு