புவனகிரி அருகே உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில்
புவனகிரி அருகே உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் கல்வெட்டுக்கள் படியெடுக்கும் பணி
நடைபெற்றது.
பேராசிரியர் Drஜெ . ஆர் .சிவராமகிருஷ்ணன்
கடலூர்
மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நத்தம் கிராமத்தில் இருக்கும் வெங்கடேசப்
பெருமாள் கோயிலில் உள்ள பதிவு பெறாத 48 துண்டுக் கல்வெட்டுக்களை கங்கை கொண்ட
சோழபுர மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா.கோமகன் , அரியலூர் அரசு கலைக் கல்லூரியின்
முன்னாள் முதல்வர் பேராசிரியர் இல.தியாகராஜன் , ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை
பேராசிரியர் ஜெ.ஆர். சிவராம கிருஷ்ணன் மற்றும் அரியலூர் அரசு கலைக்கல்லூரி
வரலாற்றுத்துறை தலைவர் திரு. ரவி ஆகியோர் கொண்ட குழு இன்று காலை படியெடுக்கும்
பணியை துவங்கினார்.
வெங்கடேசப் பெருமாள் கோயில்
இக் கோயில் கி.பி. 16 – 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
கோயிலில் உள்ள தூண்கள் , அதிட்டனத்தின் உறுப்புகளான ஜகதி, முப்பட்டை குமுதம் ,
குடம், பலகை, உத்தரம், போன்ற பகுதிகளில் மூன்றாம் குலோத்துங்க சோழனின்
கலைப்பாணியின் தாக்கம் காணப்படுகிறது. மேலும் இக்கோயிலில் உள்ள முகமண்டபத்தில்
உள்ள தென்புற தூண் ஒன்றில் ‘’ பரதூர் அபராஜித விண்ணகர் ‘’ என்ற வரிகளைக் கொண்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. இதன் மூலம் பல்லவர்
காலத்தில் கட்டப்பட்ட பெருமாள் கோயிலொன்று புவனகிரி அருகே உள்ள பரதூரில்
இருந்துள்ளது . மேலும் இக்கோயிலைப் பற்றி கி.பி. 1178 – 1218 ஆண்டு சோழப் பேரரசின்
மன்னனாக விளங்கிய மூன்றாம் குலோத்துங்க சோழன் தாம் வெளியிட்ட கல்வெட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது ஆய்வுக்குரிய ஒன்றாகும். இதன் மூலம் பரதூரில் கட்டப்பட்ட
பெருமாள் கோயிலின் பாகங்களைக் கொண்டே புவனகிரி அருகே ஆதிவராகநத்தத்தில் உள்ள பெருமாள் கோயில் கட்டப்பட்டு இருக்கலாம்.
இராஜகோபுரக் கல்வெட்டுக்கள்
கோயிலின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள
இராஜகோபுரத்தில் கி.பி. 1012 ஆம் ஆண்டு முதலாம் இராஜேந்திரன் சோழன் காலத்தில்
வெளியிடப் பட்ட ஐந்து கல்வெட்டுக்கள் உள்ளன.
அதில் திரிபுவனமாதேவி ஈஸ்வரம் என்ற சிவன் கோயில் பற்றிய குறிப்பு கல்வெட்டு
ஒன்றில் உள்ளது. இதன் மூலம் முதலாம் இராஜேந்திர சோழன் தமது அன்னையான
திரிபுவனமாதேவி என்கின்ற வானவன் மாதேவிக்காக கோயில் ஒன்று கட்டியது பற்றி அறிய
முடிகிறது. மேலும் இக்கோயிலின் கருவறை பகுதியில் கி.பி. 15 -16 ஆம் நூற்றாண்டை
சேர்ந்த துண்டு கல்வெட்டு ஒன்றிலும் திரிபுவன மாதேவி ஈஸ்வரம் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ராஜகோபுரத்தில் காணப்படும் கல்வெட்டுக்கள் முதலாம்
இராஜேந்திர சோழன் தமது அன்னையின் நினைவாக கட்டிய சிவன் கோயிலில் இருந்து எடுத்து
வரப்பட்டு வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு இராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.
எனவே இப்பகுதியில் முதலாம் இராஜேந்திர சோழன் கி.பி. 1012 ஆம் ஆண்டு தனது
அன்னைக்காக கட்டிய சிவன் கோயில் இப்பகுதியில் எங்கு இருந்திருக்கும் என்பது பற்றிய
ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை
பேராசிரியர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment