திரிபுவன மாதேவி

இராஜேந்திர சோழனின் தாய்ப் பாசம் – திரிபுவன மாதேவி ஈஸ்வரம்

         முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன்
       
       




முதலாம் இராஜேந்திர சோழன் சோழ வரலாற்றில் ஒப்பற்ற மன்னனாக விளங்கியவன். கி.பி. 1012 ஆம் ஆண்டு இளவரசனாக முடிசூட்டப்பட்டான். பிறகு தமது தந்தை முதலாம் இராஜராஜ சோழன் இறந்தப் பிறகு கி.பி. 1014 ஆம் ஆண்டு சோழப் பேரரசின் மன்னனாக அரியணையேறினான். இராஜேந்திர சோழன் தமது ஆட்சி காலத்தில், கங்கை வரை படையெடுத்துச் சென்று அங்கிருந்த நாடுகளை எல்லாம் வென்று கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட  தண்ணீரால் தமது தலைநகரான  கொங்கைகொண்ட சோழபுரத்தை புனிதமாக்கியதோடு அல்லாமல் தலைநகரில் கங்கை படையெடுப்பின் நினைவாக ஜலஸ்தம்பம் நாட்டினான்.  
      அதாவது சோழகங்கம் என்ற ஏரியை நிர்மாணித்து அப்பகுதியை வளமாக்கினான். மேலும் தமது கப்பற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜாவா ,சுமத்திரா , இந்தோனேசிய, இலங்கை போன்ற தேசங்களை  தமது வர்த்தக மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனால் அந்நிய செலவாணியின் மூலம் சோழப்பேரரசு பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றது.  
     மேலும் போர் கலையில் தேர்ச்சியும், அரசியல் மற்றும் அறிவில் நல்ல முதிர்ச்சியும் , நற்பண்புகளில் உயர்ச்சியும் கொண்ட இராஜேந்திர சோழன் தன்னை ஈன்றெடுத்த ,தாய் , தந்தையர்க்கு மங்காத புகழினை பெற்றுத்தந்து சிறந்த மகனாக  விளங்கினான். இப்புகழ்பெற்ற முதலாம் இராஜேந்திர சோழனுக்கும் சிதம்பரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.

சிதம்பர மாளிகை

     கி.பி. 1014 ஆம் ஆண்டில் சோழப்பேரரசின் தனிப்பெரும் மன்னனாக முடிசூட்டப் பட்ட இராஜேந்திரன் தன்னாட்டின் தலைநகரினைத் தஞ்சையில் இருந்து மாற்ற திட்டமிட்டான். எனவே சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளதும். சோழமன்னர்களின் அரசக் குடும்பத்தினர்கள் வாழ்ந்து வந்த பழையாறை நகருக்கு அருகில் உள்ள இடமான கங்கைகொண்ட சோழபுரத்தைத் தேர்ந்தெடுத்து அந்நகரில் தனது தந்தையாரைப் போன்று மிகபெரிய சிவன்கோயிலை கட்டுவித்து சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அரச மாளிகை மற்றும் கோட்டைக் கொத்தளங்களை உருவாக்கி  கி.பி. 1022 ஆம் ஆண்டு முதல் புதிய தலைநகர் உருவாக்கப் பட்டது.
      மேலும் புதிய தலைநகர் உருவாக்கப் படும்வரை அதாவது கி.பி. 1014 முதல் கி.பி.1022 வரையிலான எட்டாண்டு காலம் இராஜேந்திர சோழன் சோழ மன்னர்களின் குலதெய்வமான நடராஜப்பெருமான் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து அந்நகரை சோழப்பேரரசின் தற்காலிக தலைநகராகக் கொண்டிருந்ததை ‘’ நமக்கு யாண்டு எட்டாவது நாள் நூற்றேழினால் நாம் பெரும்பற்றப் புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ பிரமாதி ராஜனின் நா முண்ணாது விருந்து’’. என்ற முதலாம் இராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேட்டின்  நான்காவது தகட்டின் உரைநடைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமது புதிய தலைநகரத்தில் நடைபெறுகின்ற வேலைகள் அனைத்தையும்  சிதம்பரதில் இருந்தேதான் இராஜேந்திர சோழன் கண்காணித்து வந்தான்.
        மேலும் கொள்ளிடம் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில்  அமைந்துள்ள தேவிக்கோட்டைப் பகுதி இராஜேந்திர சோழனின் கப்பல்படைத் தலமாக இருந்ததற்கான தடையங்களை ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் கடந்த ஆண்டு தேவிக்கோட்டையில் நடைபெற்ற கள ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் தமது கப்பற்படை வலிமையால் உலகில் உள்ள கடல் வணிகர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களின் பயமின்றி இந்துமாக்கடல், அரேபியக்கடல் , வங்கக்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளுடன் பயமின்றி வணிகம் செய்வதற்கு வழிவகுத்த ஒரே மன்னன் இராஜேந்திர சோழனாகத் தான் இருக்க முடியும். தமது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியதற்கு பலக் காரணங்கள் கூறப்பட்டலும், காப்பற் படை தளம் அமைப்பதற்கான தோதான இடம் இந்த தேவிக்கோட்டை என்பதால் தனது தலைநகர் மாற்றதிற்கான மூல காரணமாகக் கூட இருக்கலாம்.        

 வானவன் மாதேவி

        முதலாம் இராஜராஜ சோழனுக்கும் மலையமான் மன்னர் குடியை சார்ந்த வானவன் மாதேவிக்கும் மகனாக ஆடித்திருவாதிரை நன்னாளில் இராஜேந்திர சோழன் பிறந்தான். தனது தாயின் வளர்ப்பில் கல்வி அறிவையும் தந்தையிடம் வீரத்தையும் பெற்ற இராஜேந்திரன் பிற்காலத்தில் கடற்படையில் தேர்ந்தவனாக இருந்தமைக்கு மூலக் காரணமாக அமைந்தது.  மேலும் தந்தையைக் காட்டிலும் தன்னை ஈன்ற தாயிடம் அதிக அன்பு கொண்டிருந்தான். அதனால் தனது தாயார் இறந்த பிறகு அந்த இழப்பைத் தாங்க முடியாத இராஜேந்தரன் தனது அன்னையின் நினைவாக மக்களுக்கு தானங்களை வழங்கினான். மேலும் தமிழகத்தில் உள்ள சில கோயில்களுக்கு அன்னையின் பெயரில் நிலதானங்களையும் , கோயில்களில் விளக்கு எரிப்பதற்கு பொன் தானங்களையும் வழங்கி யுள்ளான். இதன் மூலம் இராஜேந்திர சோழன் தமது அன்னையின் மீது எவ்வளவு பாசம்  வைத்திருந்தான் என்பதை அறியமுடிகிறது.
        மேலும் முதலாம் இராஜேந்திரன் தனது தந்தையார் தஞ்சையில் கட்டியது போன்ற மிகப்பெரிய சிவன் கோயில் ஒன்றை தமது தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்ட நினைத்தான். ஆனால் தஞ்சை பெரிய கோயிலின் உயரமோ 216 அடியாகும். தனது தந்தயின் புகழுக்கு தாம்மால் எந்த விதத்திலும் கலங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே  தாம் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் உயரத்தை 206 அடியாக குறைத்து கட்டியதாக ஒரு கதையுண்டு. இந்த கதையின் மூலம் இராஜேந்திர சோழன் தனது தந்தையின் மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நபிக்கையை அறியமுடிகிறது. எனவே மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் எந்த அளவிற்கு தம் பெற்றோர்களை நேசித்திருக்க வேண்டும்  என்பதை அறியமுடிகிறது.

 அன்னைக்கோர் ஆலையம்

         மாமன்னன் இராஜேந்திர சோழன் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நத்தம் கிராமத்தில்  இராஜேந்திர சோழன் காலத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. குறிப்பாக கி.பி. 1012 ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் திரிபுவன மாதேவி ஈஸ்வரம் என்ற சிவன் கோயில் பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இக்கோயிலுக்கு ஜெயங்கொண்டசோழ நல்லூர் ,சத்திரியசிகாமணி நல்லூர் போன்ற ஊர்களை தனமாக வழங்கிய தகவலையும் கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திரிபுவன மாதேவியார் இராஜேந்திர சோழனின் அன்னை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயிலில் காணப்படும் கலைநுட்பங்களைப் பார்க்கும் போது தமது அன்னையின் நினைவாக மாமன்னன் இராஜேந்திர சோழன் இக்கோயிலைக் கட்டியிருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரும் இக்கோயிலுக்கு தானங்களை வழங்கியுள்ளனர் என்பதை அம்மன்னர்களின் கல்வெட்டுக்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் அதாவது செஞ்சி நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது. எது எப்படியோ மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் பதிவியேற்று ஆயிரமாண்டுகள் கடந்தாலும் தம் அன்னைக்காக அவன் கட்டிய கோயில் புவனகிரிப் பகுதியின் சரித்திரக் குறியிடாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

கல்வெட்டுக்கள் ஆய்வு


      இக்கோயிலில் உள்ள பத்துக் கல்வெட்டுக்கள் மட்டும் கடந்த 1945 மற்றும் 1963 ஆம் ஆண்டுகளில் படியெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆத்தூர் அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தலமையில் நடைபெற்றுள்ள கள ஆய்வில் பதிவு பெறாத 48 கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுக்கள் அனைத்தையும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா.கோமகன் மற்றும் அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் முன்னால் முதல்வரும் கல்வெட்டு ஆய்வாளருமான பேராசிரியர் இல. தியாகராஜன் தலைமையில் பதிவு பெறாத கல்வெட்டுக்கள் அனைத்தையும் படியெடுத்து. முறையாக ஆவணப்படுத்த உள்ளதாக ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத்துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ஜெ.ஆர்.சிவராம கிருஷ்ணன் தெரிவித்தார்.          

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு