சோழர் படைகள் சென்றப் பாதை

       சோழர் படைகள் சென்றப் பாதை

    முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் - வரலாற்றுத்துறை.                                
          

           முதலாம் இராஜேந்திர சோழன் மேற்கொண்ட படையெடுப்புக்
களின் தடங்கானும் பயணத்தின் நான்காவது கட்டமாக கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா. கோமகன் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன் , ஆய்வர்கள் சசிதரன், இரமேஷ், ஆனந்தன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மற்றும் கர்நாடகப் பகுதிகளில் குறிப்பாக காவிரி ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வனப்பகுதிகளில் தங்களது கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கப்பாடி

    பாலாறு சோதனை சாவடியில் இருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் மாதேஸ்வரன் மலைத் தொடரை ஒட்டி கிழக்குப் பகுதியில் உள்ள நாகமலையின் அருகே செங்கப்பாடி கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு உட்பட்டது.. செங்கப் பாடியில் இருந்து சுமார் 2000 மீட்டர் தூரத்தில் காவிரி ஆறு செல்கிறது. குறிப்பாக செங்கப்பாடிக்கும் காவிரி ஆற்றிற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியானது சமவெளியாக காட்சியளிக்கிறது. ஒருப்பக்கம் மலையரனும் மறுபக்கம் காவிரி ஆறு அறனாகவும் இருப்பது ஆய்விற்குரிய ஒன்றாகும். மேலும் பாடி என்பது பண்டையகாலத்தில் படைவீரர்கள் தங்கவைக்கப் பட்ட பகுதியை குறிக்கும் சொல்லாகும். இவ்வூர் மக்கள் செங்கப்பாடியை ஒரு காலத்தில் கங்கப்பாடி என்று அழைக்கப்பட்டதாக கூறுகின்றனர். கங்கப்பாடி என்பது கங்கமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டப் பகுதி. அதன் தலைநகர் மைசூர் அருகே உள்ள தலக்காடாகும்.

கோபிநத்தம்

     செங்கப்பாடி கிராமத்தில் ஆய்வினை முடித்துக்கொண்டு கோபிநத்தம் கிராமத்திற்கு ஆய்வுக்குழு சென்றது. கோபிநத்தம் கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு மேற்கே மலைகள் உள்ளன கிழக்கே காவிரி ஆறு ஓடுகிறது. பரந்துபட்ட சமவெளிப் பகுதியை கொண்ட இக்கிராமத்தின் வடக்கே உள்ள வனப் பகுதியில் முக்கண்ணேஸ்வரர் என்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பாலாறு சோதனை சாவடியில் இருந்து ஆலம்பாடி செல்லும் சாலையிலிருந்து 8 கி.மீ தூரத்தில்     மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. சோழர்காலத்தை சார்ந்த சான்றுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோயிலில் இடைகாலத்தை சார்ந்த தடையங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆனால் கோயிலை ஒட்டிய மேற்குப்பகுதியில் இடைக்காலத்தை சார்ந்த உடைந்த மட்கல ஓடுகள் கிடைகின்றன. எனவே கி.பி. 10 – 12 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் மக்கள் வாழ்விடப் ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.

மாறக்கோட்டை

      கோபிநத்தம் கிராமத்தில் இருந்து வடக்கே 12 கி.மீ தூரத்தில் மாறக்கோட்டை என்ற நிலப்பகுதி அமைந்துள்ளது . காவிரி ஆற்றின் மேற்குக்கு மற்றும் கோணமலையின் கிழக்கு பகுதியையையும் கொண்ட நிலப்பரப்பே மாறக்கோட்டைப் பகுதியாகும். ஆனால் இப்பகுதியை சிலர் மறவன் கோட்டை என்பது காலப்போக்கில் மாறக்கோட்டை என்று மாற்றம் பெற்றதாக கூறுகின்றனர். கோணமலையை ஒட்டிய வனப்பகுதியில் ஏதேனும் கோட்டைகள் இருந்ததற்கான தடையங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒகேனக்கலிளிருந்து ஆலம்பாடி செல்லும் சாலையின் மேற்குப்பகுதியில் கோணமலையினை ஒட்டி சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் நாற்பதற்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்தை சார்ந்த கல்வட்டத்துடன் கூடிய கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. கடல்மட்டத்தி லிருந்து  1100 மீட்டர் உயரம் கொண்ட இப்பகுதியில் உள்ள இரண்டு கற்பதுக்கைகள் மட்டும் மிகப்பெரிய ஆளவினை கொண்டவை. இந்த இரண்டு ஈமசின்னங்களும் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு சதுர வடிவ கற்பலகைகளைக் கொண்டு இறந்தவரின் உடலை வைப்பதற்கு ஏற்ற வகையில் பேழைபோன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். மூன்றடி அகலமும் ஐந்தடி நீளமும் கொண்ட பேழையினுள் இறந்தவரின் உடலை வைத்தப் பிறகு, இறந்தவருக்கு பிடித்தமான உணவு பொருட்களையும் அவர் பயன்படுத்திய பிறப்பொருட்களையும் உடன் வைத்து மேற்பகுதியை மிகப்பெரிய கற்பலகையைக் கொண்டு மூடிவிடுவது பெருங்கற்கால மக்களின் வழக்கமாகும். மேலும் ஈமசின்னத்தின் கிழக்கு பகுதி கற்பலகையில் 15 செ.மீ விட்டம் கொண்ட துளை ஒன்று காணப்படுகிறது. இத்துளையானது கற்பேழையினுள் அடக்கம் செய்யப்பட்டவரின் ஆன்மாவானது வெளியே சென்று பிறகு பேழையினுள் வரும் என்ற நம்பிக்கையில் இடப்பட்டதாகும். காரணம் பெருங்கற்கால மக்கள் மனித உடல் அழியக்கூடியது என்பதனையும், மனித உடலுனுள் இருக்கும் ஆன்மாவிற்கு என்றுமே அழிவில்லை என்ற கொள்கையினை கொண்டிருந்தனர் என்பதன் வெளிப்பாடே இந்த துளைக்கான காரணம் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். தற்பொழுது சிதைக்கப்பட்டுள்ள இவ்விரு ஈமச்சின்னங்களின் அருகே உடைந்த கருப்பு மற்று சிவப்பு நிற மட்கல ஓடுகளும். வழுவழுப்பான கருப்பு நிற மட்கல ஓடுகளின் பாகங்களும் கிடைத்துள்ளன. இவைகளின் காலம் சுமார் 2500 ஆண்டுகளாக இருக்கலாம் . இப்பகுதியிலிருந்து வடக்கே 2 கி.மீ. தூரத்தில் ஆலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. ஆய்வு குழுவினர் அடுத்தகட்ட ஆய்வினை ஆலம்பாடி கிராமத்தில் மேற்கொண்டனர்.

ஆலம்பாடி

     மாதேஸ்வரன் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் உள்ள தம்மை மலையை ஒட்டிய கர்நாடக வனப்பகுதியில் காவிரி ஆற்றின் மேற்கு பகுதியில் ஆலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. பரந்துபட்ட நிலப்பகுதியக் கொண்ட இவ்வூர் கடல்மட்டத்திலிருந்து 1050 மீட்டர் உயரத்தில்  அமைந்துள்ளது. பாடி என்பது படைவீரர்கள் தங்கவைக்கப்பட்ட பகுதியை குறிக்கும். ஆலம்பாடி கிராமத்தின் கிழக்கு பகுதியில் அதாவது காவிரி ஆற்றை ஒட்டிய மேற்கு கரையில் அகழியுடன் கூடிய மண் கோட்டை ஒன்று காணப்படுகிறது. மண் கோட்டையின் வெளிப்புறம் கருங்கற்களைக் கொண்டு கட்டப்படுள்ளது. இக்கோட்டை சுவர்களின் உயரம்  15 அடியாகும். சுமார் 200 ஏக்கர் பரப்பளவை கொண்ட இக்கோட்டையின் நான்கு புறமும்  உயர்ந்த  பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையினுள் படைவீரர்கள் தங்குவதற்கான பகுதி, யானை மற்றும் குதிரை லாயங்கள், பெரிய கிணறுகள், சமையல் கூடங்கள் போன்றவை அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கோட்டையின் மையப்பகுதியில் இரு அறைகளைக் கொண்ட மிகப்பெரிய வெடிமருந்து கிடங்கு ஒன்று உள்ளது. ஒரு அறையில் சுமார் 50 கிலோ அளவிலான கரி, கந்தகம் , கலக்கப்பட்ட வெடிமருந்து உள்ளது. மேலும் வெடிமருந்து கிடங்கின் வடக்குப் பகுதியில் துப்பாக்கி மற்றும் பீரங்கியால் தாக்கப்பட்ட சுவடுகள் காணப்படுகின்றன. கோட்டை வெளி மற்றும் உட்பகுதிகளில் கருங்கற்களால் தயாரிக்கப்பட்ட 5 , 8 , 10 கிலோ எடைளை உடைய கற்குண்டுகள் கிடைக்கின்றன மேலும் சில கற்குண்டுகள் எதிரியின் பீரங்கியில் வைத்து  கோட்டையை தாக்கியதில் சிதைந்து காணப்படுகின்றன. இவைகளை வைத்து பார்க்கும்போது மிகப்பெரிய தாக்குததலால் இக்கோட்டை உருக்குலைந்து விட்டதை உணர முடிகிறது. வெடிமருந்து சேமிப்பு கிடங்கில் உள்ள வெடிமருந்தை சோதனை செய்ததில் மரக்கரியோடு பாஸ்பரஸ், கந்தகம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் அவ்வெடிமருந்துகள் தற்போது தீ பட்டவுடன் வீரியத்தோடு எறிவது அக்கால வெடிமருந்து தயாரிப்பின் நுட்பத்தின் திரத்தை உணரமுடுகிறது.

நடுகற்கள்

       வெடிமருந்து கிடங்கின் கிழக்குப் பகுதியில் நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன. சதுர வடிவ கற்பலகையில் புடைப்பு சிற்பமாகவடிக்கப்பட்டுள்ளன. முதலாவது சிற்பதொகுப்பில் வீரன் ஒருவன் ஒரு காயில் வாளும் மறு கையில் கேடையத்துடன் தம்மை தாக்க வரும் வீரனை தாக்க முற்படுவது போன்று செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் அருகே அவனது மனைவி நிற்கிறாள். இரண்டாவது கற்பலகையில் குதிரை வீரன் ஒருவன் குதிரை மீது இருந்து நீண்ட ஈட்டியால் மற்றொறு வீரனை தக்க முயற்சிப்பது போன்று வடிக்கப்படுள்ளது. மேலும் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருப்பதால் இவ்வீரன் இங்கு நடைபெற்றுள்ள போரில் வீரமரணம் அடைந்துள்ளான் என்பதை அறியமுடிகிறது. மூன்றாவது நடுகல் ஒரு கையில் உயர்த்தி பிடித்த வாளும் மறுகையில் கேடையம் அருகே இறந்த வீரனின் மனைவியும் உள்ளனர். நான்காவது நடுகல்லில் வீரன் ஒருவன் புலியை தமது வாளால் குத்திக் கொள்வது  போன்றும் அவனது பின்புறம் இரண்டு பெண்கள் உருவம் காணப்படுகிறது. இந்நடுகற்களின் காலம் 16 – 17 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும். மேலும் கோட்டையின் மேற்குப்பகுதியில் 24 X 12 X 5 செ.மீ. அளவுகளை கொண்ட செங்கற்கள் ஏராளமாக கிடைக்கிறது. மேலும் இதேப் பகுதியில் இடைக்காலத்தை சார்ந்த சிவப்பு நிற மட்கல ஓடுகளும் , தானியங்களை செமிக்கப்பயன்படுத்திய சொரசொரப்பான சிவப்பு மட்கல ஓடுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே கி.பி. 10 – 13 ஆம் நூற்றாண்டிலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் எனலாம் . மேலும் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஆலம்பாடியில் நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்ததை சித்தாண்டபுரம் செப்பேடும் சில வரலாற்று ஆவணங்களும் குறிப்பிடுகின்றன.

ரெங்கநாதசுவாமி கோயில்

         ஆலம்பாடி கோட்டையின் தென்மேற்கே சுமார் 800 மீட்டர் தூரத்தில் ரெங்கநாத சுவாமி கோயில் சிதைந்த நிலையில் உள்ளது. கோயிலானது சதுர வடிவிளான கருவறை, அர்த்த மண்டபம் , முகமண்டபத்துடன் விளங்குகிறது. மேலும் முகமண்டபத்திற்கு முன்பாக பதினாறு கால் மண்டபம்  ஒன்று உள்ளது அதில் அனுமன் சிலை புடைப்பு சிற்பமாக கற்பலகையில் செதுக்கப் பட்டுள்ளது. கோயில்தூண்களில் அரசன் அரசியரது உருவங்கள், விஷ்ணுவின் அவதார உருவசிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள சிற்பங்கள் , கருவறை , முன்கோபுரம் மற்றும் கோயில் பிரகாரசுவர் மண்டபங்கள் போன்றவை இங்கு நடைபெற்றுள்ள கடுமையான தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் கட்டுமானம் தொழில் நுட்பம்  மற்றும் சிற்பங்களின் வடிவமைப்புக்களை பார்க்கும்போது இவைகள் கி.பி. 16 - 17 ஆம் நூற்றாண்டை சார்ந்ததாகும்.  
      
           மேலும் கோயிலின் மேற்கு , வடக்கு, தெற்கு பகுதிகளில் அதிக அளவில் மட்கல ஓடுகளும், செங்கற் துண்டுகளும், கட்டடப் பகுதியின் அடிப்பாகங்களும் மண்ணின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இங்கு கிடைக்கப்பட்டுள்ள செங்கற்கள் 25 X 12 X 5 செ.மீ அளவுகளைக் கொண்டுள்ளன. மேலும் உடைந்த ‘’ ட ‘’ வடிவ கூரை ஓடுகளின் பாகங்கள் கோயிலின் வடக்குப்பகுதியில் கிடைத்துள்ளன. இவ்வகை கூரை ஓடுகள் தமிழகத்தில் கங்கை கொண்டசோழபுரம் , பழையாறை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ள அகழாய்வுகளில் கிடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மண்ணின் மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள் அனைத்தும் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சார்ந்தவைகளாக உள்ளன. 
       
              எனவே கோயில் உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இடைக்கால பண்பாட்டை சார்ந்த மக்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர். மேலும் கோயிலின் முன்பாக சாலை அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் பெருங்கற்காலத்தை சார்ந்த கருப்பு – சிவப்பு நிற மட்கல ஓடுகளும் , செங்காவி பூசப்பட்ட மட்கல ஓடுகளும் , பளபளப்பான கருப்பு மட்கல ஓடுகளும் கிடைக்கப்படுகின்றன. இவை பெருங்கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.மேலும் இப்பண்பாட்டை சார்ந்த மக்கள் தங்களில் இறந்தவர்களை ஆலம்பாடி 

               பகுதியின் தெற்குப் பகுதியில் அதாவது மாரக்கோட்டை பகுதியில் புதைத்துள்ளனர். எனவே அங்குக் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஆலம்பாடி பகுதியில் வாழ்ந்த பெருங்கற்கால மக்களுடையதாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஆலம்பாடி பகுதியில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சார்ந்த தொல்பொருட்கள் கிடைப்பதால் ஆலம்பாடி கிராமம் சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றுப் பின்புலத்தை கொண்ட நகராக விளங்கி உள்ளது எனலாம். மேலும் தமிழக கர்நாடக எல்லையில் ஆலம்பாடி அமைந்துள்ளதால் இந்நகர் பண்டையகாலத்தில் அதிக முக்கியத்துவம் பெற்ற நகராக விளங்கியிருக்க வாய்ப்புள்ளது . 

             






இந்த ஆலம்பாடி வழியாக செல்லும் சாலையானது தண்டளி வழியாக இராம்புரா, கொள்ளேகால் கலியூரை வழியாக கங்க மன்னர்களின் தலைநகரான தலக்காடு அடைவது  எளிதானதாகும் என்பதால் சோழப்படைகள் இப்பாதைகளை பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு