பண்டையகால தமிழர்கள் வகுத்த தேர்தல் சட்டங்கள்

பண்டையகால தமிழர்கள் வகுத்த தேர்தல் சட்டங்கள்

          முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை.
              
        உலக வரலாற்றிலேயே தங்களை ஆலப்போகும் தலைவன் தூய்மையானவனாக, மக்கள் நலனில் அக்கரை உள்ளவனாக, தலைமைப் பண்பிற்கு உகந்தவனாக இருப்பவனையே அக்கால தமிழர்கள் தலைவனாக ஏற்றனர். இன்று சில உலக நாடுகள் தலைமைக்கும், அரசுக்கும் இலக்கணங்களை வகுத்தளித்த பெருமைக்குறியது எங்கள் தேசம் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அத்தேசங்களில் வாழ்ந்த மானுடம் நாகரிகத்தை எட்டும் முன்பாகவே, தமிழர்கள் உயரிய நாகரிகத்தோடு வாழ்ந்த பெருமைக்குரிவர்கள். மேலும் தாங்கள் பேசும் மொழிக்கு மட்டும் இலக்கணத்தை வகுத்ததோடு அல்லாமல் தங்களை ஆளப்போகும் தலைமைக்கும் சேர்த்து இலக்கணத்தை வகுத்த பெருமை தமிழற்கேவுறியது.
           இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் ஒரு நாட்டின் தலைவன் அந்நாட்டில் உள்ள மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை  ‘’ தெரிவுகொள் செங்கோல் அரசற்குரிய ‘’ அதாவது தேர்ந்தெடுக்கப்படுபவனே தலைவன். என்ற உயரிய விதியின் மூலம் தலைமைக்கு இலக்கணம் வகுத்த ஒரே இனம் தமிழினம்.

தேர்தல்

       இந்தியாவில் முதல் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் தான்  21 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தனர். தற்போது தமிழகத்தில் உள்ள 15 வது சட்டமன்ற தேர்தலில் 18 வயதை நிரம்பிய 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது தலைமையை தேந்தெடுக்க உள்ள இந்த சூழளில். பண்டையகால தமிழர்கள் அதிகாரமிக்க தலைமையை  தேர்ந்தெடுப்பதில் அவர்கள் பின்பற்றிய தேர்தல் முறையும் அதற்காக அம்மன்னர்கள் வகுத்தளித்த சட்டங்கள்  நவீன கால அரசுக்கும் ,அரசியலுக்கும் முன்மாதிரியாக உள்ளது. குறிப்பாக சோழ மன்னர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தேவையான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் அவர்கள் கையாண்ட தேர்தல் முறை இன்றளவும் சிறப்பிற்குரிய ஒன்றாகும். ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்குவது கிராமங்களே. அந்த கிராம நிர்வாகம் சிறப்பானதாக அமைந்தால் தான் மைய , மாநில அரசுகள் சிறப்பு பெற முடியும். என்ற அரசியல் தத்துவத்தை பின்பற்றியதன் வெளிப்பாடே குடவோலை தேர்தல் முறையாகும்.

குடவோலை தேர்தல் முறை

            இத் தேர்தல் முறையானது கி.பி. 800 ஆம் ஆண்டிலேயே பாண்டிய நாட்டில் பிராமணர்களுடைய கிராமங்களில் கையாளப்பட்டு வந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் மானூரில் கண்டுபிடிக்கப்பட்ட மாறஞ்சடையனின் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. எனவே தேர்தல் முறை என்பது தமிழகத்திற்கு புதியதன்று. ஆனால் சோழர்கள் காலத்தில் வகுக்கப்பட்ட தேர்தல் சட்டங்கள் அன்று தமிழகத்தில் வழகில் இருந்த தேர்தல் சட்டங்களின் பரிணாம வளர்ச்சியே எனலாம். குறிப்பாக இந்த பரிணாமத்தின் உயரிய வளர்ச்சியினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.

உத்திரமேரூர் கல்வெட்டுகள்

        தற்போது உத்திரமேரூரில் வைகுந்தபெருமாள் கோயிலில் கி.பி. 907 ஆம் ஆண்டு சோழப்பேரரசின் மன்னனாக விளங்கிய முதலாம் பராந்தக சோழன் தாம் பதவியேற்ற 12 மற்றும் 14 ஆம் ஆட்சியாண்டுகளில் இரண்டு கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளான். அதில் தேர்தல் நடத்தும் முறை விதிமுறைகள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களின் தகுதி ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தல் நடைமுறை சட்டம் தான் உலக தேர்தல் நடைமுறை சட்டங்களின் தாயாகும்.  சோழர் காலத்தில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் நடைமுறை சட்டமானது உத்திரமேரூர் சதுர்வேதிமங்கல உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்டதைக் குறிப்பிடுகின்றன. காலங்கள் ஆயிரம் கடந்தாலும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் நடைமுறை சட்டம் பண்டைய கால தமிழர்களின் அக்மார்க் மக்களாட்சி தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.   

கல்வெட்டுக்கள்

       கி.பி. 918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் கல்வெட்டில், 360 நாட்கள் மட்டுமே அதிகாரம் பெற்ற உள்ளாட்சி அமைப்பிற்கான தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களுக்கான தகுதிகளைப் பற்றி கூறுகிறது.

உறுப்பினராக தேர்ந்தெடுக்க உரிமைபெற்றவர்கள்

           அரசுக்கு வரி செலுத்தக் கூடியவகையில் கால்வேலி நிலம் பெற்றவராக இருக்கவேண்டும். தமது சொந்த மனையில் வீடுகட்டியிருக்க வேண்டும். அதாவது தேர்தலில் போட்டியிடுபவர் அந்த ஊரை சேர்ந்தவராக இருக்கவேண்டும். 30 வயதுக்கும்  60 வயதுக்கும் இடைப்பட்ட வயதை உடையவராக இருக்கவும். வேதசாஸ்திரங்களில் விற்பன்னராக இருக்க வேண்டும் அதாவது கண்டிப்பாக படித்தவராக இருக்கவேண்டும். அறநெறி பிறழாமல் நடப்பவராகவும் தூயவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்து வருபவராகவும் இருக்கவேண்டும். வாரியத்தில் சரியாக கணக்கு காட்டியவராக இருக்கவேண்டும். உடல் நலம் பெற்றவராக இருக்கவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. மேலும் வாரிய உறுப்பினர்கள் எவருடைய உறவினராகவும் இருக்கக் கூடாது என்ற கல்வெட்டு வரியில் ‘’ சென்ற தேர்தலில் போட்டியிட்டு வாரிய உறுப்பினராக இருந்தவரின் அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குச் சிற்றவைப் பேரவை மகளையும் இவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடன் பிறந்தானையும் இவர்கள் தகப்பனோடுடப் பிறந்தானயும் தன்னோடுடப் பிறந்தானயும் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமனையும் இவர்கள் ப்ராஹமானியோடுடப் பிறந்தானையும் தன்னோடுடப் பிறந்தாளை வேட்டனையும் உடன்பிறந்தாள் மக்களையும் தன் மகளை வேட்ட மருகனையும் தன் தகப்பனையும் தன் மகனையும் ஆக இச்சுட்ட பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்போறாத்தாராகவும்....மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அதாவது ஒருமுறை தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினராக இருந்தவர் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டுமெனில் மூன்றாண்டுகள் கழிந்த பிறகே தேர்தலில் பொடியிட முடியும் என்ற வரிகள் இன்றைய நவீனகால மக்களாட்சி சித்தாந்தத்தை பேசும் தமிழக அரசியல் வாதிகளுக்கு சவுக்கடி தருவது போன்று உள்ளது.

தேர்தலில் நிற்பதற்கானக உரிமையை இழந்தவர்கள்

            வரிய உறுப்பினராக இருந்து இறுதியில் கணக்கு காட்டாமல் இருந்தவர்கள். இவர்களுக்கு நெருங்கிய உறவினர்களும் ; கூடத்தக்காதவர் களோடு சேர்ந்திருப்பவர்களும் ;  ஐம்பெரும் பாவங்களில் முதல் நான்கும் புரிந்தவர்களும் ; இவர்களுக்கு நெருங்கிய சுற்றத்தினர்களும் ; தீயோர்கள் கூட்டுறவினால் கெட்டுப்போனவர்களும் ; லஞ்சம் வாங்கிப் பிறகு பிராய்ச்சித்தம் செய்து தூய்மை அடைந்தவர்களும் ; கள்ளக்கையெழுத்து இட்டு தவறு செய்தவர்கள் போன்றோர் தமது வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தவர்கள் ஆவர் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது கிராம மக்களுக்கு சேவையாற்ற வரும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு பெரிய தூய்மைத் தன்மை கடைபிடிக்கப்பட்டிருந்தது என்பதற்கு இக்கல்வெட்டே தக்கச் சான்றாகும்.

தேர்வு நடத்தும் முறை

      உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் காட்டிய அதே வெளிப்படையான தன்மை தேர்தல் நடத்துவதிலும் கடைபிடிக்கப்பட்டிருந்தது. தேர்தல்  சோமாசிப் பெருமான் என்ற தேர்தல் அதிகாரியின் முன்னிலையில் நடைபெற்றது.
     தேர்தலில் போடியிட தகுதியானவர்கள் அனைவரின் பெயர்களும் சிறு பனையோலைத் துண்டில் எழுதப்பட்டு குடத்தினுள் போடுவார். குடத்தினுள் போடப்பட்ட பனையோலைகளை நன்கு கலக்குவார். பிறகு விவரம் அறியாத பாலகனை கொண்டு குடத்தினுள் இருந்து ஒரு ஓலைத்துண்டை எடுக்கச் சொல்வர் . சிறுவன் எடுத்த ஓலையை வாங்கப்போகும்  தேர்தல் அதிகாரி தமது இரு கைகளையும் மக்கள் முன்பு காண்பித்து கைகளில் எதுவும் இல்லை என்பது உறுதி படுத்தப்பட்ட பிறகு இரண்டு விரல்களால் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி சபையோர் முன்பு அதில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளரின் பெயரை மூன்று முறை உரக்க சொல்லுவார் அவ்வாறு சொல்லப்பட்ட உறுப்பினர் வெற்றி பெற்றவராவார். எவ்வாறு முப்பது உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் உள்ள முப்பது குடும்புகளில் அதாவது வார்டுகளுக்கு தேவையான உறுப்பினர்கள் இக்குடவோலை தேர்தல் மூலமே தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக் காலம் 360 நாட்களாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஏரி வாரியம் , தோட்ட வாரியம் , பஞ்ச வாரியம் , பொன் வாரியம், சம்வத்சர வாரியம் போன்ற வாரியங்களை நிர்வகிக்கும் பொறுப்பையேற்றனர். இந்நடைமுறைகளை இந்திய  தேர்தல் ஆணையம் ஏற்கும்  நாள் இந்திய அரசியலில் தூய்மை தன்மை பிறக்கும் நாளாக அமையும்.





 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு