பெருமாள் ஏரி

முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன்
உதவிப் பேராசிரியர்
 அரசு கலைக் கல்லூரி 
ஆத்தூர்.



    குறுநில மன்னன் வெட்டிய பெருமாள் ஏரி

   
        
               கடலூர் மாவட்டம் சுமார் சுமார் பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்று சிறப்பை கொண்ட பகுதியாகும். சங்ககால முதல் கிரேக்கர்கள் , ரோமானியர்கள் , அரேபியர்கள் , சீனர்கள் போன்றோர் இம்மாவட்டத்தில் உள்ள மக்களுடன் நேரடி வணிகதொடர்பை கொண்டிருந்தனர் என்பதற்கு ஏராளமான தொல்லியல் சான்றுகள் கடலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கடல் மார்க்கமாக முதன்முதலில் வர்த்தகம் செய்ய வந்தவர்கள் போர்ச்சிகீசியர்கள் மற்றும்  டச்சுகாரர்கள் ஆவர். ஆனால் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமது ஏகாதிபத்திய கொள்கையினால் கடலூர் பகுதி முழுவதையும் தமது வாணிப ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சுதந்திர போராட்ட காலத்தில் காந்தியடிகள் கடலூருக்கு வந்து மக்களிடையே அவராற்றிய உரையினால் இம்மாவட்ட மக்களை சுதந்திர போராட்டத்தில் இணைத்து கொள்வதற்கு காரணமாக இருந்தது. மேலும் அப்பர் , சுந்தரர் , திலகவதியார் , இராகவேந்திரர் , வள்ளல் இராமலிங்க அடிகளார் , ஞானியார் சுவாமிகள் போன்ற மகான்களை தந்தது இம்மாவட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.

பெருமாள் ஏரி       

            முதலாம் பராந்தக சோழனால் வெட்டப்பட்ட வீரநாராயயான ஏரிக்கு இணையானதாக விளங்குவது குள்ளஞ்சாவடி அருகே உள்ள பெருமாள் ஏரியாகும். இவ்வேரியை சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு கடலூர் மாவட்டம் முழுவதையும் கி.பி. 1243 முதல் கி.பி. 1279 வரை ஆட்சிசெய்த பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ் சிங்கனால் வேட்டப்பட்டதாகும்.  இச்செய்தியை இம்மன்னனது காலத்தில் வெளிடப்பட்ட திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டில்,‘’ . . . . நெடுங்கரை வென்று மலை கொண்ட பெருமாளேரியுஞ் சுரர்தரு நெருங்கிய சோலையும். . . . ‘’ என்ற வரிகள் மூலம் அறியமுடிகிறது.
           பெருமாள் ஏரியின் தற்போதைய மொத்த பரப்பளவு - 3,457 ஏக்கராகும் . ஏரியில் 5.44 மீட்டர் முதல்  - 6.87 மீட்டர் வரை தண்ணீரை  தேக்க முடியும். மொத்தம் 11 மதகுகளை கொண்ட இவ்வேரியில் தற்போதைய தண்ணீர் கொள்ளவு சுமார் ஒரு டிம்.சி யாகும். இந்த ஏரியின் மூலம்  6,581.92 ஏக்கர் விளைநிலங்கள் பாசனப் பயன் அடைகின்றன.

சுற்றுலாதலமாக மாற்றப்படுமா

         நீண்ட கரையினை கொண்ட பெருமாள் ஏரியின் கரைமீது இராநாகுப்பம் முதல் குண்டியமலூர் வரை சுமார் 15 கி.மீ வரை நீண்ட சாலை செல்கிறது . இதன் இருமருங்கிலும் அடர்ந்த மரங்கள் உள்ளதால் பயணம் செய்வது மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும். மேலும் ஏரியின் கரையை ஒட்டிய பகுதியில் உள்ள அடர்ந்த மரங்கள் இருப்பதால் பல வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. மேலும் பாதுகாப்பு வசதியுடன் கூடிய படகு வசதி , குடிநீர் வசதி , நீச்சல் குளம் , உணவு விடுதி , குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானம் , மின்விளக்குடன் கூடிய பொழுது போக்கு அம்சங்கள், புறக்காவல் நிலையம் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விடுமுறை காலங்களில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்ல பேருந்து வசதிகள் செய்துதரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.         


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி