மருங்கூர் கடலூர் மாவட்டம்

 


ஹோமோ செப்பியன் என அடையாளப்படுத்தப்படும் மனிதக்குலம் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி, பின்னர் உலகின் பல பாகங்களுக்குப் பரவியதாக ஆய்வாளர் கூறுவர். ஹோமோ செப்பியன் வகை மனிதர்களுக்கு முன்னரே நியாண்டர்தால் வகை மனிதக் குலம் இருந்தது என்பதும் அவை படிப்படியாக குறைந்து மறைந்தது, அல்லது வேறு சிறு மனிதக் குல வகையோடு அல்லது ஹோமோ செப்பியன் வகை மனித குலத்தோடு கலந்து மறைந்தது என்பதும் வரலாறு நமக்களிக்கும் செய்தி. மனிதகுலம் நெடுங்காலம் வாழும் பகுதிகளில் ஒன்றாக இன்றைய தமிழகத்தையும் குறிப்பிடத்தான் வேண்டும். மிகப் பல ஆண்டுகளுக்கு முன் இருந்தே மனித குலம் இங்கே வாழ்ந்ததற்கான தடயங்களையும் ஆதாரங்களையும் பற்றிய செய்திகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இன்றைய தமிழகத்தில் விரிவாக நடத்தப்பட்ட சில அகழ்வாய்வுகள் இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகம் அடைந்த மனித இனக்குழுவாக இருந்தமையை உறுதி செய்யும் வகையில் உள்ளன. அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி, கொடுமணல் போன்ற நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை இதற்குச் சான்றாகக் கூறலாம்.


சங்ககாலத்தில் புகழுடன் விளங்கிய நகரங்களுள் ஒன்று மருக்கூர். சங்கப்பாடல்கள் சுட்டும் மருங்கூர் எனப்படும் நகரம் என்பது யாது என்பதும் ஒரு கேள்வியாகவே தொடருகின்றது. ஆயினும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் ஒரு சங்ககால நகரம் தான் என்பதற்கானச் சான்றுகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதம் நான் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சில வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரச் சென்றிருந்தேன். எனக்கு இப்பயணத்தில் திட்டமிடலுக்கு உதவியவர் வடலூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றும் பேரா.முனைவர்.சிவராமகிருஷ்ணன் அவர்கள். நான் வடலூருக்குச் செல்வது மிக இறுதி நேரத்தில் தான் முடிவாகியது. ஆக நகராண்மைக் கழக பேருந்திலேயே இரவுப் பயணம் செய்தேன். காலை 5 மணி வாக்கில் வடலூரை வந்தடைந்தேன். என்னை அந்த அதிகாலை நேரத்திலும் வரவேற்று அவ்வூரின் நாட்டமை திரு,சேகர் அவர்களது இல்லத்திலேயே நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர் வடலூர் நண்பர்கள்.

ஊர் நாட்டாமை பற்றி தமிழ்ச்சினிமா படங்களில் தான் கேள்விப்பட்டிருப்போம். நேரிலேயே ஊர் நாட்டாமையின் இல்லத்தில் தங்குவது மகிழ்ச்சியாக இருந்தது. அக்குடும்பத்தினர் என்மீது காட்டிய அன்பும் கரிசனமும் மறக்க முடியாதது. அவரது அழைப்பின் பேரில் வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திருச்சபைக்குச் சென்று பார்த்து வழிபட்டு வந்தேன். வடலூர் வள்ளலாரின் திருச்சபை நடவடிக்கைகளிலும் சமூஅக்ச் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்டவர் வடலூர் நாட்டாமை அவர்கள் என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்தேன். ஒவ்வொரு பயணமும் எனக்குப் பல புதிய நட்பு வட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வாகவே அமைந்து விடும். அந்த வகையில் இந்த வடலூர் பயணமு எனக்குப் பல நல்ல புதிய நட்புகளை நான் அறிமுகம் செய்து கொள்ளும் பயணமாக அமைந்தது

எனது இருநாள் பயணப் பட்டியலில் இரண்டாம் நாள் நான்மருங்கூர் செல்வது உறுதியாகியிருந்தது. மருங்கூரை நாங்கள் சென்று சேர்ந்த போது காலை மணி 10 இருக்கலாம். வீடுகளே இல்லாத திறந்த வெளி. 1 ஏக்கர் நிலப்பகுதி தொல்லியல் அடையாளங்கள் நிறைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டு முள் வேலி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. முள்வேலி போடப்பட்டுள்ள பாதையின் வழியே நடந்து அருகே சென்று பார்வையிட்டோம். அப்பகுதியில் ஆங்காங்கே ஏறக்குறை 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்கள், உடைந்த பானை ஓடுகள் போன்றவை காணப்பட்டன. சில பானை ஓடுகளில் கீறல்களும் இருந்தன.

பேரா.சிவராமகிருஷ்னன் இப்பகுதியின் சிறப்புக்கள் பற்றி விளக்குவதை நான் வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தேன். அப்பகுதி முக்கியமான சங்ககால வாழ்விடம் என்பது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. ஆயினும் இங்கு முறையான அகழ்வாய்வுப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. 2007ல் முதலில் இப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பது தமிழக தொல்லியல் துறையின் ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டது. இங்குக் கண்டறியப்பட்டுள்ள மக்கள் வாழ்விடத்தின் காலம் கி.மு.3ம் நூற்றாண்டு என்பதும், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பானை ஓடுகள் இங்கு மேலோட்டமாகச் செய்யப்பட்ட ஆய்விலேயே இங்குக் கிடைக்கப்பெற்றன என்றும் தெரியவந்தது. சங்க காலத்து நார்ப்புர கட்டுமானத்தின் செங்கல் அமைப்புக்கள் இங்கு தென்படுகின்றன. முறையான அகழ்வாராய்ச்சி இன்னமும் இப்பகுதியில் செய்யப்படாத நிலையில் இது தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் பகுதியாகவே இன்றும் இருக்கின்றது.

மருங்கூர் பண்டைய காலத்தில் வளர்ச்சியடைந்த ஒரு நகரமாகத் திகழ்ந்துள்ளது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் பழமையான செங்கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிட அமைப்புக்களின் எச்சங்களை இன்னமும் இங்கே காணமுடிகின்றது என்பது போன்ற தகவல்களைப் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் வழங்க, அவற்றை நான் வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்தேன்

இப்பகுதியில் நாங்கள் இருப்பதைப் பார்த்த ஊர் மக்கள் சிலர் ஒருவர் பின் ஒருவராக எங்களை நோக்கி வந்து கூடிவிட்டனர். நாங்கள் நிலம் வாங்க வந்ததாக அவர்கள் நினைத்துக் கொண்டு விட்டனர் போலும். எங்களிடம் வந்து, ”இது அரசாங்க நிலம். இங்கே நிலம் விற்கமாட்டார்கள்” என எங்களுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்களைச் சமாதானம் செய்து இங்கே வரலாற்றுப் பதிவுகள் செய்ய வந்திருக்கின்றோம் என்பதை விளக்கியதும் எங்களோடு இருந்து எங்கள் பதிவாக்கத்தைப் பார்த்துக் கொண்டு நின்றனர். ஒரு வகையில் இவர்கள் கவனமாக இப்பகுதியைப் பார்த்துக் கொள்வதும் பாராட்டத்தக்கதே.

இப்பகுதியைப் பார்த்து விட்டு வெளியே நடந்து வரும் போது வரிசை வரிசையாகக் கொட்டகைகள் இருப்பதையும் அங்கே தனியாக அமர்ந்து சிலர் வேலை செய்து கொண்டிருப்பதையும் கண்டேன். தச்சர்களின் கொட்டகைகள் தான் அவை. வரிசையாகக் கைத்தொழில் செய்வோர் அங்கு தனித்தனி கொட்டகைகளை அமைத்து இரும்புக் கத்திகள், இரும்பு பாத்திரங்கள், அருவாள்மனை, வேல்கம்புகள் என தயாரித்துக் கொண்டிருந்தனர். காலத்தைக் கடந்து செல்லும் ஒரு கால இயந்திரத்தில் ஏறிக் கொண்டு சங்ககாலத்துக்கே போய்விட்டது போன்ற உணர்வு இவர்களைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்டது.

எத்தனை விதமான தொழில் திறமைக் கொண்டோர் நம் தமிழ் நிலத்தில் இருந்திருக்கின்றனர். இன்றோ பெரிய வியாபார நிறுவனங்கள் வந்து விட்டதால் அவை ஒற்றை வியாபார நிறுவனங்களை நோக்கிய தொழில் அடிப்படையை நோக்கிச் செல்வதைக் காண்கின்றோம். சிறு தொழில் செய்து வருமானம் ஈட்டுவோரின் தொழில் திறமை இவ்வகை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாக்குதலில் தாக்குப்பிடிக்கமுடியாது படிப்படியாக குறைந்து, மறைந்து அழிந்து போவது தான் நடக்கின்றது. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல. உலகமெங்கிலும் இதே நிலைதான் இன்று கண்கூடு. இங்கு மருங்கூர் பகுதியில் வசிப்பவர்களான இவர்கள் தச்சர்கள், கம்மாளர்கள், பொற்கொல்லர்கள் என வகை வகையாகத் தொழில் ரீதியில் அடையாளப்படுத்தப்படும் தொழில் திறமைமிக்கோர் என்பதை இவர்களது குடிசைப்பட்டறைகளை வைத்தே அறிய முடிந்தது.

அழகன்குளம் ஆய்வு போல இப்பகுதியிலும் முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் தொடர்பான செய்திகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த மருங்கூர் மட்டுமல்ல, இங்குள்ள பல பல சிறு கிராமங்களிலும் இது வரை ஆய்வாளர்களால் ஆராயப்படாத தகவல்கள் பல உள்ளன. அறியப்படாத தமிழகத்தை நாம் நம் தேடுதலின் வழி தொடர்ந்து ஆராயத்தான் வேண்டும்!! 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு