கலியூர்

கலியூர்



விக்கிரம சோழன் உலாவில், இராஜராஜரின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு போர்பற்றிய இருவரிகள்.. !

தூதர் காப்புண்டு பகலொன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு, மலைநாடு கொண்டோனும்..

காவிரியின் வலக்கரையான கலியூர் என்னுமிடத்தில், கங்கர் படைக்கும், சோழர் படைகளுக்கும் இடையேயான போர்.

தமது தலைநகரான தலைக்காடு பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த கங்கர்படை, சிறைபிடிக்கப் பட்டிருந்த தமது தூதன் ஒருவனை காக்க குடமலைநாடு நோக்கிப் பயணித்த சோழர் படையினை, இடையே தடுத்தி நிறுத்திய போர்.

சோழர் படையின் தளபதியாக அப்ரமேயன், இப்போரில் தான் கொன்றதாகக் கூறும் பதினெட்டு தளபதிகளின் பேரையும், பட்டியலிட்டு வைத்துப் போயிருக்கிறான் தமது கல்வெட்டில். ( படம் கீழே )

மேற்கூறிய விக்கிரம சோழனுலாவில் காணப்படும் வரிகளில் உள்ள சுரம் என்னும் வார்த்தை காடுஎன்ற பொருள்கொள்ளப்பட்டு, ஈரொன்பது, அதாவது பதினெட்டு காடுகளை ஒரே பகலில் கடந்தது சோழர் படை என்று பொருள்கொள்ளப் பட்டிருந்தது முன்பு.

இக்கல்வெட்டு கிடைத்தபின், சுரம் என்ற வார்த்தை, காட்டினை மட்டுமல்ல.. சிரமாகிய தலையினையும் குறிக்கும் என்பது தெளிவாக விளங்கியது.

அப்ரமேயன் கல்வெட்டு காட்டும் அந்த பதினெட்டு கங்க தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு :

1. ஹொய்சலர் நாகவர்மன்.

2. மலேபர மல்ல ஒயிகன்.

3. ஹொய்சலன் பெலஹொப்பா.

4. சோலக சஞ்சிதா.

5. சின்னிவாரா.

6. மாதல எரேகங்கா.

7. மத்தச பரமன்னன்.

8. ரண்டகண்டன்.

9. முண்டா.

10. ஜக்காரிகா.

11. வீருகா.

12. நாகவர்மா.

13. புத்தரா.

14. மேயின்வரா.

15. சந்திகா.

16. ஹொன்னா.

17. நன்னிகம்.

18. பெயர் தெரியவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கல்வெட்டினை கண்டறிந்து, வெளியுலகிற்குத் தெரியப்படுத்திய முனைவர். வெங்கடேசன், நண்பர். திரு. கோமகனார் மற்றும் சசிதரன் குழுவினருக்கும், இதுபற்றி எப்போது எழுதினாலும், நன்றிகூறியே ஆகவேண்டும்.

கலியூர் போரில், கங்கநாட்டுத் தளபதிகள் பதினெட்டு (ஈரொன்பது ) பேரின் தலைகளையும் சீவியெறிந்து வென்றிருக்கிறார்கள் சோழத்தளபதி அப்ரமேயன் தலைமையிலான படையினர் என்பதைத்தான் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இந்தக் கலியூர் கல்வெட்டு.

சரி. இப்போது இன்னோர் விஷயத்திற்கு வருவோம்.. !

பாண்டியனை சுரம் இறக்கின பெருமான்னு, சுந்தரசோழருக்கு ஒரு புகழ்ப்பெயர் இருக்கிறதல்லவா ?

கலியூர் கல்வெட்டின்படி, சுரம் என்பதனை சிரம் ( தலை ) என எடுத்துக் கொண்டால், பாண்டியன் தலைகொண்ட பெருமான் என்றல்லவா பொருள்தருகிறது ?

அப்படியெனில், தனது ஆட்சிக்காலத்தில் நடந்த சேவூர்ப் போரில், வீரபாண்டியன் தலைகொண்ட பெருமையினை, தமது மகனான ஆதித்த கரிகாலரோடு, சுந்தர சோழரும் பகிர்ந்து கொண்டதை அல்லவா இது குறிக்கிறது.?

( ஏற்கனவே, பார்த்திவேந்திரன் வேறு அப்பட்டத்தினை சுமந்து கொண்டிருக்கிறார் தம் கல்வெட்டுகளில்.)

சோழ வரலாற்றில் விடுவிக்கப்படவேண்டிய புதிர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ.. ?!

ஆய்வாளர்கள்தான் விளக்கவேண்டும்.

எழுத்தாக்கம் :

#உளிமகிழ் ராஜ்கமல்.

  

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி