பரமேஸ்வரமங்கலம்
கைலாசநாதர் ஆலய கணபதி,(பொ.ஆ.பி 874) பரமேஸ்வரமங்கலம்
செய்யூர் வட்டத்தில் பரமேஸ்வரமங்கலம் என்ற பழமையான ஊர் அமைந்துள்ளது. இங்கே பாலாற்றின் கரையோரம் தீவு போன்ற பெரிய பாறையின் மீது உள்ளது கைலாசநாதர் ஆலயம். மழைக்காலங்களில் ஆலயத்தை தரிசிக்க பாலம் மீது தான் பயணிக்க வேண்டும்.
இந்த கைலாசநாதர் கோயில் பல்லவர் காலத்தில் "சைலேஸ்வரம் கோயில்" என்று அழைக்கப்பட்டுள்ளது. நிகரிவி சோழ சதுர்வேதி மங்கலம் என்ற இந்த ஊர் பெயர் இப்போது பரமேஸ்வரமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
நிருபதுங்க வர்மன் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் பல்வேறு காலங்களில் திருப்பணிகள் நடைபெற்று பெரிய மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. தற்போது அதிஷ்டானம் கற்களாலும் மேல்பகுதி விமானம் செங்கற்களாலும் அமைந்துள்ளது.
சிவனுக்கு எடுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் நிருபதுங்க வர்மனுடைய 15வது ஆட்சி காலத்தில் (பொ.ஆ.பி.874) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று ஆலய நுழைவு வாயிலின் வலது புறம் உள்ளது.அதில் இங்குள்ள கணபதி சிலையும் அவருக்கு ஒரு சிறிய கோயிலையும் "தண்டியக் கிழார் பாண்டிய கிராம வித்தர் மனைவி தேவச்சாணி" என்பவள் எடுப்பித்தாள் என குறிப்பிடுகிறது. மேலும் அர்ச்சந போகமாக 40 காடி நெல் அளித்துள்ளாள். இந்த நெல்லிலிருந்து நாலு வேளை உணவு படைக்கவும், மாதந்தோறும் விளக்கெறிக்கவும் அர்ச்சனைக்கும் வழி செய்துள்ளாள். கோயிலில் பூஜை செய்வோர் அவள் கொடுத்த நிவந்தனையை தொடர்ந்து செய்வதாக கூறியுள்ளதை இக்கல்வெட்டில் உள்ளது.
கைலாசநாதர் ஆலய மற்ற கல்வெட்டு விபரங்கள் அடுத்த பதிவிலும்.
(கல்வெட்டு தகவல்கள் விபரமாக அளித்த நண்பர் இராகவேந்திராவுக்கு நன்றி.)
Comments
Post a Comment