விஜயாவும் தண்டியும்
விஜயாவும் தண்டியும்
மேலைச் சாளுக்ய பேரரசன் இரண்டாம் புலகேசி வீழ்ந்ததன் பிறகு நிலைகுலைந்த வாதாபியில் சந்த்ராதித்யனுக்குப் பிறகு அவனுடைய குழந்தையின் சார்பில் ஆட்சி செய்தவள் விஜயா பட்டாரிகா. இவளுடைய ஆட்சிக் காலத்திற்குப் பிறகும் முதலாம் விக்ரமாதித்யனால் தன் அண்ணனின் ப்ரிய மஹிஷி என்று குறிப்பிடப்பெற்றவள். அவன் குறிப்பிடும் விதத்தை வைத்து இவள் பேரழகியாக இருந்திருக்கலாமென்று தெரிகிறது. விஜ்ஜிகா என்று கன்னடத்திலும் விஜயாங்கா என்று வடமொழியிலும் வழங்கப்பெற்ற இவள் மிகச் சிறந்த கவிதாயினி. காளிதாஸனுக்குப் பிறகு வைதர்பீ ரீதியில் எழிலுற யாக்கும் திறன் கைவரப்பெற்ற ஒரே கவிஞர் என்று ராஜசேகரரால் கொண்டாடப்பெற்றவள். அவள் தண்டியைப் பற்றி கூறியதாக ஒரு கவிதை உண்டு.
नीलोत्पलदलश्यामां विज्जिकां मामजानता ।
वृथैव दण्डिना प्रोक्तं सर्वशुक्ला सरस्वती ॥
நீலோத்பலதலஶ்யாமாம்
விஜ்ஜிகாம் மாமஜானதா |
வ்ருதைவ தண்டினா ப்ரோக்தம்
ஸர்வஶுக்லா ஸரஸ்வதீ ||
தண்டி தன்னுடைய காப்புச் செய்யுளில் எல்லா வகையிலும் வெண்மையான கலைமகளை வணங்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதைக் குறிப்பால் திட்டுமாப்போலே
கருங்குவளையின் இதழொத்து கருமைநிறம் கொண்ட விஜ்ஜிகா என்னும் என்னை அறியாததனாலன்றோ தண்டி வெண்மையான கலைமகள் என்று கூறாநின்றார் என்று குத்தலாகக் கூறியதாக ஒரு செய்யுள் வலம் வருகின்றது.
இதில் கேள்வி என்னவென்றால் விஜயா ஆண்ட காலம் பொயு 745 முதல் 750 வரை. அப்போதே அவளுக்கு 30-40 வயதிருக்கலாம். தண்டிக்கும் அதே வயது இருந்திருக்கலாம் அல்லது மூத்தவராக இருந்திருக்கலாம். தண்டி ராஜஸிம்ஹனுக்கு ஆசிரியராய் இருக்கும்போதே அவர் மூப்பெய்தியிருக்கலாம். அப்படியானால் அவந்த ஸுந்தரி கதாவில் அவர் மல்லையின் சிற்பத்தைக் கூறியது சரியானால் கிட்டத்தட்ட 90 வயதிற்கு மேலா அந்த நூலை எழுதியிருப்பார்....
Comments
Post a Comment