முதலாம் இராஜராஜனின் கலியூர் கன்னடக் கல்வெட்டு

         

         
        முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்       

  முதலாம் இராஜராஜனின் கலியூர் கன்னடக் கல்வெட்டு
      
          நேற்று தமிழ் ஆர்ட்ஸ் அகாடெமி சார்பில் முனைவர் நாகசாமியின் அடுக்ககத்தின் வண்டிகள் நிறுத்திமிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் நிறுவனத்திலிருந்து இரு நாள்களுக்கு முன் ஓய்வுபெற்றிருந்த முனைவர் வெங்கடேசன், கர்நாடகப் பகுதியில் தான் கண்டுபிடித்த சோழக் கல்வெட்டு ஒன்றைக் குறித்துப் பேசினார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh79JhmjVx4vRjHUmx7iMZOcXMoHXRKFQtvDFW3eFCrkFT5Hua5MHSdL0sea7aUXyOeF8kTBhEXAyCt5ZfkKWKDZ-HPTtKvryZLuGuuAcXvqq3bB4O3RdpuWZ27PsYG8OA-uQneugNyjoPn/s1600/IMG_1388.JPG
இந்தியத் தொல்லியல் துறையின் முனைவர் வெங்கடேசன்
கர்நாடகப் பகுதியின் வரலாற்றைக் குறிப்பிட்டு, அங்கு ஆட்சி செய்த வெவ்வேறு அரச வம்சங்களையும் அவர்களது கோயில் கட்டுமானங்களையும் படங்களாக வேகமாக காட்டிச் சென்றார். பிறகு முக்கியமான பகுதிக்கு வந்தார்.

ராஜராஜனது மெய்க்கீர்த்தியில் இவ்வாறு வரும்:
ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்...
இவையெல்லாம் ராஜராஜன் வெற்றிகொண்ட நாடுகள். இவற்றில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி, குடமலை நாடு ஆகியவை இன்றைய கர்நாடக மாநிலத்தையும் ஒருபகுதி தமிழக மாநிலத்தையும் சேர்ந்தவை.

கங்கபாடி என்பது மைசூர், மாண்டியா, சாமராஜ நகர், ஹெக்கடதேவன கோட்டே போன்ற இடங்களை உள்ளடக்கியது. நுளம்பபாடி என்பது கோலார், பெங்களூரு, சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. தடிகைபாடி என்பது கிருஷ்ணராஜபேட் போன்ற இடங்களைக் கொண்டது. குடமலைநாடு என்பது குடகு (கூர்க்).

கங்கபாடியை ஆண்ட கங்கர்களின் ஆளுமைக்கு உட்பட்டதுதான் பிற மூன்று இடங்களும். ஆனால் மற்ற மூன்றும் ஓரளவுக்குத் தன்னாட்சி பெற்று, கங்கர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் அனைத்து நாடுகளையும் மெய்க்கீர்த்தியில் தனியாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த இடங்களைப் பிடிப்பதற்கான போர் பலமுறை, பல இடங்களில் நடந்தது. அதில் ஒரு குறிப்பிட்ட போர் கலியூரு என்ற இடத்தில் நடைபெற்றது. இந்தப் போரில் ராஜராஜனின் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் அப்ரமேயன் என்ற தளபதி.

கலியூரு என்பது காவிரியின் வலக்கரை. அதற்கு மறுபக்கம் கங்கர்களின் அப்போதைய தலைநகராகிய தலக்காடு. எனவே தங்கள் தலைநகரம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதால் கங்கர்கள் தரப்பில் மிகப்பெரும் படை இறங்கியிருந்தது.

இந்தப் போர் குறித்து விக்கிரம சோழன் உலாவில் ஒரு வரி வருகிறது.தூதர் காப்புண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சிரமும் கொண்டு மலைநாடு கொண்டோனும் (‘சிரமும் கொண்டுஎன்பதற்குபதில் சுரமும் கொண்டுஎன்றும் படிக்கலாம்). அதாவது எதிர்த்துப் போரிட்ட பதினெட்டு (18) தலைவர்களைக் கழுத்தை அரிந்து வெற்றிகண்டு மலைநாட்டை (குடமலை நாட்டை) வெற்றிகண்டவன் என்பது பொருளில். ராஜராஜனின் ஒரு பட்டப் பெயர் பாண்டியரைச் சுரம் இறக்கிய தேவர்என்பதைப் பொன்னியின் செல்வன் படித்துத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். சுரம் இறக்கிய அல்லது சுரம் கொண்ட அல்லது சிரம் கொண்ட என்றால் கொன்றஎன்ற பொருள் வரும்.

இணையத்தில் தேடியதில் கௌசல்யா ஹார்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான விக்கிரம சோழன் உலாதான் கிடைத்தது. அதில் தன் தூதனுக்காக ஒரு பகலில் பதினெட்டு காடுகளைத் தாண்டி மலைநாட்டைக் கொண்டவன் என்று பொருள் படுமாறு மொழிமாற்றம் செய்திருக்கிறார். (The emperor, the first Rajaraja Chola for the sake of his messenger, crossed eighteen forest one day and took over the Malainaadu.) ஆனால் வெங்கடேசனின் பொருள்தான் சரியானதாகத் தோன்றுகிறது. ஒரு பகலில் 18 எதிரிகளைக் கழுத்தை அரிந்து, மலைநாட்டைக் கைப்பற்றியவன்.

இது உண்மை என்றால் யார் இந்தப் பதினெட்டு பேர்?

வெங்கடேசன் கர்நாடகத்தில் காவிரிக் கரையில் கண்டுபிடித்த கல்வெட்டு ஒன்று இதனைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு பொது யுகம் 1004. (1004 CE).
ஸ்வஸ்திஸ்ரீ

பராபவ சம்வத்சரவ சைத்ர மாசத வகுள பஞ்சமியும் ஆதித்யராகதந்து ஸ்வஸ்தி சமஸ்த ராஜ்ய நிரூபித மஹாமாத்யா பதவி விராஜமான அசகாயசிங்க தென்னகுலதிலக ஸ்வாமி நி ம்ருத்ய வத்சலம்.... ஹிதாசரண மேலே வகுளகாலே ஸ்ரீமது ராஜராஜதேவ பாதபங்கஜ பிரம்மராஜித குசமர குலமாணிக்ய கொத்தமங்கல நாதா ஸ்ரீமத் அப்ரமேயன ஜயஸ்தம்பம்...
இவ்வாறு ராஜராஜனின் படைத் தளபதியாகிய அப்ரமேயன் என்போன் வெட்டுவித்த கல்வெட்டு என்று தொடங்கி, அடுத்து தான் கொன்ற 18 வீரர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
ஹொய்சலன நாகவர்ம, மலேபர மல்ல ஓயிகா, ஹொய்சலன பெல்ஹொப்பா, சோலக சஞ்சிகா, சின்னிவாரா, மாதல எரேகங்கா, மத்தச பரமன்னனும் ரண்டகண்டனும், முண்டா, ஜககாரிகா, வீருகா, நாகவர்மா, புத்தரா, மேயின்வரா, சந்திகா, ஹொன்னா, நன்னிகம்...
போர் எப்படி நடந்ததாம்?
அனஹொரி தொக்கி பந்தனீய நாயத்தொறக்கி வஞ்சிசே புங்கி தொல்பொணமாயித்து சிவாமயமாயித்து தாக்னிகணமாயித்து ருத்ரமயவாயித்து மருள்மயவாயித்து ராயசகோணாமயவாயித்து தொட்டநேர நொந்தேனி நிகழ்திப்ப அப்ரமேயன் அக்கரே இக்க சொச்சங்களே நொரே பண்ணதாத்மா...
உடல்களை வெட்டித் துண்டம் துண்டமாகப் போட்டதால் பிணங்கள் அழுகத்தொடங்கின. நரிகள் அவற்றைத் தின்னப் பரவின. அந்த இடம், பூதகணங்கள் ஆட்டம்போடும் இடமாயிற்று. வல்லூறுகள் வானில் வட்டமிடும் இடமாயிற்று. இருள் பரவியது. காக்கைகள் மிச்சங்களைத் தின்ன வந்தன.



இப்போது இந்த இடத்தில் ஒரு கிராமம் குடியேறியுள்ளது. அங்கு மண்ணைத் தோண்டினால் எலும்புகளாக வருகின்றனவாம். பொதுவாக அப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்டக்கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். ஆனால் நிலம் விற்கும் விலையில்...

அந்த எலும்புகள் சிலவற்றைச் சேகரித்து அவற்றின் காலம் என்ன என்பதைக் கணிக்க வெங்கடேசன் அனுப்பினாராம். முதல் கணிப்புகளின்படி, எலும்புகள் படிமங்களாகிவிட்டன (fossilised) என்றும் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முந்தையவைதான் என்றும் மேலும் வேறு பரிசோதனைகளைச் செய்ய அவை அனுப்பப்பட்டுள்ளன என்றும் சொன்னார்.

(
நான் செய்திருந்த ஒலிப்பதிவிலிருந்து கேட்டு எழுதியது. சில இடங்களில் கேட்டு எழுதிய கல்வெட்டு வார்த்தைகளில் கட்டாயம் தவறுகள் இருக்கும்.

இதை பகிர்ந்த நண்பர் திரு. சசி அவர்களுக்கு நன்றி....


Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு