திருத்தினைநகர்

 திருப்பம் தரும் திருத்தினைநகர்

             முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன்

      

         உலக மக்கள் வேற்றுமையின்றி பரந்த மனப்பான்மையோடு  வாழ வேண்டுமே ஆனால் அது ஆன்மிகத்தால் மட்டுமே முடியும் என்பதை  உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். குறிப்பாக தமிழகத்தில் தோன்றிய  சமய பெரியோர்கள் அனைவருமே மக்களுக்கு செய்யும் தொண்டை மகேசனுக்கு செய்யும் தொண்டாகும் என்று கூறி மக்களை நல்வழிபடுத்தி வந்தனர். மேலும் மனித உள்ளத்தில் இருக்கும்  தான் என்ற அகங்காரத்தை  நீக்கி அன்பியல் உணர்வு வளர்க்கப்பட்டால்  தான் உலக மக்கள் அமைதியை பெறமுடியும். இதை போதிக்கும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்  உருவாக்கப் பட்டவைகள் தான்  கோயில்களாகும்.

திருத்தினைநகர் அமைவிடம்

     இவ்வூர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் கடலூர்  to சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மேற்கே 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருத்தினை நகர் என்றே குறிபிடப்பட்டுள்ளது.

கோயில் வரலாறு

        கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் வாழ்ந்தவரான சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமைக்குரியது இக்கோயில். இப்பெருமானை சுந்தரர் தமது பாடலில்....
       குற்றமில்லியைக் கற்றையஞ் சடைமேல்
       ஆறுதாங்கிய அழகனை அமரர்க்கு
       அரியசோதியை வரிவரால் உகளும்
       சேறுதாங்கிய திருத்தினை நகருள்
      சிவக்கொழுந்தினைச் சென்றடைமனனே.
என்று திருத்தினை நகர் கோயிலில் உள்ள மூலாவரான சிவக்கொழுந்தீ ஈஸ்வரரை போற்றுகிறார். இதன் மூலம் பல்லவர்கள் காலத்திலேயே இங்கு கோயில் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. பல்லவர்களுக்கு பிறகு  தமிழகத்தை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்டது. குறிப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழன் , வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், விக்கிரம பாண்டியன் , கிருஷ்ண தேவராயர் போன்றோர் இக்கோயிலுக்கு நில மற்றும் பொன் தானங்களை வழங்கியுள்ளனர். மேலும் சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பிற்க்கால பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் பிரதோஷ மூர்த்தியின் செப்புத்திருமேனி ஒன்றை வழங்கியுள்ளான். இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் உள்ளன.

தலபுராணம்

       முன்பு ஒரு காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த பெரியான் என்ற ஏழை பள்ளன் தமக்கு இருந்த சிறு நிலப்பகுதியில் திணை விதைப்பதற்காக ஏர் கொண்டு உழுது கொண்டு இருந்தான். சிவபிரான் பெரியானின் வறுமையை போக்க கருதி வயதான அடியவர் உருவம் தரித்து பெரியான் உழுது கொண்டிருக்கும் நிலத்தை நோக்கி வந்தார். அடியவரை கண்ட பெரியான் ஏரை நிறுத்தி விட்டு தாங்கள் யார் எங்கிருந்து வருகிறிர்கள் என்று கேட்டான். வயதான பெரியவரோ தமக்கு கடுமையான பசி களைப்பாக இருக்கிறது என்றார். மேலும் உணவு ஏதேனும் இருந்தால் தாருங்கள் என பெரியானை பார்த்து கேட்டார்.  ஐயோ அடியவரே இப்பொதுதான் நான் கொண்டுவந்திருந்த காலை உணவை உண்டேன் வேறு உணவும் என்னிடம் இல்லை என்றான். ஆனால் முதியவரின் பசிக்களைப்பை கண்ட பெரியான் மாடு பூட்டிய ஏரை அப்படியே விட்டு விட்டு முதியவர் இடம் சென்று தாங்கள் இங்கேயே இருங்கள் எனது வீடு அருகமையில் தான் உள்ளது எனவே எனது வீட்டிற்கு சென்று தங்களுக்கு தேவையான உணவை கொண்டு வருகிறேன் என்று கூறி தமது இல்லம் நோக்கி நடந்தான்.
         கொஞ்ச நேரத்தில் உணவு கொண்டு வந்த பெரியான் அதிர்ந்தான். காரணம் தமது வயலில் திணை விதைக்கப்பட்டு விளைந்து அறுக்கும் தருவாயில் இருப்பதை கண்டு வியந்து நின்றான். மேலும் வந்த பெரியோரையும் தேடித் பார்த்தான் காணவில்லை. பசியோடு வந்த பெரியோருக்கு உணவு கொடுக்க முடியாமல் போனதே என்று கருதி வேதனை யுற்றான். உடனே சிவபிரான் பெரியானுக்கு தந்து அவனது ஏழ்மையை அகற்றினார். மேலும் ஒரே நாளில் பெரியானுக்காக திணையை விதைத்து அறுவடை பக்குவத்திற்கு விளைவித்து கொடுத்தமையால் இவ்வூர் திணைநகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. எனவே வாழ்வில் தோற்றவர் களுக்கு திருப்பம் தரும் திருத்தலமாக இக்கோயில் விளங்குகிறது. இறைவன் சிவக்கொழுந்தீசர் இறைவி ஒப்பில்லா நாயகியாக இக்கோயிலில் பக்த்தர்களுக்கு காட்சியளிகின்றனர்.

ஜாம்பவ தீர்த்த மகிமை.

         இக்கோயிலின் வடக்குபகுதியில் உள்ள குளம் ஜாம்பவ தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வீரசேனன் என்ற மன்னனுக்கு தீராத தொழுநோய் தொற்றிக்கொண்டது. இதனால் வேதனைவுற்ற வீரசேனன் தமது நாட்டை விட்டு வெளியேறினான். பிறகு பல இடங்களில் அலைந்து கொண்டிருந் இம்மன்னன் திணைநகர் வந்து தங்கினான். நாள் தோறும் ஜாம்பவ தீர்த்தத்தில் நீரடி வந்தான் விளைவு வீரசேனனுக்கு இருந்த தொழுநோய் நீங்கி தமது முன்பு இருந்த அழகிய உடலை பெற்றான். அந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்டது ஜாம்பவ தீர்த்தம்.

கோயில் அமைப்பு

    கிழக்கு நோக்கி கட்டப்பட்ட சிவன் கோயில். கருவறையில் சிவலிங்கம் உள்ளது. கோயிலின் முன்புறம் பலிபிடம் கொடிமரம் உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் கோயிலின் முன்புறம் உள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. தல விருட்சம் கொன்றை மரமாகும்



Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு