சிதம்பரம் - ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரம்
சிதம்பரம் கோவில் நூலகக் கல்வெட்டுகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
நடராஜா கோயில் கல்வெட்டுகள், கோயில் வளாகத்தில் உள்ள கையெழுத்துப் பிரதிகளின் நூலகத்தைக் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேதியிட்ட இரண்டு கல்வெட்டுகள் பழைய கோயில் நூலகத்தை மறுசீரமைப்பதைக் குறிப்பிடுகின்றன.
ஹார்ட்மட் ஷார்ஃப் கருத்துப்படி, குறிப்பிடப்பட்ட பழைய நூலகம் 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருக்கலாம். கோவிலில் இருபது நூலகர்கள் பணியமர்த்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதில் எட்டுப் பழைய கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்து புதிய பதிப்புகளை உருவாக்கினர்; இருவர் அந்த நகல் அசலுக்குப் பொருந்தியதைச் சரிபார்த்து, நான்கு கையெழுத்துப் பிரதிகளை முறையாகச் சேமிப்பதை நிர்வகித்தனர்.
தென்னார்காடு மாவட்டம்
சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே வட கோபுரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 6 வரி சிதைந்த கல்வெட்டு.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு பல க்ரந்தங்கள் பார்க்கவும் எழுதவும் அவிழ்த்து …தேவர் …ஞானஸமுத்ரதேவர் … ற்ற … க்கு உள்வரி யெழுதிக் கொ[டு*]த் … ன திஸ்யாகத்துக்கும் வ்ய…ப்பிக்கவும் வாசிக்கவும் காரம்பிச் செட்டுச் சொக்கத் தே … ழகந்த . றத்து ஸுப்ரமண்யன். புளிங்குறுபட் … …
2.ருமாள். வங்கிப்புறத்து வினாயகபட்டன். காஞ்சிகுறி திருவெண்காவுடையா …பொத்தகங்கள் அவிழ் … … றை வித்யாபதி பட்டர். தி…சறை முதலியார். இந்…ற மங்க … …கோம[ட]த்து திருவானைக்காவுடையார். எழுதும் பேர்க்கு கோமடத்து மண்டலபுருசஷன். வங்கிபுறத்துத் திருநம் … ஆழ்வார்.
3.குரோவி திருவலஞ்சுழி உடையார்.…வினாயகதேவர் நொரட்டூர் வெள்ளைப்பிள்ளை. காஞ்சி …நிர்த்தராஜன் ஆழ்வான். திருவல…கு குண்டூர்த் திருவம்பல … க்கன் …புராணத்துக்கு முப்ரால் பெரியதேவர். ஜோதிஷ ஸாஸ்த்ரத்துக்கு குரோவி ஆயத்[ராஜ]ன். ஆகப் பேர் இருபதுக்கு எழுதின ஏவற் தீட்டுப்படி அனைத்துலகுங் கொண்டருளிய … … ணி … ஒன் … னூற்று அறுவரும்
4. வில்லவதரையன் ஓலை தென்னவன் ப்ரஹ்ம……க்ரம சோழ ப்ரஹ்மராயரும் ஜயதுங்கப் பல்லவரையரும் குருகுலத்தரையரும் உடையார் திருச்சிற்றம்பலமுடையார் … ண்காணி செய்வார்களும் … ஞ் செய்வார்களும் சாமுதாயஞ் செய்வார்களும் கோயில்னாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் பண்டாரப் பொத்தகமுடையார்களும் கணக்கரும் … [கண்]டுவிடு தந்ததாவது இரா[ஜாதிராஜ] … … மேல்பக்கத்து ஸரஸ்வதி பண்டாரத்துடனே
5. சேர தேவர் ஸு[வாமி]தேவர் செய்வித்த … ஸரஸ்வதி பண்டாரஞ் செய்விக்குமிடத்து முன்[பத்]தை ஸரஸ்வதி பண்டாரத்தில் எழுதிக்கிடக்கிற க்ரந்தங்கள் இப … … யச் ..[செ] … து இதுக் … ன்று போதுகிற பேர்ரிட்டும் முன்பு தேவை செய்து போதுகிறபடிகளிலே நின்று தேவை செய்து போதக்கடவார்களாகவும் இப்பண்டாரத்து …ங் … … ரிக க்ரந்தங்கள் …. க்ரந்தங்கள் இ…லெ இந்த க்ரந்தங்கள்
6.எழுதி சேர்க்கவேண்டுகையில் … … த்துடனே சேர் … கவு[ம்] வேண்டும் இடம்பெற வகுத்து … காணியே பண்டாரத்தி … ழுதின … … இருக்கு … னவும் இப்பண்டாரத்தில் இக் க்ரந்தங்கள் எழுத[ப்] பேர் பத்து முன்பத்தைப் பண்டாரத்தில் உள்ள க்ரந்தங்கள் தேஸா[ந்த்ர]ங்களினின்றும் … வி … க்கவும் இ … … டியாலே பண்டார … …
விளக்கம்:
நூலகத்திற்கு பல நூல்களைப் பார்த்திடவும், எழுதிடவும், நூல்களைப் பிரித்துக் கட்டவும் ஞானசமுத்திர தேவர் எழுதிக் கொடுத்த உள்வரி விவரம் யாதெனில் திஸ்யாகம், வாசிப்பு ஆகியவற்றிற்காக சொக்கத் தே _ _ _ , சுப்ரமணியன், புளிங்குறு பட்டன், _ _ _ பெருமாள், வங்கிப்புறத்து வினாயக பட்டன், காஞ்சிக்குறி திருவெண்காவுடையான் ஆகியோரும் நூல்களைப் பிரித்துக் கட்ட _ _ றை வித்யாபதி பட்டர், தி_ _ _ சறை முதலியார், _ _ _, கோமடத்து திருவானக்காவுடையான் ஆகியோரும் ஏடுஎழுதும் பொறுப்பிற்கு கோமடத்து மண்டல புருஷன், வங்கிபுறத்து திருநம்_ _ _ஆழ்வான், குரோவி திருவலஞ்சுழி உடையார், _ _ வினாயக தேவர், நொரட்டூர் வெள்ளைப் பிள்ளை, காஞ்சி _ _ _ நிர்த்தராஜன் ஆழ்வான், திருவம்பல_ _க்கன் ஆகியோரும், _ _ _ புராணத்திற்கு முப்ரால் பெரியதேவர், ஜோதிடத்திற்கு குரோவி ஆயத்ராஜன் ஆகியோர் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆக இந்த இருபது பேருக்கு கையெழுத்திட்ட ஓலை ஆவணப்படி அனைத்துலகுங் கொண்டருளிய (சடவர்ம சுந்தர பாண்டியன் என உய்த்துணரப்பட்டுள்ளது) மேலும் தெளிவாக அறியமுடியாதபடி கல்வெட்டு சிதைந்துள்ளது.
வில்லவத்தரையன் விடுத்த ஓலைஆவணம் யாதெனில் தென்னவன் பிரம்ம_ _ _, (வி)க்ரம சோழ பிரம்மராயரும், ஜயதுங்க பல்லவரையரும், குருகுலத்து அரையரும், உடையார் திருச்சிற்றபலமுடையார் (இறைவன் நடராஜன்) _ _ _ கங்காணி செய்பவர்களுக்கும், கோயில் நிர்வாகம் (ஸ்ரீகாரியம்) செய்பவர்களுக்கும், ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்களுக்கும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், நூலக வரிப்புத்தகம் பேணுபவருக்கும், கணக்கருக்கும் வழிகாட்டுதல் தந்தது யாதெனில் இராசாதிராசன் மாளிகை அமைந்த மேல்பக்கத்து நூலகத்துடன் சேர்த்து வேந்தரின் அரசகுரு எழுதிய நூல்களை நூலகத்தை ஏற்படுத்தும் போது முன்னம் நூலகத்தில் எழுதிவைத்துள்ள நூல்களோடு சேர்க்க வேண்டும்.
முன்னர் எவ்வாறு தேவையானவற்றை செய்து கொண்டு போகிறபடியிலேயே இருந்தனரோ அப்படியே இப்போதும் தேவையானவற்றை செய்யக் கடவார்களாக. இந்த நூல்களை எழுதிச் சேர்க்கின்ற போது அவற்றுடன் அரசகுருவின் நூல்களும் அதில் இடம்பெறச் செய்து (தெளிவில்லாதபடி சிதைந்துள்ளது). இந்த நூல் களஞ்சியத்தில் இந்நூல்களை எழுதப் பத்து பேரை அமர்த்தி முன்பு இருந்தது போல வெவ்வேறு இடங்களில் இருந்து நூல்களைக் கொண்டு வந்து இப்படியாக நூலகத்தை நடத்திச் செல்ல வேண்டும்.
சிதம்பரம் நடராசர் கோவில் மூன்றாம் திருச்சுற்றில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு வடக்கே மேற்கு கோபுர அடுக்குகளுக்கு அருகே உள்ள மண்டபத்தில் உள்ள 8 வரி கல்வெட்டு. நடுப்பகுதி கட்டடத்தில் மறைந்துள்ளது.
1. ஸ்வஸ்தி ஸ்ரீ த்ரிபுவனச் சக்ர.. ருவையாறுடையானும் மதுராந்தக … …நும் ஆளுடையார் கோ … த் திருமாளிகைக்கூறு தில்லைஅம்பலப் பல்லவரையனும் ஸ்ரீகாரியஞ் செய்வார்க்ளும் ஸாமுதாயஞ் செய்வார்களும் கோயில்நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக்கூறு செய்வார்களும் செய்யத் திருவாய்மொழி … கோயிலில் இராசா[தி]ரா… மாளிகை மேலைத் திருமாளிகையில் ஸுப்ரமண்யப் பிள்ளையார் எழுந்தருளி இருக்கிற இடத்துக்கு வடக்காக … … …
2. ச் செய்த ஸரஸ்வதி பண் … … உடையார் ஸ்வாமி தேவர் எழுதிவித்தனவாய்ப் புகுந்த பொத்தகங்களும் இவ் … [பெ] … ஸித்தாந்தாகரமும் உள்ளிட்டன எழுதின பொத்தகங்களும் நின்பை ஆட்கொண்டான் பட்டனும் கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும் கோ … பட்டனும் தபஸ்ஸிவக …சம்பந்தன் …ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றம்பலமுடையானும் அவிழ்த்துக் கட்டவும் …ஜீர்ண்ணத்தவை …
3.எழுதவும் இவையும் ஆளுடை … ம் … ன் இலைச்சினை … ணிய … இவனும் புல்லூருடையா[ன்] திருநீலகண்டன் மெய்காப்பானாய் இ … பல .. கோக்கவும் இவர்களுக்குக் கொற்றுக்கும் புடவை முதலுக்கும் இவர்களில் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொ…னுக்கு … … நாள் ஒன்றுக்கு நெல்லு தூணியும் ஆட்டைக்கு காசு நாலும் …லிக்கு… [உய்]யக்கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு … பதக்கும் ஆட்
4. ட்டைக்கு காசு இரண்டும் அலஞ்… …டைவானுக்கும் பேர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுத் தூணியும் ஆட்டைக்குக் காசு நாலும் இராமபட்டனுக்கு நாள்
ஒன்றுக்கு நெல் முக்குறுணி நானாழியும் ஆட்டைக்குக் காசு மூன்றரையும் புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப் பதக்கு நானாழியும் … … க வந்த நெல்லுங் காசும் பெறவும் பெறுமிடத்து உடையார் த்ரிபு[வன] வீரஈஸ்வரமுடையார் கோயில் திருமலையில் [பெ]ரிய நாயனாரையும் நாச்-
5. சியாரையும் எழுந்தரு[ளுவி]த்த வி … [ள] நாட்டு [வடநா]லூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தெழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாய் வருகிறபடி தவிர்ந்து பழம்படியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பேராகவும் இன்நிலம் ஆளுடையார்க்கு அந்தரா … தேவதான இறையிலியாக இடவும் இன்னிலத்துக்கு முன்பு முதல் … ண்டு வருகிறபடியே எண்ணூற்றொருபதின் கல நெல்லு கொண்ட முதலும் இன் நெல்லில் மூன்று
6. கூறிட்ட ஒரு கூற்றில் … … றவும் திருநாள் … க்கங்களில் இ … கரி … ப் பெறவும் இப்படி … இத்திருமாளிகையி[ல்] ஸுப்ரமண்யப் பிள்ளையார் … உடைப்பற்றக் கல்வெட்டவும் விக்கிரமசோழன் திருமாளிகைத் திருக்கை ஒட்டியில் க்ரந்தங்களிலும் தமிழ்களிலும் எழுதவேண்டுவன இவர்களில் வேண்டுவார் [பு]க்கு எழுதி ஒக்கப் பார்த்து இவை இ ஸரஸ்வதி பண்டாரத்துக்கும் கோயிலில் திருக்கை ஒட்டிக்கு முதலாக ஒடுக்கவும் செய்யக் கடவதாக வே[ண்டு]மென்று … … ஸ்வாமிதேவர்
7. செய்தமையில் இப்படிக் … ம் இப்படி செய்யவும் ஆரி[யன்] இராமபட்டன் …றை கைத் தீ … ளுக்குள்ளும் புகக்கடவனாகவும் பண்ணுவது எழுதினான் தி …
ராஜெந்த்ர தே.. ….வேளான் என்றும் இப்படி திருவாய் மொழிந்தருளினார் … … இவை வீராடராய னெழுத்தென்றும் [சீ]த்தாராயனெழுத்தென்றும் இவை விசயராய னெழுத்தென்றும் இவை அங்கராய னெழுத்தென்றும் இவை தொண்டைமா னெழுத்தென்றும் ப்ரஸாத -
8. ஞ் செய்தருளின செய்யும்படி ------------
விளக்கம்:
திரிபுவனச் சக்கரவத்திகள் எனத் தொடங்கி கல்வெட்டு சிதைந்துள்ளதால் வேந்தனின் பெயர், ஆட்சி ஆண்டு அறியமுடிவில்லை. திருவையாறுடையனும், மதுராந்தக_ _நும், ஆளுடையார் கோமடத் திருமாளிகைக்கூறு தில்லை அம்பலப் பல்லவரைனும், கோயில் திருப்பணி செய்பவரும், ஊர்ப்பொது நிர்வாகம் செய்பவரும், கோயில் தலைமை ஏற்றிருப்பவரும், தமக்கான பங்கைப் பெறும் கோயில் உட்பிரிவு அர்ச்சகர்களுக்கும், கோயிலில் இராசாதிராசன் மாளிகை அமைந்த மேற்கு திருமாளிகையில் சுப்பிரமணிய பிள்ளையார் கோயில் இருக்கிற இடத்திற்கு வடக்காக ஏற்படுத்திய நூலகத்தில் வேந்தரின் அரசகுருவானவர் எழுதியது என்று வந்து சேர்ந்த நூல்களும், இவ்வாறு வந்து சேர்ந்த நூல்களில் சித்தாந்தாகாரம் உள்ளிட்டவையான நூல்களை நின்பை ஆட்கொண்டான் பட்டனும், கௌதமன் உய்யக் கொண்டான் பட்டனும், கோ_ _ _ பட்டனும், தபஸ்ஸிவக _ _ சம்பந்தன், _ _ ணலூர் கிழவன் திருஞானசம்பந்தன் திருச்சிற்றப்பலமுடையான் ஆகியோர் பிரித்துக் கட்டுவதற்கும் அழிந்து சிதைந்த நூல்களை எழுதுவதற்கும் அத்தோடு ஆளுடை_ _ _ம், இலைச்சினை_ _ _ ணியன், புல்லூருடையான் திருநீலகண்டன் நூலகத்திற்கு மெய்க்காப்பானாய் இருந்து பல நூல்களை கோர்க்க வேண்டும். இவர்களுடைய தவசக் கூலிக்கும், ஆடை முதலுக்கும் செய்யவேண்டியது யாதெனில் இவருள் நின்பை ஆட்கொண்டான் பட்டனுக்கும் கௌதமன் உய்யக் கொண்டானுக்கும் நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும், உய்யக் கொண்டான் பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு அளவும் ஆண்டிற்கு காசு இரண்டும் பெறக்கடவதாக.
_ _ _ ஆள் ஒருவர்க்கு நாள் ஒன்றுக்கு தூணி அளவு நெல்லும் ஆண்டிற்கு நாலு காசும் தரவேண்டும். இராம பட்டனுக்கு நாள் ஒன்றுக்கு முக்குறுணி நானாழி நெல்லும் ஆண்டிற்கு காசு மூன்றரையும் தரப்படவேண்டும். புல்லூருடையான் திருநீலகண்டனுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு நானாழி தரப்படவேண்டும். _ _ _ வந்த நெல்லையும் காசையும் பெற்று அப்படி வந்தவற்றை உடையார் திரிபுவன வீர ஈசுவரமுடையார் கோயில் இறைவனையும் இறைவியையும் எழுந்தருளச் செய்து வி_ _ளநாட்டு வடநாலூரான குலோத்துங்க சோழ அரசூர் நிலம் இருபத்தேழே இரண்டுமா அரைக்காணி முந்திரிகையும் இறையிலியாக வருவதை கருத்தில் கொள்ளாமல் தவிர்த்து பழையபடியே காணியாய் விஸ்வாதிகவிவேக மங்கலமென்னும் பெயராலேயே இந்நிலம் இறைவர்க்கு அந்தராயமாக தேவதான இறையிலியாக கொடுக்க இன்னிலத்திற்கு முன்னம் வருகிறபடியே 810 கல நெல்லைப் பெறும் போது இதில் மூன்றில் ஒரு பங்கை _ _ _. கோயிலில் சுப்பிரமணிய பிள்ளையார் உரிமை பெற கல்வெட்டாக வெட்டுவதற்கும் விக்கிரம சோழன் திருமாளிகையில் அமைந்த திருமறை ஓதுவார் மண்டபத்தில் சமஸ்கிருத நூல்களிலிருந்தும் தமிழ் விளக்க நூல்களிருந்தும் எழுத வேண்டியவற்றை எழுதக்கொள்ள விரும்புவோர் வந்து எழுதிக்கொள்ள, ஒத்துப் பார்த்து படியெடுக்க நூலகத்திற்கும் கோயில் திருமுறை ஓதுவார் மண்டபத்திற்கும் முதலாக கட்டணம் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசகுரு முன்ஏற்பாடு செய்ததால் அதன்படியே செய்ய ஆரியன் இராம பட்டனுக்கு ஆணைஓலை எழுதினான் இராசேந்திர தேவ வேளான். இதை வழிமொழிந்தார் _ _ _. இவை விராடராயன், சீத்தாராயன், விசயராயன், அங்கராயன், தொண்டைமான் ஆகியோரால் அரசாணைப்படுத்தியபடியே செய்யுமாறு கல்வெட்டு வடிக்கக்கடவது.
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
க்ரந்தம் – நூல்; அவிழ்த்துக் கட்டு – ஏட்டைப் பிரித்துக் கட்டு; உள்வரி – அந்தராயம்; ஜோதிஷ – ஜோதிடம்; ஏவற் தீட்டு – ஆணை ஓலை; சாமுதாயம் செய்வார் – ஊர்ப் பொது நிர்வாகம் செய்பவர்; திருமாளிகைக்கூறு – கோயில் உட்புறமாக உள்ள கட்டடங்கள், மண்டபம், சுற்றுக் கோயில்கள் ஆகியனவற்றில் வேலை செய்து தம் பங்கைப் பெறும் அர்ச்சகர்; பொத்தகம் – நூலக வரிப் புத்தகம்; போதுகிறபடி – போகிறபடி; நின்று – இருந்து; தேசாந்திரம் – வெவ்வேறு இடம்.
திருக்கை ஓட்டி – கோயிலில் திருமுறை ஓதுவார் மண்டபம்; சுவாமி தேவர் – அரசகுரு; புகுந்த – வந்த; ஒக்க பார்த்து - ஒப்பிட்டு பார்த்து; கொற்று – தவசமாக பெறும் கூலி, daily wages received as grains; முதல் - கட்டணம், payment by mode of cloth; தீட்டு – எழுதிக் கொடுத்த ஓலை; பண்டாரக் கண்காணி – நூலக அதிகாரி; புடவை – ஆடை, துணி; சாமுதாயம் செய்வார் – ஊர்ப்பொது நிர்வாகம் செய்வார்; பிரசாதம் செய்தருளினபடி – அரசாணைப்படி; ஜீர்ண்ண – அழிந்து, சிதைந்த
(A.R. B. 168 of 1961-62), இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை.
டாக்டர் நிரஞ்சனாதேவி.ஆர்., 'அறிவியல் தமிழகம்', மீனா கோபால் பதிப்பகம், சென்னை, 2006
Comments
Post a Comment