முலைமகவு
முலைமகவு
திருக்கோயிலூரில் உள்ள முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு ஒன்று அளப்பரிய செய்தியை உடையது. சுந்தர சோழன் இறந்த பின்னை வானவன் மாதேவி அவனோடு உடன்துறக்கம் புக்க செய்தியை மனமுருகும் வகையில் தருவது. அப்படி கூறும்போது
செந்திரு மடந்தைமன் சீராஜ ராஜன் இந்திரசமானன் இராஜசர்வஞ்ஞனெனும் புலியைப் பயந்த பொன்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும் தலைமகற் பிரியாத் தையல் நிலைபெறுந் தூண்டா விளக்கு........ ............மணிமுடி வளவன் சுந்தரசோழன் மந்தரதாரன் திருப்புய முயங்குந்தேவி'
என்ற புலியைப் பயந்த பொன்மானான அவள் முலைமகப் பிரிந்து உடன்போகியதைத் தருகிறது. இதில் குறிப்பிடப்பட்ட முலைமகவு ராஜராஜனே என்றே துணிந்துள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க கருத்து யாதெனில் முலைப்பாலருந்தும் நிலையில் ராஜராஜன் இருந்திருந்தால் ஐந்து வயது வரை இருக்கலாம். அதன்பிறகு பதினைந்தாண்டுகள் உத்தம சோழன் ஆட்சி இருபத்தொன்பது ஆண்டுகள் ராஜராஜனின் ஆட்சி என்று நாற்பத்துநான்கு ஆண்டு களோடு சேர்த்தால் வெறும் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே ராஜராஜன் உயிரோடிருந்ததாகக் கொள்ள வேண்டும். மேலும் பால் மணம் மாறா பருவத்தில் சிற்றப்பாவின் ஆசையறிந்து விட்டுக்கொடுக்கும் நிலையிருந்திருக்கும் என்பதும் நெருடலாகவே உள்ளது.
இதற்கு இரண்டு தீர்வுகள். ஒன்று முலைமகவு என்பது கவிஞரின் உயர்வு நவிற்சியாக வேண்டும். பதின்பருவத்து ராஜராஜனை முலைமகவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். குடந்தை ஸேதுராமன் ராஜராஜன் பொயு 947-இலேயே பிறந்து விட்டதாகக் கருதியிருக்கிறார். அது ஆய்வுக்குரியது மட்டுமே.
இரண்டாவது ராஜராஜனுக்கும் பிறகு முலைமகவாக வானவன் மாதேவிக்கு ஒரு மகவிருந்திருக்கலாம். அதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம்.
ReplyForward |
Comments
Post a Comment