கடலூர் - நுண் கற்கால கற்கருவிகள்
கடலூர் மாவட்டத்தில் 8000 ஆண்டுகள் பழமையான நுண்
கற்கால கற்கருவிகள் கண்டுபிடிப்பு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒடப்பன் குப்பம், நடியப்பட்டு ,
பாலக்கொல்லை , மருங்கூர் போன்ற ஊர்களில் நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள்
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கள ஆய்வு
ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறையைச் சார்ந்த உதவிப் பேராசிரியர்
முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் நடியப்பட்டு கிராமத்தை சார்ந்த
மாணவர்கள் கூழாங்கற்கள் மற்றும் குவாட்சைட் போன்ற மூலக் கற்களைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட சில கற்கருவிகளை அனுப்பிவைத்தனர். அதன்அடிப்படையில்
முத்தாண்டிக்குப்பம் – விருத்தாசலம் சாலையில் அமைந்துள்ள நடியப்பட்டு ஐயனார்
கோயிலின் மேற்கு , தெற்கு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஐயனார்
கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள பெரிய ஓடையின் மேற்கு கரையை ஒட்டியப் பகுதியில்
வெள்ளைநிற கூழாங்கற்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சிறிய வகை கற்கருவிகள் மண்ணின்
மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்டன.
நுண்கற்கால கற்கருவிகள்
சுமார் நான்கு கிலோமீட்டர் பரப்பளவில்
நடத்தப்பட்ட கள ஆய்வில் சிறிய அளவிலான கூர்முனை கருவிகள் ( POINTS ) , செதுக்கு கருவிகள் ( SCRAPPER ) , கற்சீவல்கள்
( FLAKES ) , தட்டுவடிவ கற்கருவிகள் ( DISCOIDS ) , சிறியவகை கை கோடரி ( HAND AXE
) , அறுப்பதற்கு ஏற்ற சிறிய கத்திகள் ( BLADES ) , சுரண்டிகள் ( SCRAPPERS ) ,
பிறைவடிவ ( LUNATES ) வடிவிலான கருவிகள்
கிடைத்துள்ளன. இக்கருவிகள் வெள்ளைநிற கூழாங்கற்கள் ( WHITE CHALCEDONEY ) மற்றும் கண்ணாடி போன்று ஒளி ஊடுருவக் கூடிய ஸ்படிகக்
கற்களின் ( WHITE CRYSTAL ) வகையை சார்ந்த கூழாங்கற்களில் இருந்து தயாரிக்கப்பட்ட
வைகளாகும். இச்சிறியவகை கற்கருவிகளை அம்பின் முனைகளில் இணைத்து மெல்லிய தோலினை
கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடவும் அவைகளின் சதைகளை அறுப்பதற்கும்
இக் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நீளமான குச்சியின் முனைகளில் இணைத்து ஈட்டி போன்ற ஆயுதத்தை
உருவாக்கி தூரத்தில் இருக்கும் விலங்குகளை
வேட்டையாடவும் இக்கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக பழைய கற்கால
மக்களால் தயாரிக்கப்பட்ட கரடுமுரடான கல் ஆயுதங்களைக் கொண்டு விலங்குகளை விரட்டிச் சென்றுதான்
வேட்டையாட முடியும். இதனால் அதிகமனித உழைப்பும் விலங்குகளால் ஏற்படும் மனித
உயிரிழப்பும் தவிற்க முடியாததாக இருந்தது. ஆனால் நுண்கற்கால மக்கள் தயாரித்த கற்கருவிகள்
சிறியனவாக இருந்தால் இவைகளை அம்பு , ஈட்டியின் முனைகளில் பொருத்தி தூரத்தில்
இருந்து வேட்டையாடுகின்ற போது விலங்குகளின் உடலைதுளைக்கும் வகையில் மிகக் கூர்மையானதாக
இருந்தது. இதனால் மனித உயிரிழப்பும், அதிக உடலுழைப்பும் தவிர்க்கப் பட்டது. எனவேதான்
இக்காலக்கட்டத்தை மானுட அறிவு வளர்ச்சியின் படிநிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும்
வேட்டை சமூகமாக இருந்த நுண்கற்கால மக்கள் சிறிய அளவிலான கற்கருவிகள் பொருத்தப்பட்ட
வில்லம்பு மற்றும் ஈட்டிகளைப் பயன்படுத்துவதற்கு
எளிதாக இருந்ததால் தங்களின் சுய பாதுகாப்பிற்காக இவ்வாயுதங்களை தங்களோடு நிலையாக
வைத்துக் கொண்டனர். தற்போது நடியப்பட்டு கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள
நுண்கற்கால கற்கருவிகள் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான தாகும்.
நுண்கற்கால மக்களின் வாழ்க்கை நிலை
இந்த நுண்கற்கால மக்கள் தங்களுக்கென நிலையான வாழ் விடங் களை அமைத்துக்
கொள்ளாமல் நாடோடிகளாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால் இவர்கள் நெருப்பின் பயனை அறிந்திருந்தனர்.
விலங்குகளை வேட்டையாடுவதுடன் மீன் பிடிக்கும் தொழிலையும் இவர்கள் கற்றிருந் தனர்.
மேலும் இறைச்சி , மீன் , கிழங்கு போன்றவற்றைக் கொடுத்து பண்டமாற்று முறையில்
நுண்கற்கருவிகளை இவர்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர்கள்
கூருகின்றனர்.
நுண்கற்கால பண்பாடு
எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த நுண்கற்கால மக்களின் பண்பாட்டின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் உள்ள
விலங்கல்பட்டு, பத்திரக்கோட்டை , நடுவீரப்பட்டு , குமாரப்பேட்டை , மருங்கூர் , வீரசிங்கன் குப்பம் , முடப்பள்ளி
, மேலிருப்பு , பழையப்பட்டினம் ,
ஒடப்பன்குப்பம் , பாலக்கொல்லை போன்ற ஊர்களில் பரவியுள்ளதையும் கள ஆய்வில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment