விருத்தாசலம் - தர்மநல்லூர்
விருத்தாசலம் அருகே தமிழ் பிராமி எழுத்துக்கள்
கண்டுபிடிப்பு
முனைவர் J.R. சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர்
, வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – ஆத்தூர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான
தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையின் தெற்கு பகுதியில்
அமைந்துள்ளது தர்மநல்லூர் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த குமார் என்ற மாணவர் பெரியதோப்பு
என்ற இடத்தில் உள்ள பள்ளமான பகுதியில் இருந்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையோடு
யொன்றை எடுத்துள்ளார். அதை ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறையை சேர்ந்த
உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணனிடம் அனுப்பிவைத்தார். அனுப்பி
வைக்கப்பட்ட கருப்பு சிவப்பு நிறமுடைய பானை ஓட்டினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தை சார்ந்த வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. கண்ணன் அவர்களுடன் இணைந்து
ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ் பிராமி எழுத்துக்கள்
மட்கலத்தின்
கழுத்துப் பகுதியில் நான்கு எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்தன . அவ்வெழுதுக்களை
ஆய்வு செய்ததில் ‘’ ... ய – ம – க – ன் ‘’ என்பது தெரியவந்தது. இதற்கு கடைச்சன் ,
கடைசிமகன் , இளையமகன் என்று பொருள்
விளக்கம் தருகின்றன சில தமிழ் அகராதிகள். இருப்பினும் இது ஒரு தனிப்பட்ட மனிதனின்
சொந்த பெயராக இருக்க அதிக வாய்ப் புள்ளது என்று தெரிவித்தார் சிவராமகிருஷ்ணன் .
மேலும் எழுத்துக்கள் தொடங்குமிடம் உடைந்துள்ளதால் அதன் முழுப்பெயரையும் அறிந்து
கொள்ள முடியவில்லை. கீறப்பட்டுள்ள இவ்வேழுத்துக்களின் அமைப்பை பார்க்கும் போது
இதன் காலம் கி.மு. முதல் மற்றும் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தை
சார்ந்ததாகும் . மேலும் தர்மநல்லூர் பெரிய தோப்பு பகுதி சுமார் 2000 ஆயிரம்
ஆண்டுகளின் தொடர் வரலாற்றினை கொண்ட சிறப்பு மிக்க ஊர் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
பெருங் கற்கால குறியீடுகள்
கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியதோப்புப் பகுதியில் சிதைந்த முதுமக்கள் தாழிகளின்
அருகே உடைந்த நிலையில் காணப்பட்ட கருப்பு
சிவப்பு நிற மட்கல ஓடுகளில் கீறல் குறியீடுகள் பொறிக்கப்பட்டுயிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு மட்கல ஓடுகளில்
இருந்த குறியீடுகளில் ஐந்து மட்கலன்களில் பொறிக்கப்பட்டிருந்த குறியீடுகள் ஒரே மாதிரியாகவும்
மற்றொன்று வித்தியாசமாக இருந்தது. அதனை ஆய்வு செய்ததில் அது சிந்து சமவெளியில்
கிடைத்த குறியீடுகளோடு பொருந்துவதாக இருந்தது. மற்ற ஐந்து குறியீடுகள் இறந்தவர்களை
புதைக்கப் பயன்படுத்தப்பட்ட பெருங்கபடை சின்னங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில்
கிடைத்துள்ள கீறல் குறியீடுகளோடு ஒத்துள்ளது . தமிழகத்தில் கிடைக்கப்பெரும் இக்கீறல் குறியீடுகளில் இருந்தே தமிழ் மொழி
வளர்ச்சி பெற்றதாக சில வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் தமிழ்
மொழியானது முதலில் குறியீடுகளாக எழுதப்பட்டு பின்பு தமிழ் பிராமியாக வளர்ச்சி
பெற்றதாகும். அந்த அடிப்படையில் தர்மநல்லூர் பகுதியில் வாழ்ந்த பண்டையகால மக்கள்
முதலில் தமிழை குறியீடுகளாகவும் பின்பு வளர்ச்சிபெற்ற தமிழ் பிராமியாகவும் எழுதி
உள்ளதில் இருந்து இங்கு வாழ்ந்த மக்களின் எழுத்தறிவு திறனின் மேம்பாட்டினை
அறியமுடிகிறது.
ரோமானியர்களுடன் தொடர்பு
கடந்த 1997 ஆம் ஆண்டு முன்னாள் தஞ்சை தமிழ்ப்
பல்கலைக் கழகத்தை சார்ந்த பேராசிரியர் கா. இராஜன் என்பவரால், தர்மநல்லூர்
கிராமத்தில் உள்ள பெரிய தோப்பு பகுதியில் இரும்பு காலத்தை சார்ந்த முதுமக்கள்
தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு பெரிய
தோப்பு பகுதியில் மண் எடுக்கப்பட்ட சுமார் இருபதடி பள்ளத்தில் நடத்தப்பட்ட ஆய்வில்
சிதைந்த முதுமக்கள் தாழிகள் , கருப்பு சிவப்பு நிற மட்கல ஓடுகள் , வழுவழுப்பான
கருப்பு நிற மட்கல ஓடுகள் , செங்காவி பூசப்பட்ட பானை ஓடுகள் , ரோமானியர்கள்
பயன்படுத்திய வெளிர் சாம்பல் நிறம் கொண்ட ரௌலட்டட் வகை மட்கல ஓடுகள் போன்றவைகள் கள
ஆய்வில் கண்டறியப்பட்டன. இங்கு ரௌலட்டட் வகை மட்கல ஓடுகள் கிடைப்பதால் அரிக்கமேடு
வந்த ரோமானியர்களோடு தர்மநல்லூரில் வாழ்ந்த சங்ககால மக்களும் வர்த்தக தொடர்பு
கொண்டிருந்தனரா என்பது ஆய்விற்குறிய ஒன்றாகும்.
சுடுமண் பொம்மை
பெரியதோப்பின் தாழ்வானப் பகுதியில் பெருங்கற்காலத்தை சார்ந்த
பானையோடுகளுடன் உடைந்த திருகை
எந்திரத்தின் சுழலும் பகுதி , பழுப்பு நிற
கல் மணிகள் மற்றும் ஆண் சுடுமண் உருவம் ஒன்றும் கடந்த 2008 ஆம் ஆண்டு இங்கு
நடைபெற்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண் பொம்மையின் தலைப்பகுதி உடைந்த
நிலையில் இருந்தது. நன்கு சுடப்பட்ட
இவ்வுருவத்தின் தலை முடி வரிவரியாக காட்டப்படுள்ளது . காதில் மார்பு வரை
தொங்கும் நீண்ட மெல்லிய காதணிகளை அணிந்துள்ளது. கழுத்தில் மெல்லிய ஆரம்
காணப்படுகிறது. முகம் நீள்வட்ட வடிவில் உள்ளது. வளைந்த புருவம் , நீள் வட்ட வடிவ
கண்கள் , தட்டையான மூக்கு , தடித்த உதடுகள் , எடுப்பான தாடை போன்றவை இவ்வுருவத்திற்கு அழகு சேர்கின்றன.
இந்த சுடுமண் உருவத்தின் கலைத் தன்மையை பார்க்கும்போது இதன் காலம் கி.பி. முதல்
நூற்றாண்டை சார்ந்ததாகும்.
கல்மணிகள்
மேலும் இதே பகுதியில் கருப்பு , சிவப்பு ,
வெள்ளை , மஞ்சள் , ஊதா , பச்சை, பழுப்பு நிறங்களை கொண்ட வண்ண கல்மணிகள்
கண்டுபிடிக்கப்பட்டன. உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட இக் கல்மணிகள் கி.பி. முதல்
நூற்றாண்டை சார்ந்ததாகும். இது போன்ற வண்ண கல் மணிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள
மணிக்கொல்லை , சிலம்பிமங்கலம் , பெரியப்பட்டு , ஆண்டார்முள்ளிப்பள்ளம் , ஆன்னப்பன்
பேட்டை , திருச்சோபுரம் , தியாகவல்லி போன்ற ஊர்களில் காணப்படுகின்றன. மேலும்
குடிகாடு சங்ககாலத்தில் வண்ண கல் மணிகள் தயாரிக்கும் தொழிற் சாலையாக இருந்துள்ளதை
அகழாய்வின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட வண்ண
கல் மணிகள் ரோம் , தாய்லாந்து , ஸ்ரீலங்கா , அரேபிய போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சுடுமண் உறைகிணறுகள்
பெரிய தோப்பின் மேடானப் பகுதியில் பின்
இடைக்காலத்தை சார்ந்த சுடுமண் உறைகிணறுகள் நான்கு இடங்களில் கண்டறியப்பட்டன. களி
மண்ணால் செய்யப்பட்ட வட்டவடிவிலான உறைகளைக் கொண்டு இக்கிணறுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வுறைகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு அடி உயரமும் , நான்கு அடி அகலமும்
கொண்டவைகளாகும் . ஐந்து முதல் ஆறு உறைகள் ஒவ்வொரு கிணறுக்கும்
பயன்படுத்தப்பட்டுள்ளன. இது போன்ற உறைகிணறுகள் சங்ககாலத்தில் இருந்துள்ளதை ‘’
உறைக் கிணற்றுப் புறச் சேரி ‘’ என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
மேலும் இதேப் பகுதியில் சிவப்பு நிற பனையோடுகள் , தானியங்களை சேமித்து
வைக்கப் பயன்படுத்தப்பட்ட சொரசொரப்பான தடித்த சிவப்புநிற பனையோடுகள், வீடுகளில்
இருந்து கழிவுநீர்களை வெளியேற்றப் பயன்படுத்தப் பட்ட சுடுமண் குழாய்களின் உடைந்த
பாகங்கள் , சிறுமிகள் விளையாடப் பயன்படுத்திய சில்லு கருவிகள் , மட்பாண்டங்களை
மூடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மூடிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் 5 செ.மீ கன
அளவும், 15 செ.மீ அகலமும் , 21 செ. மீ நீளமும் கொண்ட செங்கற்களால் கட்டப்பட்ட
கட்டடப் பகுதியொன்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவைகளின் காலம் கி.பி. 10 – 13 ஆம்
நூற்றான்டாகும். மேலும் தர்மநல்லூருக்கு அருகிலுள்ள எறும்பூர் மற்றும் வளையமாதேவியில்
சோழர்கால கல்வெட்டுக்கள் உள்ளன. இதே போன்று தர்மநல்லூர் பெரியதோப்பு பகுதியில் கி.பி. 1739 ஆம் ஆண்டை சார்ந்த பிற்கால கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இதன் மூலம்
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டுவரையிலான காலக்கட்டத்தில்
இடைக்கால பாண்பாட்டை சார்ந்த மக்கள் இப்பகுதியில்
வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
மேலும் இங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருள் சான்றுகளின் படி கி.மு. முதல்
நூற்றாண்டு முதல் இன்று வரை தொடர்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக
இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவது தர்மநல்லூர் கிராமத்தின் தனிச்சிறப்பாகும்
என்று பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Very excellent Invention sir............. Great
ReplyDelete