ஆவுரிஞ்சிகல்
ஆவினங்கள் காக்க ஆவுரிஞ்சிகல்
முனைவர் J.R.சிவராமகிருஷ்ணன் ,
உதவிப்பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – ஆத்தூர்.
உலகில் தோன்றிய மானுடம் தனது வசீகர அன்பினால் விலங்குகளை தங்களது வாழ்வியல்
தோழனாக மாற்றியதே நாகரிக வளர்ச்சியின் முதல் படிநிலையாகும். காரணம் கற்களை கொண்டு
உணவு உற்பத்தியை சமாளித்து வந்த கற்கால மனிதனுக்கு அதன் தேவை போதுமானதாக இல்லை.
எனவே உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டவேண்டும் என்பதற்காகவே மாடுகளை விவசாய
உற்பத்திக்கு பயன்படுத்தலானான். விளைவு நிரந்தர இருப்பிடத்துடன், உணவு உற்பத்தியில்
தன்னிறைவை பெற்று சமூக கட்டுக்கோப்பிற்குள் மானுடத்தை இட்டு சென்று அறிவியல்
யுகத்திற்குள் ஆட்படுத்தியது.
குறிப்பாக உணவு உற்பத்தியில் நிலவி வந்த காலவிரையம் மற்றும் அதிகப்படியான
மனித உழைப்பு போன்றவற்றை குறைத்ததால் மாடுகள் மனிதனின் உற்ற தோழனாகவே மாறியது.
உதரணமாக தமிழர்கள் புதிய கற்காலத்திலேயே எருதுகளை பழக்கி விவசாயப் பணிகளில்
ஈடுபடுத்தினர். மேலும் பசுக்களை பழக்கியதால் சத்துமிக்க பால் கிடைத்தது. எனவேதான்
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக தமது வாழ்வியளோடு
ஐக்கிமான கால்நடைகளுக்கு தை மறுநாள் விழா எடுத்து சிறப்பித்து வருகின்றனர்.
பண்டையகால முதலே தமிழர் அனைத்து உயிர்களையும் தம்முயிர் போல் போற்றி வாழ்ந்து
வந்தவர்கள் . அதனால்தான் ஆடு , மாடுகளை தமது உயரிய செல்வமாக நினைத்து தமது இல்லம் அருகே
கொட்டகை அமைத்து அவைகளை வளர்த்து வந்தனர். சங்க இலக்கியங்கள் ஆடுகளை புல்லினம்
என்றும், எருமைகளைக்
கோட்டினம் எனவும், பசுக்களை கோவினம் என்றும் குறிப்பிடுகின்றன. அஃறிணை
உயிர்களின் உணர்வினை மதித்த தமிழர்கள் அவைகளுக்காக நாட்டப்பட்டுள்ள தூண் போன்ற கல்லைப்
பற்றி சங்க இலக்கியங்கள் பெருமையாக கூறுகின்றன.
குறிப்பாக மனிதனுக்குத் தினவு எடுத்தால் சரிசெய்வதற்காக தமது கைவிரல்களால்
உடலை சொரிந்து கொள்கிறான். ஆனால் ஆடு மாடுகளுக்கு தினவு எடுத்தால் அதனால் சொரிந்து
கொள்ள முடியாது. எனவே அவைகள் நிழல் தரும் மரங்களில் உராய்ந்து தனது உடல் அரிப்பைத்
தீர்த்துக் கொள்கின்றன. இவ்வாறு மாடுகள் அடிக்கடி மரங்களில் உராய்வதால் அவைகள் அழியும்
நிலைக்கு தள்ளப்பட்டன. இவ்வாறு மாடுகள் உராய்வதால் நிழல் தரும் மரங்களின் அழிவை தடுக்க
தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மாற்று வழியே ஆதீண்டு குற்றி எனப்படும்
கற்தூண்களாகும்.
ஆதீண்டு குற்றி
பண்டைய காலத்திலேயே நம் முன்னோர்கள் ஆடுமாடுகளுக்கு ஏற்படும் தினவை
உராய்ந்து தீர்த்துக் கொள்வதற்கு தோதான பலகை கற்களையும் , குத்துக் கற்களையும்
நீர்நிலைகளின் அருகே நட்டுவைத்தனர். குறிப்பாக மேச்சலுக்கு செல்லும் மாடுகள்
தண்ணீர் அருந்துவதற்காக நீர்நிலைகளுக்கு வரும். அவைகள் நீர்நிலைகளில் குளித்தும்
சேற்றினை மேலே பூசிக் கொண்டும் கரையேறுவதால் தினவு ஏற்படுகிறது. அவ்வாறு தினவு
ஏற்பட்ட மாடுகள் அருகில் நடப்பட்டிருக்கும் கல்லில் தமது உடலை தேய்த்து கொள்ளும். அவ்வாறு
நடப்பட்டியிருந்த கற்களை சங்க இலக்கியங்கள் ‘’ஆதீண்டு குற்றி’’ ,’’ மாதீண்டு
துறுகல்’’ என வியந்து குறிப்பிடு கின்றன. குறிப்பாக தொல்காப்பியக் காலத்திலேயே மாடுகளுக்கு
ஏற்படும் தினவை தீர்த்து கொள்வதற்காக ஆதீண்டு குற்றிகளை தமிழர்கள் நட்டியிருந்தனர்
என்பதை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
மாதீண்டு துறுகல்
வீட்டருகே வளர்க்கப்படும் விலங்குகளுக்கு
ஏற்படும் தினவை உராய்ந்து தீர்த்துக் கொள்வதற்கு எதுவாக வீட்டருகேயும் கல்
நடப்பட்டிருந்தது. இதனை ‘’ முன்றில் மாதீண்டு துருகல் ‘’ என்று ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.
மேலும் சீவகசிந்தாமணியில் ’’ நலக்கு ஆ செல் தூண் ‘’ அதாவது மக்களுக்கு நலம்
செய்யும் பசுக்கள் உராய்ந்து கொள்வதற்காக தூண்கள் நடப்படிருந்ததைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. மேலும் பசுக்களுக்காக நடப்படிருந்த கற்தூண்கள் என நினைத்து நெடிய
மண்டபத் தூண்களில் தினவு எடுத்த யானைக் கூட்டங்கள் தம் உடலை அம்பலத்தின் தூண்கள்
சாயும்படி உராய்த்து கொள்ளவதாக பட்டினப்பாலைக் கூறுகிறது. சங்க இலக்கியங்களைப் போன்று கல்வெட்டுகளிலும் ஆதீண்டு குற்றி அமைக்கப்பட்டிருந்தமைப்
பற்றி அறியமுடிகிறது என்று ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின்
வரலாற்றுத்துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ஜெ ஆர்.
சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கல்வெட்டுகளிலும்
ஆதீண்டுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டம் ஆரியப்பாளையம் என்ற ஊரின்
குளக்கரையில் நடப்பட்டுள்ள கல்லில் கால்நடைகளுக்காக உரைகல்லும்,
குட்டையும் ஏற்படுத்தப்பட்டதை கூறுகின்றன. மேலும் கி.பி. 13 - 14 ஆம்
நூற்றாண்டு கல்வெட்டுக்களில் தன்மத்தறி அதாவது தர்மத்திற்காக நடப்பட்ட கல்லே ஆதீண்டு
கல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிதம்பரத்தில் ஆவுரிஞ்சிகல்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓமகுளம் அருகே
சுமார் ஐந்தடி சுற்றளவும் , தரைமட்டத்தில் இருந்து நான்கடி உயரமும் கொண்ட
மிகப்பெரிய கற்தூண் ஒன்று நடப்பட்டுள்ளது. அக்கல்தூணில் ஆவுரிஞ்சிகல் என்ற வாசகம்
பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட இந்த ஆவுரிஞ்சிக்கல்
அப்பகுதியில் வளர்க்கப்பட்ட கால்நடைகள் தினவு எடுக்கும் பொது சொரிந்து கொள்வதற்காக
நம் முன்னோர்களால் நடப்பட்டவை யாகும். இது போன்ற ஆவுரிஞ்சிகற்களை தமிழகத்தில் உள்ள
சிவகங்கை, மதுரை , தர்மபுரி , சேலம் , தஞ்சை, கோவை , சென்னை போன்ற மாவட்டப்
பகுதிகளில் இன்றும் காணமுடிகிறது. இந்தியாவின் பழம்பெரும் நாகரிகப் பகுதியான
சிந்து சமவெளி மக்கள் எருது உருவங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகளை வெளியிட்டு
இருந்தனர். காரணம் எருது உழவனின் தோழன் என்பதாலேயேயாகும் .
மேலும் 2250 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவை ஆட்சி செய்த மாமன்னர் அசோகர் சாலைகளின்
ஓரங்களில் விலங்குகளுக்கும் மற்றும் கால்
நடைகள் வசிக்கும் பகுதிகளில் கால்நடைகளுக்கு தனியாக மருத்துவ சாலைகளையும் தண்ணீர்
குடிப்பதற்காக நீர்நிலைகளை ஏற்படுத்தி இருந்ததை அம்மன்னனின் கல்வெட்டு ஆணைகள்
மூலம் அறியமுடிகிறது. எனவே உழவனுக்கு உற்ற தோழனாக விளங்கிய ஆவினங்களுக்கு நம்
முன்னோர் கள் என்னன்ன வசதிகள் செய்து வைத்திருந்தனர் என்பதை பார்க்கும் போது
வியப்பாக உள்ளது. எனவே கால்நடைகளை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையும் கூட என பேராசிரியர்
சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Comments
Post a Comment