கழிவுநீர் வடிகால்கள்
இப்போதைய தேவை முறையான கழிவுநீர் வடிகால்களே
முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப்
பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி – ஆத்தூர்.
உலக மக்களின் அன்றாட தேவைகளில்
முதன்மையான பொருளாக விளங்குவது தண்ணீராகும் . அதனால்தான் பண்டையகால மக்கள் நீர்
வளம் மிகுந்த இடங்களான ஆற்றங்கரை ஓரங்களையே தங்களின் வாழ்விடமாகக் கொண்டிருந்தனர்.
மக்களின் குடிநீர் தேவை , கால்நடை
பராமரிப்பு, உணவு உற்பத்தி , மீன்பிடித்தல் , வணிகம், போக்குவரத்து போன்ற
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மையமாக ஆற்றங்கரைகள் இருந்ததால் அவைகளை
நாம் நாகரிகத்தின் தொட்டில்கள் என்கிறோம்.
அவ்வாறு
ஆற்றங்கரையில் வாழ்ந்த அனைவருமே இயற்கையால் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற தண்ணீரை
சிக்கனமாகவும், தேவைக்கு தகுந்தாற்போலும் பயன்படுத்தி வந்தனர். மேலும் தாம்
வாழ்வதற்கு காரணமான ஆறு மற்றும் ஆற்றங்கரை பகுதிகள் எந்தவிதத்திலும் தம்மால்
மாசடைந்து விடக்கூடாது என்பதில் கருத்தாகவும் இருந்தனர்.
குறிப்பாக மொகஞ்சதாரோ நகரில் வாழ்ந்த மக்கள் தங்களால் சிந்துநதியோ அல்லது சுற்றுப்புறச்
சூழலோ எந்த விதத்திலும் மாசடைவதை விரும்பவில்லை. அதனால்தான் வீடுகளின் குளியலறைகளில்
இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரரை சுடுமண் குழாய்கள் மூலம் கொண்டு சென்று பிரதான
தரையடி சாக்கடைக் கால்வாயில் இணைத்திருந்தனர். இவ்வாறு நகரில் இருந்து
வெளியேற்றப்படும் கழிவுநீர்கள் அனைத்தும் பாதுகாப்பாக நகருக்கு வெளியே
அமைக்கப்பட்டிருந்த பெரிய கழிவுநீர் வடிகால் பகுதியில் சேர்த்திருந்தனர். இவ்வாறு
கொண்டு செல்லப்பட கழிவு நீர் அனைத்தும் பூமிக்குள் உறிஞ்சப்படுதல் , சூரிய
வெப்பதால் ஆவியாதல், சுற்றி வளர்க்கப்பட்ட மரம், செடிகளால் உட்கிரகிக் கவைத்தல்
போன்ற தொழில் நுட்பத்தினால் கழிவு நீர் ஓரிடத்தில் நிலையாகத் தங்குவதை
தவிர்த்திருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் சிந்துசமவெளி நாகரிகப் பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களின் வீட்டின்
அருகிலேயே கழிவுநீர் வடிகட்டும் நிரந்தர தொட்டிகளையும் ( SOAK PIT ) அமைத்திருந்தனர்.
இத்தொட்டிகள் பெரும்பாலும் வட்டவடிவில் அமைத்திருந்தனர். தொட்டியின் அடியில் ஆற்று
மணலும், அதன்மேற்பகுதி உடைந்த செங்கற்துண்டுகளாலும் நிரப்பப்பட்டது, பிறகு மீண்டும் ஆற்று மணலால் நிரப்பப்பட்டு அதன்
மேற்பகுதியில் சிறிய முக்கோண வடிவிலான செங்கற்களை அடுக்கிவைத்திருந்தனர். வீட்டில்
இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அப்படியே முக்கோணவடிவிலான செங்கற்களால்
பாவப்பட்ட பகுதியின் மீது கொண்டுவிடப்பட்டு சவ்வுடுபரவல் தொழில்நுட்ப மூலம் கழிவுநீர்
நன்கு வடிகட்டப்பட்டு பூமிக்குள் நேரடியாக செலுத்தப்பட்டதால் நிலத்தடி நீர்
மாசடைவது நிரந்தரமாகக் கட்டுப்படுத்தப் பட்டது. இந்த கழிவுநீர் வடிகட்டும் தொழில்
நுட்மே உலகில் மிகச் சிறந்த தொழில் நுட்பங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பற்ற தொழில்நுட்பத்தினால் கழிவுநீர் மூலம் பரவும் அனைத்தும் நோய்களும் நிரந்தரமாக
கட்டுப்படுத்தப் பட்டது சிறப்புவாய்ந்த ஒன்றாகும்.
சிந்துவெளி நாகரிக மக்களைப் போன்று
பண்டையகால தமிழ் மக்களும் இத்தொழில் நுட்பத்தில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. குறிப்பாக
சங்க இலக்கியங்களில் பூமிக்கடியில் அமைத்திருந்த
நன்னீர் குழாய்கள் பற்றியும் , கழிவு நீர்களை வெளியேற்ற பூமிக்கடியில்
பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் பற்றிய பதிவுகள் விரவிக் காணப்படுகின்றன. சுமார்
1800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரில் அமைக்கப்பட்டிருந்த தரையடி குழாய்கள் பற்றி
பரிபாடல் ‘’ நெடுமால் சுருங்கை நடுவழிப் போந்து...’’ என்று குறிப்பிடுகிறது. எனவே
நீண்ட சுரங்கம் போன்று பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் மூலம் கழிவுநீர்
கொண்டுச் செல்லப்பட்டதை அறியமுடிகிறது.
இத்தொழில் நுட்பம் தற்காலத்திய பாதாள கழிவு நீர் குழாய் அமைப்பிற்கு
ஒப்பானதாகும். மேலும் மதுரை நகர் சுற்றி அமைக்கப்படிருந்த அகழியில் தண்ணீர்
வருவதற்காக அமைக்கப்பட்டிருந்த தரையடி நன்னீர் குழாய்களைப் பற்றி ‘’பெருங்கை யானை
இனநிரை பெயரும் சுருங்கை ‘’ என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இவை நகருக்குள்
விழும் மழை நீரை வெளியேற்ற பயன்படுதப் பட்டிருக்கலாம். இதேபோன்று மணிமேகலை ,
சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்களிலும் நீர் வெளியேற்ற பயன்படுத்தப்பட்ட
சுருங்கைகள் பற்றிய குறிப்புகள் விரைவிக் காணப்படுகின்றன.
இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள பெரும்பாலான அகழாய்வுகளில்
கழிவு நீர்களை வெளியேற்ற தமிழர்கள் சுடுமண் குழாய்களையே பெரும்பாலும் பயன்படுத்தி
உள்ளதை அகழாய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. உதாரணமாக 1994 ஆம் ஆண்டு
தமிழகத் தொல்லியல் துறையினரால் திருக்கோயிலூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் 1.70
மீட்டர் ஆழம் தோண்டப்பட்டக் குழியில் கருங்கற் சுவர் அருகே சுடுமண் குழாய்களின்
தொடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 50 குழாய்கள் பதிக்கப்படிருந்தன. மொத்த
நீளம் 9.50 மீட்டராகும். இதே போன்று புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேட்டில்
நடைபெற்ற அகழாய்வில் கி.பி. 1 – 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சாயதொட்டி ஒன்றும் அத்தொட்டியில்
இருந்து கழிவுநீரை வெளியேற்ற சுடுமண் குழாய்கள் பாதிக்கப் பட்டிருந்தது
கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சுடுமண்குழாய்களைக் கொண்டு பண்ண்டைய கால தமிழர்களால்
வடிவமைக்கப்பட்டிருந்த தரையடி வடிகால் தொழில்நுட்பம் அளப்பரிய ஒன்றாகும். மேலும்
வசவசமுத்திரம் , உறையூர் ,கரூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் சுடுமண்
குழாய்த் தொடர்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு கழிவுநீரை அகற்றத் தெரிந்த நாகரிகமே
உலகின் தலைசிறந்த நாகரிகம் என்றால் அது தமிழர்க்கும் பொருந்தும் என்று ஆத்தூர் அறிஞர்
அண்ணா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியரும் ஆய்வாளருமான ஜெ.ஆர்.
சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் பரப்பாய்வுத்
துறையினரால் நடத்தப்பட்டு வரும் அகழாய்வில் வீடுகளின் அருகே சுடுமண் குழாய்கள்
பதிக்கப்படிருந்து வெளிக்கொண்டுவரப் பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வாழ்ந்த
தமிழர்கள் கழிவுநீர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் மிகக் கவணமாக இருந்துள்ளனர்
என்பதை அறியமுடிகிறது. மேலும் திறந்தவெளி கழிவு நீர் கால்வாய்களும் இங்கு
அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கால்வாயில் விழும் தண்ணீரானது
தேங்காமல் அப்படியே வெளியேறும் வகையில் அமைக்கப்படிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிப்பூம் பட்டினத்தில் சோறிடும்
அன்னச் சாலையிலிருந்து சோற்றை வடித்தலால் வெளியேற்றப் படும் தண்ணீரானது அப்படியே தெருவீதியில்
கொண்டுவிடப்பட்டது. அவ்விடதிற்கு வரும்
மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்வதால் அப்பகுதி முழுவதும் சேறாகி
அவ்வழியாக ஓடும் தேர்களால் மண்புழுதி ஏற்பட்டு சுவர்களில் வரையப்பட்டியிருந்த
அழகிய ஓவியங்களின் மீது படிந்து அதன் அழகை கெடுக்கிறார்களே புகார் மக்கள், என்று வேதனைப்படும் உருத்திரங் கண்ணனாரின்
சாடல் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் அனைவருக்கும் பொருந்தும்.
சுமார்
முப்பது ஏக்கர் பரப்பளவை கொண்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் உட்பகுதியில் விழும்
மழைநீர் முழுவதையும் சேமிக்க நினைத்த சோழ மன்னர்கள். கோயிலில் உள்ள யானைக்கால்
மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து சுமார் 2200 மீட்டர் வரை நிலவரை கால்வாய் ஒன்றை அமைத்தனர்.
இக்கால்வாய் வழியாக மழைநீரினைக் கொண்டுச் சென்று காளி கோயில் முன்பாக உள்ள சிவப்பிரியை குளத்தில் சேமித்துள்ளனர். இதன்
மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டது.
மேலும் மழை நீர் தேங்குவதால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டு சுற்றுபுறச் சூழல் மாசடைவது தடுக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில்
இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரைக் கொண்டு தோட்டங்களில் காய்கறி, கீரைவகைகள் ,
வாழை மரங்கள் வளர்க்க பயன்படுத்தப்பட்டன. இதனால் கழிவு நீர்கள் மூலம் பரவும்
நோய்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இன்று நகரமையமாக்கள்
என்கிறப் போர்வையில் வாசலும் , தோட்டமும் இல்லா வீடுகளை அமைத்துக் கொண்டு வீட்டில்
இருந்து வெளியேறும் கழிவுநீரை அப்படியே சாலை ஓரம் விட்டு விடுகிறோம். இப்படி
ஒவ்வொருவரும் செய்வதால் அழகிய நன்னீராக இருந்த கூவம் இன்று சாக்கடைநீரால்
பாழ்படுத்தப்பட்டு விட்டது. இது போன்று எத்தனையோ
ஏரி , குளங்கள் தமிழர்களால் இன்று பாழ்படுத்தப்பட்டு விட்டன. இதனால்
நிலத்தடி நீரும் பாழ்பட்டு போனது. விளைவு இன்று மலேரியா , டெங்கு போன்ற தோற்று
நோய்களின் கூடாரமாக தமிழகம் மாறிப்போனது வேதனைக்குரிய ஒன்றாகும். தமிழக மக்களுக்கு
இப்போதைய தேவை கழிவுநீர் குறித்த விழிப்புணர்வே.
இன்றும் காரைக்குடி, சிவகங்கை பகுதியில் வாழும் நகராதார்களின் வீடுகளில் கழிவுநீர் வடிகட்டும்
தொட்டிகளை அமைத்து சவ்வுடு பரவல் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பாக பூமிக்குள்
செலுத்துகின்றனர். இதன் மூலம் நிலமும், சுற்று புறமும் மாசடைவது
கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment