ஸ்மார்ட்சிட்டி சிதம்பரம்

சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்சிட்டி சிதம்பரம்

         

 முனைவர்  ஜெ. ஆர். சிவராமகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர் , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆத்தூர்

   
        இனவரைவியலை தீர்மானிப்பது மானுடம் சார்ந்த நிலவியல் அமைப்பேயாகும். இந்த நிலவியல் அமைப்பும் அதன் சூழளும் சாதகமாக அமைந்தால் தான் அங்கே பண்பட்ட மானுட நாகரிகம் தோற்றம் பெரும். குறிப்பாக உலகில் தோன்றிய அனைத்து நாகரிக மக்களும் வளமான மண் , தடையில்லா தண்ணீர் வசதி , சாதகமான வெப்பநிலை, நல்ல காற்றோட்டம் ,  வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து விருப்புறு பொருட்களும் எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் பாதுகாப்பிற்கு உத்தரவத முள்ள பகுதியாக அமையப்பட்ட இடத்தையே பண்டையகால மக்கள் தங்களின் நிரந்தர வாழ்விடமாக அமைத்துக் கொண்டனர். இதை கருத்தில் கொண்ட  தமிழ் மன்னர்கள் கோயிலை மையமாக வைத்து அனைத்து வசதிகளுடன் கூடிய பெரு நகரங்களை உருவாக்கி அதில் புதிய மக்கள் குடியேற்றங்களை ஏற்படுத்தினர். அவ்வாறு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட  நகரங்களில் மதுரை ,காஞ்சிபுரம் , கூரம் , சிதம்பரம் போன்றவைகளை குறிப்பிடலாம்.

சிதம்பரம்

         சிதம்பரம் நகர் இன்று நகராட்சியாக விளங்குகிறது. இந்நகர்  பல்லவர் காலம் தொடங்கி  சோழர் , பாண்டியர் , விஜயநகர நாயக்கர் காலம் வரையில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி நேராக அமைக்கப்பட்ட அகன்ற வீதிகள் , நகரை சுற்றி அழகிய நந்தவனங்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடே மரங்கள் வளர்க்கப்பட்டன. மேலும் சிதம்பரம் கோயிலை சுற்றி ஒன்பது குளங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவைகளைப் பற்றி சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டின் வாயிலாக விரிவாக அறியமுடிகிறது.    

 

முதலாம் இராஜேந்திர சோழன்

      

       முதலாம் இராஜேந்திர சோழன் பிற்காலசோழர் வரலாற்றில் ஒப்பற்ற மன்னனாக விளங்கியவன். கி.பி. 1012 ஆம் ஆண்டு இளவரசனாக முடிசூட்டப்பட்ட இராஜேந்திர சோழன் தமது தந்தை முதலாம் இராஜராஜ சோழன் இறந்தப் பிறகு கி.பி. 1014 ஆம் ஆண்டு சோழப் பேரரசின் மன்னனாக அரியணையேறினான். இராஜேந்திர சோழன் தமது ஆட்சி காலத்தில், கங்கை வரை படையெடுத்துச் சென்று அங்கிருந்த நாடுகளை எல்லாம் வென்று கங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட  தண்ணீரால் தமது தலைநகரான  கொங்கைகொண்ட சோழபுரத்தை புனிதமாக்கியதோடு அல்லாமல் தலைநகரில் கங்கை படையெடுப்பின் நினைவாக ஜலஸ்தம்பம் அதாவது சோழகங்கம் என்ற ஏரியை நிர்மாணித்து அப்பகுதியை வளமாக்கினான். மேலும் தமது கப்பற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜாவா ,சுமத்திரா , இந்தோனேசிய, இலங்கை போன்ற தேசங்களை  தமது வர்த்தக மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தப் பெருமை இராஜேந்திர சோழனையே சாரும். விளைவு அந்நிய செலவாணியின் மூலம் சோழப்பேரரசு பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்று ஒரு ஏகாதிபத்திய வல்லரசாக உயர்வு பெற்றது.  
     மேலும் போர்க் கலையில் தேர்ச்சியும், அரசியல் அறிவில் நல்ல முதிர்ச்சியும் , நற்பண்புகளில் உயர்ச்சியும் கொண்ட இராஜேந்திர சோழன் தன்னை ஈன்றெடுத்த ,தாய் , தந்தையர்க்கு மங்காத புகழினை பெற்றுத்தந்து சிறந்த மகனாக  விளங்கினான். இப்புகழ்பெற்ற முதலாம் இராஜேந்திர சோழனுக்கும் சிதம்பரத்திற்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு.

சிதம்பர மாளிகை

        கி.பி. 1014 ஆம் ஆண்டில் சோழப்பேரரசின் தனிப்பெரும் மன்னனாக முடிசூட்டப் பட்ட இராஜேந்திரன் தன்னாட்டின் தலைநகரினைத் தஞ்சையில் இருந்து மாற்ற திட்டமிட்டான். எனவே சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 40 கி.மீ தூரத்தில் உள்ளதும். சோழமன்னர்களின் அரசக் குடும்பத்தினர்கள் வாழ்ந்து வந்த பழையாறை நகருக்கு அருகில் உள்ள இடமான கங்கைகொண்ட சோழபுரத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தனது தந்தையாரைப் போன்று மிகப்பெரிய சிவன் கோயிலை கட்டுவித்து, சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அரச மாளிகை மற்றும் கோட்டைக் கொத்தளங்களை உருவாக்கினான்.  கி.பி. 1022 ஆம் ஆண்டு முதல் கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் புதிய தலைநகர் உருப்பெற்றது.
         இப்புதிய தலைநகர் உருவாக்கப் படும்வரை அதாவது கி.பி. 1014 முதல் கி.பி.1022 வரையிலான எட்டாண்டு காலம் இராஜேந்திர சோழன், சோழ மன்னர்களின் குலதெய்வமான நடராஜப்பெருமான் வீற்றிருக்கும் சிதம்பரம் நாரில் மாளிகை அமைத்து அந்நகரை சோழப்பேரரசின் தற்காலிக தலைநகராகக் கொண்டிருந்ததை ‘’ நமக்கு யாண்டு எட்டாவது நாள் நூற்றேழினால் நாம் பெரும்பற்றப் புலியூர் விட்ட வீட்டின் உள்ளால் மாளிகையின் கீழை மண்டபம் இராஜேந்திர சோழ பிரமாதி ராஜனின் நா முண்ணாது விருந்து’’. என்று முதலாம் இராஜேந்திர சோழனின் கரந்தைச் செப்பேட்டின்  நான்காவது தகட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமது புதிய தலைநகரத்தில் நடைபெறுகின்ற வேலைகள் அனைத்தையும்  சிதம்பரதில் இருந்தே இராஜேந்திர சோழன் கண்காணித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று கொத்தங்குடி தோப்பு என்று அழைக்கப்படும் பகுதியில் அம்மாளிகைகள் இருந்ததற்கான தடையங்கள் கண்டறியப் பட்டுள்ளன.
        மேலும் கொள்ளிடம் ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில்  அமைந்துள்ள தேவிக்கோட்டைப் பகுதி இராஜேந்திர சோழனின் கப்பல்படைத் தலமாக இருந்ததற்கான சான்றுகள் தேவிக்கோட்டையில் நடைபெற்ற கள ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தமது கப்பற்படை வலிமையால் உலகில் உள்ள கடல் வணிகர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களின் பயமின்றி இந்துமாக்கடல், அரேபியக்கடல் , வங்கக் கடல் பகுதிகளில் அமைந்துள்ள  நாடுகளுடன் பயமின்றி வணிகம் செய்வதற்கு வழி செய்த ஒரே மன்னன், இராஜேந்திர சோழனாகத் தான் இருக்க முடியும். தமது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றியதற்கு பலக் காரணங்கள் கூறப்பட்டலும், சிறிய அளவிலான காப்பற் படை தளம் அமைப்பதற்கான ஏற்ற இடம் இந்த தேவிக்கோட்டை  விளங்குவதால் தலைநகர் மாற்றத்திற்கான மூல காரணமாக இருக்கலாம்.        

நரலோக வீரன்

          கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதல் சுமார்ட் சிட்டி என்ற பெருமைக்குரியது சிதம்பர நகராகும். கி.பி. 1118 முதல் கி.பி. 1136 வரை சோழப் பேரரசின் மன்னனாக விளங்கிய விக்கிரம சோழனது காலத்தில்  முதலமைச்சர்  மற்றும் படைத் தளபதியாக இருந்த நரலோகவீரன் என்பவன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளான். குறிப்பாக சிதம்பரம் கோயிலை சுற்றி அகன்ற சாலைகளை ஏற்படுத்தி, இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி செல்வதற்காக  தெரு விளக்குகளை ஏற்படுத்தி இரவு பகலாகும்படியாக திகழச்செய்தவன் இந்த நரலோக வீரன். மேலும் விக்கிரம சோழன் தமது பெயரில் விக்கிரமசோழன் திருவீதி என்ற பெருவீதி தில்லை மாநகரில் அமைத்ததை பற்றி இவனது மெய்கீர்த்தி குறிப்பிடுகிறது. இத்திருவீதியின் அழகைப்பற்றி குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில்  ‘’ விக்கிரம சோழன் தெங்குத் திருவீதி ‘’ என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார்.
        மேலும் இந்த நரலோக வீரன் நடராஜர் கோயிலுக்காக சிதம்பரத்தில் ஐம்பதாயிரம் பாக்கு மரங்களை நட்டுவித்தான். கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து கடற்கரை வரை நந்தவனங்களை ஏற்படுத்தி தில்லை நகரை பசுமை நகரமாக மாற்றினான். மாசி மகத்தன்று நடராஜர் கடலுக்குச் சென்று புனித நீராடுவதற்காக சிதம்பரம் நகரிலிருந்து கடற்கரை வரை சாலை அமைத்தான். மேலும் அங்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க கடற்கரை பகுதியில் மூன்று நன்னீர் குளங்களை வெட்டுவித்தான். இச்செய்திகளை இவனது கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. மேலும் சிதம்பரம் கோயிலுக்கு மட்டும் 73 நந்தவனங்கள் நகரை சுற்றி ஏற்படுதப்பட்டிருந்ததையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.  இதனால்தான் வரலாற்றறிஞர்கள் இந்நகரை இந்தியாவின் முதல் பசுமை நகரம் என்கின்றனர். குறிப்பாக நகர விரிவாக்கம் மற்றும் கோயில் விரிவாக்கம் அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப விரிவு படுத்தியவர்கள் சோழ மன்னர்களேயாவர்.

சரஸ்வதி பண்டாரம் ( நூல் நிலையம் )

          கி.பி. 1251 முதல் கி.பி. 1284 வரை பாண்டிய பேரரசின் மன்னனாக விளங்கிய முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் சிதம்பரம் கோயில் வளாகத்தினுள் சரஸ்வதி பண்டாரம் என்ற நூல்நிலையம் இருந்துள்ளதையும். மேலும் அந் நூல்நிலையத்தை பராமரிக்க இருபது பணியாளர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர் என்பதை இம் மன்னனது கல்வெட்டின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் அறுப்பது மூன்று நாயன்மார்களின் வரலாற்றை கூறும் பெரியபுராணத்தை சேக்கிழார் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தங்கியிருந்து எழுதினார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுகிறது. பெரியபுராணத்தை எழுத சிதம்பரத்தை சேக்கிழார் தேர்ந்து எடுத்ததற்கு காரணம் இங்கிருந்த நூலகமேயாகும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் உமாபதி சிவாச்சாரியார் தமது திருமுறை கண்ட புராணத்தில் முதலாம் இராஜராஜசோழன் மூடிகிடந்த இந்த சரஸ்வதி பண்டாரத்தை திறப்புவிழா செய்ததை ‘’ பண்டாரம் திறந்து விட்டான் பரிவு கூர்ந்தான் ‘’ என்று குறிப்பிடுகின்றார். இதன் மூலம் முதலாம் இராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பாகவே இந் நூல்நிலையம் இயங்கி வந்துள்ளதை அறியமுடிகிறது. தமது மக்களை அறிவுதிறன் மிக்கவர்களாக மற்றும் முயற்சிக்கு நம் மன்னர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடையாளமே இந்த நூல் நிலையமாகும். மேலும் சிதம்பரம் நகரில் இயங்கி வந்த வேதபாடசாலையில் மூன்று ஆசிரியர்களும் இரண்டு மருத்துவர்களும் பணிபுரிந்துள்ளனர்.    

 மழைநீர் சேமிப்பின் முன்னோடி நகர் சிதம்பரம்       

       சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலை சுற்றி இருந்த சில குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்பொழுது சுமார் 30 ஏக்கர் பரப்பளவை கொண்ட நடராஜர் கோயிலின் உட்பகுதில் விழும் மழை நீரை 1200 மீ தூரம் வரை பூமிக்கு அடியில் நிலவறை கால்வாய் அமைத்து அம்மழை நீரை தில்லைக் காளிக் கோயில் குளத்தில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது வடக்கு கோபுரத்தின்  வடகிழக்குப் பகுதியில் தொடங்கும் இந்த நிலவரை கால்வாயின் கட்டுமான தொழில்நுட்பம் சிந்துசமவெளி நாகரிக பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒப்பானது என்பது இதன் தனிச்சிறப்பு. முற்றிலும் நன்கு சுடப்பட்ட செங்கற்கள் மற்றும் கருங்கற் பலகைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும் இக்கால்வாய். இதற்கு பயன் படுத்தப்பட்டுள்ள செங்கற்களின் அளவுகள் கி.பி. 10 – 12 ஆம் நூற்றாண்டை சார்ந்ததா வைகளாக உள்ளது. சோழர் காலத்தில் முதல் மழைநீர் சேமிப்பு திட்டம் நடைமுறை படுத்தப்பட்ட பெருமை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையன்று.
        கடற்கரை அருகே அமைந்துள்ள சிதம்பர நகரின் நிலத்தடித்தடி நீரில், கடல்நீர் கலக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சிதம்பரம் நகரை சுற்றி ஒன்பது குளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவைகளில் சில வீரநாராயண ஏரியில் இருந்து நேரடியாக கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் சிதம்பரம் நகரின் நிலத்தடி நீர் உப்பாக மாறுவது நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டுமேயானால் மழை நீர் சேமிப்பின் மூலமே அது சாத்தியமாகும் என்பதை உணர்ந்த நம் மன்னர்கள் சிதம்பரம் கோயிலை சுற்றி நீர்பிடிப்பு குளங்களை ஏற்படுத்தி அதில் மழைநீரை சேமிக்க வழிவகைகளை செய்து இருந்தனர் . இவைகளை இன்று நாம் சரியாக பாரமரிக்கப் படாததன் விளைவே சிதம்பரம் நகரின் நிலத்தடிநீர் இன்று உப்பாக மாறியதற்கு மூல காரணமாகும்.
        மேலும் சிதம்பரம் நடராஜபெருமான் சோழமன்னர்களின் குலதெய்வமாகும். எனவேதான் சோழ மன்னர்களில் சிலர் தில்லை நடராஜர் கோயிலில் முடிசூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதினர். அதனால் தான் கோயிலை மையமாகக் கொண்டு அகன்ற வீதிகளை அமைத்து சோழப் பேரரசின் ஆன்மிகத் தலமாக சிதம்பரத்தை மாற்றியிருந்தனர். ஆனால்  மழைக் காலங்களில் சிதம்பரத்தின் மேற்குப் பகுதியில் பொழியும் மழைநீரினால் இந்நகர் அடிக்கடி வெள்ளத்தால் பாழ்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டே முதலாம்  பராந்தக சோழன் காலத்தில் சிதம்பரத்திற்கு மேற்கே வீரநாராயண ஏரி வெட்டப்பட்டிருக்க வேண்டும். மேற்குப்பகுதியில் இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அங்கு சேமிக்கப்பட்டதன் விளைவாக நடராஜர் கோயிலுக்கு மழைக் காலங்களில் கூட பக்தர்கள் பயமின்றி வந்து செல்ல முடிந்தது. மேலும் ஆண்டுக்கு சுமார் இரண்டு டி.எம்.சி தண்ணீர் வீனாக கடலில் கலப்பது ஏரியில் செமிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற முடிந்தது.

         சிதம்பரம் நகரில் வாழ்ந்த மக்களின் அடிப்படை தேவைகளான தண்ணீர் , சாலை வசதிகள் , இரவு நேரங்களில் தெருவிளக்கு வசதிகள் , மக்களின் அறிவு திறனை மேம்படுத்த நூல் நிலையம் , வேத பாடசாலை , மக்களின் மருத்துவ தேவைக்கென மருத்துவமனை , நகரை சுற்றி பசுமையான நந்தவனங்கள் மற்றும் மரங்களை வளர்த்து நகரை பசுமை நகரமாக ( GREEN CITY ) மாற்றியது போன்ற நகர கட்டுமானங்கள் அனைத்தும் நம் மன்னர்களால் நடைமுறை படுத்தப்பட்ட  நகரமே இந்த தில்லை நகராகும்.   




Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு