மணிக்கொல்லை - கல் மணிகள்

கிளியோபாட்ராவின் மேனியை அலங்கரித்த கடலூர் கல் மணிகள்

 முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் , உதவிப் பேராசிரியர் , வரலாற்றுத்துறை , அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆத்தூர்.

                     
           ‘’அலைகடல் நடுவுள் பலகலஞ்செலுத்தித் திரைகட லோடித் திரவியம் தேட’’ முனைந்த நம் பண்டைய தமிழர் கிரேக்கம் , ரோமபுரி , சீனம் , எகிப்து , பாலஸ்தீனம் , மொசபடோமியா , பாபிலோனியா, அரேபியா , மலாயா , இந்தோனேசியா , ஜாவா , தாய்லாந்து , இலங்கை போன்ற அயல் நாடுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தமது மற்றும் தம் நாட்டின் பொருளாதார நிலையை அந்நிய செலாவணி மூலம் உயர்த்திக் கொண்டு , பிறநாடுகளில் தாம் கற்ற உயர்ந்த பண்பியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை , தம்மை சார்ந்த மக்களுக்கும் கொடுத்து  அவர்களையும் பண்பாட்டுரீதியாக உயர்தியமை போற்றத்தக்க ஒன்றாகும் . மேலும் தமிழர்களின் வாணிபம் சிறப்புற்று இருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய ‘’ கொள்வதூம் மிகைகொளாது கொடுப்பதூம் குறைபடாது பல் பண்டம் பகர்ந்து ‘’ என்ற உலகளாவிய வணிகநெறிமுறைச் சட்டமும் ஒரு காரணம் . எனவேதான் அக்காலத்தில் பல உலகநாடுகள் தமிழகத்துடன் வாணிபம் செய்யப் போட்டிபோட்டுக் கொண்டு வங்கக்கடலை நோக்கின.

புகழ்பெற்ற துறைமுகப் பட்டினங்கள்

      வரலாற்றுத் தொடக்க காலத்தில் கொற்கை , தோண்டி , அழகன்குளம் , பூம்புகார் , அரிக்கமேடு , எயிற்பட்டினம் இன்றைய மரக்காணம் போன்ற துறைமுகங்கள் அயல்நாட்டு வாணிபத்தை ஊக்கப்படுத்தியதோடு அல்லாமல் , தமிழக மக்களை உலகில் உள்ள பலதரப்பட்ட மக்களோடு ஓர் அற்புதமான தொடர்பியல் தன்மையையும் ஏற்படுத்தியப் பெருமை இத் துறைமுகங்களுக் குண்டு. இப்புகழ்பெற்ற துறைமுகங்களில் இருந்து அகில் , மிளகு , ஏலக்காய் , சந்தானம் , மஸ்லின் துணி , முத்து , அரிய கல்மணிகள் போன்றவை ஏற்றுமதியாகின. இப்பொருட்களில் வெளிநாட்டுப் பெண்களை மிகவும் கவர்ந்தவை முத்து , வண்ண கல்மணிகளாகும். முத்து ஏற்றுமதிக்கு பாண்டியநாடும் , அழகிய கல்மணிகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு கொங்கு நாடும் , கடலூர் மாவட்டமும் புகழ் பெற்றவைகளாக விளங்கின.

கிளியோபாட்ரா

      தமிழக ‘’ மணி ஆரங்களை இனியும் உரோமாபுரிப் பெண்கள் வாங்கி நாட்டின் கருவூலத்தை காலிசெய்ய அனுமதிக்கக்கூடாது என்று கி.பி. முதல் நூற்றாண்டில் உரோம் செனட்டில் பேசினான் தாலமி ‘’. மிகச்சிறந்த  வானவியலாளரும் , அரசியல் விமர்சகருமான இந்த தாலமி தமிழக கடற்கரை நகரங்களில் ரோம் மற்றும் தமிழக வணிகர்களுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தகத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிய நாட்டு முத்து மணிகளும் , தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட  வண்ணக் கல் மணிகளும் கிளியோபாட்ராவின் மேனியை அலங்கரித்ததோடு அல்லாமல் அவளது நாட்டின் பொருளாதார ஆணிவேரையே வீழ்த்தும் அளவிற்கு வல்லமை பெற்றிருந்தது. இதன் மூலம் பண்டைய கால தமிழர்களின் ஆபரணக்கலைகளின் தன்மையையும் அதன்பால் வெளிநாட்டினர்களுக்கு இருந்த அசைக்கமுடியாத மோகத்தையும் அறியமுடிகிறது. மேலும் சங்க இலக்கியத்தில் 381 இடங்களில் கழுதில் அணியும் மணிகள் பற்றிய குறிப்புக்கள் காணப்படுவது தமிழர்கள் மணி ஆபரணங்கள் மீது கொண்டிருந்த மோகத்தை அறியமுடிகிறது. 

  கொடுமணல்       

        அழகிய கல்மணிகள் தயாரிப்பில் உலகப்புகழ் பெற்ற கொடுமணல் தற்போது ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இங்கு 1985 முதல் 2013 வரை நடைபெற்ற அகழாய்வுகளில் சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பபட்ட கல் மணிகள் கிடைத்துள்ளன. கொடுணலுக்கு அருகே உள்ள படியூரில் கிடைத்த பச்சை நிறக்கல்லால் ( BERYL ) தயாரிக்கப்பட்ட கல்மணிக்கு ரோம நாட்டில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்ததாக தாலமி குறிப்பிடுவது ஆய்விற்குரிய ஒன்று. மேலும் இந்த கொடுமணல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலத்தின் பிரதான கல்மணிகள் தயாரிப்பின் முக்கியகேந்திரமாக விளங்கியது என்பது இங்கு நடத்தப்பட்டுள்ள அகழாய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம்

     தமிழகதின் மேற்கு கடற்கரை வழியாக வந்த வெளிநாட்டினர் பாலக்காட்டு கணவாய் வழியாக கொங்குமண்டலத்தில் இருந்த கொடுமணலுக்கு வந்து வண்ண கல்மணிகளை விலைக்கு வாங்கி சென்றனர். அது போல கிழக்கு கடற்கரையை ஒட்டி இருந்த கொற்கை துறைமுகத்தில் இருந்து முத்துக்களையும் , காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வாசனை திரவியங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கொல்லை , சிலம்பிமங்கலம் , பெரியப்பட்டு , ஆண்டார்முள்ளிப்பள்ளம் , திருச்சோபுரம் , தியாகவல்லி , காரைக்காடு , குடிகாடு போன்ற இடங்களில் இயங்கிவந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட வண்ணக் கல்மணிகள் அரிக்கமேட்டிற்கு வந்த ரோம் , சீனா , தாய்லாந்து , இந்தோனேஷியா , ஜாவா, இலங்கை மற்றும் அரேபிய வணிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி சென்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிகாடு கிராமத்தில்  நடைபெற்றுள்ள அகழாய்வில் கி.மு. 1 முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர் ரோமானியர்களுடன் நேரடி வணிகத்தொடர்பும் கல்மணிகள் தயாரிப்பு கூடமாகவும் குடிகாடு கிராமம் இருந்துள்ளதை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இவ்வூருக்கு அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தில் ரோம நணயம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .

மணிக்கொல்லை

      புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தில் ஊதா , கருநீலம் , பச்சை , மஞ்சள் , கருப்பு , சிவப்பு , வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட மணிகளும் , கார்னீலியன் வகை மணிவகைகளும் இங்கு நடத்தப்பட்டுள்ள கள ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் இவ்வூரில் துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகளும் மூலகற்களும் அதிக அளவில் கிடைப்பதால் சங்க காலத்தில் மணிக்கொல்லை பகுதியில் மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருக்காவேண்டும் என்பதை அறியமுடிகிறது. மேற்கண்ட ஊர்களில் தயாரிக்கப்பட்ட கல்மணிகள் புதுவை மாநிலத்தில் உள்ள அரிக்கமேட்டு துறைமுகத்தின் வழியாக கிரேக்கம் , ரோமபுரி , தாய்லாந்து , இலங்கை , அரேபியநாடுகள் , எகிப்து போன்ற உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மூலப் பொருட்கள்


     கடலூர் மாவட்டத்தில் இயங்கிவந்த மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவன்மலை , பெருமாள் மலை வெங்கமேடு ,காங்கேயம் , எடப்பாடி, தாளமலை , எருமைப்பட்டி , தாத்தையங்கார் பேட்டை , படியூர் போன்ற ஊர்களில் பச்சை , ஊதா , கருநீலம் , மஞ்சள் , கிளி பச்சை , பளிங்கு போன்ற நிறங்களில் மூலக்கற்கள் கிடைகின்றன. இந்த மூலக்கற்களைப் பெற்ற கடலூர் பகுதி கொல்லர்கள் வண்ண கல்மணிகளாக உருமாற்றம் செய்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் பகுதியில் வாழ்ந்த மணி தயாரிக்கும் கொல்லர்களின் தொழில்நுட்பதில் உருவான கல்மணிகள் எகிப்தில் பிறந்து ரோம சாம்ராஜ்யத்தின் அரசியாக விளங்கிய பேரழகி கிளியோபாட்ராவையே மயக்கிய பெருமைக்குரியது. 




Comments

  1. நல்ல பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  2. எனக்கு பச்சை கற்கள் தேவை +918778593177

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு