இராஜராஜ சோழர் கால முசிறிக் கல்வெட்டு

 ராஜராஜ சோழர் கால முசிறிக் கல்வெட்டு






திருச்சி- முசிறி சாலையில் 12 கி.மீ. தொலைவிலிருக்கும் திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் முதலாம் ராஜராஜர் காலக் (பொதுக்காலம் 996) 297 வரிகளில் கல்வெட்டு.

“முதலாம் ராஜராஜரின் அரண்மனைப் பெரியவேளத்துப் பணிப்பெண்ணாக இருந்த நக்கன் கற்பகவல்லி, தம்மைத் திருவாசிக் கோயில் இறைவனின் மகளாக எண்ணி வாழ்ந்தவர். தம் ஊதிய சேகரிப்பிலிருந்து 201 கழஞ்சுப் பொன்னை இக்கோயிலுக்கு வழங்கிய கற்பகவல்லி, ஆண்டுக்கு 16 கலம் நெல் விளையக்கூடிய இரு நிலத்துண்டுகளையும் சேர்த்தளித்துள்ளார்.

அவர் அளித்த 201 கழஞ்சுப் பொன்னை மாற்றுரை வரதீசுவரர் கோயிலிலும், பாச்சில் அமலீசுவரத்திலும் பணியாற்றிய 28 கலைஞர்களும் பணியாளர்களும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு அதற்கான ஆண்டு வட்டியாக ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு ஒரு கலம் நெல்லென 201 கலம் நெல்லைக் கோயில் பண்டாரத்தில் அளந்தனர். இந்நெல்லுடன், நிலவிளைவு தந்த 16 கலம் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு 217 கலம் நெல், கற்பகவல்லி இக்கோயிலில் நிறுவிய ஐந்து அறக்கட்டளைகளுக்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் இளங்காலையில் கோயில் இறைவனுக்கும் ராஜராஜவிடங்கர் என்ற பெயரில் கோயிலில் விளங்கிய உலாத் திருமேனிக்கும் அமுது வழங்கக் குறிப்பிட்ட அளவு நெல் ஒதுக்கப்பட்டது.

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த கற்பகவல்லியின் பெயரால் ஆண்டுதோறும் அந்நாளில் இறைவனை 108 குட நீரால் திருமுழுக்காட்டிச் சிறப்பு வழிபாடும், படையல்களும் நிகழ்த்துவதுடன், உலாத்திருமேனியை திருவோலக்க மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அப்பம் வழங்கவும், செலவினங்கள் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப நெல் ஒதுக்கப்பட்டது.

கோயிலில் தைப்பூசத் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடவும் அப்போது இறைவனுக்கு மதியப் படையலளித்ததும், 50 சிவயோகிகள், 50 தவசிகளுக்கு மதிய விருந்தளித்து உபசரிக்கவும் வட்டியாக வந்த நெல்லின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தும் இடமாக விளங்கிய பெருமண்டபத்தை ஆண்டுதோறும் பழுதுபார்த்துச் செப்பனிடவும் கற்பகவல்லி நெல் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இக்கல்வெட்டின் வழித் திருவாசி கோயிலில் ராஜராஜர் காலத்தே தலைக்கோலிகளும், தேவரடியார்களும், கந்தர்வர்களும், இசைக்கருவி கலைஞர்களும், சோதிடர், தச்சர், வேட்கோவர் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களும் கோயில் வழிபாடு உள்ளிட்ட பணிகளுக்குப் பொறுப்பேற்ற சிவாச்சாரியார்கள், பரிசாரகர்கள் முதலிய பலரும் இருந்தமை அறியப்படுகிறது. அப்பம் எப்படிச் செய்யப்பட்டது என்ற குறிப்புக் கிடைப்பதுடன், விழாக்காலப் பணியாளர்களின் பட்டியலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய விகிதங்களும் இக்கல்வெட்டால் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதுபோலவே அமலீசுவரத்திலிருந்த பணியாளர்கள் ஐவர் பெயரும் கிடைத்துள்ளன”.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு