பெருமாள் தடாகம்

 தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகம்




தமிழ் கூறும் நல்லுலகம் நீண்டகாலமாகவே தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது.

' வண்தமிழ் நாட்டு எல்லை பிற்பட நெறியின் ஏகி'

' பானல் வயல் தமிழ்நாடு'

' பூழியர் வண்தமிழ் நாட்டுத் தளர்செய்'

என்ற பாடல் வரிகளால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சேக்கிழார் பெருமான் தமிழ் மண்ணை தமிழ்நாடு என்று குறித்துள்ளார்.

இதைப்போலவே பல்லவ குல பாரிஜாதம் என்று போற்றப்பட்டவனும் மூன்றாம் ராஜராஜ சோழனின் மைத்துனனுமாகிய  காடவராயன் கோப்பெருஞ்சிங்கனும் தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்தியுள்ளான்.

இவன், விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவன்.

"தூய தமிழ்நாடு காத்த பெருமான்”, “நாயனார் அழகிய சியரான தமிழ்நாடு காத்தான் பல்லவராயர்”, “பேணுசெந்தமிழ் வாழப்பிறந்த காடவ கோப்பெருஞ்சிங்கன்” என பலவாறு புகழப்பட்டிருக்கிறான் இந்த மாமன்னன்.

கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே “தமிழ் நாட்டை காப்பாற்றியவன்” என்றும் “ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பேணுவதைப் போல செந்தமிழை வாழவைக்க பிறந்தவன்” என்றும் சோழர்கள் காலக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவன் “காடவன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்”.

இம்மன்னன் பெயரில் தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகம்  இருந்த செய்தியை  தினமணி நாளிதழில்(12.12.2021) தொல்லியல் துறையின் மேனாள் துணை கண்காணிப்பாளரும்  உறவினருமான திரு கி. ஸ்ரீதரன் அவர்கள் எழுதியுள்ளார்.

திரு எஸ் ஆர் பாலசுப்ரமணியம் என்பவரால் எழுதப்பட்டு 1965 ஆம் ஆண்டு பாரி நிலையத்தால் வெளியிடப்பட்ட 'பேணு செந்தமிழ் வாழப் பிறந்த காடவன் கோப்பெருஞ்சிங்கன்' என்ற நூலிலும் மேற்கண்ட வரலாறு கூறப்பட்டுள்ளது.

"திருநெடுந் தோப்பும் தீர்த்த மாகிய
அமுதநன் னதியும் அனைத்திலும் தூய
தமிழ்நாடு காத்த பெருமாள் தடாகமும்
வண்டிசை பாடும் அது மலர் வாசம்"

என்று அந்த கல்வெட்டு தொடர்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் இம்மன்னனின் திருவுருவச்சிலை இடம்பெற்றுள்ளது.

செஞ்சி அருகே உள்ள அன்ன மங்கலம் மலையில், சிங்கம் ஒன்று யானையை வீழ்த்துவது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது.

இது மூன்றாம் ராஜராஜனை காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் சிறைவைத்த இடமாகும்

சிற்பத்தில் உள்ள யானை, மூன்றாம் ராஜராஜனையும், சிங்கம் காடவராயன் கோப்பெருஞ்சிங்கனையும் குறிக்கிறது.

சிங்கத்தின் கண் புருவத்தில்,  "சொக்கப் பல்லவன் வாய் செல்லும் வன்னியர் மணாளன்" என்ற கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூன்றாம் ராஜராஜன், காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் மைத்துனன் என்று தெரியவருகிறது.

கல்வெட்டுகளில் தன்னை பள்ளி என்றும் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் குறிப்பிட்டுள்ளான்.

காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் வன்னியன் என்பதும் தமிழன் என்பதும் தமிழ்நாடு என்ற பெயரை 800 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தியவன் என்பதும் போற்றுதலுக்குரிய
வரலாறாகும்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு