வெண்டயம்பட்டி சிவன்கோயில் - தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டயம்பட்டி சிவன்கோயில்
Vendayampatti sivan temple
தஞ்சை பகுதி கள்ளர்களின் பூர்வீக நாடுகளில் ஒன்று ஏரிமங்கலநாடு என்பதாகும். ஏரிமங்கல நாட்டுக்கள்ளர்கள் குதிரைகளை கடிவாளம் இல்லாமல் இயக்குவதில் வல்லவர்கள். மின்னல் தோன்றி மறைவதற்குள் ஒன்றிணையும் திறன் படைத்தவர்கள். வெண்டயம் என்றால் குதிரைகளின் கால்களில் கட்டப்படும் சதங்கை எனப்படும்.
மாமன்னன் இராஜராஜனின் மகத்தான சாதனைகளுள் ஒன்று காவிரியின் தென் கரையில், குளித்தலைக்கு மேற்கே 15 கிமீ தொலைவிலுள்ள மாயனூர் என்னுமிடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலமாக திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென் கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்தக் கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்தது, அங்கு ராஜராஜன் உருவாக்கிய ஏரியூர் நாடு, பின்னர் ஏரிமங்கல நாடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மாயனூர் கால்வாய் தஞ்சையின் தென் பகுதி வரை நீள்கிறது. ஏரிமங்கலநாடு என்று வித்தியாசமாக பெயர் உள்ளதே என்று அங்கே சென்று பார்த்தால் அந்நாடு முழுவதும் ஏரிகளை உள்ளடக்கியுள்ளது நீரை சேமிக்க.
கல்லணையில் இருந்து இராஜராஜனின் பெயரில் வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் நீரானது ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி, வையாபுரிப்பட்டி, சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, போன்ற ஊர்களில் உள்ள ஏரிகளை நிரப்பும், இவ்வூர்கள் அனைத்தும், உய்யக்கொண்டான் வாய்க்காலின் பாசனத்தால் வளம் பெறுகின்றன.
வெண்டையம்பட்டி கிராமம் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் சோழ மண்டலத்துப் பாண்டிகுலாசனி வளநாட்டின் ஏரியூர் நாட்டுப் பிரிவில் இருந்தது. இந்த ஏரி மங்கல நாட்டின் ஊர்களாக ராயமுண்டான்பட்டி, காங்கேயன்பட்டி, சுரக்குடிப்பட்டி, சோழகம்பட்டி,விண்ணணூர்பட்டி,தி ருச்சென்னம்பூண்டி, வெண்டையம்பட்டி திகழ்கின்றன. இந்த ஊர்களின் பொதுத் திருத்தலமாக திகழ்வது வெண்டையம்பட்டி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்.
தஞ்சை – திருச்சி சாலையில் உள்ள மனையேறிப்பட்டியில் இருந்து வடக்கில் 5 கிமீ.
உய்யக்கொண்டான் ஆற்றுநீர் வெண்டையம்பட்டி பேரேரியில் வந்து நிரம்புகிறது, அதனை இன்று பெரிய குளம் என அழைக்கின்றனர். இவ்வூரின் கிழக்கு பகுதியில் அமைந்திருப்பவையே தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலும் , அருகில் உள்ள ஆலய திருக்குளமும்.
தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலிலுள்ள கணபதி சிலைகள் இரண்டில் ஒன்று பராந்தகசோழன் காலத்தியது , இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் (கி.பி 1070 - 1125) காலத்தில் கற்றுளி ஆக்கப்பட்டது. இத்திருக்கோயிலை கி.பி 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரசர்களின் பிரதிநிதி ஒருமுறையும், கி.பி 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் - ஏரிமஙகல நாட்டை ஆட்சி செய்த தமிழ்மன்னர் அழகம்பெருமாள் என்பவரும் புதுப்பித்தனர் என்பதை கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. கருவறை சுவர் மற்றும் சண்டிகேசுவரர் மண்டபம் இரண்டிலும் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவர் பெயரில் வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. தகவல் - டாக்டர். குடவாயில் பாலசுப்ரமணியன்.
கிழக்கு நோக்கிய திருக்கோயில் சுற்றுமதில் சுவர் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது அதில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. நுழைவாயில் மேல் அம்பிகை லிங்க பூஜை செய்வது போன்ற சுதை சிற்பம் உள்ளது. வெளிவாயில் அருகில் விநாயகர் சிற்பம் ஒன்றும் உள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் மகா மண்டபம் அர்த்தமண்டபம் இடைநாழி கருவறை என சோழர்கால கட்டுமானம் உள்ளது.
இந்த மகாமண்டபத்தில் அம்பிகை கருவறை தெற்கு நோக்கி உள்ளது. அவரின் கருவறை வாயிலில் இரு துவாரபாலகியர் உள்ளனர். அம்பிகை அழகே உருவானவர். மண்டபத்தின் வெளியில் இறைவனின் நேர் எதிரில் சிறிய கல் மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளது. மண்டப விதானத்தில் பெரிய மீன் சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபம் செல்லும் வாயில் அருகில் மகா கணபதியும் சுப்ரமணியரும் உள்ளனர். மண்டபத்தூண்களில் நாயக்க மன்னர்கள் சிலரின் உருவங்கள் உள்ளன. இறைவன் கருவறை வாயிலில் இரு கருங்கல் துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறையில் இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார்.
இறைவன் – தான்தோன்றீஸ்வரர் இறைவி- தர்மசம்வர்த்தினி
கருவறை கோட்டத்தில் தக்ஷணமூர்த்தி மற்றும் பிரம்மன் உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் கன்னிமூலை கணபதி அவரை ஒட்டி காசி விஸ்வநாதர் விசாலாட்சி உள்ளனர். அருகில் வள்ளி தெய்வானை சமேத முருகனும் அடுத்த சிற்றாலயத்தில் வரதராஜ பெருமாள் தம் தேவியருடன் உள்ளார், எதிரில் கருடன் உள்ளார். சண்டேசர் சன்னதி சிறப்பு வாய்ந்த ஒன்று, பெரிய கருங்கல் கருவறையுடன் முகப்பு மண்டபம் ஒன்றுடன் உள்ளது கல்வெட்டுக்கள் பல இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment