வளஞ்சியர்
தனுஷ்கோடியில் மாயமான வட்டெழுத்து கல்வெட்டுப் பற்றிய தகவல்கள் - வணிகர் கல்வெட்டு
தனுஷ்கோடி காட்டுப்பகுதியில் சிதைந்து மண்மூடிய காளி கோயில் அருகே உள்ள முனீஸ்வரர் கோயிலில் சூலம் அருகே சூடம் ஏற்றும் கல்லாக இச்சதுரத் துண்டுக்கல் உள்ளது. கல்வெட்டின் ஒரு சிறு பகுதியே உள்ள போதும் நல்ல 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து அமைதியில் இக் கல்வெட்டுள்ளது. வணிகக் குழுக்கள் பற்றிய குறிப்பும் உள்ளது.
1. வரும் ச
2. ஸமீசுவரத்து வூரோ
3. ம் வளஞ்சிய
4. திசையாயி
5. ...
இலங்கை மற்றும் பாண்டிய அரசுகளுக்கானத் தொடர்பின் பின்னணியில் வணிகர்களின் நடவடிக்கைகளே முன்நிற்பன. இது துண்டுக் கல்வெட்டானாலும் 'ராமேசுவரம்', 'வளஞ்சியர்', 'திசையாயிரத்தவர்' குறித்த சொற்களைக் கொண்டுள்ளமை சிறப்பாகும். அதுவும் ஒரு காளி கோயில் பகுதியில் கிடைப்பதும் இன்னும் சிறப்பாகும். வளஞ்சியர், திசையாயிரத்தவர் வணிகக் குழுவினரே. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் காளியின் செப்புத் திருமேனி ஒன்று இன்றும் இராமேஸ்வரத்தில் இராமர் இலக்குமணர், சீதை, அனுமன் குழுச் செப்புத் திருமேனிகளுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இராமேசுவரம் இடைக்காலப் பாண்டியர் கல்வெட்டில் கோடி நாட்டு இராமேசுவரம் என்றே குறிக்கப்பிடுவதும் தனுஷ்கோடியின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இக்காட்டுப் பகுதியில் வரலாற்றுத் தேடல் செய்யும்போது இன்னும் அரிய பல செய்திகள் வெளிப்படக்கூடும்.
- சு.இராசகோபால், சென்னை ( ஆவணம் - 27, 2016 )
அமைவிடம் : இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் நெடுஞ்சாலையில் ஜடா தீர்த்தத்தை தாண்டி சாலையின் இடது பக்கத்திலேயே சூலமும் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருக்கும். அறிவிப்பு பலகையின் படி சாலையின் இடது பக்கத்தில் செல்ல வேண்டும். இடது பக்கத்தில் கடல் தான் உள்ளது எப்படி செல்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றோம். பின்னர் அங்கிருந்து ஒருவர் இந்த வழியில் தான்பா செல்ல முடியும் மற்ற வழிகள் இல்லை என்று கூறிவிட்டார். கடல் தண்ணீர் முட்டிவரை தான் இருக்கும் அதனால் தைரியமாக செல்லுங்கள் தம்பி என்றார். பின்னர் கடலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அவர் கூறியது போல் முட்டி அளவுதான் தண்ணீர் இருந்தது. ஆனால் எப்படியும் ஒரு 500 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்ளேயே நடக்க வேண்டும். பின்னர் எதிர்கரை ஏறிய பின்னர் காட்டிற்குள் 300 மீட்டர் தூரம் மீண்டும் நடக்க வேண்டும். எங்கே உள்ளது என்று தெரியாமலேயே காலடி தடத்தை பின்தொடர்ந்து சென்றோம். சில தூரங்கள் நடந்த பின்னர் பக்திகரமான வாசனை மூக்கைத் துளைத்தது. பின்னர், அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இக்கோவில் இருப்பதை கண்டறிந்தோம். நாங்கள் சென்றபோது மூன்று நபர்கள் அங்கு இருந்தனர். அதில் ஒரு பாட்டி நாட்டுக்கருவை மரத்தடியில் அமர்ந்து குறி சொல்லிக் கொண்டு இருந்தார். அவர்களைத் தொந்தரவு செய்யாமல், கல்வெட்டை எண் திசைகளிலும் தேடினோம் கிடைக்கவில்லை. அவர்களிடமும் கேட்டபோது அப்படி எதுவும் இங்கே இல்லை தம்பி என்றார்கள். நாங்கள் அடிக்கடி இங்கே வருவோம், ஆனால் இதுவரைப் பார்த்தது இல்லை என்றார்கள். சரி என்று கூறிவிட்டு மீண்டும் தேடிப்பார்த்தோம் கல்வெட்டு கிடைக்கவில்லை. பின்னர் ஏமாற்றத்துடன் வந்த வழியே கடந்து பின்னர் தனுஷ்கோடி சென்றோம். கடைசியாக அரிச்சல்முனை சென்றோம்.
Comments
Post a Comment