பெருவெழி கல்வெட்டு


                                                    பெருவெழி கல்வெட்டு 






 கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூருக்கு அருகிலுள்ள வனத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்றுள்ளது. பெருவெழியில் பயணிக்கும் மக்களை, வணிக பண்டங்களை பாதுகாக்கும் பொருட்டு சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் ஒரு நிழற்படை அமைத்து பாதுகாத்த செய்தி அதில் பதிவாகியுள்ளது. கல்வெட்டில்  "இராசகேசரி பெருவழி" என்றே அப்பெருவழி குறிக்கப்பட்டுள்ளது. 

 ஈராயிரம் ஆண்டுகள் பழமையான பாதைகள் பற்றிய குறிப்புகள் 'அர்த்த சாஸ்திரம்' நூலில் வருகின்றது. அவை 'தட்சின பெருவெழி' என்றும் அது வடக்கில் தக்காணத்தில் இருந்து தெற்கே தமிழகத்தின் கடைக்கோடி வரையில் தர்மபுரி, கரூர் வழியே பயணித்து அடைந்ததாக கூறுகிறது. இதற்கு இணையான ஒரு பெருவழி சீனாவில் துவங்கி இந்தியா,‌ அரேபியா வழியாக ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் 'பட்டு பெருவழி' இருந்தது.   இந்த பெருவழிகள் அனைத்தும் வணிக பயணங்களை எளிமையாக்கியதுடன் நாகரிகங்களின்  வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியது.  அதற்கு இணையான சிறப்பு வாய்ந்த பெருவழி ஒன்று தான் 'இராசகேசரி பெருவழி'யும். 

   கிழக்கு கடற்கரை துறைமுக பட்டணத்திலிருந்து மேற்கு கடற்கரை பட்டணமான முசிறிக்கு செல்லும் வழியில் 'பாலக்காட்டு கணவாய்' என்றொரு பரப்பு உள்ளது. மேலும் தமிழகத்திலிருந்து மேலை நாடுகளுக்கு வணிக பண்டங்கள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்ட தரவுகள் சங்க இலக்கியங்கள், தொல்லியல் தரவுகளில் பதிவாகியுள்ளன. மிளகு, தந்தம், பளிங்கு மணிகள், முத்துக்கள், இரத்தினங்கள், இரும்பு பொருட்கள் அவற்றில் அடங்கும். பண்டைய ரோம், அரேபிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்து வணிக பரிவர்த்தனையில் ஈடுபட்ட வணிகர்கள் இப்பெருவழி பாதையின் வாயிலாக தான் தமிழகத்தின் உட்பகுதிக்குள் பயணித்தனர். அதற்கான தொல்லியல் தரவுகளும் உண்டு. 'பாலக்காட்டு கணவாய்' பரப்பை கடந்தால் பேரூர், வெள்ளலூர், சூலூர், கொடுமணல் கரூர் போன்ற பண்டைய நகரங்களில் ஏராளமான வெளிநாட்டவர் நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 'ரோமானியர்கள் நாணயம்' மதிப்புமிக்கவை. தமிழகத்தில் கிடைக்கும் ரோமானிய நாணயங்களின் எண்ணிக்கையில் பெரும்பகுதி இந்த பெருவழி பாதையை ஒட்டிய பரப்புகளில் இருந்து கிடைத்தவை என்பதை நோக்கும் போது இதன் முக்கியத்துவம் புலப்படும். இப்பெருவழி சங்க காலத்திலிருந்தே மக்களின் பயன்பாட்டில் இருந்து,  வரலாற்று காலத்திலும் செல்வாக்கு மிக்க வழிப்பாதையாக இருந்துள்ளது…
கல்வெட்டு பாடம்
1. ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப்
2. பெருவழி திருநிழலு மன்னு
3. யிருஞ் சிறந்த
4. மைப்ப ஒருநிழல் வெண்டிங்
5. கள் போலோங்கி ஒருநிழல்போ
6. ல் வாழியர் கோச்சோழன் வளங்
7. காவிரி நாடன் கோழியர் கோக்கண்ட
8. ன்குலவு

1. ஸ்வஸ்திஸ்ரீ கோஇரா
2. சகேசரிப்
3. பெருவழி

 சோழர்கள் தமிழகம் முழுவதும் ஆட்சி பொறுப்பை ஏற்றபோது கொங்கு நாட்டில் நிர்வாக ரீதியாக பதிவு செய்த முதல் கல்வெட்டு இதுதான். கணவாய் பரப்பில் பயணிக்கும் மக்களுக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் ஆதித்த சோழனின் 'பாதுகாப்பு படை' ஒன்று அவனது நிழல் போல் நின்று பாதுகாக்கும் என்பது அக்கல்வெட்டின் செய்தி. கோவில்களிலோ அல்லது வேறு இடங்களிலோ பதிவாகாமல் இங்கு பெருவழியில் பதிவாவதில் இருந்தே அப்பாதையின் தேவையை புரிந்து கொள்ளலாம். பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகும் இந்த பாதையே இடப்பெயர்வுக்கு ஏற்ற பாதையாக இருந்துள்ளதை பிற்கால கல்வெட்டுகளும் சான்று பகர்கின்றன. இந்திய வரலாற்றில்  பல பெருவழி பாதைகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும் சூழலில் தொல் பழங்காலத்திலிருந்தே வழக்கில் இருக்கும் ஒரு பெருவழி பாதைக்கு அதன் முக்கியத்துவத்தை விவரிக்கும் வகையிலான தொல்லியல் தரவுகள், கல்வெட்டு தரவுகள் கிடைப்பது மிக அரிது. அத்தகைய அரிதான வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு பெருவழி பாதை இது. இந்தியளவில் மிகப் பழமையான பெருவழி குறித்த தகவலை தாங்கி நிற்கும் இக்கல்வெட்டு தமிழகத்தில் கோவைக்கு அருகிலுள்ள வனத்தில் இன்று அழியும் நிலையில் உள்ளது வருத்தமளிக்கிறது. 
 தற்போது வனத்தினுள் காணப்படும் இக்கல்வெட்டு இருக்குமிடத்தில் பண்டையகால வழி பாதையின் எச்சங்கள் சிறிது தூரம் பாதிப்படையாமல் இருப்பதையும் அங்கு வரும் மக்கள் தங்களுக்கு தேவையான பாதுகாப்பு தாவளங்கள் அமைத்து தங்கியதற்கான எச்சங்களையும் காணலாம். மக்களின் தாகம் தீர்க்கும் பழமையான ஒரு சுனையும் இங்கு இருந்திருக்கிறது.
 தமிழகத்தின் தொன்மையான பெருவழி பாதை குறித்த தொல்லியல், கல்வெட்டு தரவுகளை தாங்கி நிற்கும் இக்கல்வெட்டு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் ஆய்வாளர் திரு அர. பூங்குன்றன் என்பவர் வெளிக் கொணர்ந்தார். அப்போது முழுவதும் படிக்கப்பட்டு கல்வெட்டு உலகளாவிய கவனத்தையும் பெற்றது. வனத்தில் தனிப் பாறையில் எழுதப்பட்ட  இக்கல்வெட்டு மழை, வெயில் போன்ற இயற்கை சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் எழுத்துக்கள் அழியும் நிலைக்கு வந்துவிட்டது. உலகின் மிகப்பழமையான பெருவழிப் பாதை குறித்தான கல்வெட்டினை காத்து வருங்கால சமூகத்திற்கு கையளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கிறோம்.
நன்றி 
Raveendran Ramasamy 
Namma Covai 

இப்படிக்கு
யாக்கை மரபு அறக்கட்டளை, கோவை.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்