வெள்ளைக்குடி

 "உழுபடையும் - பொருபடையும்."


2300 ஆண்டுகளுக்கு முந்தைய  சங்ககாலம். சோழநாட்டைச் சேர்ந்த வெள்ளைக்குடி என்னும் பெயருடைய ஒரு சிற்றூர்.


                                                                  




அந்த வருடம் வழக்கத்திற்கு மாற்றாய் பெருமழை பெய்தது. அளவுக்கதிகமான மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த விளை நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. விவசாயிகளுக்குப் பேரிழப்பு. விளைந்து முற்றிய நெற்கதிர்கள்  அனைத்தும் பெரும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

உழுகுடிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அடுத்த என்ன செய்வது.? இதை எவ்வாறு சரிசெய்வது.? 
இக்கட்டான சூழல். 

வெள்ளநீரை அகற்றி நிலத்தை சுத்தம் செய்து மீண்டும் உழுது பயிரிடவேண்டும். பொருளாதார உதவி வேண்டும்.

உழுகுடிமக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள். தங்கள் நிலமையை அரசனிடம் எடுத்துக்கூறி 
தங்களுக்கு அரசு உதவி கிடைக்குமாறு பரிந்துரை செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

தங்களது இந்த பரிந்துரையை அரசனிடம் யார் கொண்டுசெல்வது.?

இருக்கவே இருக்கிறார்கள் தமிழாய்ந்தப் புலவர்கள். அவர்கள்தானே எந்நேரமும் எந்தத் தடையுமின்றி அரசனை சந்திப்பார்கள். தாங்கள் கற்றத் தமிழ்வழி அரசனுக்கு அறிவுரை வழங்குவார்கள். அறமாற்ற வலியுறுத்துவார்கள்...

வெள்ளைக்குடி என்னும் தங்கள் சிற்றூரிலேயே அறமாற்றும் தமிழ் புலவர் நாகனார் உள்ளாரே. அவரிடம் சென்று தங்கள் நிலையை எடுத்துக்கூறுவோம் என்று  வேளான் மக்கள் அனைவரும் 
முடிவு செய்தார்கள். 

உழகுடிகளின் நிலையைக் கேட்டறிந்த புலவர் வெள்ளக்குடி நாகனார் அரசசபைக்குச் சென்று சோழமன்னன் கிள்ளிவளவனைச் சந்திக்கிறார்.

எடுத்தவுடன் ..
பெருமழையால் பாதிக்கப்பட்ட உழுகுடிகளுக்கு போதுமான உதவிகளை செய் என்று அரசனுக்கு ஆணையிடமுடியாது.

அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. தான் கற்ற தமிழ் புலமையின் வழியே அறிவுறுத்த வேண்டும்...

இதோ..
இவ்வாறு ஆரம்பிக்கிறார்
 வெள்ளக்குடி நாகனார்..

( புறநானூறு பாடல் - 35.
    உரை )



நாடுகெழுச் செல்வத்துப் பீடுகெழு வேந்தே..
கிள்ளிவளவா.. 

ஒன்றை நினைவு கொள்..

தண்ணீர் மிகுந்தக் கடல், காற்று உட்புகமுடியாத வானம் சூழ்ந்த குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரியவர்களாகிய முரசு முழங்கும் படைகளையுடைய மூவேந்தர்களில் அரசு எனப்படும் பெருமையுடையவனே...

ஒளி தரும் சூரியன் நான்கு திசைகளிலும் தோன்றினாலும், சுடர்மிகு வெள்ளி தெற்குத் திசைக்குச் சென்றாலும், காவிரி கிளைகளாக பிரிந்து சென்று வளம் தருமே..
( இயற்கைக்கு மாறாய் எது நடந்தாலும், வளம் தரும் காவிரியாற்றின் இயல்பு என்றும் மாறாதாம்) 

 அதனால் வேல்களின் தொகுப்பு போல் காட்சி தரும் அசையும் கணுக்களையுடைய கரும்பின் வெள்ளை நிறப்பூக்கள் காற்றில் அசைந்து ஆடும் வளமுடைய நாட்டின் வேந்தே..

நான் கூறுவதைக் கேள்..

செங்கோல் ஏந்தி ஆட்சி செலுத்தும் நீ, எளியோர் உன்னிடம் வந்து நீதி கேட்டால்  மழை நீரை விரும்புவர்களுக்கு பொழியும் பெரு மழை போல் நீதி வழங்குவாய்.



சூரியனைச் சுமக்கும் மேகங்கள் நிரம்பி வானாளாவிப் பரந்து நிற்கும் உன் வெண்கொற்றக்குடை வெயிலுக்கு மறைப்பு அன்று. உன் குடிகளின் இன்னல்களை போக்கும் குடை அது
என்று நாங்கள் எல்லோரும் அறிவோம்.

உனது எதிரிகளின் பலமிகுந்த யானைப்படையை போர்களத்திலே சிதறடித்த உன்  வீரர்களின்  வெற்றிக்கு எது காரணம்.?

யானைகளுடன் மோதி அதை வீழ்த்தும் திறனும் பலமும் உன் வீரர்களுக்கு எவ்வாறு வந்தது.?

 உனது தேசத்து  உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுது விளைவித்த நெல்லே காரணம். அந்த உணவின்றி உனது வீரர்களின் பலமும் திறனும் சாத்தியமா.? உனக்கு வெற்றிதான் கிட்டிடுமா.?

மழை பொய்த்துப் போனாலும், விளைச்சல் குறைந்தாலும் இயற்கை மாறினாலும் இவ்வுலகம்.. வேந்தனாகிய உன்னைத்தான் தூற்றும். 

காளைகளை ஏர்களில் பூட்டி உழவுத்தொழில் செய்யும் உழவர்களை நீ பாதுகாக்கவேண்டும். இதை நீ செய்தால் உனது பகைவர்கள் கூட உன்னை புகழ்வார்கள்.



அவ்வளவுதான் புலவர் பாடிய பாடலின் செய்தி.

புலவரின் வருகையும் பாடலின் நோக்கமும் அரசனுக்கு புரிந்தது. பெருமழையால் பாதிக்கப்பட்ட உழுகுடிகளின் கோரிக்கையை ஏற்று புலவர் வந்துள்ளார் என்பதையும் அரசன் அறிந்துகொண்டான்.

அரசனது வெற்றிகளும் அதனால் கிடைத்தப் புகழும் இன்னபிற அனைத்திற்கும் அடித்தளமாய் இருப்பது உணவு. அதைத் தரும் உழவர்களின் கண்ணீரைத் துடைப்பது அரசனின் கடமையன்றோ என்று மறைமுகமாக பாடிவிட்டார் புலவர். 

புலவர் அறிவுறுத்திய அரசனின் கடமையை உடனே செய்தான் சோழன் கிள்ளிவளவன்.

வெற்றுப்புகழ்பாடி வெகுமதியை எதிர்நோக்குபவர்கள் அல்ல தமிழ்ப் புலவர்கள். 

அவர்களது ஒவ்வொறு சொல்லும் அறமாற்றும் . ஒவ்வொரு பாடலும் சமூக நலன் காக்கும் என்பதை நிரூபித்துவிட்டு வந்தார் புலவர் வெள்ளக்குடி நாகனார்.

நன்றி 
மா.மாரிராஜன்.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்