மதுரை தீக்கிரையான நாள்

                                                        மதுரை தீக்கிரையான நாள்





எல். டி. சாமிக்கண்ணு அவர்களின்  கருத்துப்படி, சிலப்பதிகாரக் காப்பியம் முற்காலத் தகவல்களைக் கொண்டு பிற்காலத்தில் எழுதப்பட்ட ஓர் இலக்கியம் (கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' போல).  அவ்வாறு எழுதிய புலவர் சேரன் செங்குட்டுவனின்  தம்பி இளங்கோவடிகளின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு எழுதிய முறை  ஒரு சிறந்த கற்பனை என்கிறார் (An Indian Ephemeries A.D. 700 to A.D. 1799, Vol. I, Part I. L. D. Swamikannu Pillai, Appendix (iii) Notes on the chronology of early Tamil literature Pages 459-470, 1922).  இவர் நூலில் உள்ள சிலப்பதிகாரக் காலக்கணிப்பு கட்டுரை, திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியின் இதழில் வெளியான இவருடைய கட்டுரையின் சுருக்கம்.  

எல். டி. சாமிக்கண்ணு தன்னுடைய சிலப்பதிகாரக் கால ஆய்வைச் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் உரையின் மீது கட்டமைக்கிறார். அடியார்க்கு நல்லார் 12 ஆம் நூற்றாண்டினர்.  எனவே; இவரின் நாள் கணிப்புகள் இளங்கோ இயற்றிய காப்பிய வரிகளில் கொடுக்கப்படும் தகவலுக்கு, பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட  விளக்கவுரையின் அடிப்படையிலானது  என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்க்காணும் 2 பாடலுக்கான விளக்கவுரையின் வானியல் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம் நூலின் மீதான காலக் கணிப்பு அமைகிறது:
 
1.    வான் கண் விழியா வைகறை யாமத்து
     மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க
     கார் இருள் நின்ற கடை நாள் கங்குல்
           [சிலப்பதிகாரம், 10-வது நாடுகாண்காதை, வரி 1-3]
[பொருள்:  உலகிற்குச் சிறந்த கண்ணாகிய ஞாயிறு தோன்றாத வைகறையாகிய யாமத்தில்,   விண்மீன் விளங்கும் வானத்தினின்றும் வெள்ளிய திங்கள் நீங்கிற்றாக,  கரிய இருள் இறுதிக்கண் நின்ற இராப்பொழுதில்; — ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை]

2.   ஆடி திங்கள் பேர் இருள் பக்கத்து
     அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
     வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண        
     உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
     உரையும் உண்டே நிரை தொடியோயே
           [சிலப்பதிகாரம், 23-வது கட்டுரைகாதை, வரி 133-137]
[பொருள்:  ஆடித்திங்களின் தேய்பிறை எட்டாம் நாளான கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒளிரும் தீயினால் எரிந்து அழிந்து, புகழ் மிக்க மதுரை நகரத்தோடே அதன்  அரசனுக்கும் அழிவு நேரும் என்னும் ஒரு  கூற்றும் உண்டு;— ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை]

அடியார்க்கு நல்லார் வழங்கிய உரையின்படி; பூம்புகாரில் சித்திரை 28 ஆம் நாள் முழுநிலவு அன்று சித்திரை விண்மீன் கூடிய நாளில் இந்திர விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது, 28 நாட்கள் விழா நடைபெற்ற பின்னர் வைகாசி 28 அன்று  கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுறுகிறது.  இந்த வைகாசி முழுநிலவிற்கு முதல்நாள், வைகறையில் நிலவு மறைந்து, கதிரவன் தோன்றாத பொழுதில் கண்ணகியும் கோவலனும் பூம்புகாரிலிருந்து மதுரைக்குக் கிளம்புகிறார்கள். 

கானல் வரி பாடலின் விளைவாக ஏற்பட்ட ஊடலினால் மாதவியும் கோவலனும்  பிரிய நேர்ந்த நாள் செவ்வாய்க்கிழமையன்று  கேட்டை நட்சத்திர நாள், இந்த அமைப்பு நட்பிற்கு உறவிற்கு கேடு விளைவிக்கும் என்பது மக்களிடம் வழக்கத்தில் இருந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படை.  'செவ்வாயும் கேட்டையும் சேர்ந்தார்போல்' என்ற வழக்கு இன்றும் மக்களிடம் வழக்கில் உள்ளது என்கிறார் எல். டி. சாமிக்கண்ணு.  (இது எப்படிச்  சரியாக இருக்கக் கூடும்!!!  பிரிந்த கணவனும் மனைவியும் அந்த நாளில்தான் மீண்டும் இணைகிறார்கள். எனவே அந்த நாள் மோசமான நாளாக இருக்க வாய்ப்பில்லை அன்றோ!!) 

இன்றைய நாள்காட்டி கணக்கடலில் 756ஆம் ஆண்டு மே 17 செவ்வாய்க்கிழமை பொழுது விடியும் முன்னர் பூம்புகாரிலிருந்து கண்ணகியும் கோவலனும் கிளம்புகிறார்கள்; அதே ஆண்டின் ஜூலை 20 ஆம் நாள் கவுந்தியின்  துணையோடு மதுரையை அடைகிறார்கள் (பயணக் காலம் 64 நாட்கள் அல்லது 2 மாதங்கள்!); 

பொதுவாகச் சித்திரை மாதத்திற்கு 31 நாட்கள்.  அடியார்க்கு நல்லார் உரை தரும் குறிப்பின்படி அந்த ஆண்டு சித்திரைக்கு 30 நாட்கள் மட்டுமே. எனவே 30 நாட்கள் கொண்ட சித்திரை எந்த ஆண்டுகளில் இருந்திருக்கலாம் என்ற ஆராய முற்படுகிறார் எல். டி. சாமிக்கண்ணு.  அவர் தேடலில், அடியார்க்கு  நல்லார் உரை எழுதிய காலம் வரை  15 ஆண்டுகளில்  சித்திரைத் திங்கள் 30 நாட்கள் கொண்டவையாகக் கிடைக்கின்றன.  இவற்றில், வானியல் கணிப்பின்படி பூம்புகாரிலிருந்து கண்ணகியும் கோவலனும் கிளம்பியதாக அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் நாள், கிழமை, நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வரும் நாள் வைகாசி 29 / மே 17, 756 என்பதும்; அதே போலப் பொருந்தி வரும்  மதுரை தீக்கிரையான ஆடி வெள்ளிக்கிழமை நாளானது,  ஜூலை 23, 756 என்பதும் எல். டி. சாமிக்கண்ணுவின் கணிப்பின் முடிவு.

 —  தேமொழி

நன்றி: உலகத்தமிழ் இதழ் #277, 26.03.2025, பக்கம்: 29-30

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்