தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகள்

                                                                    " கணித அறிவு "






தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகள்..

இராஜராஜசோழனது கல்வெட்டு எண்ணிக்கை  மட்டும் 64.

ஒவ்வொறு கல்வெட்டும் மிக நீண்ட செய்தியை பதிவு செய்கிறது. 738 வரிகளும் 14000 க்கும் மேற்பட்ட எழுத்துக்களும் கொண்ட கல்வெட்டுகள். இவற்றுள் வரிக்கு ஒன்றிரண்டு கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அத்தனையும் தமிழ் எழுத்துக்கள்.

அனைத்துக் கல்வெட்டுகளும் அழகான தமிழ் எழுத்துக்களில்தான் வெட்டப்பட்டுள்ளன. ஒவ்வொறு எழுத்தும் அவ்வளவு அழகாக ஒரு நேர்கோட்டில் மிகத் தெளிவாக வெட்டப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுச் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு ஆவணம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மக்களின் வாழ்வியல் சூழலை பதிவு செய்யும் ஆதாரக் கல்வெட்டு சாசனங்கள் இவை.

1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக சூழல் , மக்களின் வாழ்வியல், 
அவர்களின் பொருளாதாரம், அவர்களின் உணவு, அவர்களின் தொழில், அவர்களின் காசு, பண்டமாற்று, அவர்கள் பெற்ற திறன், அவர்களின் கல்வி, கணிதம், அறிவியல், தொழில்நுட்பம், போர்ப்பயிற்சி, தங்கம், வெள்ளி, வைரம், வைடூர்யம்,  அமுது,  இசைக்கருவிகள், வழிபாடு,
கொடியேற்றம், திருவிழா,
ஆடல், பாடல், ஆடு, மாடு, நெல், தராசு, எடைக்கல், ஆடை, ஆபரணம்,  நெய், வாழைப்பழம், பண்டம், பாத்திரம் , சுகம் ,துக்கம் என்று அப்போதைய மக்களின் வாழ்வியலை இக் கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன. ஒவ்வொறு செய்தியும் தமிழ் இனத்தின் பழம் பெருமை வரலாற்றை நின்று  பேசும் சாசனப் பெட்டகம்.

ஒரு அரசனின் பெருமைகளோ,
 வந்து குவிந்த நிவந்தங்களோ,
எரியும் விளக்குகளோ , 
பெருவுடையார் வழிபாடோ.
இவற்றில் அனைத்திலும் ஒரு செய்தி இருக்கிறது. ஒரு பிரம்மாண்டம் இருக்கிறது. அவர்கள் பெற்றக் கல்வியும் இருக்கிறது. கணிதமும் இருக்கிறது. 

இந்தக் கணிதத்தை மட்டும் பார்ப்போம்.

கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவை கல்வெட்டில் துல்லியமாகக்  குறிக்கிறார்கள் .

எவ்வளவு துல்லியமாக..?

கற்பனையே செய்ய முடியாத அளவு துல்லியமாக ..

இன்றைய நவீன கணித மேதைகள் தினறும் அளவு துல்லியமாகக் கல்வெட்டில் எழுதியுள்ளனர்.

இந்த அளவு என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள அக்கால கணிதத்தின்  நீட்டல் அளவுகளின்  அடிப்படைத் தரவுகளை நாம் அறிவது அவசியமாகிறது...

ஒன்றுக்கு கீழ் உள்ள பின்ன எண்களின் பெயர்களைப் பார்ப்போம்..

ஒன்று - 1
முக்கால் - 3/4
அரை - 1/2
கால் - 1/4
வீசம் - 1/16
இந்த அளவுகள் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இதற்கும் கீழே உள்ள மிகச்சரிய அளவாக ...

20 இல் ஒரு பங்கு 
ஒரு மா என்றழைக்கப்பட்டது.

அதாவது..

ஒரு மா - 1/20
அரை மா - 1/40
ஏழு மா - 7/20

இதைப்போலவே 
80 இல் ஒரு பங்கு காணி என்றழைக்கப்பட்டது.

காணி - 1/80
அரைக்காணி - 1/160.

320 இல் ஒரு பங்குக்கு
ஒரு முந்திரிகை என்று பெயர்.

முந்திரிகை - 1/320...

இனி கல்வெட்டில் காணப்படும் செய்தியை  பார்ப்போம்..

பாலையூர் என்னும் ஊரிலிருந்து பெருவுடையார் கோவிலுக்கு தானமாக நிலம் வழங்கப்பட்டது. நிலத்தின் மொத்தப் பரப்பு எவ்வளவு.? அதில் வரியில்லா நிலங்கள் எவ்வளவு.? வரியில்லா நிலங்களைக் கழித்து மீதம் உள்ள நிலம் எவ்வளவு.? அந்த நிலத்தின் மூலம் கோவிலுக்குக் கிடைக்கும் வருவாய் எவ்வளவு..? இதைத்தான் இக்கல்வெட்டு பதிவு செய்கிறது. 

"பள்ளியுங் கணிமுற்றூட்டும் உட்பட அளந்தபடி நிலம் நூற்றுமுப்பத்து நான்கேய் எட்டு மாவின்கீழ் முக்காலே மும்மாவரையரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவிலும்; ஊர்நத்தமுங் குளமுங் கம்மாணசேரியும் பறைச்சேரியுஞ் சுடுகாடும் இவ்வூர் நிலத்தை டறுத்துப்போன வாய்க்கால்களாலும் இறை இலிநிலம் ஒன்பதேய் காணி அரைக்காணி ஊட முந்திரிகைக் கீழரை நீக்கி; இறை கட்டின நிலம் நூற்று இருபத்து ஐஞ்சேய் ஏழு மாவரை முந்திரிகைக்கீழ் எண்மாவரை அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவினால்; இறைகட்டின காணிக்கடன் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக் கடவ நெல்லுப் பன்னீராயிரத்து ஐஞ்ஞாற்று முப்பதின் கலனே இருதூணிக் குறுணி ஒருநாழி"

கவெட்டு கூறும் அளவு..

நிலத்தின் மொத்தப் பரப்பு..

134 8/20 + 4/320.( 3/4 + 3/20 + 1/40 + 1/160 + 1/320)  1/320 Square × 4 / 20

இவற்றில் வரியில்லா இறையிலி நிலத்தின் பரப்பு.. 

9. 1/180 + 1/160 + 1/320 + 1/320 + 1/2

மீதமுள்ள நிலத்தின் பரப்பு..

125.7/20 + 1/40 + 1/320 + 1/320 ( 8/20 + 1/40 + 1/160 + 1/320) + 1/320 Square. × 4 /120

இந்நிலத்தின் மூலம் ஆண்டொன்றுக்கு வருவாயாகக் கிடைக்கும் நெல்லின் அளவு..

12530 கலம். 2 தூனி 1 குறுனி 1 நாழி.

இந்தக் கல்வெட்டில் இருக்கும் நில அளவு கணக்கிற்கு விடை என்ன.?  ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு இக் கணக்கிற்கு தீர்வு எழுத முடியுமா..? 
நிச்சயம் கால்குலேட்டர் துணை தேவைப்படும்.  எவ்வளவு நேரத்தில் நம்மால் போடமுடியும்..?

இதுபோன்ற கணிதங்களை பெரியகோவில் கல்வெட்டில் பல முறை பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு நில அளவை ஒன்றை 
மிகத் துல்லியமாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு அடி துல்லியமாக..
அரை அடி துல்லியமாக..
கால் அடித் துல்லியமாக..
ஒரு அங்குலம், அரை அங்குலம், 
கால் அங்குலம் துல்லியமாக.... 
போதாது..
இதற்கும் மேல் துல்லியமாகக் குறிப்பிட்டார்கள்.

மிகச்சிறந்த  தொல்லியல்  அறிஞர் வெங்கையா இவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஐந்தாயிரத்து நாநூற்று நாற்பத்திரண்டு கோடியே எண்பத்தெட்டு இலட்சத்தில் ஒரு பங்கு...

அதாவது... 
1 / 54, 428,800,000....

இந்தளவுக்கு துல்லியமான 
அளவு முறைக் கணிதத்தை 
சோழர்கள் கல்வெட்டில் காணலாம்.

அம்மாடி...
என்ன ஒரு துல்லியம்...

 ஊசிமுனை அளவும்  அதற்கும் குறைந்த ஒரு அளவின் கணிதத்தை  எழுத்தால் 
எழுதியுள்ளனர்.

இவ்வளவுத் துல்லியமாக அந்நிலத்தை அளந்த அந்த நில அளவையாளர்களின் திறன் , அவர்கள்  கற்ற கணிதம், வியப்பின் உச்சம். பிரம்மாண்ட கணித  அறிவு இது.

உலகத்தின் மிகச்சிறந்த கணிதமுறை என்று அனைத்து தொல்லியல்  ஆய்வாளர்களும் வியப்படைகின்றனர்.

இவ்வளவு  துல்லியமாக  எதற்காகக் குறிப்பிட வேண்டும் என்று கேள்வி எழுமே..?

ஆயிரம் ஆண்டுகளுக்குப் 
பிறகு சோழர் வரலாற்றின் மேல் வன்மம் கொண்ட புலவர் போன்றவர்கள் தோன்றுவார்கள். சோழர்கள் காலத்தில் தமிழ்வழிக் கல்வி  இல்லை. தமிழர்கள் முட்டாள்களாய் இருந்தனர். 
அவர்களுக்கு எழுதப் படிக்கவோ, கணக்கு வழக்கோ எதுவும் தெரியாது.
சோழர் கால கல்விக்கு  மக்கள் அறிவுடன் இருந்தமைக்குச்  சான்றாக கல்வெட்டு காட்ட முடியுமா..? என்றெல்லாம் சவால் விடுவார்கள்.

 அவர்களுக்ககு காட்டுவதற்காகவே 
இது போன்ற கல்வெட்டுப் பதிவுகள் இருக்கிறதோ..

----------------------------------

அன்புடன்..
மா.மாரிராஜன்.

Reference ..
S.i.i.vol 2.. no 4

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

சங்க இலக்கியத்தில் விலங்குகள்

மண்பாண்ட வகைகள்