எக்காட்டூர் கல்வெட்டு

                                                       எக்காட்டூர் கல்வெட்டு 


வரிவடிவம் - எக் காட்டூரு-
க் கோன் பெருந் தசன் :

பொருள் - எக்காட்டூர் என்ற ஊரின் தலைவன் பெருந்தச்சன் என்பது கல்வெட்டின் பொருளாகும்.

எருக்காட்டூர்

எக்காட்டூர் என்பது எருக்காட்டூர் என்ற பழைய பெயரின் மரூஉ ஆகும். (பெருமான் 'பெம்மான்' ஆனது போல.) சங்க காலத்திலேயே இவ்வூர் இருந்தது என்பது எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்ற புலவரின் பெயரிலிருந்து அறிகிறோம். புறநானூற்றைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா ஐயர வர்கள் எருக்காட்டூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்குத் தென் மேற்கில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அண்மைக் காலத்தில் மதுரை, இராமநாதபுரம், புதுக் கோட்டை ஆகிய பிராந்தியங்களில் கிடைத்துள்ள தமிழ் - பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் இப்பெயர் பலமுறை காணப்படுவதால் இவ்வூர் பாண்டிய நாட்டில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது பிள்ளையாபட்டியின் பழைய பெயரா என்று உறுதியாகக் கூற முடிய வில்லை. ஆயினும் எருக்காட்டூரைச் சேர்ந்த பெருந்தச்சன் பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயிலை எழுப்பியவன் என்ற வரலாற்று உண்மையை இக்கல்வெட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. சங்க காலத்தில் தாயங்கண்ணனார் என்ற புலவரை ஈந்த எருக்காட்டூர், சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலை நிர்மாணித்த சிற்பியையும் தந்துள்ளது என்ற பெருமைக்கும் உரித்தாகிறது.

குடைவரை பாண்டியரின் பணியே

அடுத்தபடியாக இக்கல்வெட்டு இக்குடைவரையின் தொன்மையை உறுதி செய்கிறது. வட்டெழுத் தின் தொடக்க நிலையில் உள்ள இக் கல்வெட்டின் எழுத்தமைதியிலிருந்து இது சுமார் கி.பி. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று சொல்ல முடியும். பாண்டிய மன்னன் சேந்தனின் வைகைப் படுகை கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லெழுத்தியல் மூதறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று நிறுவியுள்ளார். அக்கல்வெட் டுடன் ஒப்பிடும் போது, பிள்ளையார்பட்டிக் கல்வெட்டு குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டாவது முந்தையதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது. ஆகவே கி.பி. 6-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்.

புள்ளி தந்த பிள்ளையார்

இறுதியாக தமிழ் எழுத்தியலில் இக்கல்வெட்டு அளித்துள்ள ஒரு முக்கியமான சான்றையும் இங்கு ப்ரியமாக குறிப்பிட வேண்டும். கல்வெட்டு பொறித்த அரைத்தூணை நன்றாகக் கழுவித் துடைத்துப் பார்த்தபோது அதுவரை யாருமே பார்த்திராத புள்ளிகள் எங்கள் கண்களுக்குப் புலப் பட்டன. எகர எழுத்தின் உட்புறத்திலும் மற்ற ஆறு மெய்யெழுத்துகளின் மேலும் இடப்பட்டுள்ள புளிகள் பளிச்சென்று தென்பட்டன.

மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்
எகர ஒகரத் தியற்கையுமற்றே


என்று தொல்காப்பிய சூத்திரம் கூறியிருப்பினும் பழைய கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளி லும் புள்ளிகள் பெரும்பாலும் இடப்படவில்லை. பிள்ளையார்பட்டிக் கல்வெட்டில் புள்ளிகளைக் கண்ட பிறகு மேலும் கள ஆய்வு நடத்தி சித்தன்னவாசல், திருநாதர்குன்றம், பறையன்பட்டு போன்ற இடங்களில் உள்ள அதே காலத்திய கல்வெட்டுகளிலும் மெய்யெழுத்துகளின் மீதும் எகர ஒகரத்துடனும் புள்ளிகள் இடப்பட்டுள்ளதை எங்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். (கடந்த 30ஆண்டுகளில்தான் தமிழ் - பிராமி எழுத்துகளிலும் பண்டைய வட்டெழுத்துகளிலும் புள்ளிகள் இடப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.)

நன்றி:
திரு.கலைக்கோவன் ஐயா குழுப் பதிவிலிருந்து...

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு