தமிழக சாஸனங்களில் தீபாவளி

 தமிழக சாஸனங்களில் தீபாவளி




1. நரகாஸுரனைப் பற்றிய பழமையான குறிப்புகள்

பல்லவமல்லன் இரண்டாம் நந்திவர்மன் வழங்கிய பட்டத்தாள் மங்கலச் செப்பேட்டின் காப்புச் செய்யுள்
 
ப்ரஹ்மாபூத் நரகாரி-நாபி-கமலாத் 

என்று நரகாஸுரனை அழித்த திருமாலின் உந்தித் தாமரையினின்று நான்முகன் தோன்றியதை வர்ணிக்கிறது.

சுந்தர சோழனின் அன்பில் செப்பேட்டின் பதினேழாவது செய்யுள் விஜயாலய சோழனைத் திருமாலின் வடிவமாகப் புகழ்கிறது. 

பூ⁴ப⁴ர்த்து: நரகரிபோ: இவோருதேஜா 
ராஜாஸ்மாத் ஸமஜனி ராஜகேஸரீதி

 நரகாஸுரனை அழித்தத் திருமாலைப் போன்றவன். அத்தகைய அரசனிடமிருந்து ராஜகேஸரியான ஆதித்ய சோழன் தோன்றினான்.

இவ்விதம் நரகாஸுரனை அழித்த திருமாலைப் பற்றிய செய்தி எட்டாம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தில் பயின்று வந்திருப்பது புலனாகிறது. நரகசதுர்தசி கொண்டாடப் பெற்றிருக்கலாம் என்பது இதில் உய்த்துணர கிடக்கிறது. 

2. தீபாவளி

2.1. ஸ்ரீரங்கம்

தமிழகத்தில் முதன் முதலாக தீபோத்ஸவத்தைப் பற்றி தருவது வேணாட்டரசனான ராமவர்மன் குலசேகரன் திருவடியின் ஸ்ரீரங்கக் கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டு கவிபூஷணன் என்பவரால் இயற்றப்பட்டது. அழகிய வடமொழி பாக்களைக் கொண்டது. குலசேகரன் தேஹவ்யாபி என்ற குறியீடுடைய சக ஆண்டில் அதாவது 1188-இல் - பொயு 1266-67-இல் பிறந்தவன் என்றும் நாற்பத்தாறாவது வயதில் அதாவது பொயு 1312-13-இல் அதாவது மாலிக்காபூர் படையெடுப்பில் தமிழக மன்னர்கள் ஓய்ந்திருந்த வேளையில் தமிழகத்தில் ஊடறுத்து வென்றதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. காஞ்சியில் வேகவதிக் கரையில் த்ரிக்ஷத்ராதிபதியாக -மூவேந்தர் தலைவனாக முடிசூடியமையைக் கூறுகிறது. இந்தக் கல்வெட்டின் ப்ரசஸ்தியின் ப்ரதி காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்திலுள்ளது. வரதராலயத்து மலையாள நாச்சியார் இவருடைய மகள் என்ற கருத்துமுள்ளது. இப்படி பிறந்த வருடம் வயது ஆகியவற்றைத் தமிழக மன்னர்களும் குறிப்பிட்டிருந்தார் வரலாறு எப்போதோ விளங்கியிருக்கும். இந்தக் கல்வெட்டின் ஏழாவது ச்லோகம்  

பூ⁴பாலை꞉ இல-கார்தவீர்ய-ஸக³ரை꞉ ய꞉ பூர்வமாஸீத்க்ருʼத꞉
பஶ்சாத் ப்ரௌட⁴தமோஹரம்ʼ யது³பதி꞉ தம்ʼ ப⁴த்³ரதீ³போத்ஸவம்
சக்ரே ஶக்ர இவாஶ்ரய꞉ ஸுமனஸாம்ʼ ஸம்ராட் த்ரயீத⁴ர்மவித்
ரங்கே³ஸ்மின் ருசிராங்க³-ஸம்ʼஶ்ரித-ரமா-ரோசிஷ்ணவே விஷ்ணவே॥

என்று கூறுகிறது. இந்த்ரனைப் போல நல்லோருக்குப் புகலானவனும் பேரரசனும் வேத தர்மத்தை அறிந்தவனுமான யதுபதி திருமகளின் ஒளிரும் அங்கங்களால் ஒளி பெற்றுத் திகழும் திருமாலுக்கு முன்பு இளன் கார்த்தவீர்யன் ஸகரன் ஆகியோரால் துவக்கப்பட்டதும் பேரிருளை  நீக்குவதுமான தீபோத்ஸவத்தை இந்த ரங்கத்தில் நிகழ நிவந்தம் செய்தான் என்று கூறுகிறது. 
இந்த நிவந்தம் புரட்டாசி இறுதியில் செய்திருப்பதால் இது தீபாவளியே என்பது உறுதியாகிறது. முன்பிருந்த தைத் தொடர்ந்தார் என்று புராண அரசர்களைக் குறித்தமை பாண்டிய சோழர்களைக் குறிப்பிட விருபாமல் கூறியதாகக் கொள்ளலாம். 

2. காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அருளாளப் பெருமாள் ஆலயத்திலுள்ள ஸதாசிவராயரின் 1555-ஐச் சேர்ந்த கல்வெட்டு பெருமாள் எழுந்தளும் நாட்களில் தீவளிகைத் திருநாளைக் குறிப்பிடுகிறது. 
1582-ஐச் சேர்ந்த ஸ்ரீரங்க ராயரின் கல்வெட்டு தீவளிகை நாள் முதல் கார்த்திகைத் திருநாள் வரை தினமும் தீபமேற்ற கொடுத்த நிவந்தத்தைத் தருகிறது. 

3. திருப்பதி

திருப்பதியிலுள்ள 1542-ஐச்சேர்ந்த கல்வெட்டு தீபாவளி நாளில் அதிரசத்திற்குக் கொடுத்த படியைத் தெரிவிக்கிறது. 

இப்படி கோயில், பெருமாள் கோவில், திருமலை என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் கூறும் மூன்று ஆலயங்களிலும் பதினான்காம் நூற்றாண்டு முதல் தீபாவளி கொண்டாடப் பெற்றது தெளிவாகிறது. 

இதைத் தவிர ஸ்ரீ காளஹஸ்தி சித்தாய்மூர் செப்பேடு ஆகியவை குடவாயிலாரால் காட்டப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு