ஆதித்தேசுரம்
ஆதித்தேசுரம்..."
பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தியவர் விஜயாலச்சோழர்.
பழயாறை என்னும் குறுநிலப்பகுதிக்குள் அடைப்பட்டிருந்த சோழ தேசத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியவர். தஞ்சையைக் கைப்பற்றி சோழநாட்டின் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர்.
தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தின் மேல் தனது பயணத்தைத் தொடங்கினார் விஜயாலயரின் மகன் ஆதித்தச் சோழன்.
இவரது காலமான 871-907
சோழ தேசத்தின் எல்லைகள் பரந்து பெருகி விரிந்தன. தொண்டை நாடு முழுவதும் சோழ ஆதிக்கத்தின் கீழ் வந்தன.
சிற்றரசு நிலையில் இருந்து பேரரசாக சோழம் உருவெடுத்தது.
மகா கீர்த்தியும் பராக்கிரமும் பெற்ற ஆதித்தச் சோழரின் ஆளுமையின் கீழ் சோழநாடு தனது பழம்பெருமையை மீட்டது..
காவிரிக்கரையின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் எடுத்து சோழர்களின் சைவ நெறிக்கும் அடித்தளமிட்டவர்.
பிற்காலச் சோழ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற தலைவனாக இருந்து பெரும் பராக்கிரமம் கொண்ட மாவீரரான ஆதித்தச்சோழர், தொண்டை நாடு தொண்டமானூற்றூர் என்னும் இடத்தில் சிவபதம் அடைந்தார்.
ஆதித்தச் சோழரின் மகனான பராந்தகன், தனது தந்தை இறந்த இடத்தில் கோதண்டராமேசுவரம் என்னும் ஊர்ப்பெயரை அமைத்து, ஆதித்தேசுரம் என்ற பெயரில் தனது தந்தைக்கு ஒரு பள்ளிப்படை கோவிலை எடுத்தார்.
தனது 34 ஆவது ஆட்சியாண்டான
கி.பி.941ல் இப்பள்ளிப்படைக் கோவிலை எழுப்பினார்.
இக்கோவிலில் உள்ள மதுரை கொண்ட கோபரகேசரி பராந்தகனின் கல்வெட்டு சிறப்பான வரலாற்றுத்
தரவுகளைப் பதிவு செய்கிறது.
"ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு யாண்டு முப்பத்தினாலாவது திருவேங்கட கோட்டத்து ஆற்றூர்நாட்டு தொண்டைமான் ஆற்றூர் சபையோமும் நகரத்தோமும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் ஸ்ரீ கோதண்ட ராமீஸ்வரமாகிய ஆதித்தேஸ்வரத்து ஆள்வார்க்குப் புரட்டாசித் திங்கள் திருக்கேட்டை முதல் எதிரெழு நாளும் திருநட்சத்திரமாகிய திருச் சதயத்தன்றுந் திருஉத்ஸவஞ் செய்வதற்கும் போஜனத்துக்கும் பள்ளிப்படை வாகீஸ்வர பண்டித படாரர் தொண்டைமான் பேராற்றூர் சபையோமும் நகரத்தோமும் வழி சந்திராதித்தவற்குத் தர்மஞ் செய்வதாக எங்கள் வழி வைத்த பொன்....."
என்று தொடங்குகிறது.
ஆதித்தச்சோழரின் பிறந்தநாள் புரட்டாசி மாத சதயம் நட்சத்திரம்.
புரட்டாசி மாதம் கேட்டை நட்சத்திரம் தொடங்கி வரும் 7ம் நாள் ஆதித்தரின் திரு நட்சத்திரமான புரட்டாசி சதயம்.
புரட்டாசி கேட்டை முதல் சதயம் வரை உள்ள 7 நாட்களும்..
ஆதித்தனது பள்ளிப்படைக்கோவில்
விழாக்கோலம் பூண்டது.
சிறப்பு வழிபாடு, இறைவனுக்கு தனித்துவமான அலங்காரம், ஆயிரம்பேருக்கு அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், என்று ஏழு நாட்களும் களை கட்டும்.
இந்நிகழ்வுகளுக்காக 105 கழஞ்சு பொன்னும், வருடத்திற்கு 4000 காடி நெல்லும் முதலீடாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.
நிவந்தப் பட்டியலும் இக்கல்வெட்டில் உள்ளன..
ஆயிரம் பேர் அன்னதானத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, நெய், உப்பு, காய்கள், போன்றவை தேவைப்படும் விபரம். இதற்கான நிவந்தம்.
அடுப்பெரிக்க விறகிடுவான், இலைகொண்டு
வருபவர், கலசம் கொண்டு வரும் குசவர்,
இவர்களுக்கான நிவந்தம்.
சுவாமி அலங்காரத்திற்கு பூமாலை கொண்டு வந்தவர், நீர் கொண்டு வந்தவர். இவர்களுக்கான நிவந்தம்.
ஏழாம் நாள் நடைபெறும் இந்திரவிழாவிற்கான மேடை அமைத்தத் தச்சர், கூத்தாடுபவர்,
பாடல் பாடுபவர்.
இவர்களுக்கான நிவந்தம்.
அனைத்து விபரங்களும் கல்வெட்டில் விரிவாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்ட தொல்லியல் சான்றுகளில் முதல் சான்று ஆதித்தனது பள்ளிப்படைக் கல்வெட்டு..
ஏழு நாட்களும்
திருவிழாக்கள் நடத்தி
ஆடல் ,பாடல், என்று களிப்புற்று தங்கள் தேசத்து தலைவனின் நினைவை நினைவு கூர்ந்துள்ளனர்.
ஆனால் இன்றைய நிலையோ....?
ஆந்திரமாநிலம் காளஹஸ்தி அருகே உள்ள ஆதித்தனின் பள்ளிப்படை ஆள் நடமாட்டமில்லாமல் வெறுமையாய் உள்ளது.
பழைய நிகழ்வுகளின் நினைவுகளை சுமந்து நிற்கும் கல்வெட்டும்..
சலனமற்று இருக்கும் ஆதித்தேசுரரும்
சோழத்தின் மாவீரரான ஆதித்தச் சோழரை நினைவூட்டுகின்றன.
Comments
Post a Comment