சிவபாதசேகரன்
சிவ பெருமானின் திருவடிகளை எப்பொழுதும்
இறைவனின் திருவடியை முடியில் கொண்டவன்..
எனும் பொருள் கொள்ளும் வகையில் "சிவபாதசேகரன்" என்ற சிறப்பு பெயரை இராஜ ராஜ சோழன் விரும்பி சூடிக் கொண்டனன் என்பதை தமிழக கல்வெட்டு சான்றுகள் நிமித்தம் அறிகிறோம்.
அந்த சிவபாதசேகரனின் தண்ணென் தாமரை மலரடிகளை சதா சுற்றி வரும் வண்டுகளாக தம்மை உவமித்து கொண்ட இருவர் பற்றிய செய்தி குறிப்பினை கர்நாடகத்தில் காணக்கிடைக்கும் கல்வெட்டுகள் மூலமாக தெரிந்து கொள்வோமா?
மைசூர் மாவட்டம் ஸ்ரீரங்கபட்டினத்தில் பலமூரி என்னுமிடத்தில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது அக்கோயிலின்
மேற்கு புறத்தில் ஹளகன்னடமொழியில்
34 வரிகள் அமைந்துள்ள சிதைந்த நிலையிலுள்ள கல்வெட்டு இராஜராஜனின் 28 வது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது சக வருஷம் 934ல்
அதாவது பொ.யு.1012-13 காலத்தியது.
இக்கல்வெட்டின் வரியில்
ஸ்ரீ கோவி ராஜகேஸரிவர்மரான ஸ்ரீ ராஜராஜ ...கிரிவர ஸ்ரீ பாத பக்ண ஜம்பரமரா பஞ்சவமஹாராயதத்த...
என்ற இவ்வாசகத்தின் பொருள்
கோவிராஜகேஸரி வர்மரான இராஜ ராஜ சோழனின் தாமரை மலர் பாதங்களை சுற்றி வரும் வண்டான (a bee on the excellent lotus feet of Raja kesari varma) பஞ்சவன் மாராயனான மாதண்டநாயக்கன் என்பதாகும்.
சோழர் சரிதத்தில் மிக முக்கியமான கல்வெட்டு இதுவெனலாம் இராஜ ராஜன் அரியணை யேறிய காலத்தை இக்கல்வெட்டின் துணை கொண்டே துல்லியமாகக் கணிக்கலாயிற்று மேலும் இராஜேந்திர சோழன் இளவரசராக இருந்த காலத்திலே வேங்கி நாடு, கங்கநாட்டிற்கு மாதண்டநாயக்கனாக திகழ்ந்ததும் பஞ்சவன் மாராயன் என்கிற
பெயரினில் அழைக்கப்பட்டதும் அறிய உதவும் கல்வெட்டின் தற்போதைய நிலை கவலைக்குரியது.
தலக்காடு காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள ஊர் கலியூர் இங்கு கோபால சுவாமி கோயிலின் வளாகத்தில் ஒரு பலகை கல்லில் மேற்புறம் யானை,குதிரைகளின் மீதமர்ந்து வீரர்கள் போரிடும் காட்சியும் அதன் கீழே 25 வரிகளில் ஹளகன்னட மொழி கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது அதில்
ஸ்ரீ ராஜராஜ தேவ பாத சங்கஜ ப்ரமார ஜித்தரி புசமர.... என்ற இவ்வாசகத்தின் பொருள்
இராஜ ராஜ தேவரின் தாமரை பாதங்களை சுற்றும் வண்டு(a bee at the lotus feet of illustratious rajaraja)என்பதே!
இக்கல்வெட்டில் சிவ பாத சேகரனின் வண்டலர் பூந்தாமரை பாதத்தை சரணடைந்தவன் அப்ரமேயன்.இவன் இராஜ ராஜனின் ஆணைக்கிணங்க காவிரியின் தென்கரையில் அக்காலத்தில் களவூர் என்ற அழைக்கப்பட்ட இவ்விடத்தில் பொ.யு.1006ம் ஆண்டு மார்ச் திங்கள் 22ம் நடைபெற்ற போரில் ஹொய்சாளர்,கோயிகா,பூதுகா, சேனவாரா,நுளம்பர சண்டிகா, பொன்னா,நன்னிகா,நரகா,சிரிகா உட்பட 18 கர்நாடக கூட்டுப்படை தளபதிகளின் தலைகளை பந்தாடி ஜெயஸ்தம்பம் நாட்டினான். இவன் எழுப்பிய அப்ரமேய விண்ணகரம் என்ற கோயில் சென்னப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
அப்ரமேயன் கர்நாடகத்தை சேர்ந்த வைணவன் என்றும் சோழ பேரரசின் கீழடங்கிய தமிழக வேளிர் இன சிற்றரசன் எனவும் கர்நாடக வரலாற்றாசிரியர்களிடையே
பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன இருப்பினும் வேறு பல சான்றுகளைக் கொண்டு இவன் பூர்வீகம் குறித்து ஆய்வுகளை திரட்டி வருகிறோம்..
ReplyForward |
Comments
Post a Comment