உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு

 உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கல்வெட்டு



காஞ்சிபுரத்திற்கு அருகில் அமைந்துள்ள உத்திரமேரூரில், உத்திரமேரூர் கீழ் ரோட்டில் செய்யாற்றின் கிழக்கு பக்கத்தில் சின்ன நாராசம் பேட்டை தெருவில்ஈசான்ய மூலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா ஸமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட  பழமையான கோவில்.

இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர் தண்டிவர்மனால் கட்டப்பட்டது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பின் கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு உத்திரமேரூர் கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

"ஈசான்யாம் லிங்கேஷு சிரேஷ்டம்' என்னும் வாக்கியம், இங்குள்ள கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.

ஏகம்பரநாதர் கோவிலில் கடன் வாங்கி, கோவில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்த தகவல், இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

ராஜராஜனின் கல்வெட்டு இக்கோயிலை 

"எம்மூர் ஸ்ரீ கைலாயமுடைய மஹாதேவர் கோயில்" 

என்று அழைக்கிறது. இக்கோயிலில் மூன்று சந்திகளிலும் வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு காகவும் திருவமுது காகவும் 12 1/2பாடகம் (மூவாயிரம் குழி) நிலம் கொடுக்கபட்டது.

முதலாம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், விஜயநகரப் பேரரசர்கள் கிருஷ்ண தேவராயர், நாயக்க அரசர்களான பொம்மு நாயக்கர், கிருஷ்ணம நாயக்கர் ஆகியோரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகள் மூலம் இக்கோவிலை ஆதித்யசோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன், விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் ஆகியோர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது .

இக்கோவில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னரின் குரு நாதரான ஈசான குரு தேவர் மடம் மூலம் பராமரிக்கப்பட்டதற்கான கல்வெட்டு கிடைத்துள்ளது. 

பல்லவ மன்னர்கள், சோழ மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பல மன்னர்கள் இக்கோவிலை பராமரித்து வந்துள்ளனர். 

உத்திரமேரூர், ஊரின் பெயர் உத்து-ஹர-மேரூர் என்றால் தூண்டுதல் - பாவங்களை போக்குவது - மேன்மை பொருந்திய ஊர். கடவுளை வணங்க தூண்டுதல் செய்து, பாவங்களை போக்கும் ஊர் ஆகும். பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று, இவ்வூரை உத்தரமேரூர் சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கிறது. மற்றும் ராஜேந்திர சோழ சதுர்வேதிமங்கலம், விஜயகண்டகோபால சதுர்வேதிமங்கலம், வடமேருமங்கை, உத்திரமேலூர், பாண்டவவனம், பஞ்சவரத க்ஷேத்ரம் இவ்வாறாகப் பலவிதமாக அழைக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூருக்குக் ‘கல்வெட்டு ஊர்’ என்றே பெயர் உண்டு. அந்த அளவுக்கு பண்டைய வரலாறு சார்ந்த கல்வெட்டுகளும், இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்று சின்னங்கள் அநேகம் இங்கு உள்ளன.

ஒரு புதிய தொழில்நுட்பத்தை உலகிலேயே முதல் முறையாக பயன்படுத்தி 1250 வருடங்கள் பழமையான இந்த கைலாச நாதர் கோயில் தமிழ்நாட்டில் புதுப்பிக்கப்பபட்டுள்ளது. எஃகுக் கம்பிகளைக் கொண்டு கிரானைட் கற்களைத் தைக்கும் தொழில்நுட்பம் உலகிலேயே முதல் முறையாக இந்த ஆலயப் புதுப்பித்தல் பணியில் பயன்படுத்தப்பட்டது. கைலாசநாதர் ஆலயத்தின் அஸ்திவாரமும் அதனையொட்டிய பீடமும் கிரானைட் கற்களை கொண்டு பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயத்தின் எந்தப் பகுதியும் பிரித்தெடுக்கப்படாமல் மேம்பட்ட தொழில் நுட்ப உதவியுடன் இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

பாலக்காட்டு கணவாய் "இராஜகேசரிப் பெருவழி