தக்கோலம்



 தக்கோலம் என வழங்கும் திருவூறல், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள அழகிய திருவூர் தக்கோலம்.

தக்கன் ஓலமிட்டு வழிபாடு செய்ததால், தக்கன்+ஓலம்= தக்கோலம் என இத்தலத்திற்குப் பெயர் வந்ததாகப் புராணக்கதை வழங்குகிறது. 

கொற்றலை (குசத்தலை) என்று அழைக்கப்பெரும் க்ஷீர நதியின் கரையில் அமைந்துள்ள இவ்வூர் பண்டைப் பெருமக்கள் பலவற்றைக் கொண்டதாகும். 

அவனி நாரணன் எனும் மூன்றாம் நந்திவர்மன் (A.H. 835-860) ஆட்சியின் போது இங்கிருந்து வாணிகத்தின் மலேயா சென்ற வணிகர்கள், சியாம் நாட்டில் தகோப என்னும் மாவட்டத்தில் புதிய தக்கோலம் என்ற ஊரை உருவாக்கினார். இந்த தக்கோலத்தையே கங்கை கொண்ட சோழனான இராசேந்திரன் கடார வெற்றியின் போது கலைத் தக்கோர் புகழ்தலைத் தக்கோலம் என்று அவனது மெய்க்கீர்த்தி கூறுவதிலிருந்து தக்கோலத்தின் பண்டைப் பெருமை தெரிகிறது.

தக்கோலம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. வாதாபி கொண்டான் இரண்டாம் புலிகேசி போர் புரிந்த ஊர்.

முதல் இராதிராசன் காலத்தில் (A.H. 1018-1054) இரட்டபாடி கொண்ட சோழபுரம் எனவும், முதற் குலோத்துங்கன் காலத்தில் (A.H. 1070-1120) பல்லவபுரம், குலோத்துங்க சோழபுரம் எனவும், காஞ்சிபுரம் தெலுங்குச் சோழர் விசயகண்ட கபாலன் காலத்திலும். (A.H. 1364-1585) வடமுடி கொண்ட சோழபுரம் எனவும் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

பல்லவ அரச மரபினை இறுதியாக ஆண்ட அபராஜித வர்மனிடமிருந்து (A.H. 879-897) தொண்டை நாட்டை முதலாம் ஆதித்தசோழன் (கி.பி.ய 871-907) A.H.890 - இல் வென்றான். இதற்குப்பின் தக்கோலம் சோழர் ஆட்சியின்கீழ் வந்தது. 

முதற் பராந்தக சோழனின் (A.H. 907-953) மகன் இராசாதித்தன் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பாடிவீடு அமைத்து சோழ நாட்டின் வட எல்லையை காத்துவந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். 

இராஷ்டிரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணன் என்பவன் சோழப் பேரரசின் அரியணையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சோழநாட்டின் மீது போர் தொடுத்தான். இவனுக்கு வாணர், வைதும்பர் ஆகியோர் துணை புரிந்தனர். பராந்தகனுக்குக் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி துணைபுரிந்தான். தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் இடத்தில் நடந்த போரில் இரண்டாம் கிருஷ்ணனும் அவனது ஆதரவாளர்களும் படுதோல்வி அடைந்து புறங்காட்டி ஓடினர். இவ்வெற்றியால் பராந்தகனுக்கு வீரசோழன் என்ற விருதுப்பெயர் கிடைத்தது.

பராந்தகனிடம் தோற்றோடிய இராஷ்டிரகூடர், சோழ நாட்டைக் கைப்பற்றி அவனைப் பழிவாங்க வேண்டும் என்று காலம் கருதி இருந்தனர். பராந்தகனின் ஆதரவாளனான கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிருதிவிபதி வாரிசு இல்லாமல் திடீரென இறந்து போனான். இதனால் கங்க நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிருதிவிபதி மறைவுக்குப் பின்னர்ப் பூதுகன் என்பவன் கங்க நாட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். இதைத் தக்க தருணமெனக் கருதி அப்போது இராஷ்டிரகூட நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு வாணரும், வைதும்பரும் உதவியாக வந்தனர். மேலும் பூதுகனும் அவனுக்குத் துணையாகப் படையுடன் வந்தான். இராஷ்டிரகூடர் படைகளைத் தடுத்துப் போரிடுவதற்குப் பராந்தகன் தன் மைந்தன் இராசாதித்தன் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி வைத்தான். தக்கோலம் (அரக்கோணம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் இரு படையினர்க்கும் இடையில் (கி.பி.949இல்) கடும்போர் நடைபெற்றது. இப்போரில் பராந்தகனின் மைந்தன் இராசாதித்தன் யானை மேல் இருந்து போரிடும்போது, பூதுகன் விடுத்த அம்பொன்றால் தாக்குண்டு இறந்தான். தலைவனை இழந்து திகைத்து நின்ற, மனம் தளர்ந்துபோன சோழர் படையை இராஷ்டிரகூடப் படையினர் தாக்கி வெற்றி கண்டனர். தொடர்ந்து சோழ நாட்டினுள் முன்னேறிச் சென்று காஞ்சி, தஞ்சை ஆகிய பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். எனவே, தக்கோலப் போர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. 

தக்கோலத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசேந்திரன் என்பவனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். அதனால் ஆனைமேற் துஞ்சினார் என்று இராசாதித்தனை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஏழத்தார இருபத்தைந்து ஆண்டுகள் இராட்டிரக் கூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது. அதன் பின்னர் மீண்டும் சோழர்கள் ஆண்டனர். இவ்வாறு சோழர் வரலாற்றில் தக்கோலம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தைப் பெற்றுள்ளது. 

தக்கோலப் போர் கி.பி. 949 ஆம் வருடம் வேலூர் மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின. இப்போரில் சோழர் படைக்குத் துணையாகச் சேரரின் படைகளும் இராட்டிரகூடர் படைக்குத் துணையாக கங்கரின் படையும் வந்தன. மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் (கன்னரதேவனின் மைத்துனன்) நஞ்சு தோய்ந்த அம்பினால் இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.

இராஜாதித்தர் தலைமையிலான சோழப்படைகளும்.,
கிருஷ்ணன் கன்னரன் தலைமையில் இராஷ்டிரகூடப்
படைகளும் நேருக்கு நேர் மோதின.!

யுத்தம் மிக கடுமையாக நடந்தது.! இராஜாதித்தர் அரும்
பெரும் வீரச்செயல்கள் பல புரிந்தார். அவரது வீரம் கண்டு
கிருஷ்ணனே வியந்தார். இறுதியில் கங்க மன்னன் பூதுகனால்  ., இராஜாதித்தர் கொல்லப்பட்டார்.! 
யானைமேல் துஞ்சிய தேவரானார்.!

மேற்கண்ட செய்திகள் யாவும்.,  திருவலங்காடு செப்பேடு
மற்றும் சில கல்வெட்டுகள் தருகின்றன.!

இந்த கல்வெட்டு வாசகத்தை அவதானித்தால்.,
 SI 2 பக் 167 
" மூவடி சோழ ராஜாதித்தியான மேலே ( பா) ண்டு
    தக்கோலல் - தொல் - காடி கொண்டு பிஜ்யம் ஜெயித்து
   இழுது கன்னர தேவம் சோழனாம் காடு வந்து பூதுகம்
  ராஜாதித்தியனாம் 
             "பிசுகெய கள்ளன் ஆகி - குறி கிரிது "
 காடி கொண்டு பாணுசே பன்னீர்ச் சாசிரமும் "
மேற்கண்ட கல்வெட்டுத் தகவலை அவதானித்தால்
பூதுகன்.,  இராஜாதித்தரை எவ்வாறு வீழ்த்தினார் என்பது
தெரியவருகிறது.!

பிசு என்றால்... தபசு அல்லது யாசகம் வேண்டுபவர் அல்லது சமாதானம் கோருபவர்.!

கள்ளன் ஆகி என்றால் ... வேடம் தரித்து என்று பொருள்.!
அதாவது.,  பூதுகன் ., சமாதானம் கோருவது போல் வேடம்
தரித்து., இராஜாதித்தரை வீழ்த்தினார்.!  

" பிசுகெய களனாகி " என்றால் அம்பாரியை களமாக்கி என்று பொருள் ஆகிறது.!

அதாவது.,  பூதுகன்.,,  அம்பாரியை களமாக்கி.,  இராஜாதித்தரை வீழ்த்தினான்.! 

பிசு... என்றால் அம்பாரி.!
கள்ளன்.. என்றால்  ஒளிந்து அல்லது மறைந்து.!
ஆகவே.,
பூதுகன் .,  அம்பாரியில் மறைந்து இருந்து இச்செயலை
நிகழ்த்தினார்.

கருநாடகக் கன்னடக்கல்வெட்டு

கருநாடகக் கல்வெட்டுகளின் தொகுதிகள் , அவற்றில் ஏழாம் தொகுதியில் (EPIGRAPHIA CARNATICA-Vol 7), மண்டியா மாவட்டத்து மத்தூர் வட்டத்தில் இருக்கும் ஆதக்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு, மேற்குறித்த  தக்கோலப் போரினைப்பற்றிக் கூறுகிறது.

இக்கல்வெட்டு, ஆதக்கூரில் இருக்கும் சல்லேசுவரர் கோவிலின் முன்புறம் உள்ள ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் சக ஆண்டு 872. இந்தச் சக ஆண்டுக்கிசைந்த ஆங்கில ஆண்டு கி.பி. 949-950 –ஆகும். 

தற்போது, இக்கல்வெட்டு பெங்களூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி

இரண்டாம் பூதுகன் என்பான், இராச்சமல்லனைக் கொன்று கங்க நாடு - 96000 என்னும் பகுதியை ஆண்ட கங்க அரசன் ஆவான். இவன், இராட்டிரகூட மன்னன் கன்னரதேவன் சோழர் மீது போர் தொடுத்தபோது, இராசாதித்தன் அமர்ந்து போரிட்ட யானையின் அம்பாரியிலேயே  ஏறி இராசாதித்தனுடன் போரிட்டுக் கொன்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. கன்னரதேவனைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு, அவனை இராட்டிரகூட அரசன் கன்னரதேவன் என்றும், கச்சக கிருஷ்ணராஜா என்னும் பெயரும் அவனுக்கிருந்தது என்றும், அவன் தக்கோலப்போரில் மூவடிச் சோழனை வென்று வெற்றி வலம் வந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. பூதுகனைப் பற்றிக் கூறும்போது, கல்வெட்டு, கங்கன் பெர்மானடி பூதுகன்  என்று குறிப்பிடுகிறது. இராசாதித்தனைக் கொலை செய்ததைப் பாராட்டிக் கன்னரதேவன், பூதுகனுக்கு பனவாசி-12000 (BANAVASI), பெ-ளவொல-300 (BELVOLA) , கிசுக்காடு-70 (KISUKAADU), பாகிநாடு-70 (BAGI-NAD) ஆகிய நாட்டுப்பகுதிகளைக் கொடையாக அளித்தான். பூதுகன் நேரடியாக இராசாதித்தனை எதிர்த்துப் போரிடும்போது அவன் முன்பு நின்று வீரத்துடன் போரிட்ட பூதுகனின் அணுக்கப் பணியாளனாகிய (அங்ககாரன்) மணலெரா என்பவனை மெச்சி அவனுக்குப் (மணலெராவுக்கு) பூதுகன் ஆதக்கூர்-12 , பெ-ளவொல பகுதியில் இருக்கும் காடியூர் ஆகிய பகுதிகளைக் கொடையாக அளித்தான்.  தமிழகத்தில் இருக்கும் கன்னரதேவனின் கல்வெட்டுகள் அவனைக் “கச்சியும் தஞ்சையும் கொண்ட”  என்னும் அடைமொழித் தொடரால் குறிக்கின்றன. ஆனால், ஆதக்கூர் கல்வெட்டு, “கச்சக”  என்று குறிப்பதால், கி.பி.949-50-இல் தக்கோலத்தில் சோழரை முறியடிக்கும் வரை, அவன் கச்சி என்னும் காஞ்சியை மட்டும் வென்றான் எனக்கொள்ளுதல் தகும். எனவே, கன்னர தேவன் பற்றிய தமிழகக் கல்வெட்டுகள் கி.பி.949-50-ஆம் ஆண்டுக்குப் பின்னரே “தஞ்சையும்கொண்ட” என்பதைச் சேர்த்து எழுதப்பட்டிருக்கவேண்டும். கன்னடச் சொல் “கச்சக” என்பது “காஞ்சிகொண்ட”  என்பதன் திரிபு (குறுகிய வடிவம்) எனக் கல்வெட்டுத்தொகுதியின் பதிப்பாசிரியர் கருதுகிறார்.

கால்நடை வளர்ப்புச் சமுதாய நிலையை அடுத்து, நிலத்தை மையமாகக் கொண்ட மன்னர் ஆட்சி நிலை ஏற்பட்டபின்னர், நிலவுடைமை என்பது முதன்மை இடத்தைப் பெற்றது. நிலம் பற்றியே போர்களும் நிகழ்ந்தன. நிலமும் நிலவருவாயுமே அரசர்களின் மேம்பாட்டை நிலை நிறுத்தின. எனவே, மேற்குறித்த எண்ணிக்கைப் பெயர்கள் நில வருவாயை அடிப்படையாய்க் கொண்ட வருவாய்ப் பிரிவுகள் அல்லது நிலப்பரப்பைக் குறித்தன எனக் கருதலாம். கங்கநாடு-32000 என்பது, கொங்கு நாடு இணைந்ததும் கங்கநாடு-96000 என மாறியது இக்கருத்தை வலியுறுத்துகிறது.

கல்வெட்டு கூறும் கூடுதல் செய்திகள்

பூதுகனின் அணுக்கப்பணியில் இருந்த மணலெரா, சகர குடிவழியினன்; வளபீ புரவரேசுவர(ன்) என்னும் பட்டப்பெயர் கொண்டவன். அவன், பூதுகனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றான். போரில் அவன் காட்டிய வீரத்துக்கு அடையாளமாக இவ்வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காளி என்னும் பெயருடைய நாய்தான் அந்த வேண்டுகோள் மூலமாகக் கேட்கப்பட்ட பரிசு. பூதுகன் அதை ஏற்றுக் காளி என்னும் நாயைப் பரிசாக அளிக்கிறான். களலெ நாடு (களலை நாடு) என்னும் நாட்டுப்பிரிவைச் சேர்ந்த பெ-ளத்தூரை ஒட்டியுள்ள ஒரு குன்றுப்பகுதியில், காட்டுப்பன்றி ஒன்றுடன் போட்டியாக மோதுவதற்கு காளி என்னும் அந்த நாய் ஏவப்பட்டது. கடுமையாகச் சண்டையிட்டு, இரண்டுமே ஒன்றையொன்று கொன்று உயிர் துறந்தன. இந்த நிகழ்ச்சியின் நினைவாக நடுகல் ஒன்று சல்லேசுவரர் கோவில் முன்பு எழுப்பப்பட்டது. அந்த நடுகல்லே மேற்குறித்த கல்வெட்டாகும்.  நடுகல் வழிபாட்டுக்காக நிலக்கொடையும் அளிக்கப்பட்டது. நாய், பன்றியுடன் சண்டையிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக அந்த நடுகல்லில் வடிக்கப்பட்டு, அதன் கீழே கல்வெட்டு பொறிக்கப் பட்டது. கல்வெட்டின் இந்தப்பகுதியில், மேற்சொன்ன வேண்டுகோள், நாய்-பன்றிச் சண்டை பற்றிப் பொறிக்கப்பட்டது. சிற்பப் பகுதிக்கு மேற்புறத்திலும், கல்லின் பக்கவாட்டுப் பகுதியிலும், பூதுகன் ராச்சமல்லனைக் கொன்றது, கன்னர தேவன் சோழனை எதிர்த்துப் போரிட்டது, இராசாதித்தனைப் பூதுகன் கொன்றது, கன்னர தேவன் பூதுகனுக்குக் கொடை அளித்தது ஆகிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டின் பாடம்

1     ஸ்வஸ்தி சக நிருப காலாதீத ஸம்வத்ஸர ஸதங்கள் எண்ட்டுநூறு

     எற்பத்தெரடனெய சோம்யம் எம்ப

2      சம்வத்ஸரம் …………………………………பிரிதுவி வல்லப ……………

3    ………………………………………….கச்செக கிருஷ்ணராஜ ஸ்ரீமத்

4     கன்னரதேவ மூவடிசோழ ராஜாதித்யன மேலெ [வ]ந்து தக்கோலதொள்

     காதி கொந்து விஜயம் கெய்யுத்திர்து

5    ஸ்வஸ்தி ஸத்யவாக்ய கொங்குணிவர்ம தர்ம மஹாராஜாதிராஜ\

     கோளால புரவரேச்வர நந்தகிரிநாத

6    ஸ்ரீமத் பெர்மனடிகள் நன்னிய கங்க ஜயதுத்த ரங்க கங்க காங்கேய கங்க

    நாராயணநாதன் ஆளுத்திர்து

7     …………………………………………………..ஸகர வம்ச வ

8        ளபீ புரவரேச்வர ……………………………………………………………………………

9         ………………………பூதுகனங்ககார ஸ்ரீமத் மணலெர அனுவரதொள் மெச்சி பேடிக்கொள் எந்தொ

10    டெ …………………….காளிய ……………………நாய கெ-ளலெ நாட பெ

      ளத்தூர…

11       ……………..மொரடியொள் பிரிதும் பந்திகெ விட்டொடெ பந்தியும் நாயும்

       மொடசத்துவதர்க்கெ

12   ……. சல்லேச்வரத முந்தெ கல் நடிசி …………………………கண்டுக

13       மண்ணு கொட்டரா ……………………….

20 ஸ்வஸ்திஸ்ரீ எறெயப்பன மக ராச்சமல்லன பூதுக காதி கொந்து தொம்பத்தறு ஸாஸிரமும் ஆளுத்திரெ கன்னரதேவ சோழன காதுவந்து பூதுக ராஜாதித்யன பிசுகெய களனாகி சுரிகி இறிது

21  காதி கொந்து பனவசெ பன்னிரு ஸாஸிரமும் பெள்வொல  முனூறும் புரிகெரெ முனூறும் கிசுகாடு எற்பத்தும்  பாகி நாடு எற்பத்தும் பூதுகங்கெ கன்னரதேவ மெச்சு கொட்ட பூதுகனு மணலெர த

22  ன்ன முந்தெ நிந்திறிதுதர்க்கெ மெச்சி ஆதுக்கூர் பன்னெரடும் பெள்வொலத காடியூரமும் ..

23  …..கொட்ட மங்கள மஹாஸ்ரீ

கல்வெட்டின் தமிழாக்கம்

1    ஸ்வஸ்தி(ஸ்ரீ)  சக மன்னர்களின் காலத்து ஆண்டுகளில் எண்ணூற்று

எழுபத்திரண்டு சௌம்ய

2 ஆண்டு …………………………………………………………………………………… பிருதிவி வல்லபன்….

3 ……………………………………………………..கச்சக கிருஷ்ணராஜன் ஸ்ரீமத்

4    கன்னரதேவன் மூவடி சோழ ராஜாதித்தனை தக்கோலத்துள்

போரிட்டுக் கொன்று வெற்றி கொண்டான்

5 ஸ்வஸ்தி(ஸ்ரீ) சத்தியவாக்கியன் கொங்குணிவர்மன் தர்ம மஹாராஜாதிராஜன் கோளால புரவரேசுவரன் நந்தகிரி நாதன்

6    ஸ்ரீமத் பெர்மானடிகள் ..கங்கன் …….. கங்ககாங்கேயன்  கங்கநாராயண நாதன் ஆட்சிசெய்திருந்தான்

7    ………………………………………………………………….. சகர வம்சத்து

8    வளபீ புரவரேசுவரன்……………………………………….

9    ………………….பூதுக(னி)ன் அங்ககாரன் ஸ்ரீமத் மணலெரனை … மெச்சி வேண்டிக்கொள் என்றதும்

10  ……………….. காளி என்னும் நாய்……………கெ-ளலெ நாட்டு பெ-ளத்தூர்

11  …………..குன்றுனுள் பன்றி மேல் (ஏவி)விட்டபோது பன்றியும் நாயும்

இறந்து போனதற்காக

12  ………………. சல்லேசுவரர் (கோயில்) முன்பு கல் நட்டுவித்து  …. கண்டுக

13     நிலம் கொடுத்தான்

20  ஸ்வஸ்திஸ்ரீ எறெயப்பனின் மகன் ராச்சமல்லனைப் பூதுகன் போரிட்டுக் கொன்று தொண்ணூற்றாறு ஆயிரம் ஆண்டுகொண்டிருக்கையில் கன்னரதேவன் சோழனோடு போரிடும்போது பூதுகன் ராஜாதித்தனை …..

21  போரிட்டுக் கொன்று பனவாசி பன்னிரு ஆயிரமும் பெள்வொல முன்னூறும் புரிகெரெ முன்னூறும் கிசுக்காடு எழுபதும்  பாகி நாடு எழுபதும் பூதுகனுக்குக் கன்னரதேவன் மெச்சிக் கொடுத்தான் பூதுகன் மணலெர

22   தன்முன்பு நின்று போரிட்டதற்கு  மெச்சி ஆதக்கூர் பன்னிரண்டும் பெள்வொலத்துக் காடியூரும்

23   …..கொடுத்தான்  மங்கள மஹாஸ்ரீ

விளக்கம்:

வரி-1 எண்ட்டுநூறு- தமிழில் உள்ள எட்டு நூறு என்பதன் வடிவம், கன்னடத்தில் ஏறக்குறைய அதே வடிவில் வந்துள்ளது. அதே போல் எழுபது- எற்பத்து.

வரி-4  இராசாதித்தன், மூவடிச் சோழன் என்று குறிப்பிடப்படுகிறான். மும்முடிச் சோழன் என்பதன் திரிபாகலாம். ’சோழ’ என்னும் சொல்லில் உள்ள சிறப்பு ‘ழ’கரம் ஆய்வுக்குரியது. பழங்கன்னட எழுத்துகளில் ‘ழ’ எழுத்துக்குத் தனியே ஒரு வடிவம் கல்வெட்டுகளில் இருந்துள்ளது. காலப்போக்கில், கன்னட எழுத்துகளில் இந்த சிறப்பு ‘ழ’கரம் மறைந்துபோனதன் பின்னணி தெரியவில்லை. தக்கோலதொள் என்பது தக்கோலத்தில் என்பதன் திரிபு. பழங்கன்னடத்தில் பயின்ற சொல். பழங்கன்னடம், தமிழின் ஒரு வடிவம் என்று சொல்லலாம்.  காதி என்பது போரிட்டு (சண்டையிட்டு) என்னும் பொருளுடைய கன்னடச் சொல்.  தமிழ்ச் சொல்லின் சாயல் இதில் இல்லை.  ஆனால், அடுத்து வரும் ‘செய்யுத்திர்து’ என்னும் சொல், தமிழின் வேர்ச்சொல்லான “செய்”  என்னும் வினையின் அடிப்படையில் பழங்கன்னடமாக வழங்குகிறது. இதேபோல், வரி ஆறில், “ஆளுத்திர்து” என்பது “ஆள்” என்னும் வினையின் அடிப்படையாக எழுந்த பழங்கன்னடச் சொல். அடுத்து, ”கொந்து”  என்னும் சொல், ’கொன்று’  என்பதன் திரிபு எனலாம். கன்னடத்தில் பயிலும் பல தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று. இறத்தலைக் குறிக்கும் ‘சாவு’, செத்து என்னும் வினை வடிவம் கொள்கிறது. அதுவே, கன்னடத்தில் “சத்து” என்றாகிறது (வரி-11). கொன்று – கொந்து என்னும் திரிபு, மன்று – மந்து,  குன்றி மணி – குந்து மணி ஆகியவற்றிலும் காணலாம். “என்று”  என்னும் தமிழ்ச்சொல், கன்னடத்தில் ”எந்து”  என்று வருவதையும் (வரி-9), ‘பன்றி’ என்னும் தமிழ்ச் சொல் பழங்கன்னடத்தில் ‘பந்தி’ என்று வருவதையும் (வரி-11) காண்க.  தற்காலக் கன்னடத்தில் இச்சொல் ‘ஹந்தி’ என்று வழங்கும். ப->ஹ எழுத்துத் திரிபு கன்னடத்தில் பல சொற்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : பல்-ஹல்லு, பால்-ஹாலு. ’பம்பா’ நதி, ’ஹம்பி’ என மாற்றமுற்றதும் இவ்வகையே.

வரி-5  கோளால புரவரேசுவரன் – கோளால என்பது குவளால என்பதன் திரிபு. குவளால என்பது குவளாலபுரம் ஆகும். இது இன்றைய கோலார் ஊரின் பழம்பெயர் ஆகும். தமிழ்க் கல்வெட்டுகளில் கோலார், குவளாலபுரம் என்றே வழங்குகிறது. கோலார், கங்கர்களின் தலைநகராக இருந்துள்ளது.

வரி-6  பெர்மானடிகள் -   தமிழில் வழங்கும் பெருமானடிகள் என்னும் சொல், கன்னடத்தில் பெர்மானடிகள் எனத் திரிந்தது எனலாம்.

வரி-9  அங்ககாரன் -  மெய்க்காப்பாளன் என்னும் பொருள் தருகிறது எனலாம்.  பேடிக்கொள் எந்தொடெ – பேடிக்கொள் எந்து -  வேண்டிக்கொள் என்று. தமிழின் திரிந்த வடிவம் கன்னடத்தில் பயில்கிறது. ’மெச்சி’ என்னும் தமிழ்ச் சொல்லும் மாற்றமின்றிக் கன்னடத்தில் பயின்றுவந்துள்ளது.

வரி-11 சத்துவதர்க்கெ – செத்துப்போனதற்காக. பந்தியும் நாயும் – பன்றியும் நாயும். மீண்டும் பழங்கன்னடத்தில் தமிழின் சாயலைக் காண்கிறோம். 

வரி-12  கல் நடிசி -  கல் நட்டுவித்து.  நடுகல்லைக் குறிப்பது.

வரி-21  ஸாஸிரம்-ஆயிரம். பழங்கன்னடத்தின் ஸாஸிரம், தற்போதைய கன்னடத்தில் ’சாவிர’ எனப் பயில்கிறது.  கொட்ட-கொட்ட(னு). ’கொடு’  என்னும் தமிழ் வேர்ச்சொல் கன்னடத்திலும் அவ்வாறே பயில்கிறது. கொடை என்பது கன்னடத்தில் ’கொடகெ’ என்று வழங்குவது இதன் அடிப்படையில்தான்.

காளி என்னும் வேட்டை நாய்

காளி என்னும் நாய் பற்றிப் புதுமையான செய்தியொன்றைக் கல்வெட்டுத்தொகுதியின் பதிப்பாசிரியர் கூறுகின்றார். சீதாராம் ஜாகிர்தார் என்பவர் தெரிவித்த கருத்தாக இக்கூற்று அமைகிறது.  சீதாராம் ஜாகிர்தார் என்பவர், ‘காவ்யாவலோகன’  என்னும் நூலில் உள்ள செய்யுள் வரியொன்றின் அடிப்படையில் ‘க3ண்ட3 மார்த்தாண்ட3’ என்னும் மூன்றாம் கிருட்டிணன் (கன்னரதேவன்) வேட்டை நாய்களின் ஒரு தொகுப்பைக் காவலுக்கு வைத்திருந்தான் என்றும், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் காளி என்னும் நாய், கன்னரதேவனின் நாய்களுள் ஒன்று என்றும், அதை விரும்பிக்கேட்ட பூதுகனின் பாதுகாவலனான மணலெரனுக்குக் கொடையாகக் கொடுத்திருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.  வேட்டை நாய்களை அரசர்கள் வளர்த்திருந்தனர் என்பதும், அவற்றுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்பதும், நடுகல் எழுப்பும் தகுதியை அவை பெற்றிருந்தன என்பதும் நாம் அறியலாகும் செய்திகள்.

தக்கோலம் கோயிலும் சில கல்வெட்டுகளும்
-------------------------------------------------

கல்வெட்டு-1

1    ஸ்வஸ்திஸ்ரீ கோ..

2    தித்த பன்மற்கு யாண்டு 2 ஆ

3    வது தக்கோலத்துத் திருவூ

4    றல் தேவநார் மகள் திருவூறல் நங்

5    கை மகள் அத்தியூர் ந[ங்]கை திருவூற

6    ல் மாஹாதேவர்க்கு வைத்த நொந்

7    தா விளக்ககொன்றினுக்கு

8    . . . . . . . . . . . . . . . . . .

9    [சா]வா மூவாப் பேராடு

10  இவ்வி(ளக்) கிட்டக்கட

11  (வான்) நாட்டு மன்றாடி

விளக்கம்:

கல்வெட்டில் அரசர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், ”தித்த பன்மற்கு” என்னும் தொடரின் அடிப்படையில், கல்வெட்டு முதலாம் ஆதித்தன் காலத்தது எனக் கருதலாம். முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி. 871-907. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 873. தக்கோலத்தைச் சேர்ந்த தேவனார் என்பவரின் மகளான திருவூறல் நங்கையின் மகள் அத்தியூர் நங்கை தக்கோலத்து இறைவனான திருவூறல் மகாதேவருக்கு நொந்தா விளக்கு வைத்ததற்காக சாவாமூவாப் பேராடு கொடை அளித்திருப்பதைக் கல்வெட்டு கூறுகிறது. கொடையாகக் கொடுத்த ஆடுகளை ஏற்றுக்கொண்டவன் அவ்வூர் மன்றாடி (இடையன்) ஒருவனாவான்.

கல்வெட்டு-2

1    (ஸ்வஸ்தி)ஸ்ரீ சாலைக்கலமறுத்த

2    . . . ற்கு யாண்டு (. .3) 

3    . . . . . தேவநார் மகள் திரு . . .

4    . . . . . .  கைய்யால் பங் . .

5    . . . . . . தன்ம கட்டளைக்கல் . .

6    . . . . [நி]றை (இருப)த்து முக்கழஞ்சு

7    . . . . (வூர்) தேவற்க்கு திருவமி[ர்து]

8    . . . .  (வ)ரிசி குறுணி இ . . .

9    . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

10  . . . . . . . . து சந்த்ராதி(த்தவற்)

11  . . . . . . . . நோம் . . . .

12  . . . . . . . . (கு)டுத்தோம் சி . . . .

விளக்கம்:

கல்வெட்டு தெளிவாயில்லை. ‘சாலைக்கலமறுத்த’  என்னும் தொடர் முதலாம் இராசராசன், காந்தளூர்ச் சாலை வெற்றிக்குப் பின்னர் தன் மெய்க்கீர்த்தியில் இணைத்துக்கொண்ட தொடராகும். ஆனால், அவனுடைய மெய்க்கீர்த்தியில். காந்தளூர்ச் சாலை என்றே காணப்படும். அவனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவன் மகன் முதலாம் இராசேந்திரன், பெயரன் முதலாம் இராசாதிராசன், இன்னும் முதலாம் குலோத்துங்கன் ஆகிய பல அரசர்கள் ‘சாலைக்கலமறுத்த’ புகழைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்கிறார்கள். எனவே, இக்கல்வெட்டில் வரும் அரசன் இவர்களில் ஒருவராக இருக்கக் கூடும். முதல் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நங்கை என்பவளே இக்கல்வெட்டிலும் குறிப்பிடப்பெறுகிறாள் எனக் கருதலாம். இறைவர்க்குத் திருவமிர்து படைப்பதற்கான பரிகலன்களுள் (பாத்திரம்) ஒன்றோ பலவோ கொடைப் பொருளாக அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் நிறையும் குறிப்பிடப்பட்டுள்ளது எனலாம். நிறை காணப் பயன்படுத்தப்பட்ட பொன் எடைக்கல் ’தன்ம கட்டளைக்கல்’  என்னும் பெயரால் வழங்கியது. 

கல்வெட்டு-3

1    . . . . . . . . . . . . . . . . . .

2      . . க்கு மேற்கும் வட(பா)ற்

3      . . புளிக்கும் பெரிய கு . .

4      .  தெற்கும் மேல்பா(ற்)[கெல்லை]

5      . . . தாவாய் சூலக்க(ல்)

6      . . . நல்லாற்றுக்கு ..

7      . .  பாற்கெல்(லை)

விளக்கம்:

நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது; நிலத்தின் எல்லைகள் விளக்கப்பட்டுள்ளன.

நல்லாறு என்னும் ஓர் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு-4

1    . . . .  கு யாண்டு . . .

2    . . . . . . . . . . . . . . . . . .

3    . . . . ட்டி காமுண்[ட]

4    . . .  (மி மான) கேசுவைய . .

5    . ப்பல்லவன் ப்ரஹ்மாதரா(யன்)

6    . . தக்கோலத்துத் திருவூறல்
விளக்கம்:

அரசு உயர் அதிகாரிகளில் ஒருவனான பல்லவன் பிரம்மாதராயன் என்பான் தக்கோலத்துத் திருவூறல் இறைவர்க்குக் கொடை அளித்துள்ளான் எனத் தெரிகிறது.

கல்வெட்டு-5

கல்வெட்டின் படம் தெளிவாக இல்லை. படிக்க இயலாதவாறுள்ளது. இருப்பினும், முதல் வரியில் இராசநாராயண சம்புவரயர் என்னும் பெயரைக் காண முடிகிறது. எனவே, இக்கல்வெட்டு சம்புவரையர் காலத்துக் கல்வெட்டு எனக் கொள்ளலாம். 

எண்ணற்ற சோழ இராஷ்டிரகூடர் வீரர்கள் போர்களத்தில் வீர மரணம் அடைந்தனர் ராஜாதித்த சோழர், கன்னரதேவன், பூதுகன், மணலேரா என மாபெரும் வீரர்கள் களம் கண்டனர் தக்கோலத்தில், ஆனால் அன்றைய தினம் தக்கோல போரின் வெற்றி கன்னரதேவன் வசம் ஆனது.

தக்கோல போரின் வெற்றி ராஷ்ட்ரகூட பேரரசை வலிமை குன்ற செய்தது. தக்கோல போர் முடிந்த 30 வருடங்களுக்கு பிறகு இராஷ்டிரகூட பேரரசு மெல்ல மறைய தொடங்கியது. சோழ பேரரசு மெல்ல உதிக்க தொடங்கி இராஜராஜன் இராஜேந்திர சோழர் காலத்தில் உச்சம் அடைந்தது.

தக்கோல போரில் வெற்றி சின்னமாக  இரண்டாம் பூதுகன் கட்டின கோவில் இந்த நான்கு தூண்களும் தக்கோல போர் நினைவுகளை சுமந்துகொண்டு நிற்கின்றன.

Comments

Popular posts from this blog

தமிழரின் நீர் மேலாண்மை தொழில்நுட்பம்

அணைக்கரையில் உள்ள கீழணையின் வரலாறு

கல்வெட்டில் குற்றம், தண்டனை, தீர்வு